வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் சனாதன சுவாமிநாதன்! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

வழக்கறிஞருக்கு எதிராக ஒரு நீதிபதி என்பதல்ல பிரச்சனை!

சமூகநீதிக்கு எதிராக சனாதனம்!

நீதித்துறையை விழுங்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

நாடாளுமன்ற அமைப்பு முறையை அரித்துக் கொண்டிருக்கும் பாசிசம்!

இதுதான் இப்பிரச்சனையின் முழுமையான பரிமாணம்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என்று குற்ற்ஞ்சாட்டப்பட்டு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், இராஜசேகர் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்பு ஜூலை 28 அன்று நேர்நிற்க வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நீதிபதி ஜி.ஆர். சுவாதிநாதன் ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பெற்ற ஏப்ரல் 8 தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடைவிதித்ததாகும்., கடந்த ஏப்ரல் 8 ஆம் நாள் உச்சநீதிமன்றம் மாநில உரிமையை உயர்த்திப்பிடித்து, ஆளுநர் சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் தருவதற்கு கால வரம்பிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. ஒருபக்கம் குடியரசு தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்திடம் இத்தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கிவிட்டு மறுபக்கம் ஜி.ஆர். சுவாமிநாதன் வழியாக தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றது ஆர்.எஸ்.எஸ். அதுவும் நீதிமன்ற விடுமுறை நாட்களில் அவசர அவசரமாக அவ்வழக்கை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் இருப்பதை சற்றும் பொருட்படுத்தாமல், சதித்தனமான தடைவிதிக்கும் வேலையை செய்தவர்தான் ஜி.ஆர். சுவாமிநாதன். இதுபோல் பல்வேறு தீர்ப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இன் அடியாளாகவும் அதன் சனாதன, ஒற்றையாட்சி கொள்கைக்காகவும் செயல்படுபவர் என்பது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தைப் பொருத்தவரை புதிய செய்தியல்ல.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைபபாளர் ஆவர். அவர் ஓர் இடதுசாரி செயற்பாட்டாளர். தில்லையில் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை, அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் உரிமை, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு உரிமைப் போராட்டங்களில் ஊக்கமுடன் பங்கேற்று அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.

குறிப்பாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டு வருபவர். திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை வைத்து இந்து – முஸ்லிம் கலவரத்திற்கு வழிவகுக்க துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் முயற்சியை முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது இக்கூட்டமைப்பு.  

முருக பக்தர்கள் பங்கேற்கும் மாநாடென்ற போர்வையில் இந்து முன்னணி கடந்த ஜூன் 22 அன்று நடத்திய இசுலாமிய,, கிறித்தவ வெறுப்பு மற்றும் திராவிட, ,தமிழ்த்தேசிய அரசியல் வெறுப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்து அம்மாநாட்டில் உரையாற்றிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன், பாசக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிய வைப்பதில் வெற்றி கண்டது இக்கூட்டமைப்பு. அந்த புகாரில் புகார்தாரராக இருப்பது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் வாஞ்சிநாதன்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவை அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த ஜூன் 14 ஆம் நாள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார் வாஞ்சிநாதன். உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே அவர் அந்த புகாரை அனுப்பியுள்ளார். அப்புகாரை அவர் வேறு யாரிடமும் பகிரவில்லை. இந்நிலையில் அப்புகாரின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி பாசகவை சேர்ந்த வழக்கறிஞர் அருண் விசுவநாதன் நடத்தும் ’உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கப் புலனக் குழு’ ஒன்றில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் பகிரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு வாஞ்சிநாதன் அனுப்பிய புகார் புலனக் குழுவில் சுற்றுக்கு வந்தது எப்படி?  அது எப்படி கசிந்தது? யாரால் கசிய விடப்பட்டது?

புலனக் குழுவில் இப்புகார் பகிரப்பட்டதற்கு அடுத்த நாள்,  நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், இராஜசேகர் பங்குபெறும் ஆயம் தஞ்சை பல்கலைக் கழகம் தொடர்பான ஒரு வழக்கில் நேர்நிற்குமாறு வாஞ்சிநாதனுக்கு அழைப்பு விடுக்கிறது. அங்கு சென்றவுடன் அவ்வழக்கில் தான் இப்போது வழக்கறிஞர் இல்லை என்றும் அதை வேறொரு வழக்கறிஞர் நடத்துகிறார் என்றும் வாஞ்சிநாதன் சொல்லியுள்ளார். ”சரி அது இருக்கட்டும், நான் எனது நீதி பரிபாலனத்தில் சாதி ரீதியாக, மத ரீதியாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா? இல்லையா?” என்று கேட்டுள்ளார். நீங்கள் இது குறித்து எழுத்துப்பூர்வமாக கேட்கும் பட்சத்தில் தம்மால் இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க முடியும், இதுதான் இயற்கை நீதி” என்ற பொருள்பட வாஞ்சிநாதன் சொல்லியுள்ளார். ”நீங்கள் ஒரு கோழை” என்று சொல்லிவிட்டு வாஞ்சிநாதனிடம் விளக்கம் கேட்குமாறு ரிஜிஸ்டிராருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இப்போது ஜூலை 28 ( திங்கட்கிழமை ) அன்று  வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன், இராஜசேகர் முன்பு நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டிற்காக நேர்நிற்க வேண்டும் என்ற அழைப்பாணை இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் நீதிபதி சுவாமிநாதன் மீதான புகாரை விசாரித்து முடிப்பதற்கு முன்பே நீதிபதி சுவாமிநாதன் வாஞ்சிநாதனுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் இந்த வேலையை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிய புகாரை அங்கிருந்து திட்டமிட்டு கசிய செய்து, பாசகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வழியாக  பொதுவெளியில் பகிரப்பட்டு, அதன் பேரில் வாஞ்சிநாதனைக் கூண்டிலேற்ற முயலும் நன்கு திட்டமிடப்பட்ட சதிச்செயல் இதுவாகும். ஆக்டோபஸ் போல் நாட்டின் எட்டுத் திக்கும் தனது கரங்களை விரித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். தமது வலைப்பின்னலின் வழியாக இச்சதியை செயல்படுத்தியுள்ளதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்த நடவடிக்கையை ஜி.ஆர்.சுவாமிநாதன், இராஜசேகர் அமர்வு  கைவிட வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன், C.T. .செல்வம், அக்பர் அலி, P. கலையரசன், S.விமலா, K.K. சசிதரன், S.S. சுந்தர் ஆகிய 8 நீதிபதிகள் கூட்டறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர். தன் மீதான புகாரை தானே விசாரிப்பது போல் இவ்வழக்கை ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டி உள்ளார் நீதிபதி அரிபரந்தாமன். வழக்கறிஞர் சமூகத்திடமிருந்தும் முற்போக்கு இயக்கங்கள், கட்சிகளிடமிருந்தும் தோழர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.  

இது வழக்கறிஞர்களின் தொழில் செய்யும் உரிமை மீதும் அவர்களின் கருத்துரிமை, பேச்சுரிமை மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என்ற வகையில் கண்டனத்திற்குரியதாகும். 

ஒரு நீதிபதியின் அரசமைப்பு சட்ட ஒழுங்குக்கு எதிரான, தவறான, பொருத்தமற்ற  நடத்தைகளுக்கு எதிராக ஒரு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகாரளிப்பதற்கு அரசமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு. அந்த உரிமை மீதான தாக்குதல் இதுவாகும்.

இதுவொரு வழக்கறிஞருக்கு எதிராக ஒரு நீதிபதியின் அத்துமீறிய சட்டப்புறம்பான நடவடிக்கை மட்டுமல்ல, அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இது பாசிச மோடி அரசு நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு எதிரானப் போராட்டத்தின் பகுதியாகும்.

மோடி – அமித்ஷா கும்பலாட்சி இந்நாட்டை பாசிசததை நோக்கி நகர்த்தி செல்வதில் நான்கு முனைகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அரைகுறை கூட்டாட்சியை ஒற்றையாட்சியாக மாற்றுவது, அனைத்து துறைகளிலும் அதானி – அம்பானி போன்ற மேற்கு இந்திய கார்ப்பரேட்களின் ஏகபோகமாக மாற்றுவது, இசுலாமிய – கிறித்தவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றும் இந்துராஷ்டிர வேலைத்திட்டம் மற்றும் நாடாளுமன்ற அமைப்பு முறையை ஒழித்துக்கட்டுவது என்பதே அந்த நான்கு முனைகளாகும்.

மாநில அரசு சட்டமியற்றுவதற்கு எதிராக ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைப் போடுவது ஒற்றையாட்சி முனை, திருப்பரங்குன்ற அரசியல் இசுலாமிய எதிர்ப்பு வேலைத்திட்ட முனை, டங்ஸ்டன் திட்டத்தைக் கொண்டுவருவது கார்ப்பரேட் ஏகபோகத்தை ஊக்குவிக்கும் முனை, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகள் நீதித்துறையைக் கைப்பற்றி நாடாளுமன்ற அமைப்பு முறையை ஒழித்துக்கட்டும் முனை ஆகியவை பாசிசம் முன்னேறிச் செல்லும் நான்கு முனைகளுக்கான எளிய எடுக்காட்டுகளாகும்.

நாடாளூமன்ற அமைப்பு முறையை ஒழித்துக்கட்டும் வேலைத் திட்டத்தின் பகுதிதான் தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றிக் கொண்டு தேர்த்ல் சனநாயகத்தை ஒழித்துக்கட்டும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு திட்டமாகும். அமைச்சரவை, நாடாளூமன்ற நிலைக் குழுக்கள், ஆர்.பி.ஐ., செபி, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, நடுவன் புலனாய்வுத் துறை என  அனைத்து துறைகளையும் விழுங்கிக் கொண்டிருப்பதன் வரிசையில்தான் நீதித்துறையை விழுங்கத் துடிக்கிறார்கள்.  நீதித்துறை அவ்வப்போது மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுவதுதான் பாசிச ஆற்றல்களுக்கு சினம் ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசு முழுமையாக தலையிட முடியவில்லை என்பதால் கொலிஜியம் முறையை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள். நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசுக்கு முழு அதிகாரம் கிடைத்துவிட்டால் ஜி.ஆர். சுவாமிநாதன்கள் போன்ற ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளை நியமித்து நீதித்துறையை முற்றிலும் கைப்பற்றிவிட முடியும். இன்றைய நிலையில், நீதிபதிகளை விலை பேசியும் உருட்டியும் மிரட்டியும் தன் வழிக்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நாடாளும்ன்ற அமைப்பு முறையில் பாசிச மோடி அரசால் இன்னும் முழுமையாக விழுங்கப்படாத ஒரு துறையாக நீதித்துறை இருந்துவருகிறது. நீதிபதிகளும் வழக்கறிஞர் சமூகமும் மோடி அரசின் முயற்சிக்கு எதிராகப் போராடி வருகின்றனர். நீதித்துறை இன்னும் முழுமையாக விழுங்கப்படாமல் இருப்பதுதான் தேர்தல் பத்திர ரத்து தீர்ப்புகளாகவும் ஆளுநருக்கு கடிவாளமிடும் ஏப்ரல் 8 தீர்ப்புகளாகவும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாத தீர்ப்புகளாகவும் புல்டோசர் இராஜ்ஜியத்திற்கு எதிரான தீர்ப்புகளாகவும் இந்த நான்கு முனைகளில் பாசிசம் முன்னேறுவதற்கு தடையாக வந்து கொண்டிருக்கின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தை தக்க வைப்பதற்கானப் போராட்டம் என்பது நீதித்துறையை மோடி அரசு கைப்பற்றுவதற்கு எதிரான்ப் போராட்டமும் மேற்சொன்ன நான்கு முனைகளிலும் பாசிசம் முன்னேறிச் செல்வதற்கு எதிரானப் போராட்டமும் ஆகும்.

நீதித்துறைக்குள் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வழியாக நீதித்துறையைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிரானப் போராட்டத்தில்தான் தோழர் வாஞ்சிநாதன் பலிபீடத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

இது தோழர் வாஞ்சிந்தானுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமல்ல, இது நீதித்துறையை விழுங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கு  எதிரானப் போராட்டமாகும். நாடாளூமன்ற அமைப்பு முறையை ஒழித்துக்கட்டப் பார்க்கும் பாசிச மோடி –அரசுக்கு எதிரானப் போராட்டமாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சனநாயக ஆற்றல்கள் அனைவரும் தோழர் வாஞ்சிநாதன் மீதான வழக்கை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

                                                        தோழமையுடன்,

                                        தி. செந்தில்குமார்,

                              ஒருங்கிணைப்பாளர்,

                  தமிழ்த்தேச மககள் முன்னணி       

                                                         9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW