திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு செல்வதில்லை, இரட்டை சுடுகாடு, ஆலயத்தின் பங்குப் பேரவையில் தலித் மக்களை அனுமதிப்பதில்லை போன்ற தீண்டமைக் கொடுமைகளால் பல ஆண்டுகளாக தலித் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாண்டு ஜூலை 14 முதல் ஜுலை 22 வரை தேர் திருவிழா நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சாதிப் பாகுபாட்டை நீக்க வலியுறுத்தி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர், மதுரை மறை மாவட்ட பேராயர், சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர், எஸ்.சி. – எஸ்.டி. ஆணையத்தின் செயலாளர், கோட்டபாளையம் பங்கு அருட்பணியாளர், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், முசிறி கோட்ட துணைக் கண்காணிப்பாளர், துறையூர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையே அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் கிறித்தவ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஊர் பெரியவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த போது, சாதி ஆதிக்க ஆற்றல்கள் சிலர் சாதிப் பெயரை சொல்லி திட்டி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

கடந்த 21-7-2025 திங்கட் கிழமை அன்று சாதிப் பாகுபாட்டை போக்கவும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் ந்டத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் கலந்து கொண்டது. தலித் சமூகத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கென்னடி, வழக்கறிஞர் தாஸ் பிரகாஷ், நோப்லி உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்குபெற்றனர். கோரிக்கை மனுவைப் பெற்று கொண்ட டி.ஆர்.ஓ வழக்குப் பதிவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்குப் பதியப்படவில்லை.

சாதி பாகுபாடு நிலவுகின்ற காரணத்தால் ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தேர் திருவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். தலித் மக்களின் குடியிருப்புகளில் திருவிழாவின் கடைசி நாளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்று மறைமாவட்டம் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கிறித்தவம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கும் நலவாழ்வுக்கும் ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பரியதாகும். கால்டுவெல், எல்லீஸ் தொடங்கி வீரமாமுனிவர், ஜி.யூ. போப், உலகத் தமிழ் மாநாடு நடத்திய தனிநாயகம் அடிகளார், மொழிஞாயிறு தேவநேய பாவாணர் என தமிழ் மொழிக்கு பங்களித்த கிறித்தவ சமயப் பின்புலம் கொண்டவர்களின் பட்டியல் மிக நீண்டது. விவிலியத்தில் சமற்கிருதப் புழக்கத்தை எதிர்த்து தனித்தமிழ் இயக்கம் கண்டதும் இத்தமிழ் மண்ணே. தமிழ் இறையியல் மன்றம் கண்டதும் இங்கேதான்.

சாதிக் கொடுமையில் இருந்து விடுபடுவதற்கு இசுலாத்திற்கும் கிறித்தவத்திற்கும் சமயம் மாறி வந்த பட்டியலின மக்கள் இருக்கிறார்கள். ஆனால், கிறித்தவத்தில் இன்றளவும் சாதிக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பது  யதார்த்தமாக இருக்கிறது. தேவலாயத்தில் தீண்டாமை என்பது அவ்வப்போது வெடித்துக் கிளம்பும் பிரச்சனையாக  இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் போன்ற விழுமியத்தோடு கடந்த 300 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக தொண்டாற்றும் கிறித்தவத்திற்குள் சமயத் துறையில் சமத்துவத்திற்கு மாறாக சாதிப் பாகுபாட்டை போற்றும் சனாதனக் கொள்கையை  கத்தோலிக்க கிறித்தவ நிர்வாக சபை செயல்படுத்திக் கொண்டிருப்பது கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியதாகும்.

கிறித்தவ சமயத்திற்குள் நிலவும் சாதிப் பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து வழிகளிலும் சனநாயக ஆற்றல்கள் முயல வேண்டும்.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சாதி உணர்ச்சியைத் தூண்டிவிட்டு,  சாதி, சமயத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாசக ஆட்சிக் கட்டிலில் இருந்தபடி, நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் போது சமயத் துறையில் சாதிக்கு சாமரம் வீசி தமிழர் ஓர்மைக்கு குந்தகம் விளைவிப்பதை நாம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

தமிழ்நாடு அரசு இவ்விசயத்தில் தலையிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர், மதுரை மறை மாவட்ட பேராயர்  உள்ளிட்டோர் தலையிட்டு கோட்டப்பாளையத்தில் மட்டுமின்றி தேவாலயங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக முயலவேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  

தோழமையுடன்

தி. செந்தில்குமார்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்த்தேச மககள் முன்னணி

9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW