தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லி.முருகானந்தம் கொலை தொடர்பான உண்மையறியும் குழு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி:

06 Aug 2025

1. வழக்கறிஞர் லி.முருகானந்தம் மற்றும் அவரது சித்தப்பா தண்டபாணி குடும்பத்திற்கான முரண்பாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இராமசாமி கவுண்டர் மனைவி பாப்பாத்தி என்பவர்களின் மூத்த மகன் லிங்குசாமி இவர் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவது மகன் தண்டபாணி இவர் தாராபுரத்தில் உள்ள தேன்மலர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் ஆவர். லிங்குசாமி என்பவருக்கும் உடன்பிறந்த தம்பி தண்டபாணிக்கும் நிலம் சார்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் தம்பி தண்டபாணி என்பவர் அண்ணன் லிங்குசாமி என்பவரை 28.7.1999 அன்று காங்கயம் ரோட்டில் வைத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவரின் மகன்தான், 28.7.2025 அன்று தாராபுரத்தில் சித்தப்பா தண்டபாணி என்பவரால் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் லி.முருகானந்தம் என்பவர் ஆவார், என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் அறிய முடிகிறது.

2. தாராபுரத்தில் செயல்படும் மலர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் தண்டபானி என்பவரின் தூண்டுதல் பெயரில் செல்வக்குமார் என்பவர் 29.2.2020 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் லி. முருகானந்தம் மற்றும் அம்மா சுமித்ராதேவி ஆகிய இருவர் மீதும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கு.எண் 108 /2020, 294(b) 323 மற்றும் 506(ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  மேலும் வழக்கறிஞர் லி. முருகானந்தம் 11 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் மீது போடப்பட்ட பொய்வழக்கிற்கு எதிராக வழக்கறிஞர் லி .முருகானந்தம் தொடுத்த வழக்கில்,   வழக்கறிஞர் லி. முருகானந்தம் கைதுசெய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும், பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததிற்கு ரூ 50000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் பொய்வழக்கு பதிவுசெய்த காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.என்பதனைஆவணங்கள் அடிப்படையில் அறிய முடிகிறது.

மனித உரிமைக் காப்பாளர், வழக்கறிஞர் லி. முருகானந்தம் குடும்ப விபரம்

1.வழக்கறிஞர் லி.முருகானந்தம் என்பவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள முத்துநகரில், லிங்குசாமி மற்றும் சுமத்திராதேவி ஆகியோர்களின் ஒரே மகன் ஆவார். இவர் “பெக்கர் தசைநார் டிஸ்ட்ரோ நோயால்” பாதிக்கப்பட்ட 80 சதவிகித மாற்றுதிறனாளி ஆவர். மேலும் சட்டம் படித்து 2017 ஆம் ஆண்டு பதிவுசெய்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வந்தார் என்பதனை ஆவணங்கள் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அறிய முடிகிறது.

வழக்கறிஞர் லி. முருகானந்தம் தலையீடு செய்த பொதுநல வழக்குகள்

1. WP No.6551 of 2017

கேட்கப்பட்ட நிவாரணம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றக் கட்டிடங்களையும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உபயோகிக்க வசதியாக (ராம்பு, எலக்ட்ரிக் லிஃப்ட், ப்ரெயில் வசதிகள், விலைகுறைப்பு கழிப்பறைகள், சுழற்சி நுழைவாயில்கள் முதலியன) மாற்ற உத்தரவிட வேண்டும் என வழக்கு

2. WP No.24341 of 2017

கேட்கப்பட்ட நிவாரணம்:

நீதிமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும்:

•வீடியோகான்பிரன்ஸ் வசதி, கடித மனுவுகள் அனுமதி,

வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வசதி, E-filing வசதி,

வழக்குகளின் முன்னுரிமை, கட்டண விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும் என வழக்கு

3. WP Nos.14542, 24341 & 6551 of 2017; WP No.1749 of 2018

கேட்கப்பட்ட நிவாரணம்:

தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும்: மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு, பாடநூல்கள் ப்ரெயில்/ஒலிவடிவில், குறியீட்டுமொழி ஆசிரியர்கள், ஒளிபடத்திறன் வசதிகள், சிறப்பு ஆசிரியர்கள், மற்றும் திருப்திகரமான இணை பிரவேசக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என வழக்கு

4. WP No.1749 of 2018

கேட்கப்பட்ட நிவாரணம்:

மாற்றுத் திறனாளிகளுக்கும், அபூர்வ மரபணுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும்:

•வீட்டுவாசல் சுகாதார சேவைகள்,•விலையில்லா உயர்தர மருத்துவ சிகிச்சைகள், மருத்துவக் கற்கை நெறிகளில் இவ்வியல்புகளை சேர்க்க , மற்றும் மீளுருவாக்கம் வசதிகள் வழங்க வேண்டும் என வழக்கு

5. WP Nos.7511 & 7533 of 2020

கேட்கப்பட்ட நிவாரணம்:

COVID-19 காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதங்கள்:

•வீட்டுவாசலில் உணவு, மருந்துகள், ₹5000 உதவித்தொகை,

•இலவச எலெக்ட்ரிசிட்டி, மற்றும்

•அவர்கள்உதவிக்கு நபர்கள் வழங்கப்பட வேண்டும்.

•மேலும், தெருவோரத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் நபர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும் என வழக்கு

6. WP No.7760 of 2023

கேட்கப்பட்ட நிவாரணம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள தேன்மலர் பள்ளிகட்டிட அனுமதி பெற்றபோது பொதுப்பாதையாக காட்டிய 40 அடிவீதியான பாதையை மறைத்து வைக்காமல் பொதுபயன்பாட்டுக்கு அரசிடம் ஒப்படைக்குமாறும் மற்றும் பாதையை தடைபடாமல் பத்திரமாக பாதுகாக்க உத்தரவிடுமாறும் வேண்டிய வழக்கு

7. WP No.37528 of 2024

கேட்கப்பட்ட நிவாரணம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் உள்ள பொதுப்பாதையில் கட்டப்பட்ட சாமிகோவில், கம்பிவேலி, கிணறு போன்ற சட்டவிரோத அடுக்குகளை அகற்ற உத்தரவிட வேண்டும்; மற்றும் அதை பொதுப்பாதையாக பராமரிக்க வேண்டும். என வழக்கு

8. உச்சநீதிமன்ற தீர்ப்பு – C.A 9487/2025

முக்கிய நிவாரணம்: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறைவசதிகளை கட்டாயமாக வழங்க 15 முக்கிய வழிகாட்டுதல்கள்.  இதில்:

•ராம்பு, வீல்சைர் வசதிகள்,

•ப்ரெயில்/கையெழுத்து மொழி தகவல்கள்,

•மருத்துவ, மனநலவசதிகள்,

•சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி உள்ளிட்டவை.

இந்த தீர்ப்பே “Muruganantham Doctrine” ( முருகானந்தம் கோட்பாடு) என அழைக்கப்படுகிறது. மேலும் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட வழக்கறிஞர் முருகானந்தம் மனித உரிமைக் காப்பாளர் ஆவார்.

திட்டமிடப்பட்ட கொலை

1. பொதுநல வழக்குகளில் தலையீடு செய்து வந்த வழக்கறிஞர் லி.முருகானந்தம், தனது அப்பாவின் உடன்பிறந்த தம்பியான தண்டபாணி செய்துவரும் சட்டவிரோத செயல்களை சட்டரீதியாக தலையீடு செய்து நடவடிக்கை எடுத்துவந்துள்ளார். குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு பின்னாலுள்ள வழக்கறிஞர் லி. முருகானந்தத்தின் இடம் TS NO 21/1B1க்கு அருகே இருந்த, தண்டபாணியின் இடமான TS 21/1A மற்றும் TS 20/19B இல் கட்டப்பட்ட தேன்மலர் மெட்ரிக் பள்ளி விதிமுறைகளை மீறி, கட்டிட பிளானிற்கு எதிராக தளங்களை எழுப்பியும், பொதுபோக்குவரத்து பாதையை மறித்தும் பள்ளியை நிர்வகித்து வந்துள்ளார்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் பொதுமக்களின் போக்குவரத்தை பொதுபாதையில் உறுதி செய்வதற்காகவும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் WP 7760/2023 மற்றும் WP 4818/2025 ஆகிய இரண்டு வழக்குகளை தாக்கல் செய்தார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 04.10.2024 அன்று wp 7760/2023 என்ற வழக்கையும் 02.04.2025 அன்று wp 4818/2025 என்ற வழக்கில் உண்மையை அறிந்து, தேன்மலர் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பு கொடுத்தது. இதனால் வழக்கறிஞர் முருகானந்தத்தின்மீது கோபத்திலும் ஆற்றாமையிலும் இருந்த தண்டபாணி அவரை கொலை செய்ய திட்டமிட்டு செயல்பட்டு உள்ளார் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் வாயிலாகவும் ஆவணங்கள் அடிப்படையிலும் அறிய முடிகிறது.

2. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 02.04.2025 தேதியிட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணியின் வழக்கை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 2025 மே மாதத்திற்குள் சட்டத்திற்கு புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் இடிக்க உத்தரவிட்ட நிலையில், உள்ளூர் அதிகாரிகளின் ஆதரவின் காரணமாக சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்காமல் இருந்துள்ளார். இதைதொடர்ந்து வழக்கறிஞர் லி . முருகானந்தம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்ப்பை நிறைவேற்றக் கூறி அளித்த பெட்டிஷன்களும் கண்டுக்கொள்ளப்படவில்லை.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலநீட்டிப்பு அப்பளிகேஷன் ஒன்றை தாக்கல் செய்த பின் நீதிமன்றம் தண்டபாணிக்கு 07.10.2025 வரை கால அவகாசம் கொடுத்தும் தீர்ப்பளித்துள்ளது என்பதனை ஆவணங்கள் அடிப்படையில் அறிய முடிகிறது.

3. 25.07.2025 அன்று தாராபுரம் நகர சார் ஆய்வாளரிடம் இருந்து வழக்கறிஞர் முருகானந்தத்திற்கு 28.07.2025 அன்றைக்கு மதியம் 1.00 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்த இடத்தில் ஆஜராகும்படி ஒரு நோட்டீஸ் வந்தது. எனவே 28.07.2025 அன்று வழக்கறிஞர் முருகானந்தம் அவரது வீட்டில் ‘video conference’ மூலமாக உயர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக காத்திருந்தார். அப்போது சுமார் 1:15 மணி அளவில் தாராபுரம் நகராட்சி சர்வே அதிகாரி கி. ரவிக்குமார் என்பவர் முருகானந்ததிற்கு போன் செய்து, தான் சர்வே எடுக்க நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டதாகக் கூறி, உடனே வாருங்கள் என அழைத்துள்ளார்.

சர்வேயர் கி.ரவிக்குமார் செல்போன் மூலமாக அழைத்ததன் காரணத்தால் அவசர அவசரமாக கிளம்பி வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவர், தனது 1. மாமா தங்கவேல், 2. குருசாமி வாத்தியார் மேலும் உடன் பணிபுரியும் வழக்கறிஞர்கள் 3. ரகுராமன் மற்றும் 4.தினேஷ் ஆகியவர்களுடன் சுமார் மதியம்  1.40 மணி அளவில் சம்பவ  இடமான தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தெற்கு திசைபக்கமும், பள்ளி மைதானத்தில் வடக்கு திசையில் அமைந்துள்ள, பள்ளியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரும்புவேலி அருகே சென்றுள்ளார்கள்.

ஆனால் சம்பவ இடத்தில் சர்வேயர் கி.  இரவிக்குமார் உட்பட அரசு தரப்பில் சம்மந்தப்பட்டவர்கள் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில், பள்ளியின் தாளாளர் தண்டபாணியும் அவருடன் இருக்கும் நாட்டுத்துரை என்பவரும் இருந்திருக்கிறார்கள். இதனால் வழக்கறிஞர் லி .முருகானந்தம் சர்வேயர் கி. இரவிக்குமார் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு நான் வந்துவிட்டேன் நீங்கள் இன்னும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளார். அப்போது பேசிய சர்வேயர் கி. ரவிக்குமார் கொஞ்ச நேரம் காத்திருங்கள் வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார் என்பதனை சம்பவ சாட்சிகள் சொன்ன தகவலின் அடிப்படையில் ஆவணங்கள் அடிப்படையிலும் அறிய முடிகிறது.

4. வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவரின் அப்பா லிங்கசாமி 28.7.1999 ஆம் ஆண்டு தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி என்பவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 26 ஆண்டுகள் கடந்த நிலையில், இதேநாளில் மகனையும் கொலைசெய்வதற்கு தண்டபாணி என்பவர் திட்டமிட்டிருந்த நிலையில், சர்வேயர் கி.இரவிக்குமார் தண்டபாணி சட்டவிரோதமாக கைப்பற்றி இருந்த இடத்தை அளப்பதற்கு, வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவருக்கு நோட்டீஸ் கொடுத்ததும், மதிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டேன் என உறுதி செய்து, வரச் சொன்ன நிலையில், சர்வேயர் கி. இரவிக்குமாரும் அவரை சார்ந்தவர்களும் வரவில்லை என்பது கள ஆய்வுக்குழுவினருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையில் ,புகார்தாரர் குறிப்பிடச் சொல்லியும், சர்வேயர் குறித்த தகவலை பதிவு செய்யவில்லை என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்பதனை களஆய்வின் போது பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிய முடிகிறது.

5. சம்பவ இடத்திற்கு வழக்கறிஞர் லி முருகானந்தம், மற்றும் உறவினர்கள், மேலும் வழக்கறிஞர்களையும் பார்த்தவுடன் பள்ளியின் தாளாளர் தண்டபாணியும் நாட்டுத்துரையும் அருகாமையில் பள்ளியின் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்தில் இருந்த நபர்களுக்கு கை ஜாடை செய்துவிட்டு பக்கத்தில் இருந்த செடிப்புதரில் மறைந்து கொண்டுள்ளார்கள். அப்போது அந்த இடத்திற்கு சற்றுதள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளிபேருந்தின் மறைவில் இருந்து நான்கு பேர் கண் மட்டும் தெரியுமாறு அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு ஒவ்வொருவரும் பெரிய நீளமான கத்தி மற்றும் கடப்பாறைகளுடன் வழக்கறிஞர் லி . முருகானந்தம் மற்றும் அவருடன் சென்றவர்களை பார்த்து கொலை செய்யும் நோக்கில் நோக்கி ஓடி வந்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த பள்ளியின் தாளாளர் தண்டபாணி வழக்கறிஞர் லி . முருகானந்தத்தோடு வந்திருந்தவர்களை அடையாளம் காட்டி அவர்களின் மூளை சிதற வெட்டிக்கொல்லுங்கடா, மூளை இருந்தாதானே வக்கீல் கோர்ட்டுக்கு போவான் என்றும் இனிமேல் எவனும் உயிரோட போகக் கூடாது என்றும் சத்தமிட்டு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அருகில் இருந்த நாட்டுத்துரை என்பவரும் இவன் தொந்தரவு இனிமேல் இருக்கக் கூடாது அவர்களை போடுங்கடா என கத்தியுள்ளான். அப்போது கூலிப்படையைச் சேர்ந்த அந்த நான்கு பேரில் ஒருவன் வழக்கறிஞர் லி . முருகானந்த்தின் தலையில் கத்தியால் வெட்ட முயன்றபோது, உடனிருந்த வழக்கறிஞர் ரகுராமன் என்பவர் அந்த நபரை தள்ளிவிட்டதனால் ஆத்திரம் அடைந்த கூலிப்படை ரகுராமனின் கழுத்தில் வெட்டமுயன்றபோது, தலையைகீழே இறக்கியுள்ளார். இதனால் தலையில் முதலில் கத்திவெட்டி உள்ளது. இதன் பின்னர் மீண்டும் வெட்டிய போது, வழக்கறிஞர் ரகுராமன் கை வைத்து தடுத்ததால் அவரின் இடதுகையில் பலத்த வெட்டுவிழுந்துள்ளது.

 இதனால் அங்கிருந்து உயிர்தப்பிக்க ஓடியுள்ளார் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அறிய முடிகிறது.

6. சம்பவ இடத்தில் கூலிப்படையை சேர்ந்த மற்றொரு நபர் வழக்கறிஞர் லி . முருகானந்தத்தின் தலையில் அவரது மூளைவெளியில் சிதறும் அளவிற்கு சரமாரியாக வெட்டி அவரை அதேஇடத்தில் கொலை செய்தனர்.  வழக்கறிஞர் லி . முருகானந்தம் 80%  மாற்றுத்திறனாளி ஆவார். இதனால் கூலிப்படையினர் கொலை செய்ய வந்தபோது ஓட முடியாமல் அதேஇடத்தில் துடிக்கதுடிக்க இறந்துள்ளார். மற்றொரு வழக்கறிஞரான தினேஷ் என்பவரை கையில் இருக்கும் போனை கீழேபோட்டுவிட்டு ஓடு என்று அவரையும் வெட்ட துரத்தியதால் அவரும் போனை கீழே போட்டு விட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

மேலும் குருசாமி வாத்தியார் மற்றும் வழக்கறிஞர் லி.முருகானந்தத்தின் மாமா தங்கவேல் மீதும் தாக்குதல் நடத்த முயன்ற போது அவர்களும் தப்பித்து ஓடிவிட்டனர். இதில் கையில் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ரகுராமன் மற்றும் தங்கவேல் ஆகியோர் அருகில் இருந்த கொங்கு ஆர்த்தோ என்ற தனியார் மருத்துவமனையில் நுழைந்து உயிர் தப்பித்து கொண்டனர் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அறிய முடிகிறது.

7. கூலிப்படையினரால் கொலை முயற்சிக்கு உள்ளான வழக்கறிஞர் ரகுராமன் மற்றும் தினேஷ் ஆகியோர் கொங்கு ஆர்த்தோ என்ற தனியார் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்ததால், ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை ஏற்பாட்டில், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு உயர்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொங்கு ஆர்த்தோ தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் வேறு எங்காவது சென்று இருந்தால் வெவ்வேறு இடங்களில் தாக்குதலுக்காக நிறுத்தப்பட்டிருந்த கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற அச்சத்தை பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அறியமுடிகிறது.

8. வழக்கறிஞர் லி .முருகானந்தம் மற்றும் அவரை சார்ந்தவர்களை கொலை செய்வதற்காக, தேன்மலர் பள்ளியின் தாளாளர் ஏற்கனவே திட்டமிட்டு கூலிப்படையினரை சில நாட்களுக்கு முன்பாகவே பள்ளியில் தங்கவைத்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று மாணவர்களை பள்ளிக்கு ஏற்றிவரும், சொந்தமான பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட கொலையாளிகள் மூலம் ,கொலை செய்ய வைத்துள்ளனர். இதன் மூலம் கொலை செய்வதற்காக தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் வளாகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் அறியமுடிகிறது.

9. வழக்கறிஞர் லி .முருகானந்தம் மற்றும் அவரை சார்ந்தவர்களை கொலை செய்வதற்காக, கூலிப்படையினரை முன்கூட்டியே தயார்படுத்தி தேன்மலர் மெட்ரிக் பள்ளியில் மைதானத்தில் இருந்த பள்ளியின் பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் .கொலை சம்பவம் நடக்கும்பொழுது ஆசிரியர்களோ மாணவர்களோ சம்பவத்தை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தென்திசை பக்கத்தில் இருந்த அனைத்து ஜன்னல்களும் முன்கூட்டியே மூடப்பட்டிருந்தது என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அறியமுடிகிறது.

தாராபுரம் காவல்நிலையத்தாரின் நம்பகத் தன்மையற்ற விசாரணை

1.வழக்கறிஞர் லி .முருகானந்தம், கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டும், மற்றும் அவரை சார்ந்த வழக்கறிஞர்கள் கொலைவெறித் தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் தாராபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (கு. எண்.371/2025) கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் வழக்கறிஞர் ரகுராமன் என்பவருக்கு நடந்த தாக்குதல் சம்பந்தமான எந்த தகவலும் இல்லை.

இதன் மூலம் தாராபுரம் காவல் நிலையத்தார், திட்டமிட்டு உண்மையை மறைக்கும் நோக்கத்தில், அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட புகார்தாரரை நிர்பந்தப்படுத்தி புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதனை அறிய முடிகிறது. எனவே இந்த வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் காவல் நிலையத்தாரின் செயல் மீது கள ஆய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

2. வழக்கறிஞர் லி .முருகானந்தம் மற்றும் அவரை சார்ந்தவர்களை கொலை செய்த கூலிப்படையினர் தங்களின் முகங்கள் தெரியக்கூடாது என உடல் முழுவதையும் மறைத்து ஆடை அணிந்து வந்து கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இதனை நேரில் பார்த்த, பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய சம்பவச் சாட்சிகள், கூலிபடையினரின் உடல் அமைப்புகள் செயல்பாடுகளைப் பார்த்துள்ளனர்.

படுகொலைக்குப் பின்பு, தாராபுரம் காவல்நிலையத்தில் சரண்டர் ஆன கூலிப்படையினர் ஆள் மாறாட்டம் செய்துள்ளனர் என்பதனை, சம்பவ சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கூலிப்படையினர் சரண்டருக்கு பின்பு, சம்பவ சாட்சிகளை நேரடியாக அழைத்துவந்து அடையாள அணிவகுப்பு எதுவும் நடத்தாமல் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்மூலம் கொலை செய்தவர்கள் வேறுநபர்கள், காவல்நிலையத்தில் சரண்டர் ஆனவர்கள் வேறுநபர்கள் என்பதனை சம்பவச் சாட்சிகள் வாக்குமூலங்கள் அடிப்படையில் ஆவணங்கள் அடிப்படையில் அறியமுடிகிறது.

கோரிக்கைகள்:

1.தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி உத்தரவின் பேரில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவர் மனித உரிமை காப்பாளர் ஆவார். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக பாதுகாப்பை வழங்க வேண்டும், மேலும் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் ரகுராமன் மற்றும் தினேஷ், சம்பவ சாட்சிகள் ஆகியோர்களுக்கு எதிரியால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இவர்களுக்கும் மாநில அரசு நிரந்தர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம்.

2. மனித உரிமை காப்பாளர், வழக்கறிஞர் லி . முருகானந்தம் திட்டமிட்டு படுகொலை செய்த தேன்மலர் பள்ளியின் தாளாளர் தண்டபாணி, பல நூறு கோடிகள் உடைமைகள் கொண்ட நபர் ஆவார். மேலும் அரசியல் செல்வாக்கு கொண்ட நபர். இந்த கொலை வழக்கை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீர்த்துப்போக செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுபோன்ற நிலையில் உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரணை செய்தால் உண்மை வெளியில் வராது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே மனித உரிமை காப்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்புகுழு வைத்து சிபிசிஐடி அல்லது சிபிஐ வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என களஆய்வுக்குழு பரிந்துரை செய்கிறோம்.

3. தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி கூலிப்படையினரை வைத்து வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவரை, திட்டமிட்டு கொலை செய்த சம்பவத்தில், தாராபுரம் நகராட்சியின் சர்வேயர் கி. இரவிக்குமாரின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர். எனவே சர்வேயர் கி ரவிக்குமாரின் செல்போனை உடனடியாக கைப்பற்றி அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கள ஆய்வுக்குழு பரிந்துரை செய்கிறது

4.வழக்கறிஞர் முருகானந்தம் என்பவரை படுகொலை செய்வதற்காக தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் இடம் மற்றும் வாகனங்கள் கூலிப்படையினர் தங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற செயல்பாடு முன்கூட்டியே திட்டமிட்டு பள்ளியில் நடைபெற்றுள்ளது என்பதனை பாதிக்கப்பட்டவர் சொன்ன தகவலின் அடிப்படையில் அறிய முடிகிறது. எனவே தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என களஆய்வுகுழு பரிந்துரை செய்கிறது.

5. வழக்கறிஞர் லி .முருகானந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தலையீடு செய்ததால் ,தாராபுரம் பேருந்துநிலையம் எதிரே செயல்பட்டுவரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளியில் விதிமுறையை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை அந்த கட்டடம் அகற்றப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பதன் அடிப்படையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கட்டடத்தை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டுமென களஆய்வுக்குழு பரிந்துரை செய்கிறது.

6.தேன்மலர் பள்ளியின் தாளாளர் தண்டபாணி உத்தரவின் பேரில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முருகானந்தம் தனது செயல்பாட்டின் மூலம் மனித உரிமை காப்பாளர் என்பது உறுதிசெய்யப்படுகிறது. மேலும் இதுபோன்ற மனித உரிமை காப்பாளர்கள் மீது தமிழ்நாட்டில் தொடர்ந்து தாக்குதல்கள் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அரசு மனித உரிமை காப்பாளர்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டுமென கள ஆய்வுகுழு பரிந்துரை செய்கிறது.

7.மனித உரிமை காப்பாளரும் வழக்கறிஞருமான லி. முருகானந்தம் என்பவரை, தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி உத்தரவின் பேரில் 28.7.2025 அன்று கூலிப்படையினர் படுகொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து தலையீடு செய்து நேரடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கள ஆய்வுக் குழு பரிந்துரை செய்கிறது.

இ. ஆசீர்வாதம்,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வே.ப. இராசாமணி,

வேலு சிவகுமார்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,

மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு – திருப்பூர்மாவட்டம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW