கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு அடையாளப்பட போகிறீர்களா? அல்லது தமிழோடு இணைந்திருக்கப் போகிறீர்களா? என்று கன்னடர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கேரளாவுக்குப் போய், ”நாம் திராவிடர்கள்” என்கிறார். தோழர்கள் பெ.மணியரசன், அருள்மொழி என எல்லோரும் கமலஹாசனுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தை பாசகவின் ‘B’ டீம் என்று சொன்னவர்கள் அதே மதிப்பீட்டைத் தொடரப் போகின்றனரா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மார்க்சிய லெனினிய அமைப்பொன்று “வேண்டாம், பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்துடன் விநியோதிக்க துண்டறிக்கையில் ‘பிஜேபியின் ஐந்தாம் படையான மக்கள் நீதி மய்யத்தைப் புறக்கணிப்போம் என்று போட்டிருந்தனர். அந்த வரிகள் அதற்கு முந்தைய 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் போடப்பட்டிருந்தவை தாம். கடந்த தேர்தலில் மநீம தனித்து போட்டியிட்டது, இப்போது இந்தியா கூட்டணியில் இருக்கிறதே என்று அந்த அமைப்புத் தோழர்களிடம் கேட்டேன். ”மக்கள் நீதி மய்யம் பற்றிய எங்கள் அமைப்பின் மதிப்பீடு இது. தேர்தலுக்கு தேர்தல் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்.
”அம்பானி – அதானி , ஆர்.எஸ்.எஸ் – பாசக” பாசிசம் என்று முழக்கம் வைத்திருப்பதன் பொருள் என்ன? அதுதான் நாட்டின் முதன்மை முரண்பாடு என்பதாகும். அந்த நிலைப்பாட்டில் இருந்துதான் பாசகவின் பீ டீம் கமல் என்று சொல்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துருவாக்கிகள் திமுக வை எதிர்த்து அரசியல் செய்யும் எந்த ஒரு கட்சியையும் பிஜேபியின் பீ டீம் என்று சொல்வதை ஒரு வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். கமல் , சீமான், விஜய் என்று எல்லோரும் பிஜேபியின் பீ டீம் தான் என்று சொல்வதன் மூலம் அரசியல் முன்னணிகளிடம் இருந்து அக்கட்சி அயன்மைப்பட வேண்டும், சமயச் சிறுபான்மையினரிடம் இருந்து அக்கட்சி அயன்மைப்பட வேண்டும் போன்றவை அவர்களது திட்டவட்டமான இலக்குகள் ஆகும். அதேநேரத்தில், அக்கட்சிகள் தமது கூட்டணிக்கு வந்த பிறகு அவற்றை பாசகவின் பீ டீம் என்று திமுக சொல்வதில்லை. ஆனால், அடிப்படை மாற்றத்திற்காக பாடுபடும் அமைப்பினர் இயந்திர கதியாக மக்கள் நீதி மய்யம், நாதக, தவெக போன்ற கட்சிகளை பாசகவின் பீ டீம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
மார்க்சிய லெனினிய முகாமைச் சேர்ந்த வேறு சில அமைப்புகளும் அவ்வப்போது திமுகவையும் பாசகவையும் சமப்படுதியோ அல்லது திமுகவை முதன்மை எதிரி என்று முன்னிறுத்தியோ அரசியல் செய்யும் கட்சிகளை பாசகவின் பீ டீம் என்று சொல்லி வருகின்றனர்.
இது தற்செயலான ஒன்றா? இப்படி ஒரு முடிவை வந்தடைவதற்கு வழிவகுக்கும் கருத்தியல் வேர்கள் எங்கே இருக்கின்றன?
ஆர்.எஸ்.எஸ். – பாசக மற்றும் அவற்றின் இலக்கு ஆகியவை பற்றிய மதிப்பீட்டில் இருந்துதான் இந்த தவறு நடக்கிறது.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) யின் குறிப்பான திட்டத்தில் “அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்” என்ற தலைப்பின் கீழ் வரும் பகுதியில்…
” காவி-கார்ப்பரேட் பாசிச அரசதிகாரத்தை நிறுவி இந்துராஷ்டிரத்தைக் கட்டமைப்பது பற்றி இருவேறு பார்வைகள் நிலவி வருகின்றன. பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனிய மேலாண்மையை நிலைநிறுவத்துவதற்கு அந்த சமுதாய சக்திகளால் இந்த அரசியல் பொருளியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகிறது என்பது ஒரு பார்வை. இன்னொன்று, ஏகாதிபத்திய நிதிமூலதன சக்திகளுக்கு சேவையாற்றுவதற்கு இந்திய அரசு பாசிச வடிவமெடுக்கிறது என்று இடதுசாரிகளில் ஒரு பிரிவினர் முன்வைக்கின்றனர். ஆனால், கிடைக்கக் கூடிய விவரங்களில் இருந்தும் வெளிப்படையாக கண்ணுக்குப் புலப்படக் கூடிய நிகழ்ச்சிகளில் இருந்தும் உண்மையை நோக்கிச் சென்றால், இந்தியாவில் ஏகபோகமாக வளர்ந்து வரக்கூடிய குறிப்பாக மேற்கு இந்திய மாநிலங்களில் இருக்கும் கார்ப்பரேட்கள் நாடுகடந்த ஏகபோகங்களாக வளர்ந்து செல்வதற்கு பொருளியல் அரசியல் கட்டுப்பாடுகளும் தடைகளும் இருக்கின்றன. அந்த தடைகளைஅகற்றக்கூடிய அரசியல் சமுதாயக் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். இன் அனைத்தையும் ஒற்றைமயமாக்கும் இந்துராஷ்டிரக் கொள்கை அமைகிறது. எந்தளவுக்கு ஒற்றைமய அரசியல் மாற்றங்கள் செய்யப்படுகின்றனவோ அந்த அளவுக்கு ஏகபோகங்களின் நிதிமூலதன திரட்சிக்கும் பொருளியலில் சிறுகும்பலாட்சிக்கும் வழியேற்படுகிறது. எந்த அளவுக்கு நிதிமூலதன திரட்சி சிலர் கையில் குவிகிறதோ, தேசிய சந்தை உருவாக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு ஒற்றையாட்சி இந்துராஷ்டிர அரசியல் அமைப்பு மாற்றங்கள் இலகுவாகின்றன. ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றின் வளர்ச்சியை மற்றது ஊக்குவித்தும் செல்வதற்கான, பொருளியலிலும் அரசியலிலும் சிறுகும்பலாட்சியைக் கொண்ட அரச வடிவமாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் உருப்பெறுகின்றது. ”
ஒரு பார்ப்பன பேரரசை உருவாக்குவதற்காக பார்ப்பன சமுதாய சக்திகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் பொருளியல் நிகழ்ச்சி நிரலாக மோடி ஆட்சியைப் பார்ப்பவர்கள்தான் மக்கள் நீதி மய்யத்தை பாசகவின் பீ டீமாக பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் கனிசமான அமைப்பினர் அவ்வண்ணமே பார்க்கின்றனர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலும் காங்கிரசு இந்தியாவிலும் இப்போது பாசகவின் இந்துராஷ்டிரத்திலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்து இந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும்போது இவற்றுக்கு இடையிலான பண்பு ரீதியான வேறுபாடு என்ன? என்று சிந்தித்து பார்க்க தவறுபவர்கள். நேற்று வரை காங்கிரசை பார்ப்பனியக் கட்சி என்று விமர்சித்தவர்கள் இன்று பாசகவின் பார்ப்பனியத்தின் பெயரால் விமர்சிக்கும் போது இவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன? என்று சொல்வதில்லை. காங்கிரசின் இந்தியாவுக்கும் பாசகவின் இந்துராஷ்டிரத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன? காங்கிரசின் இந்தியாவில் சாதி மறைந்துவிட்டதா? பார்ப்பன மேலாதிக்கம் இல்லையா? பாசகவின் ஆட்சியில்தான் பார்ப்பன மேலாதிக்கம் உயிர் பெறுகிறதா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுப் பார்க்கலாம்.
முரண்பாட்டின் குறித்த தன்மையை அடையாளம் காண்பது இயங்கியலில் ஒரு முக்கிய விதியாகும். பாசக, காங்கிரசு, சிபிஐ(எம்), சிபிஐ, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன? அதற்கான உரைகல்லாக எடுத்துக்கொள்ள வேண்டிய அளவுகோல்கள் என்ன? என்று பார்க்க வேண்டும்.
இந்த கட்சிகளுக்கு இடையில் சாதிய சமூக கட்டமைப்பு தொடர்பில் என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? என்பதைப் பொறுத்து இவற்றை துல்லியமாக இனம் பிரித்துவிட முடியாது. இவற்றின் தேசிய கொள்கை என்ன? பொருளாதாரக் கொள்கை என்ன? என்பதைக் கொண்டுதான் இனம் பிரிக்க முடியும். ஆனால், இவற்றை ஒன்றுக்கு ஒன்று உறவுடையதாகப் பார்க்காமல் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பேசும் போது பக்கம் பக்கமாய் எழுதியும் பேசியும் வருபவர்கள், இறுதியாக ஒற்றைவரியில் சொல்லும் போது ’பார்ப்பனப் பேரரசு’ என்று இந்துராஷ்டிரத்தின் பண்பை விவரிக்கின்றனர்.
கட்சி | சாதி | தேசியக் கொள்கை ( அரசியல்) | பொருளியல் |
பாசக | பார்ப்பனிய ஆதரவு | இந்து தேசியம் | புதுத்தாராளியம், அதானி, அம்பானி ஏகபோகம் |
காங்கிரசு | தளர்வான பார்ப்பனிய ஆதரவு | இந்திய தேசியம் – அரைகுறை கூட்டாட்சி | புதுத்தாராளியம் |
சிபிஐ | பார்ப்பனிய எதிர்ப்பு | இந்திய தேசியம் – கூடுதல் அதிகாரப் பகிர்வு | சோசலிசம்/ புதுத்தாராளிய எதிர்ப்பு |
சிபிஐ(எம்) | பார்ப்பனிய எதிர்ப்பு | இந்திய தேசியம் -– கூடுதல் அதிகாரப் பகிர்வு | சோசலிசம்/ புதுத்தாராளிய எதிர்ப்பு |
திமுக | சமூக நீதி | இந்திய தேசியத்தில் மாநில சுயாட்சி | புதுத்தாராளியம் + மக்கள் நலவியக் கொள்கை |
அதிமுக | சமூக நீதி | இந்திய தேசியத்தில் மாநில சுயாட்சி | புதுத்தாராளியம் + மக்கள் நலவியக் கொள்கை |
மக்கள் நீதி மய்யம் | சமூக நீதி | இந்திய தேசியம் | புதுத்தாராளியம் |
காங்கிரசு, சிபிஐ, சிபிஐ(எம்), திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சாதி பற்றிய நிலைப்பாட்டைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மதிப்பிட்டுக் கொள்வதில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, ஒரு பொதுவான முடிவுக்கு பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது.
பாசகவுடன் ஒத்துப் போகக்கூடிய கட்சி எது என்பதை வரையறுக்கும் போது அதன் அரசியல் பொருளியல் கொள்கையைத்தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய தேசியமா? இந்து தேசியமா? இந்திய தேசியத்திற்குள் மாநில சுயாட்சியா? தமிழ்த்தேசியமா? என்று பார்க்க வேண்டும். ஒற்றையாட்சியா? அரைகுறை கூட்டாட்சியா? மாநில சுயாட்சியா? தமிழ்த்தேச இறை மீட்பா? என்று பார்க்க வேண்டும். புதுத்தாராளியமா? சோசலசிமா? அல்லது புதுத்தாராளியத்திற்குள் ஒரு கும்பலின் ஏகபோகமா? என்று பொருளியல் கொள்கையை இனம் பிரித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய தேசியத்திலும் இந்து தேசியத்திலும் தமிழ்த்தேசியத்திலும் சாதியக் கட்டமைப்பு தொடர்பில் பல்வேறு கொள்கை நிலைகளைக் கொண்ட கட்சிகள் உண்டுதான். பார்ப்பனிய ஆதரவு, பார்ப்பனிய எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, சாதி ஒழிப்புக் கொள்கை, சாதிகளுக்கு இடையே சமத்துவம் என்று பலவாறான நிலைகளைக் கொண்ட கட்சிகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், பாசிசம் என்பதன் தொடர்பில் ஒருகட்சியை வரையறுப்பதற்கு அக்கட்சியின் சாதி தொடர்பான கொள்கை மட்டும் போதுமானதும் அல்ல மற்றும் அது முதன்மையானதும் அல்ல.
பாசிசம் ஓர் அரச வடிவம் என்ற வகையில் இந்திய ஒன்றிய அரசு ஓர் தேச – அரசு என்ற வகையில் இந்திய அரசின் பெரும்பகுதி அதிகாரம் ஒன்றிய அரசில் குவிந்து கிடக்கும் நிலையில் இந்த அரசில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தேவையான அரசியல் கொள்கை தேவை. அந்த அரசியல் கொள்கை என்பது தேசியம் பற்றியதுதான்.
உலக வரலாற்றில் பாசிச அரச வடிவம் எடுப்பதற்கு ஓர் அதிதீவிர தேசியம் தேவைப்படுகிறது. அந்த அதிதீவிர தேசியமாக இந்து தேசியம் இங்கே இருக்கிறது. இந்து தேசியத்தைக் காவிச் செல்லும் கட்சியாக பாசக இருக்கிறது. எனவே பாசகவோடு ஒப்பிடும் போது ஏனைய கட்சிகளின் தேசியக் கொள்கை என்ன என்று பார்க்க வேண்டும்.
இந்திய தேசியக் கொள்கையும் மேற்கு இந்திய கார்ப்பரேட்களின் ஏகபோகத்தையும் எதிர்க்கும் பெருமுதலாளிய வர்க்க சார்பும் கமலஹாசனிடம் இருப்பதால் அவரது கட்சி இந்தியா கூட்டணிக்குள் செல்வதற்கான வர்க்க அடிப்படைகள் இருக்கின்றன என்பதைக் காணத் தவறிய நிலையில்தான் அக்கட்சியை பாசகவின் பீ டீம் என்று சொல்லத் தளைப்பட்டனர்.
தேர்தலில் மக்கள் நீதி மய்யம்:
2018 இல் தோன்றிய இக்கட்சி 2019 மக்களவை தேர்தலிலும் 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது. அப்படி தனித்து போட்டியிடும்போது அக்கட்சி முதன்மையாக திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்ததாகவே மதிப்பிடப்படுகிறது. செக்யூலர் வாக்குகள் அதாவது சமய சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதில் மநீம வெற்றி பெற முடியவில்லை. திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்ததன் மூலம் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட வலுவான அணிக்கு அது சேதம் ஏற்படுத்தியதுதான் உண்மை. ஆனால், அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பொத்தாம் பொதுவான மநீம எதிர்ப்புக்கு அறைகூவல் விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட தீமை என்ன?
2021 ஆம் ஆண்டு தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாசக – அதிமுக அணியில் பாசகவின் அனைத்திந்திய மகளிர் அணி பொறுப்பாளர் வானதி சீனிவாசன், திமுக – காங்கிரசு அணியில் மயூர ஜெயக்குமார் மற்றும் மநீமவின் தலைவர் கமலஹாசன் ஆகிய மூன்று பேர் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். இதுவொரு மும்முனைப் போட்டியாக அமைந்தது. பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் திமுக அணியை ஆதரித்தும் கமலஹாசன் பார்ப்பனர் என்ற வகையில் வானதியையும் கமலஹாசனையும் சமப்படுத்தியும் மயூர ஜெயக்குமார் ஆதரவு நிலைப்பாடு எடுத்து திராவிட அரசியல் ஆற்றல்கள் தேர்தலில் பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் முடிவுகளில்கூட இழுபறியும் இருந்தது. இறுதியில் வானதி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் போனார்.
’பாசக இல்லாத சட்டமன்றம்’ என்று கேரளத்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது தமிழ்நாட்டிலோ பார்ப்பனரல்லாத சட்டப்பேரவை என்று வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். பாசகவை சேர்ந்த பார்ப்பனரல்லாதோர் நான்கு பேர் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தது குறித்த கவலை தமிழ்நாட்டு பாசிச எதிர்ப்பு ஆற்றல்களில் ஒருசாராரிடம் இல்லை.
திமுகவின் இறுதியான இலட்சியம் என்பது மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியில் இருந்தால் நீடிப்பது என்பது மட்டும்தான். அவ்வகையில் பாசிச எதிர்ப்பையெல்லாம் பற்றி கவலைப்படாமல் மநீமவின் தலைவர் கமல் சட்டப்பேரவைக்குள் வருவதைத்தான் திமுக விரும்பியிருக்காது. கமல் வருவதற்குப் பதிலாக வானதி வந்தால் பரவாயில்லை என்று கருதியிருக்கும். திமுக பாசிச எதிர்ப்பு நலனைவிட பதவி அரசியல் நலனைத்தான் உயர்த்திப் பிடிக்கும் என்பதுதான் புறஞ்சார்ந்த மதிப்பீடாக இருக்க முடியும். இந்த இரண்டு நலனும் ஒன்றுபடும் இடத்தில் பாசிச எதிர்ப்பு சூரப்புலியாக திமுக காட்சி தருவது தோற்றப் பிழையல்ல, அதுவும் மெய்தான்.
இருவரில் யார் போனாலும் ஒன்றுதான் என்று வழமையான பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆற்றல்கள் அப்போது சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது திமுக கூட்டணியில் இருந்து மாநிலங்களவைக்கு செல்கிறாரே கமல்? இப்போது கமலஹாசன் போனாலும் நயினார் நாகேந்திரன் போனாலும் ஒன்றென்று சொல்வார்களா?
பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் செய்திருக்க வேண்டியதென்ன? வானதியை தோற்கடிக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுத்து, அதன் பொருட்டு வெற்றி பெறக் கூடிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று ஓபனாக விட்டிருக்க வேண்டும். இப்போதும் கமலஹாசன் திமுக கூட்டணியில் இருப்பதைவிட கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப் போட்டியிடுவது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கு உதவும் என்பதுதான் சரியான மதிப்பீடாகும்.
பாசிச பாசக எதிப்பு என்பதை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்வதில் தொடங்கி பாசிச பாசக எதிர்ப்பும் திமுக ஆதரவும் எல்லா நேரங்களிலும் ஒன்று என்று புரிந்து கொள்வதாக வளர்ந்து திமுகவை எதிர்க்கும் யாரையும் பாசிச பாசகவின் ஐந்தாம் படையாக மதிப்பிடுவதில் போய் முடிகின்றனர்.
இப்போது விஜயை எதிர்த்து திமுகவை விடவும் வேகமாக மா-லெ அமைப்புத் தோழர்கள் பாட்டிசைத்துக் கொண்டிருக்கிறார். விஜய் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது யாருக்கும் நட்டம் ? யாருக்கு இலாபம்? அவர் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பாரா? பாசக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பாரா?
திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராக தில்லிக்குப் போகும் கமலை பாசகவின் பீ டீம், ஐந்தாம் படை என்று சொன்னவர்கள், இப்போது விஜயையும் பீ டீம் என்று சொல்கிறார்களா? என்பதை அவர்களின் பகுத்தறிவுக்கே விட்டுவிடுவோம்.