மோடி 3.0 வின் அரசியல் பொருளியல் பண்பு என்ன?

28 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 4

வங்கிகள் இணைப்பு, பண மதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, பி.எப்., ஈ.எஸ்.ஐ. பணங்களை ஒன்றிய அரசின் ஒரே ஆணையத்தின்கீழ் கொண்டு வருதல் ஆகியவை நிதிமூலதன திரட்டலையும் குவிப்பையும் இலக்காக கொண்ட சில சீர்திருத்தங்களாகும். மொத்தத்தில் முதல் ஐந்து ஆண்டு கால நிதித்துறை சீர்திருத்தங்களால் தொழில்மூலதனமும் வங்கிமூலதனமும் இணையும் நிகழ்வு தீவிரப்பட்டு, நாட்டை நிதிமூலதனத்தின் கையில் ஒப்படைத்தது மட்டுமல்லாமல் இதன் உடன் நிகழ்வாக நிதியாதிக்க கும்பலினுடைய சிறுகும்பலாட்சியை அரசியலில் வலுப்படுத்தியது.

மோடி – ஷா சிறுகும்பலாட்சி  செய்த பொருளியல் சீர்திருத்தங்கள் நிதிமூலதனக் குவிப்புக்கு வழிவகுத்தது மட்டுமின்றி அதன்விளைவாக இரண்டாம் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே மோட்டார் வாகனத்துறை, கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, முதலீடு, ஏற்றுமதி எல்லாவற்றிலும்  மிகப்பெரிய பொருளியல்  சுணக்கம் வெளிப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பொருளியல் சுணக்கத்தை எதிர்கொள்வதன் பெயரால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1,76,000 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு புறவாசல் வழியாக, கார்ப்பரேட்களுக்கு வரிக்குறைப்பு செய்து 1,45,000 கோடி ரூபாய் வரி வருவாயை தாரை வார்த்தது. 2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை பொருளியல் துறையை மென்மேலும் நிதிமயமாக்கி ஏகபோக முதலைகளிடம் ஒப்படைப்பது, டிஜிட்டல்மயமாக்குவது என்ற பெயரில் தொழில்நுட்ப பில்லியனர்களை உருவாக்குவது என்ற திசையிலேயே சீர்திருத்தங்களை அமலாக்கத் தொடங்கியது.

பொருளியல் சுணக்கம் நீடித்து கொண்டிருந்த போதுதான் கொரோனா பெருந்தொற்று வெடிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுடனான தேசியவெறி மோதல் போக்கை மட்டுப்படுத்திக் கொண்டு, மோடி அரசு சீன எதிர்ப்பை ஒரே குரலில் பேசத் தொடங்கியது. அப்படிப் பேச ஆரம்பித்ததைத் தொடர்ந்து லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய எல்லைச் சண்டை தொடங்கி அந்த தகராறு நீடித்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலுள்ள நிதி நிறுவனங்களின் முதலீடுகள் பெருமளவு இந்தியப் பங்கு சந்தையை நோக்கியும் இந்திய நிறுவனங்களை நோக்கியும் பாயத் தொடங்கின. அமெரிக்காவுடைய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகிள், ஃபேஸ் புக், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் ப்ளாக் ஸ்டோன், கேகேஆர் போன்ற வெண்ட்சர் கேபிடலிஸ்ட் நிறுவனங்களிடம் இருந்தும்,   வரி சொர்க்கம் ( tax heaven ) என்று அழைக்கப்படுகிற சிறிய தீவுகளில் செயல்படும் வெட்ஜ் பண்ட்ஸ் ( Wedge Funds) நிறுவனங்களிடம் இருந்தும், சில அரசுகளிடம் உபரியாக குவிந்துள்ள சாவரின் பண்ட்ஸ் ( Sovereign State Funds) களில் இருந்தும் முதலீடுகள் இந்தியாவுக்குள் வந்தன. இப்படியாக 2020 ஆம் ஆண்டில் மட்டும் 88 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு உள்ளே வந்தது. அத்தகைய முதலீடுகள் எல்லாமே விரல்விட்டு எண்ணக்கூடிய நிதிமூலதன கும்பலுக்குத்தான் போய் சேர்ந்திருக்கின்றன.

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் அரசியல், இராணுவ ரீதியான கூட்டின் மூலம் பொருளியல் தளத்தில் அமெரிக்க நிறுவனங்களுடன் இந்திய நிதிமூலதனக் கும்பல் இளைய பங்காளியாக மாறியுள்ளது.  பொருளியல் சுணக்கம், மாதக்கணக்கிலான கொரோனா முழுமுடக்கம் ஆகியவற்றுக்கு இடையில் உண்மையான பொருளியல் நடவடிக்கை ( Real Economy) என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால், மக்களின் வாழ்க்கைக்கும் உற்பத்திக்கும் தொடர்பில்லாத வகையில் நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரம்( எடுத்துக்காட்டு – ஊக வணிகம்,நேரடி அன்னிய நிதி நிறுவன முதலீடுகள்) ஒன்று வளர்ந்துவருகிறது.  நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சரிவு, கோடிக்கணக்கானோருக்கு வேலையிழப்பு ஆகியவை நடந்துகொன்டிருந்தது. 

கோவிட் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தற்சார்பு இந்தியா ( ஆதம் நிர்பார்), உற்பத்தி சார்நத ஊக்குவிப்பு ( PLI)  என்ற பெயரில் 20 இலட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தது மோடி அரசு. இதிலும் பெரும்பகுதி ஏகபோகங்களுக்கே தரப்பட்டது. சிறுகுறு தொழில்களுக்கு சொற்பமான நிதியுதவியே அறிவிக்கப்பட்டது.

இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் எண்ணெய் – எரிவாயு மட்டுமின்றி தொலைதொடர்பு மற்றும் சில்லறை வணிகத்திலும் ஏகபோகமாக மாறியிருக்கிறது. அதானி குழுமம் நிலக்கரி, துறைமுகம் ஆகிய துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் இருந்து மாற்று எரிசக்தி, விமானத் துறை , உள்கட்டமைப்பு விவகாரங்களிலும் மிகப்பெரிய ஏகபோக சக்தியாக மாறியது.  கொரோனா கால நிவாரண திட்டம் என்ற பெயரில் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை, வங்கித்துறை, விண்வெளித்துறை போன்ற இதுவரை தனியார்மயமாக்கப்படாத துறைகள் திறந்துவிடப்பட்டன. சுரங்கத் துறையில் ஓர் ஏகபோக குழுமமாக வேதாந்தா குழுமம் வளர்ச்சிப்பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் தொழில்நுட்ப பில்லியனர்கள், நிதித்துறை சார்ந்த செயலிகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ( Fintech) பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாசிச மோடி – ஷா சிறுகும்பலும் நிதிமூலதனக் கும்பலும் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. இதுமட்டுமின்றி, பாசக என்ற கட்சியே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் மாறியிருக்கிறது.  அரசுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் கட்டாயம் இல்லாத இரகசிய தேர்தல் பத்திர முறை ( Electoral Bonds) அறிமுகப்படுத்தப்பட்டது. வேறெந்த கட்சியைவிடவும் பெரும் பணம் படைத்த கட்சியாக பாசக மாறியுள்ளது. எந்தக் கட்சியில் இருப்பவரையும் விலைக்கு வாங்கக் கூடிய,  மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை நடத்தக்கூடிய அளவுக்கு பணப்பலம் கொண்டிருப்பது பாசகவின் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக  இருக்கிறது.

சீனாவிலும் அமெரிக்காவிலும் ஏகபோகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்பது துளியும் இந்தியாவில் இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளியலையும் நிதித்துறையையும் அரசியலையும் எவ்வித தடைகளுமின்றி கட்டுப்படுத்தி ஏகபோகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

ஒட்டுமொத்த மூலதன வளத்தையும் மக்களிடம் இருந்து சுரண்டி நிதிமூலதன சிறுகும்பலிடம் எப்படி குவிப்பது என்பதையே பொருளியல் கொள்கையாக  நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நோக்கத்திற்காக மோடி –ஷா சிறுகும்பல்  நாடாளுமன்ற அமைப்புமுறையை பெயரளவுக்கானதாக மாற்றிக் கொண்டுள்ளது. ’ஒரே தேசம், ஒரே சந்தை’ என முன்வைத்து அரசியல் துறையில் இதை செயலாக்கத் துடிக்கின்றது. ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும் தேசியவாதக் கூச்சல் போட்டுக் கொண்டே ஏகபோக கார்ப்பரேட் சிறுகும்பலும் பாசிச மோடி – ஷா சிறுகும்பலும் ஒட்டுமொத்தமாக அரசியல் அதிகாரத்தையும் நிதி அதிகாரத்தையும் தங்கள் கையில் குவித்துக்  கொண்டிருக்கின்றன.

பாசிச அரசு அதிகாரத்தை நிறுவனமயப்படுத்தவதை நோக்கி இந்த நாடு செல்லாமல் இருக்க வேண்டுமானால் நிதிமூலதனக் குவிப்பையும் பல்வேறு தொழில்துறையில் ஏகபோகங்கள் உருவாவதையும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.   

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW