உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா

மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையோடு நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது தமிழ்நாட்டில் நம் அரசியலமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள ஜனநாயகத்திற்கு நேர் எதிரான ஒரு செயல்பாட்டினை சத்தமில்லாமல் அரங்கேற்றி வருகிறது ஆளும் திமுக அரசு. மக்களாட்சியில் மக்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புகளை – முடிவெடுக்கும் அதிகாரங்களை முடக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. ஆம், நண்பர்களே! கடந்த ஜனவரி ஐந்தாம் தேதிக்கு முன் நடந்திருக்க வேண்டிய 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை இந்த கட்டுரை வெளியாகும் இந்த தேதி வரை நடத்தாமல் இருக்கிறது தமிழ்நாடு அரசு. சுமார் ஆறு மாதங்கள் ஆகியும் பல சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் எனப் பலர் சுட்டிக்காட்டியும் எளிய மக்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தக் கூடிய உள்ளாட்சிகளை முடக்கி இருக்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக மக்களிடமிருந்து அதிகாரங்களைப் பறித்து நேரடியாக அலுவலர்களிடமும் மறைமுகமாகக் கட்சி பொறுப்பாளர்களிடமும் வழங்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் கூட்டாகச் செய்து வரும் இந்த ஜனநாயக படுகொலைக்கான பின்னணியையும் அதன் விளைவுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகாரப் பகிர்வு பற்றிய கண்ணோட்டம்
மாநில சுயாட்சி என்பது டெல்லியிலிருந்து மாநிலங்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கான கோரிக்கையாக இருக்கிறது. ஜனநாயகத்தின் முக்கிய கூறு அதிகாரப் பகிர்வு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாநிலங்களை வரி வசூலிப்பதிலிருந்தும், உயர் கல்விக்கான முடிவெடுப்பதிலிருந்தும் மற்றும் பல பணிகளிலிருந்தும் ஒதுக்கி வைத்து அதற்கான முடிவுகளை டெல்லியில் எடுத்து விடலாம் என நினைக்கும் எந்த ஒரு முடிவும் பிற்போக்கானதும், மக்களாட்சிக்கு எதிரானதும், மிகக் குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும்தான் இருக்கும்.
மாநில சுயாட்சியினை வலியுறுத்தும் அதே நேரத்தில் மாநிலங்கள் தங்கள் பொறுப்பில் உள்ள உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதற்கு மாறாக அவைகளுக்குத் தேர்தலைக் கூட நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான அதிகாரத்தை அலுவலர்கள் கையில் ஒப்படைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது முற்றிலும் முரணானது. மாநில அதிகாரம் கோருவது மக்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்குத்தான். உள்ளாட்சி அதிகாரத்தை வலுப்படுத்தாமல் மக்களை உண்மையான அர்த்தத்தில் அதிகாரப்படுத்த முடியுமா? மாநில சுயாட்சியும் உள்ளாட்சி அதிகாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். மாநில சுயாட்சீயின் இலக்கை உள்ளாட்சி அதிகாரம் இல்லாமல் நிறைவு செய்ய முடியாது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில அரசு வலுப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போது ஏன் அதே கோரிக்கை உள்ளாட்சிக்கு பொருந்தாதா? தமிழ்நாடு அரசு உள்ளாட்சியை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்? ஏன் உள்ளாட்சிகள் செயல்படுவதை, அதற்கான தேர்தலை நடத்துவதில்கூட திட்டமிட்டு காலம் கடத்த வேண்டும்?
அரசிலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சிகள்!
உள்ளாட்சிகள் என்பது தற்போது இந்தியாவில் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற மூன்றாவது அரசாக, மக்களுக்குப் பக்கத்தில் மிக நெருக்கமாக இயங்கக்கூடிய அரசாக இருக்கிறது. மாநில அரசு நினைத்தால் உள்ளாட்சிகளை வைத்துக் கொள்ளலாம், இல்லை என்றால் அதனைக் கலைத்து விடலாம் என்ற காலம் மலையேறி 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 1993 ஆம் ஆண்டு நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் உள்ளாட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அரசாங்கமாக நிலை பெற்றிருக்கிறது. அதனைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசின் கையில் இருக்கிறது.
தற்போது சுமார் 9,624 கிராம ஊராட்சிகளுக்கான தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உறுப்பினர்கள், 28 மாவட்ட ஊராட்சிகளுக்கான உறுப்பினர்கள் என சுமார் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்கள் காலி இடங்களாக இருக்கின்றன. இவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதனால் உள்ளாட்சிக்கான அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதனை நாம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது. ஒரு மாநில அரசைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தாமல் ஆளுநர் கையில் நிர்வாகத்தினை ஒப்படைத்தால் எப்படியான ஒரு சீர்கேடும் பாதிப்புகளும் ஏற்படுமோ அதேபோல ஊருக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பல கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தினை ஒப்படைத்திருப்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது கண்கூடாக தற்போது தெரிகிறது.
காரணம் என்ன?
இவ்வளவு முக்கியமான மற்றும் இத்தனை ஆயிரம் பணியிடங்களைக் கொண்ட ஊராட்சி தேர்தலை நடத்தாமல் திட்டமிட்டு காலம் கடத்துவது ஏன்? 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் போது கூட்டணிக் கட்சிகளோடு மாவட்ட சேர்மன், ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கான உடன்படிக்கை ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும் என்ற சராசரி கட்சி அரசியல் காரணமே பெருமளவில் சொல்லப்படுகிறது. மேலும், உள்ளூர் அளவில் இருக்கக்கூடிய கட்சி பொறுப்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் அவர்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கிறோம் எனச் சொல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு வேலைகளை வாங்கி விடலாம் என்று திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அனைத்தும் வெறும் அரசியல் காரணங்கள்தானே தவிரத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு ஜனநாயக ரீதியான எதார்த்த காரணங்கள் ஏதுமில்லை என்பதே உண்மை.
மற்றபடி கிராமங்களை நகரங்களோடு இணைப்பதனால் தேவைப்படும் மறுசீரமைப்பு பணிகளால்தான் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது என பொதுவாகச் சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களாகவே இருக்கின்றன. உண்மையில், தொகுதி மறுசீரமைப்பு பணி என்பது மாநில அரசு முன்னெடுத்தால் ஒரு சில மாதங்களில் முடிக்க வேண்டிய பணி. 2025 ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், மறு சீரமைப்பு பணிகளை 2022 , 2023 ஆண்டுகளிலேயே செய்து முடித்திருக்க முடியும். ஆனால் 2025 ஜனவரி மாதத்தில் மறுசீரமைப்பைக் காரணமாகச் சொல்லித் தேர்தல் நடத்தாமல் இருப்பது உள்ளாட்சியைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மக்கள் கொடுக்கும் விலை!
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியில் தலைவராகச் செயல்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் ஊராட்சித் தலைவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். 2020 முதல் 2025 ஜனவரி வரை பொறுப்பிலிருந்த இவர் பல சவால்களைத் தாண்டி உள்ளூர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு பல முன்னேற்ற பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக அந்த ஊராட்சியில் வரவிருந்த சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் ஒரு ரசாயன நிறுவனத்தை விவசாயிகள் ஆதரவோடும் பொதுமக்களின் ஆதரவோடும் தடுத்து நிறுத்தியதோடு அதற்கு ஊராட்சி மூலம் வழங்க வேண்டிய தடையின்மைச் சான்றிதழையும் பல அழுத்தங்களுக்குப் பிறகும் தராமல் வைத்திருந்தார். இதனால் அந்த நிறுவனம் அந்த ஊராட்சியில் கால் பதிக்க முடியாமல் இருந்தது. விவசாயிகளும், பொதுமக்களும் பாதுகாப்பாக உணர்ந்தனர். ஆனால் தற்போது ஊராட்சி நிர்வாக பொறுப்புகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று விட்டதால் சமீபத்தில் அந்த இரசாயன நிறுவனத்திற்கு தடையின்மைச் சான்றிதழை வழங்கி இருக்கிறார் வட்டார வளர்ச்சி அலுவலர். கிராம சபையில் விவாதிக்காமல், மக்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் அலுவலர்கள். தேர்தல் நடக்காத இந்த சூழலில் சாமானிய மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
சமவெளியில் இருக்கும் ஊராட்சிகளே குடிநீர், தெரு விளக்கு, துப்புரவு பணி என அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடி வரும் சூழலில், மலைக் கிராமங்களில் இன்னும் பிரச்சனை தீவிரமாகவே இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் நாங்கள் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய போது குடிநீர் மின்மோட்டார் பழுதாகி, அதனை ஊராட்சி செயலாளர் சரி செய்யாத சூழ்நிலையில், 50 கிலோமீட்டர் தொலைவில் அரூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், ஏழை எளிய மக்களே அந்த மின் மோட்டாரை தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, அதனைச் சரி செய்து இயக்கி வந்ததை அறிந்தோம். மக்களிடமிருந்து வரி வாங்கி அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு ஊராட்சி நிர்வாகம் தற்போது முற்றிலுமாக மக்களைக் கைவிட்டு இருப்பதை அந்த ஊராட்சியில் நாங்கள் பார்க்க முடிந்தது. ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டும் சிறிய அளவில் விவசாயத்தினை மேற்கொண்டு வரும் அந்த சாமானிய மக்கள், ஊராட்சி செய்ய வேண்டிய அடிப்படை பணிகளுக்குக்கூட செலவழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.
சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதும், அதிநவீன பேட்டரி நகர பேருந்துகள் இயக்குவதும் அரசின் முடிவு தான். ஆனால் ஒரு சிற்றூராட்சியில் அந்த மக்களுக்கான தேவையை, மிக அடிப்படையான ஒரு குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்குக் கூட அங்கே ஒரு ஊராட்சி நிர்வாகம் இல்லாத ஒரு சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்க வேண்டும்?
இதுதான் சமூகநீதியா ?
”28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தால் தான் ஜனநாயகம் இருக்குமா? ஏன் பி.டி.ஓ நிர்வாகம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து விடாதா?” என்றும் சிலர் பேசுகிறார்கள். அடிப்படை பணிகளைத் தாண்டி ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு சமூக நீதிக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது 28 மாவட்டங்களில் தேர்தல் நடக்காததானால் காலியாக இருக்கும் 91 ஆயிரம் பிரதிநிதிகளுக்கான இடங்களில் பாதி விழுக்காடுகளுக்கான இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டு, அவர்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டிய இடங்கள். அதாவது சுமார் 45,500க்கும் மேற்பட்ட இடங்கள். 18 விழுக்காடு பட்டியல் பிரிவினருக்கான இடங்கள். 1% பட்டியல் பழங்குடியினர்கள் என நம் சாமானிய மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டிருக்க வேண்டிய இடத்தில் இப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார். பெண்களும், பட்டியல் பிரிவினரும், பட்டியல் பழங்குடியினரும் உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பிற்கு வந்து செயல்பட்டு இருக்க வேண்டிய இடத்தில் அலுவலர்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது சமூக நீதிக்கு கொடுக்கப்படும் பலத்த அடி! எவ்வளவு திறமையான ஓர் அலுவலரை நியமித்து பணிகளை மேற்கொண்டாலும் அது சமூக நீதிக்கு நியாயம் கற்பிப்பதாக ஆகவே ஆகாது. இதனை தமிழ்நாடு அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உணர்ந்திருக்க வேண்டாமா?
வலுக்கட்டாய நகரமயமாக்கல் – ஜனநாயக மீறல்
தற்போது வலுக்கட்டாயமான நகரமயமாக்கல் தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருவதை நாம் அறிவோம். பல கிராம ஊராட்சிகளை நகரங்களோடு இணைக்கும் முடிவை அரசு எடுத்து வருகிறது. ஆனால் இந்த முடிவினை சம்பந்தப்பட்ட ஊராட்சியின் ஒப்புதலோடு எடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகள் இருந்த காலகட்டத்திலேயே அதாவது ஜனவரி 5ஆம் (05.01.2025) தேதிக்கு முன்பே பல ஊராட்சிகள் தங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே தொடர வேண்டும், நகரங்களோடு இணைக்கக் கூடாது என்று போராடி வந்தன. தற்போது தங்களுக்கான ஊராட்சி தலைவர் உள்ளிட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லாத சூழ்நிலையால் கிராம சபையில் பேசுவதற்கு மற்றும் மன்ற கூட்டங்களில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு இல்லாமலும் மக்கள் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டு வருகிறார்கள். கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் எங்களுக்கு வேண்டும், நகரங்களோடு இணைய வேண்டாம், மாநகராட்சி வேண்டாம் ஊராட்சியாகத் தொடர வேண்டும் எனும் கோரிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது எனத் தெரியாமலும் தவிக்கிறார்கள். தங்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் அவர்களுக்குப் பதிலாக அலுவலர்கள் கையெழுத்திட்டு தங்கள் ஊராட்சியை நகரத்தோடு இணைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. தேர்தலையும் நடத்தாமல் வலுக்கட்டாயமாக கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் முடிவு மிகப்பெரிய பாதிப்பை அந்த மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் உடனடியாக ஊராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதனை நாம் அனைவரும் ஒற்றை குரலில் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.
நூறு நாள் வேலை – பணிகளும் ஊதியமும்
100நாள் வேலைத் திட்டப் பணிகள் செய்தவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதும், வேலைகள் வழங்கப்படாமல் இருப்பதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இதே சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தற்போது ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் என யாரும் இல்லாத காரணத்தினால் 100 நாள் வேலைத் திட்டத்தினை முறையாக நடைமுறைப் படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாங்கள் செய்த பணிகளுக்கான ஊதியம் மற்றும் உரிய வேலை ஆகியவற்றை மக்கள் கோரிக்கை வைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை பெரும் உதவியாக இருந்தது. தற்போது முறையாக 100 நாள் வேலையைப் பெறுவதற்கு மக்கள் வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
நீதிமன்ற உத்தரவுகள் – நமது கண்களைத் திறக்கும் உண்மைகள்
கடந்த 2022 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக அம்மாநில உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவு தடையற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஒரு தீர்ப்பாக இருக்கிறது. தொகுதி மறு வரையறையைக் காரணம் காட்டாமல் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்று சமீபத்தில் கூட மகாராஷ்டிரா அரசினையும், அதன் மாநில தேர்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
தெலுங்கானா அரசினையும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவு மிக அண்மையில் வந்திருக்கின்றது. உச்ச நீதிமன்ற மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசி கேள்வி: சமூக நீதி காக்கப்படுமா?
உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்பது சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மதிப்பளிக்கும் நடவடிக்கையாக இருக்கும். இதுவே பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது . தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழ்நாடு அரசும் செவி சாய்க்குமா? உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி தேர்தல் ஆணையமும், தமிழ்நாடு அரசும் சமூக நீதியை நிலைநாட்டுமா?
நந்தகுமார் சிவா
சமூக செயல்பாட்டாளர்