மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் 602 வெறுப்புக் குற்றங்களும், 345 வெறுப்புப் பேச்சுகளும் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது

01 Jul 2025

வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்தும் புதிய அறிக்கை ஒன்று மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் சுமார் 950 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. மதச்சிறுபான்மையினர், குறிப்பாக இsusuசுலாமியர்களும் கிறித்தவர்களும் வெறுப்புப் பேச்சுகளாலும்  வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் மற்றும் க்வில் ஃபவுண்டேஷன் இணைந்து தயாரித்துள்ள இவ்வறிக்கை 947 வெறுப்பு நிகழ்வுகளை, ஜூன் 7,2024 முதல் ஜூன் 7,2025 வரை பதிவு செய்துள்ளது. இவற்றுள் 602 வெறுப்புக் குற்றங்களும் 345 வெறுப்புப் பேச்சுக்களும் அடங்கும். இவற்றுள் பல நிகழ்வுகள், மோடியின் ஆளும் பாசக உறுப்பினர்களாலோ அல்லது அதன் தொடர்புடைய நபர்களாலோ நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளின் தீவிரத்தன்மை அதிகரித்து வந்தபோதும், அவற்றை ஆவணப்படுத்தவோ, பதிவு செய்யவோ எந்தவொரு நிறுவன வகைப்பட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை இந்த அறிக்கை கூறுகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைகள் இந்தியச் சட்டப்படி கண்காணிக்கப்பட்ட போதும், மதச்சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்க எந்தவொரு செயல்முறையும் இல்லை என்பது இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருவாரியாக 419 நிகழ்வுகளில் 1460 இசுலாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான நிகழ்வுகளே நிகழ்த்தப்பட்டபோதும், 85 தாக்குதல்களில் 1505 கிறித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம், 25 இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 173 நிகழ்வுகளில் உடல் ரீதியிலான வன்முறை நடைபெற்றுள்ளது.

நிகழ்த்தப்பெற்ற 345 வெறுப்புப் பேச்சுகளுள், 178, மோடி மற்றும் பல முதலமைச்சர்கள் உள்ளிட்ட , பாசக உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டவை. 2 நீதிபதிகளும்  ஒரு ஆளுநரும்கூட வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளனர். இது, வெறுப்பு நிறுவனமயமாக்கலின் அறிகுறியாக வெளிப்பட்டு, கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதன்மையானதாக உள்ளது.அதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் என பெரும்பாலும் பாசக ஆளும் மாநிலங்களே பாதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகளுக்கும், வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் அதிகரிப்பதற்கும் தொடர்பிருப்பதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. வன்முறை நிகழ்வுகளும்  ஆத்திரமூட்டும் பேச்சுக்களும் குறிப்பாக தேர்தல் பரப்புரையின்போது அதிகரிக்கிறது.

பசுவதை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத ஊர்வலங்களின்போதும், சம்யங் கடந்த திருமணம் புரிந்தவர்களைக் குறிவைத்தும்  இசுலாமியர்களின் கடைகளைக் குறிவைத்தும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என இவ்வன்முறை நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2025 இல், தேவாலயங்கள் மற்றும் ஜெபக்கூட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 267 கிறித்துவர்கள் பாதிக்கப்பட்டனர்.

குழந்தைகளும் வயதானவர்களும்கூட விட்டுவைக்கப்படவில்லை. 32 வெறுப்புக் குற்றங்கள் சிறுவர்களைக் குறிவைத்தும், 10 நிகழ்வுகள் வயதானவர்களைக் குறிவைத்தும் நிகழந்துள்ளன. இவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களே என இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

நடத்தப்பட்ட வெறுப்புக்குற்றங்களில் வெறும் 13 சதவீதம் மட்டுமே காவல்துறையில் புகாரளிக்கப்பட்டன (எஃப்,ஐ,ஆர்). இது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்குதல் ஆகியற்றில் நிகழும் இடைவெளியைக் காட்டுகிறது. “இவ்வெண்ணிக்கைகள் இந்திய இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலைகள் தீவிரமடைந்து வருவதையும், குற்றவியல் நீதி பரிபாலனைகள் பின்தங்கி இருப்பதையும் காட்டுகின்றன” என அவ்வறிக்கையின் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுபோல கட்டுப்படுத்தப்படாத வெறுப்பினால் நீடித்த சமூக விளைவுகள் இருக்கும் என இவ்வறிக்கை எச்சரிக்கிறது. மேலும் குறிவைக்கப்பட்ட வன்முறைகளைக் கண்காணிக்கவும் தடுத்து நிறுத்தவும் நிறுவனமயமான செயல் திட்டத்தை இவ்வறிக்கைவ லியுறுத்துகிறது. “வெறுப்புக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுக்களும் எப்போதும் தனியாக நடைபெறுவதில்லை.” என இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. “அவை குடும்பங்களையும், சமூகங்களையும், ஒட்டுமொத்த நாட்டையுமே பாதிக்கும்”.

குறிப்பு: maktoob media வில் வெளிவந்த கட்டுரையின் மொழியாக்கம். மொழிப்பெயர்ப்பு – பாலாஜி

https://maktoobmedia.com/india/report-documents-602-hate-crimes-345-hate-speech-incidents-during-first-year-of-modis-third-term/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW