டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 2) – தோழர் சமந்தா

டிரம்ப் காப்புவரிகளால அமெரிக்காவை சுத்தி ஒரு “சீனப் பெருஞ்சுவரையே கட்டிட்டாரே, எதுக்காம்? ஒலகத்தோட முதன்மை உற்பத்தி மையமா இப்போ சீனா தான இருக்கு. அதை டிரம்பால தாங்கிக்கவே முடியல. அதுனால உற்பத்தியிலயும், பொருளாதார வளர்ச்சியிலயும் சீனாவை முந்துறதுக்காகத் தான் இதெல்லாம்… கெடந்து துள்ளுறாரு. அமெரிக்காவோட வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்குறதுக்காகத் தான் இந்த வர்த்தகப் போரை அறிவிச்சதா டிரம்ப் சொல்றாரு. அப்புறம் 90 நாள் அவகாசம் கொடுக்குறதா பின்வாங்குனாரே அது எதுக்கு? இவரோட அறிவிப்பால பீதியடைஞ்சு முதலீட்டாளர்கள் அமெரிக்காவை விட்டு ஓடுனதுல, பங்குச்சந்தை அடி வாங்குனுச்சுல்ல, அதுல டிரம்ப் ரொம்ப பயந்துட்டாரு. அதான் கொஞ்சம் விட்டுப் புடிக்கலாம்ணு அவகாசம் கொடுத்தாரு. அதுசரி அமெரிக்ககாவோட வர்த்தகப் பற்றாக்குறையைக் கொறைக்கனும்ணா. எந்த நாட்டுக்கு அமெரிக்க வர்த்தகத்துல உபரி கெடைக்குதோ அந்த நாட்டுக்கு மட்டும் தான இறக்குமதி வரியை அதிகப்படுத்திருக்கனும். இவரு சகட்டுமேனிக்கு வர்த்தக உபரி இல்லாத நாடுகளுக்கும் இறக்குமதி வரியை 10 சதவீதத்துக்குக் குறையாம அதிகப்படுத்திருக்காரு. இதைவிட கொடுமை என்னண்ணா பென்குயின்கள் மட்டுமே வாழுற ஹட், மெக் டொனால்ட் தீவுகளைக் கூட விட்டு வைக்கல. பென்குயின்களுக்கும் வரியைப் போட்டுருக்காரு. இதுலேருந்து என்ன தெரியுது? டிரம்புக்கு லாபப் பைத்தியம் ரொம்ப முத்திப் போச்சுண்ணு தெரியுது.
இன்னொரு விசயம் என்னண்ணா, சர்வதேச வர்த்தகத்துல சரக்குகள் மட்டும் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படல. சேவைகளும் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படுது. மூலதனங்களும் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படுது. அதுனால ஒரு நாட்டோட வர்த்தகப் பற்றாக்குறையைக் கணக்கு பண்ணும் போது வெறும் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை மட்டும் கணக்குல எடுத்துக்கக் கூடாது. சேவைகளோட ஏற்றுமதி, இறக்குமதியையும் கணக்குல எடுத்துக்கனும். சரக்குகள், சேவைகள் இவை ரெண்டையும் சேர்த்துக் கணக்கு பண்ணும் போது அமெரிக்கா மற்ற நாடுகளோட வர்த்தக சமநிலையில தான் இருக்கு.
மத்த நாடுகள் அமெரிக்காவை ஏமாத்தி லாபம் சம்பாதிக்கிறதா டிரம்ப் அபாண்டமா பழி போடுறாரு. அமெரிக்க டாலர் உலகத்தோட முதன்மை பணமா, இருக்குறதுனால உண்மையில பாத்தா அமெரிக்கா தான் எல்லா நாடுகளிடம் இருந்தும் மலிவா எல்லாத்தையும் ஏற்றுமதி பண்ணிக்குது. பொருளாதார அறிஞர் ராபர்ட் டிரிஃபின் ஒரு முக்கியமான பிரச்சினையை கண்டுபுடிச்சாரு. அது என்ன தெரியுமா? ஒரு நாட்டோட நாணயம் உலக இருப்பு நாணயமா இருக்கும் போது, அந்த நாணயத்துக்கான தேவை உலகளவுல அதிகமா இருக்கும். அந்த தேவையை பூர்த்தி செய்யலைணா உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும். அந்த தேவையைப் பூர்த்தி செய்ய பணத்தை அதிகளவுல அச்சடிச்சு வெளியிடும் போது அந்த நாடு வர்த்தகப் பற்றாக்குறையுடன் இருக்கும் போக்கைத் தவிர்க்கமுடியாது. ஒரே நேரத்துல ஒரு நாணயம் உள்நாட்டு நோக்கங்களுக்காகவும், சர்வதேசத் தேவைகளுக்காகவும் செயல்படும்போது முரண்பாடு ஏற்படுதுண்ணு கண்டுபுடிச்சாரு. இது டிரிஃபின் பிரச்சினைணு அழைக்கப்படுது. அதுனால அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுறதுக்கு டாலர் உலகப் பணமா இருக்குறதும் ஒரு முக்கியக் காரணமா இருக்கு. ஆனா கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைணு ஒரு பழமொழி இருக்கு பாத்தீங்களா, அது மாதிரி தான் டாலர் உலகப் பணமாவும் இருக்கனும், ஆனா வர்த்தகப் பற்றாக்குறை வரக்கூடாதுன்னு நெனைக்கிற டிரம்போட ஆசையும். பிரிக் கூட்டமைப்புல ஒரு புதிய நாணயத்தை உருவாக்குவோம்னு அறிவிச்சுருந்தாங்க. ஒடனே டிரம்ப் எகிறிட்டாருல்ல, அப்புடி செஞ்சீண்ணா 100% காப்பு வரி போடுவேண்டாண்ணு அரட்டி உருட்டுனாருல்ல. என்னப்பா டிரம்ப், இப்படி பண்ற… டிரிஃப்ன் பிரச்சினையைப் பத்தியெல்லாம் கொஞ்சம் படிங்க டிரம்ப். அவரு படிச்சாலும் மாறுவாரா? மாட்டாரே… ஏண்ணா அவருக்கு புடிச்சிருக்குறது காரியக் கிறுக்கு. என்ன அழிமானம் வந்தாலும், யாரு பாதிக்கப்பட்டாலும் கவலையில்ல, எதை பண்ணியாவது, யாரை பழிகொடுத்தாவது அமெரிக்கா தொடர்ந்து நெம்பர் 1 நாற்காலியிலேயே ஒக்காந்து இருக்கனும்குற காரியக் கிறுக்கு தான் அவருக்கு புடிச்சிருக்கு.
ஆனா டிரம்ப் நெனைச்சதை சாதிக்கமுடியுமா? முடியவே முடியாது. ஏண்ணா அவரு காப்பு வரி போட்ட மத்த நாடுகள் மட்டும் என்ன அடங்கி, ஒடுங்கி சும்மா வேடிக்கை பாத்துக்குட்டு இருப்பாங்களா. ஐரோப்பிய யூனியன், சீனா, கனடா போன்ற நாடுகள் பதிலுக்கு காப்பு வரியை அதிகப்படுத்திட்டாங்க. இதுனால அமெரிக்காவோட ஏற்றுமதியும் கொறைஞ்சு போயிடும். டிரம்ப் விதிச்ச காப்பு வரிகளால இறக்குமதி பொருட்களோட விலைவாசி மட்டும் அதிகமாகுது. அமெரிக்காவோட உள்நாட்டு விலைவாசியும் அதிகமாகும். ஏண்ணா இறக்குமதியாகுற நுகர்வுப் பொருட்களுக்கு மட்டும் காப்புவரிப் போடல. அமெரிக்க நிறுவனங்களோட உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கும் காப்புவரி போட்டுருக்காரு. அதுனால அமெரிக்காவோட விலைவாசியும் அதிகமாகும். மக்களோட வாங்கும் திறன் கொறைஞ்சுபோகும், செலவு அதிகமாகும். அமெரிக்காவோட உற்பத்தியும் பாதிக்கப்பட்டு கொறைஞ்சு போகும். காப்புவரிகள் மூலமா கெடைச்ச வருமானத்தை வெச்சு வருமான வரியை மேலும் கொறைக்கப் போறதா டிரம்ப் அறிவிச்சிருக்காரு. இது யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி தான். ஏற்கெனவே தன்னோட “பியூட்டிஃபுல் பில்” மூலமா மருத்துவக் காப்பீட்டுத்துறை, உணவுக்கான உதவித்தொகை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மானியம் உட்பட சமூக நலத்துறைகளுக்கு செய்யவேண்டிய ஒதுக்கீடுகளை எல்லாம் கடுமையா வெட்டிட்டாரு. இப்ப மறுபடியும் இவரோட வர்த்தகப்போரால அதிகமா பாதிக்கப்படப் போறது அமெரிக்காவின் சாமானிய மக்கள் தான்.
(தொடரும்)