ஃபலஸ்தீன் அங்கீகாரம்: எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும் – ரியாஸ்

07 Aug 2025

செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீன தேசத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளது எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அவர், ‘காஸா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்படுவது தற்போதைய அவசியத் தேவையாகும். அமைதிக்கான வாய்ப்பு இருக்கிறது. உடனடி போர் நிறுத்தமும் அனைத்து பிணைக் கைதிகளின் விடுதலையும் காஸா மக்களுக்கு மகத்தான மனிதாபிமான உதவிகளும் தற்போது அவசியமாகும்’ என்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மெக்ரானின் அறிவிப்பை ஃபலஸ்தீனியர்கள் வரவேற்றுள்ள நிலையில் ‘இந்த நகர்வு பயங்கரவாதத்திற்கு பலனளிக்கும்’ என்று உலகின் மிகப்பெரும் பயங்கரவாதியான இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். எதிர்பார்த்தது போல் பிரான்ஸின் அறிவிப்பை அமெரிக்கா கண்டித்துள்ளது. பிரான்ஸின் நடவடிக்கையை ‘சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர்மறை நகர்வு’ என்று வரவேற்றுள்ள ஹமாஸ் இயக்கம், ஏனைய நாடுகளும் பிரான்ஸை பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 147 நாடுகள் ஏற்கெனவே ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ள போதும் ஜி 7 நாடுகளின் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், ஃபலஸ்தீனை அங்கீகரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பிரான்ஸை தொடர்ந்து இங்கிலாந்தும் கனடாவும் ஃபலஸ்தீனை அங்கீகரிப்பதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஃபலஸ்தீனை பிரான்ஸ் அங்கீகரிக்கும் பட்சத்தில் பெல்ஜியம், போர்த்துகல், லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளும் தங்களின் அங்கீகாரத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ள வேண்டும், அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும், இரு நாடுகள் திட்டத்தின் அடிப்படையில் நீண்ட கால சமாதானத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இவற்றை இஸ்ரேல் செய்யத் தவறினால் ஃபலஸ்தீனை தாங்கள் அங்கீகரிப்போம் என்றும் கூறியுள்ளார்.

காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளை உள்ளடக்கிய ஃபலஸ்தீன தேசத்தை நவம்பர் 15, 1988 அன்று ஃபலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவர் யாஸர் அரஃபாத் அறிவித்தார். 1988இன் இறுதியில் 81 நாடுகள் ஃபலஸ்தீனை அங்கீகரித்தன. இவை பெரும்பாலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளாக இருந்தன. ஆரம்ப நாட்களிலேயே ஃபலஸ்தீனை ஆதரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது இன்திஃபாதா என்ற மக்கள் எழுச்சியின் போதும் (1987 – 1993) ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு பின்னரும் பல நாடுகள் இந்த பட்டியலில் இணைந்தன. 2011-2012 காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் இணைக்கப்பட்ட ஃபலஸ்தீனிற்கு ஐ.நா. பொதுசபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இத்தீர்மானத்தை 138 நாடுகள் ஆதரித்தன.

2014இல் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் ஃபலஸ்தீனை அங்கீகரித்தது. 2023 அக்டோபருக்கு பின் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூர தாக்குதல்களையும் இனப்படுகொலை நடவடிக்கைகளையும் தொடர்ந்து ஒன்பது நாடுகள் ஃபலஸ்தீனை அங்கீகரித்தன. மே 22, 2024 அன்று நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனை அங்கீகரிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து அந்நாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்ட இஸ்ரேல், மேற்குக் கரையில் சட்டவிரோத குடியிருப்புகளை அதிகரிக்க உள்ளதாக அகங்காரத்துடன் அறிவித்தது.

அங்கீகார அறிவிப்பு காஸாவின் மீதான தாக்குதல்களையும் தடைகளையும் ஒரே இரவில் முடிவுக்கு கொண்டு வராது என்றாலும் சுதந்திர தேசத்திற்காக நீண்ட நெடிய வலி மிகுந்த போராட்டங்களை மேற்கொண்டு வரும் ஃபலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. உலக நாடுகளின் அங்கீகாரமானது சர்வதேச உறவுகளை மேற்கொள்வதற்கும் தூதரகங்களை திறப்பதற்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் ஆக்கிரமிப்பிற்காக இஸ்ரேலிய அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இரு நாடு தீர்வை நோக்கி நகர்வதற்கு மேற்கத்திய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஃபலஸ்தீனிற்கு வழியை அமைத்துக் கொடுக்கும்.

காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் மீதான ஃபலஸ்தீனின் இறையாண்மைக்கான கோரிக்கைக்கு வலுசேர்க்கும். மிக முக்கியமாக, ஃபலஸ்தீனை அங்கீகரிக்கும் நாடுகள் இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். ஃபலஸ்தீனியர்களின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லையென்றால், இஸ்ரேலின் வர்த்தக மற்றும் இராணுவ நடவடிக்கைள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும். மிக முக்கியமாக, இரு நாடு தீர்வை அனைவரும் முன்வைத்து வரும் நிலையில், ஃபலஸ்தீன பிரதேசத்தில் ஒரே நாடுதான் இருக்கும் அதுவும் யூத நாடாக இருக்கும் என்று அடாவடி செய்து வரும் இஸ்ரேல் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் சீனாவும் ரஷ்யாவும் ஏற்கெனவே ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ள நிலையில், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் அந்த பட்டியலில் இணைந்தால் அமெரிக்கா தனித்து விடப்படும் நிலை ஏற்படும். கனடாவும் இங்கிலாந்தும் ஜி-7 நாடுகளின் அங்கம் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, இந்த நாடுகள் ஃபலஸ்தீன அங்கீகாரத்தை உறுதியாக மேற்கொள்ளும் பட்சத்தில் அது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த அங்கீகாரங்கள் உண்மையில் பலனை தருமா என்ற கேள்வியும் எழுவதை தவிர்க்க இயலவில்லை. தங்கள் நாடுகளில் நடைபெறும் ஃபலஸ்தீன ஆதரவு போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் போராடும் மக்களை திருப்திபடுத்துவதற்கும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் கவனத்தை திசை திருப்பும் முகமாக அல்லாமல் ஃபலஸ்தீன மக்களுக்கு உண்மையில் நீதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது உண்மையான பலனை அளிக்கும்.

அறிவிப்புகளோடு நின்றுவிடாமல் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்க்கமான நடவடிக்கைகளே அதன் அத்துமீறலை தடுத்து நிறுத்தும். நிறவெறி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே அங்கு நிறவெறியை முடிவுக்கு கொண்டு வந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை இனவெறியை வெளிப்படுத்தி, இனப்படுகொலையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராக கடைபிடிப்பது இப்போது அவசியமாகிறது. குறிப்பாக, இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் வழங்குவதை உலக நாடுகள் முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இஸ்ரேல் உடனான ஆயுத வியாபாரத்தை தடை செய்யும் முதல் நாடாக ஸ்லோவேனியா திகழ்கிறது. ‘இஸ்ரேல் உடனான ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் போக்குவரத்தை தடை செய்யும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்லோவேனியா’ என்று அதன் பிரதமர் ராபர்ட் கொலாப் ஜூலை 31 அன்று அறவித்தார். ‘உள் கருத்துவேறுபாடுகள், ஒற்றுமையின்மை காரணமாக உறுதியான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனால் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் தன்னிச்சையாக இந்த முடிவை ஸ்லோவேனியா எடுத்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார். அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலுக்கு எந்த ஆயுதத்தையும் ஸ்லோவேனியா ஏற்றுமதி செய்யவில்லை. ஜூன் 2024இல் ஃபலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த ஸ்லோவேனியா, இவ்வருடம் ஜூலை மாத தொடக்கத்தில், ஃபலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையையும் மனித உரிமை மீறல்களையும் தங்களின் இனப்படுகொலை பேச்சுகள் மூலம் தூண்டியதற்காக இரண்டு வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு தடை விதித்தது.

ஃபலஸ்தீனை அங்கீகரிப்பதற்கு சில நிபந்தனைகளை இத்தலைவர்கள் விதித்துள்ளதும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஃபலஸ்தீன தேசத்தை தான் அங்கீகரிப்பதன் மூலம் மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கும் என்று தான் நம்புவதாக ஏப்ரல் மாதம் பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மக்ரோன் தெரிவித்திருந்தார். சவூதி அரேபியா, ஈரான், ஈராக், யெமன், சிரியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட தேசத்தை பல நாடுகளும் ஆரம்பத்தில் அங்கீகரிக்காத நிலையில், இரு நாடு திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இப்போது பெரும்பான்மையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘ஃபலஸ்தீன தேசத்தை ஒரு கனவு தேசம்’ என்று இப்போதும் இஸ்ரேலிய தலைவர்கள் கூறி வரும் நிலையிலேயே இந்நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் உள்ளன.

ஐக்கிய நாடுகள் பொது சபையில் ஃபலஸ்தீனை அங்கீகரிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, ஃபலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் 2026இல் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன், எதிர்கால ஃபலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்திற்கு எவ்வித பங்கும் இருக்காது என்றும் தேர்தலில் அந்த இயக்கம் பங்குபெறக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளது ஜனநாயகத்தை தங்கள் வசதிக்கு வளைக்கும் மேற்கத்திய முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடி வரும் இந்த இயக்கம், 2006இல் ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இயக்கம் என்பதையும் மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சகத்தனமே காஸாவில் பொருளாதார தடைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பதையும் இந்த நாடுகள் நினைவில் கொள்வது நல்லது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் அனுமதியை இனி வழங்குவதில்லை என்று கடந்த வருடம் கனடா அறிவித்தது. ஆனால், கனடாவில் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்பப்படுவதை சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதுபோன்ற இரட்டை நிலைப்பாடுகளை எடுப்பதை தவிர்த்து தீர்க்கமாக நீதியின் பக்கம் நிற்பதை உலக நாடுகள் உறுதிப்படுத்தும் போதுதான் சுதந்திர ஃபலஸ்தீன தேசம் மலரும். கண் துடைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு துணையாகவே அமையும்.

1917இல் பால்ஃபர் பிரகடனம் மூலம் ஃபலஸ்தீனில் யூத நாட்டை அமைப்பதற்கு தொடக்கப் புள்ளி வைத்த இங்கிலாந்து, 1948இல் இஸ்ரேல் என்ற தேசத்தை தன்னிச்சையாக சியோனிச தலைவர்கள் அறிவித்த போது அதனை உடனடியாக அங்கீகரித்த அமெரிக்கா, ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதற்கு ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கும் மேற்கத்திய நாடுகள் என ஃபலஸ்தீன மக்களுக்கு மேற்குலகம் செய்த துரோகம் கொஞ்சமல்ல. தங்களின் வரலாற்று தவறுகளை சரி செய்வதற்கு சுதந்திர ஃபலஸ்தீனை அங்கீகரிப்பதே அவர்கள் செய்ய வேண்டிய நீதமிக்க செயலாகும். 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW