அடர் சிவப்பில் காய்ந்திருக்கும் காதல் – யவனிகா சாந்தியின் கவிதை

போன மாதமும்
இதே மாதிரி தான் நடந்தது
இந்த மாதமும்
இதே மாதிரி தான் நடந்தது
இப்பொழுதெல்லாம்
மாதத்திற்கு ஒன்று
என்பது மாறிப் போய்
பதினைந்து நாட்களுக்கு ஒன்று
என்பதுவும் தப்பிப் போய்
வாரத்திற்கு ஒன்று
என்பது
இயல்பானதாகி விடும் போல..,
எல்லா நிகழ்வுகளும்
ஒரே காரணத்திற்காகத்தான்
திரும்பத் திரும்ப நடக்கிறது..,
எப்போதும் போல
இந்த முறையும்
வெட்டுப்பட்டவனின்
மலர்ந்த முகம்
தொலைக்காட்சித் திரைகளிலும் ,
செய்தித்தாளின் பக்கங்களிலும் வந்தது- முதலில்..,
தொடர்ந்து
பலரின் கண்டன அறிக்கை – பட்டும் படாமல்..,
,
பல கதைகளும்
உட்புகத் தொடங்குகின்றன..,
ஒழுக்க விழுமியங்கள்
வரையறுக்கப்பட்டு,
குடும்ப கௌரவம்,
சாதிப் பெருமை
அனைத்தும் அலசி ஆராயப்படுகிறது..,
மிளகாய்ப் பொடி தூவி
முதுகில் வெட்டிய வீரனின்
அறிவு
வளர்ந்த லட்சணமும்
பல்லிளிக்கிறது..,
நிரம்பவே திகிலூட்டக் கூடிய.
இந்த விசித்திர தற்குறிகள்
மனிதத்தன்மையை
இழந்திருக்கலாம் என்பதுவும் சாத்தியம்..,
நீங்கள் அந்த
நிகழ்விடத்தைப் பார்க்க நேர்ந்தால்
அடர் சிவப்பில்
காய்ந்திருக்கும்
இரத்தக் கறையின் அருகே
அன்புணர்வின் தவிப்புடன்
இன்னமும்
அமர்ந்திருக்கும் காதலைக் காணலாம் ..,