சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையைக் கண்டிக்கிறோம். கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை சரியா? திமுக ஆட்சியின் 19வதுபோலி மோதல் சாவு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) கொலை:
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்களம் அருகே மூங்கில்தொழுவு பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி (60) மற்றும் இவரது மகன்கள் தங்கப்பாண்டியன் (25), மற்றும் மணிகண்டன் (30) ஆகியோர் குடும்பத்தோடு தங்கி தோட்டத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று இரவு மூர்த்தி மற்றும் இரு மகன்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்த தோட்டத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்த குடிமங்களம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் அழகுராஜா சிறப்பு ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று சண்டையைத் தடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்துள்ளார். கொடூரமாக நடந்த இக்கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்படுத்துதல் பணியை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் எனக் கோருகிறோம்.
கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை!
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவரை கொலை செய்ததை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் கொலை செய்ததாக சொல்லப்படும் மணிகண்டன் என்பவர் நேற்று (06.08.2025) காலை 10.30 மணியளவில் நிலக்கோட்டையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி உள்ளார். ஆனால் நீதிமன்ற நடுவர் இந்த வழக்கு எனது எல்லைக்குள் வராது எனச் சொல்லி சரண்டர் மனுவை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார். இதன் பின்னர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சரண்டராகி உள்ளார். குற்றத்தில் ஈடுபட்டவர்கள், தானாக முன்வந்து சரண்டர் ஆன நிலையில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது காவல்துறையின் சட்ட கடமையாகும். ஆனால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்தவர்களை உயிரோடு விட்டு விடுவோமா என்ற பழிவாங்கும் (Vengeance) நோக்கத்தோடு சட்டவிரோதமாக செயல்படுவது சரியா? விசாரணைக்கு கொண்டு செல்லும்போது, போலீசைத் தாக்க முயற்சித்ததால் மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டோம் என வழக்கமான பொய்க் கதையைச் சொல்லி, போலி மோதல் மூலம் மணிகண்டனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஏடிஜிபி கண்காணிப்பில் என்கவுண்டரா?
திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் 19 போலி மோதல் சம்பவங்கள் நடத்தி, மணிகண்டன் உட்பட 21 நபர்கள் போலீசார் நடத்திய போலி மோதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கக் கூடிய காவல்துறையின் பொறுப்பில் உள்ள ADGP திரு. டேவிட்சன் தேவசீர்வாதம் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் போது, மணிகண்டன் என்பவர் போலி மோதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். இதன் மூலம் நடந்து முடிந்த என்கவுண்டர் என்பது உயர் போலீஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளது என சந்தேகப்படுகிறோம். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தான மனித உரிமை மீறலாகும். காவல்துறை சார்ந்தவர்களை அல்லது நமது சமூகத்தில் பல்வேறு கொடூர சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் கடமையாகும். சம்பவங்களில் நமது சொந்த விருப்பு வெறுப்புகளை முன் வைத்து செயல்படுவது சட்டவிரோதமாகும். இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் சிறப்பு காவல் உதவியாளர் கொலை வழக்கையும், போலி மோதல் மூலம் கொல்லப்பட்ட மணிகண்டன் ஆகிய இரண்டு வழக்குகளையும் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோருகிறோம்.
(தியாகு) ஒருங்கிணைப்பாளர் | (மீ.த.பாண்டியன்) செயலாளர் | (ஹென்றி திபேன்) ஆலோசகர் |