பாசிச எதிர்ப்பு செயலுத்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தேவனஹள்ளி போராட்ட வெற்றி! – தோழர்

கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் 1777 ஏக்கர் விவசாய நிலங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம்( KIADB) கையகப்படுத்துவதற்கு எதிராக சுமார் 1200 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது. நேற்று முன் தினம் ( 15-7-2025 ) கர்நாடக மாநில காங்கிரசு அரசாங்கம், நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உள்ளது.
தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களைச் சேர்ந்த 800 குடும்பங்கள் தமது வேளாண் நிலங்களைக் கையகபப்டுத்துவதை எதிர்த்து நடத்திய போராட்டம் இது. அவர்களது நிலங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அவை விலைமதிப்பற்றதாகப் பார்க்கப்படுகின்றன.
கடந்த 2022 சனவரியில் கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது சன்னராயப்பட்டண ஹோப்ளியில் உள்ள 13 கிராம மக்களையும் வெளியேற்றி 1777 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த முனைந்தது. அப்போது அதை எதிர்த்து மக்கள் போராடிய போது அதற்கு ஆதரவு தெரிவித்தது காங்கிரசு கட்சி. தாம் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் திரும்பப் பெறப்படும் என்று உறுதியும் அளித்தது காங்கிரசு கட்சி. ஆனால், ஆட்சிக் கட்டில் ஏறிய காங்கிரசு கட்சி தனது வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு நிலங்களைக் கையகப்படுத்த முனைந்தது.
சம்யுக்த ஹோராட்டா கர்நாடகா ( விவசாயிகள், தொழிலாளர்கள், தலித் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு) இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. “தேவனஹள்ளி சலோ’ என்ற அழைப்பை விடுத்தது. ஜனசக்தியின் தலைவரான நூர் ஸ்ரீதர் சம்யுக்த ஹோராட்டா கர்நாடகாவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
சம்யுக்த ஹோராட்டா கர்நாடகா ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்(SKM) ஓர் அங்கமாகவும் இருக்கிறது. இப்போராட்டம் கர்நாடகம் தழுவிய போராட்டமாக வளர்ந்து சென்று நாடு தழுவிய ஆதரவைப் பெற்று இறுதியில் அதன் இலக்கை அடைந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி ஆட்சியை வீழ்த்தி, காங்கிரசு ஆட்சிக்கு வருவதற்கு பணியாற்றிய ’’விழித்தெழு கர்நாடகா’’ என்ற மக்கள் இயக்கங்களின் பாசிச எதிர்ப்பு மகா கூட்டமைப்பு,மற்றும் மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து 2007 இல் வெளியேறி, இந்த கால பகுதியில் ஆயுதப் போராட்டம் வடிவம் பொருத்தம் அற்றது, வெகுசன அரசியல் போராட்டமே தேவை என மக்கள் இயக்கங்களைக் கட்டிய ‘ஜனசக்தி’ அமைப்பும், சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார் போன்ற அமைப்புகளும் இப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக நின்றுள்ளனர்.
இதில் முக்கியமான ஒன்று, பாசிச பிஜேபியை வீழ்த்தி, காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தேர்தலில் பணியாற்றிய, அதே தோழர்கள், இயக்கங்கள், விவசாய போராட்ட களத்தில் நின்று, போராட்டத்தை தீவிரப்படுத்தி, போராட்டத்திற்கு அனைத்து இந்திய அளவில் ஆதரவை உருவாக்கி, காங்கிரசு தலைமை ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை நிர்பந்தித்து, கர்நாடக மாநில காங்கிரசு அரசையும் நிர்பந்தித்து போராட்டத்தில் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள்.
பாசிச எதிர்ப்பில் பிஜேபியும் காங்கிரசும் ஒன்று என்ற அதிதீவிர இடது சந்தர்ப்பவாதம் பேசாமல், காங்கிரசை ஆதரித்தால் போதும் பாசிசம் ஒழிந்துவிடும், நாம் போராட்ட களத்தில் ஒன்றும் செய்ய தேவையில்லை என்ற செயலற்ற நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல், காங்கிரசை ஆதரித்து ஆட்சியில் அமர்த்தி, போராட்டக் களத்தையும் பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு அரணாக்கிய, கர்நாடக இயக்கங்களின், குறிப்பாக கர்நாடக ஜனசக்தி இயக்க தலைமை நூர் ஸ்ரீதர், லலிதா அவர்களின் மகத்தான அரசியல் முயற்சி, இந்திய அளவில் கவனிக்க வேண்டிய பாசிச எதிர்ப்புக் கால கட்ட செயல் தந்திரமாக அமைந்திருக்கிறது.
இன்னும் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விசயம், பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கு, காங்கிரசு உடன் நடப்பு அரசியல் சார்ந்து உடன்பாடு கண்ட அதே நேரத்தில், தங்களை சுயேச்சையான(independent force) மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக, பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கங்கள் நிலை நிறுத்தி உள்ளன. குறிப்பாக ஜனசக்தி இயக்கம் அவர்கள் வழிநடத்திய ’விழித்தெழு கர்நாடகா’ என்ற மகா கூட்டமைப்பு , சரியான, கட்டுப்பாடான அரசியல் செயல்தந்திர நகர்வுகள் செய்ததால், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கர்நாடக அரசியலில் பலம் பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசு கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் இத்தகைய செயலுத்தியை முன்னெடுத்து வெற்றி அடைந்திருப்பது நமக்கு பெரிதும் ஊக்கம் அளிக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒன்றும் கையாள முடியாதவர்களும் அல்ல, பாசிச பாசக வெல்ல முடியாதவர்களும் அல்ல, இடது சனநாயக முகாம் வலுப்பட முடியாததும் அல்ல – தேவனஹள்ளிப் போராட்டத்தின் வெற்றி இதை அறிவித்துக் கொண்டிருக்கிறது.
- தோழர் பாலன்