அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3

அம்பேத்கரும் இந்திய தேசியமும்
இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள தேச – அரசின் கீழ் வாழ்ந்து வருகிறார் என்பதே உண்மை. எனவே, தேசியம் ஒரு பொருட்டல்ல என்றோ அல்லது தேசியம் பற்றிய விமர்சனம் இல்லை என்றோ கருதுவாராயின் அவர் இந்திய தேசியத்தை விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய அவர் தம்மை தேசியத்திற்கு அப்பாற்பட்டவராக சொல்லிக் கொள்ள முடியாது. அதாவது இருப்புநிலையோடு ( Status quo) அனுசரித்துப் போகிறார் என்று பொருள்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் உருப்பெற்ற இந்திய தேசியம் என்பது கற்பனையல்ல, வரலாற்று மெய்ம்மையே. அது காலனிய எதிர்ப்பைக் கொண்டிருந்த அதே வேளையில் தமக்குள்ளான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான புரட்சிகரமானப் போராட்டத்திற்கு அணியமாகவில்லை.
அந்த இந்திய தேசியம் சாதிய சிக்கலில் கொண்டிருந்த சனநாயக மறுப்பின் மீதான விமர்சனமாகவே சாதி ஒழிப்புக் கருத்தியலாளர்கள் தோற்றம் பெற்றனர். இந்திய தேசியத்தின் மீதான விமர்சனமாகவே அம்பேத்கரும் ’இந்திய தேசம்’ என்றொன்று உருப்பெறவில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.
அதேநேரத்தில், இந்திய தேசியம் முரணற்ற சனநாயகத்தை அடைவதன் மூலம் வலிமையான இந்திய தேசம் உருப்பெற வேண்டும் என்ற விருப்பமும் உயர்ந்த குறிக்கோளும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் அம்பேத்கருக்கு இருந்தது.
விடுதலைப் போராட்டத்தின் வழியாக உருப்பெற்ற் இந்திய தேசியம் ஓருபக்கம் காலனிய எதிர்ப்பு என்ற சனநாயக உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும் வேத கால பெருமிதம், சாதிய – வர்ணாசிரமக் கட்டமைப்புடன் சமரசம், ஆரிய பெருமிதம் என்று பழமைவாதச் சேற்றை தன்னகத்தே பூசிக்கொண்டதாகவே வளர்ந்து வந்தது. சமூக ஏற்றத்தாழ்வை முறித்துக் கொள்ளாத ஓர் சமூகக் கட்டமைப்பின் மீது ஊர்ந்து செல்வதாக இந்திய தேசியம் விளங்குகிறது.
விடுதலைப் போராட்டத்திற்கு முன்பு அது காலனிய எதிர்ப்பின் மேல் கட்டப்பட்ட சமூகத் தேசியமாக இருந்தது. விடுதலைக்குப் பின்பு இந்திய தேச – அரசின் கீழ் கட்டப்பட்ட அரச தேசியமாகப் பரிணமித்தது.
இந்திய தேசியம் அரச தேசியமாக பரிணமித்த இடத்து தேசியப் பொருளியல், தேசியத் திட்டமிடல், தேசிய விளையாட்டுக்கள், தேசிய விழாக்கள், தேசிய கீதம், தேசிய கொடி, நாடாளுமன்றம், ஆர்.பி.ஐ. நிதி ஆணையம், திட்டக் கமிஷன், நீதிமன்றங்கள், தேசிய பாதுகாப்பு, தேசிய இராணுவம், தேசிய அணுகுண்டுகள் போன்ற தேசிய அரசக் கட்டுமானங்கள், பாகிஸ்தான், சீனம் முதலான அண்டை நாடுகளுடன் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு ஊடாக இந்திய தேசியம் அரச தேசியமாக உயிர்த்திருக்கிறது.
அதேவேளையில் பொது எதிரிக்கு எதிரான போராட்டம் இல்லாத காரணத்தால், தமக்குள்ளான சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய நிர்பந்தத்தை இந்திய தேசியம் இழந்துவிட்டது.
இந்திய தேசியம் அரச தேசியமாக மாறிய்போனது மட்டுமின்றி உள்நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறையை உள்ளடக்கிய ஆதிக்கமாகவும் அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தவல்ல விரிவாதிக்கமாகவும் இந்திய தேசியம் தொழில்படுகிறது. எனவே, சுதந்திரத்திற்கு பின்பு மக்களை இறுக்கிக்கட்டி ’நாம்’ என்ற உணர்வை ஏற்படுத்தும் சனநாயகப் பாத்திரத்தை அது வகித்துக் கொண்டிருக்கவில்லை.
அம்பேத்கர் வலிமையான அரசமைப்பை உருவாக்கியதன் மூலம் அதையொரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய சமூகம் தமக்குள்ளான சமூக, பொருளியல் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ளப் போராடும் என்று எதிர்பார்த்தார். .
அரசமைப்பு சட்டத்தின் வரம்பு
ஒற்றையாட்சி அரசமைப்பை நியாயப்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பு வல்லுநர்கள், சனநாயகப் பற்றாளர்கள் இந்தியாவை நவீனப்படுத்துவதற்கு (modernisation) அதிகாரத்தை மையத்தில் ( centralization) குவிக்க வேண்டிவந்தது என்று விளக்கம் தருவது உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக , பட்டியல் சாதிகளுக்கும், பட்டியல் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் குறீப்பிடலாம். ஆனால், இத்த அரசமைப்புச் சட்டம் எந்த அளவுக்கு செயல்பட முடிந்தது என்பதை கடந்த 75 ஆண்டுகால வரலாற்றுக்கு கூடாகப் பார்க்க வேண்டியுளளது.
அரசமைப்பு சட்டத்திற்கும் சமூக வளர்ச்சி நிலைக்குமான உறவு குறித்து ஈழத்து ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சமஷ்டியா, தனிநாடா என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
”ஓர் அரசமைப்புச் சட்டம் எவ்வளவு மேன்மை கொண்டதாக எழுதப்பட்டுள்ளது என்பதைவிடவும் அது எவ்வளவு மேன்மையுடன் செயல்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். ஓர் அரசமைப்பு செயற்படுவதற்குரிய சட்ட அமைப்புகளை விடவும் அது செயற்படுவதற்கு உரிய சமூகக் கட்டமைப்பே பிரதானமானது. எடுத்துக்காட்டாக, வரதட்சணைக்கு எதிரான சட்டம் இருப்பினும் அவை சமூகத்தில் செயல்படுவதில்லை.
ஒரு சமூகத்தின் அரசியல் பண்பாட்டின் அளவே அதற்குரிய அரசமைப்பின் செயல்பாட்டளவாகும். அரசியல் பண்பாடு சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்கும் மக்களின் மத்தியில்தான் ஓர் அர்சமைப்பு சிறப்பாக செயல்பட முடியும். ஓர் அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் அதன் வரிகளுக்குள்ளால் மட்டும் பார்க்க முடியாது. அந்த அரசமைப்பைக் கொண்டிருக்கும் சமூக நிலைமைகளுக்கு உள்ளாலும் அது பார்க்கப்பட வேண்டும்.”
வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் வலிமையானதாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் வருவதால் அதை செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் போய் விடுகிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள சமூகத்தின் வளர்ச்சி நிலைதான், அரசியல் பண்பாடுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்தளவுக்கு அம்மாநிலத்தில் செயல்பட முடிகிறது என்பதை நிர்ணயித்துள்ளது. ஒரு மாநிலத்தின் அரசியல் வரலாறு, பொருளியல் வளர்ச்சி, புவியமைப்பு, மக்கள்தொகை இயைபு ( தலித் – தலித் அல்லாதோர் தகவு) ஆகிய யாவும் சேர்ந்து சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
இன்னொருபக்கம் சாதிய வன்கொடுமைகள் என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள ஒரே மொழிபேசும் சமூகத்தைச் சேர்ந்தாவ்ர்களால்தான் செயல்படுத்தப்படுகிறது. பஞ்சாப்பில் உள்ள தலித் ஒருவருக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள சாதி ஆதிக்க ஆற்றல் சாதியாதிக்கம் செய்வதில்லை. மறுவளமாக தமிழ்நாட்டு தலித் மீது வட்நாட்டு ஜாட் சாதியினர் ஒடுக்குமுறையை செலுத்துவதில்லை. எனவே, சாதி ஆதிக்கமும் சரி சாதி ஆதிக்கத்திற்கு எதிரானப் போராட்டமும் சரி அதன் வழியே கட்டமைக்கப்பட வேண்டிய இணக்கமும் உருப்பெற வேண்டிய பொது உணர்ச்சியும் முதலில் ஒரு மொழிபேசும் மக்களிடம்தான் ஏற்பட்டாக வேண்டியுள்ளது.
கடந்த 75 ஆண்டுகால நடைமுறையும் அவ்வாறே நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு மொழிபேசும் மக்கள் கூட்டத்திலும் சாதி ஒழிப்பு போராட்ட இயக்கம் தமக்கே உரிய தனித்துமான பாதையை மேற்கொண்டுள்ளது. ஓர் மையப்படுத்தப்பட்ட அரசமைப்பின்கீழ் இருந்தாலும் இந்த 75 ஆண்டுகால சமூக இயக்கம் என்பது ஒரு மொழி பேசும் மக்களிடையேதான் வளர்ந்து சென்றுள்ளது.
ஒரு சமூகம் என்று சொன்னாலும் சரி ஒரு மக்கள் என்று சொன்னாலும் சரி அதுவொரு மொழி பேசும் தேசிய இனத்தையே குறிக்கும். நவீன அரசியலில் people என்பது ஒரு தேசத்தைக் குறிப்பதுதான்.
எனவே அரசமைப்புச் சட்டம் செயல்படும் வரம்பை மொழிவழி மாநிலங்களின் சமூக வளர்ச்சி நிலையே தீர்மானிக்கிறது.
தொடரும்…