டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 1) – தோழர் சமந்தா

07 Aug 2025

பெரும்பாலான உலக நாடுகளில கார்ப்பரேட் முதலாளிகளோட ஏஜெண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க. ஆனா அமெரிக்காவுல மட்டும் தான் ஒரு கேடு கெட்ட கார்ப்பரேட் முதலாளியே அதிபரா இருக்காரு. ஒலகம் எக்கேடு கெட்டா என்ன, மறுபடியும் அமெரிக்காவை மேலாதிக்கத்தோடு முதல் வல்லரசா நீடிக்கவெக்கனும்ணு கங்கணம் கட்டியிருக்காரு டொனால்ட் டிரம்ப். “USAID” சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை மூலமா வெளிநாடுகளுக்கு கொடுத்து வந்த நிதியுதவியை கணிசமா 83% வெட்டிட்டாரு. சூழலியல் பொறுப்புகளை தட்டிக்கழிச்சு பாரிஸ் ஒப்பந்தத்துலேருந்து வெளியேறிட்டாரு.  இஸ்ரேல் பாலஸ்தீன இன அழிப்பு செய்யுறதுக்கு டிரம்ப் முழுக்க முழுக்க ஒடந்தையா இருக்காரு. இப்படிப்பட்டவருக்கு இந்தியா ரஷ்யாகிட்டேருந்து எண்ணெய் வாங்குறதை கண்டிக்குறதுக்கு ஏதாவது அறுகதை இருக்கா? டிரம்ப் மட்டும் அமெரிக்க சுயநலத்துக்காக எதை வேணாலும் செய்யலாம். ஏன் அதே உரிமை இந்தியாவுக்கு இருக்கக்கூடாதா? ரஷ்யாகிட்ட இந்தியா மலிவா எண்ணெய் வாங்குனதுல கெடைச்ச எந்த பலனும் இந்திய மக்களுக்கு போய்ச்சேரல, எண்ணெய் முதலாளிகள் மட்டும் தான் கொள்ளையடிச்சாங்க. அதே மாதிரி டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கே எதிரானது தான். ஆனா தனக்குன்னா ஒரு நியாயம், மத்த நாடுகளுக்குன்னா இன்னொரு நியாயம்குற ரெட்டை நிலைப்பாட்டை இங்க சுட்டிக்கட்ட வேண்டியிருக்கு. அவர் மெரட்டாத ஆளு இந்த ஒலகத்துல ஒருத்தர் கூட இல்லைனு சொல்லலாம். சமீபத்துல கூட அமெரிக்க மத்திய வங்கியோட தலைவர் ஜெரோமி பவலை வட்டி வீதத்தைக் குறைக்காட்டி வேலைய விட்டு தூக்கிறுவேண்ணு மெரட்டுனாரு. இப்படிப்பட்ட ஒலக ரௌடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேற கொடுக்கலைனு ஆத்திரம் வருது. என்னத்த சொல்றது.

உலகளாவிய ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கே முதலாளியா, காவக்காரனா இருந்து எங்கயுமே ஜனநாயகமோ, சோசலிசமோ தலைதூக்காம பாத்துக்குற வேலைய தான் இதுவரைக்கும் அமெரிக்க அதிபர்கள் செஞ்சுக்குட்டு இருந்தாங்க. அந்த வரிசையில அடுத்த காவக்காரனா வந்த டிரம்ப் இந்த வேலைய பண்ணலாமா? பின்ன என்னங்க புதுதாராளமய உலகமயத்துக்கே ஆப்பு வெச்சுட்டாருல்ல புது தாராளமயத்துக்கு அடிப்படையா இருக்குறது எதுங்க? தடையற்ற வர்த்தகம் தான். அந்த தடையற்ற வர்த்தகத்துக்கே தடை போட்டு காப்பு கட்டிட்டாருல்ல டிரம்ப். விடுதலை நாள் அன்னைக்கு தடையற்ற வர்த்தகத்துக்கு விலங்கு போட்டுட்டாரே. 2008-2009 பொருளாதார நெருக்கடிக்கு அப்புறம் உலக வர்த்தகமே சொணங்கிப் போயிடுச்சு, ஒரு சரியான முதலாளித்துவ காவக்காரனா இருந்தா, சொணங்கிப் போன வர்த்தகத்தை முடுக்கிவிடுற மாதிரி இல்ல வேலை பண்ணியிருக்கனும். ஆனா டிரம்ப் என்ன பண்ணாரு? கோவிட் தாக்கத்துக்குப் பெறகு நொண்டி அடிச்சுக்கிட்டு இருந்த உலகவர்த்தகத்தை காப்பு வரி போட்டு ஒக்காற வெச்சுட்டாரு. உலக நாடுகள் அமெரிக்காவை புறந்தள்ளுறதை தூண்டுற மாதிரி ஒரு வர்த்தகப் போரை ஏவியிருக்காரு.

தங்களுக்கு சாதகமா இருந்தா தடையற்ற வர்த்தகம், பாதகமா இருந்தா பாதுகாப்புவாதம்னு தாவுறது வல்லரசுகளுக்கு கைவந்த கலை. இது தான் வல்லரசுகளோட சந்தர்ப்பவாதக் கொள்கை. இதை தான் அன்னைக்கு பிரிட்டனும் பண்ணுச்சு, அமெரிக்காவும் பண்ணுச்சு. 18ஆம் நூற்றாண்டுல   காப்புவரிகளால் தன்னோட தொழில்துறையை வளர்த்தெடுத்த பிரிட்டன் தான் மேலாதிக்கம் அடைஞ்சவுடனே தடையற்ற வர்த்தகத்தை எல்லா நாடுகளின் மேலயும் திணிச்சுச்சு. அப்புறம் 20ஆம் நூற்றாண்டுல பொருளாதார மேலாதிக்கம் நலிவடைஞ்ச பிறகு மறுபடியும் பாதுகாப்புவாதத்தை கடைபிடிச்சுச்சு.   அதே உத்தியைத் தான் இப்ப அமெரிக்காவும் கடைபிடிக்குது. 20ஆம் நூற்றாண்டுல பாதுகாப்புவாதத்தின் மூலமா தொழில்துறையை வளர்த்தெடுத்து பொருளாதார மேலாதிக்கத்தை அடைஞ்ச அமெரிக்கா, இன்னைக்கு அதன் பொருளாதார மேலாதிக்கம் நலிவடைஞ்ச பிறகு தன்னை விட சீனா மேல வந்துடக்கூடாதுங்குறதுக்காக பாதுகாப்புவாதத்தை கையிலெடுத்துருக்கு. ஆனா அன்னைக்கு பொருந்துனது இன்னைக்கு பொருந்தாது. ஏண்ணா இளந்தொழில் பாதுகாப்புத் கொள்கைங்குறது (infant industry protection policy) இளம் பொருளாதாரங்களுக்கு, வளரும் பொருளாதாரங்களுக்குத் தான் பொருந்தும். ஆனா அமெரிக்காவுல இன்னைக்கு இருக்குற முத்திப்போன கெழட்டு முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு இது பொருந்தவே பொருந்தாது. அதுனால தான் டிரம்ப் ஏவுன வர்த்தகப் போரை, வரலாற்றுலேயே ரொம்ப முட்டாள் தனமான வர்த்தகப்போருண்ணு வால் ஸ்டிரீட் பத்திரிகை விமர்சனம் பண்ணிருக்கு.

(தொடரும்)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW