அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 2

சகோதரத்துவமும் தேசியமும்
தேசம் பற்றி மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் என்ற நூலில் ஜோசப் ஸ்டாலின் தரும் புகழ்ப்பெற்ற வரையறை இதுவாகும்.
“தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, வரலாற்று வழியில் உருப்பெற்ற நிலையான மக்கள் சமுதாயம் ஆகும்.”
இந்திய தேசம் என்று சொல்லப்பட்டாலும் அதில் உள்ள மக்களிடையே பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு இல்லை, அதாவது நாம் என்ற உணர்ச்சி இல்லை என்பதே அம்பேத்கரின் விமர்சனம் ஆகும்.
“பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு” குறித்து ஸ்டாலின் சொல்கிறார்:
“உளத்தியல் அமைவு, அல்லது வேறுவிதமாக அழைக்கப்படுவது போல் “தேசியத் தன்மை” என்பது அதனளவில் நோக்கருக்குப் புலப்படாத ஒன்றுதான், ஆனால் தேசத்துக்கென்று பொதுவான ஒரு தனிவிதப் பண்பாட்டில் வெளிப்படுமளவில் புலபடத்தக்கதும் கண்டுகொள்ளாமல் விட முடியாததும் ஆகும்.”
“சொல்லவே வேண்டாம்: ”தேசியத் தன்மை” என்பது வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களால் திருத்தியமைக்கப்படுவதுதானே தவிர ஒரேயடியாக நிலைத்து விட்ட ஒன்றல்ல. ஆனால் குறிப்பிட்ட ஒவ்வொரு தருணத்திலும் அது நிலவுகிறது என்பதால் தேசத்தின் உடற்கூற்றில் தன் முத்திரையைப் பதித்துச் செல்கிறது.”
“ஆக, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொது உளத்தியல் அமைவு என்பது ஒரு தேசத்திற்குரிய பண்புக் கூறுகளில் ஒன்று.”
இங்கு உளத்தியல் அமைவு என்பது பண்பாட்டு அம்சமாக சொல்லப்படுகிறது. அது தேசியத் தன்மை என்று குறிக்கப்படுகிறது. தேசிய தன்மை என்பது – ஒரு பொருளில் – தேசியம் ஆகும்.
ஓர் உளத்தியல், மனநிலை சார்ந்ததாக இருப்பதால் தேசியப் பண்பாடு அதாவது தேசியம் அகநிலைக் காரணியாக கருதப்படுகிறது. இந்த தேசியத் தன்மை என்ற அகநிலை காரணி தோன்றி வளர்ந்து வலுப்பெறுவதற்கு தேவையான புறநிலைக் காரணிகளாக பொதுமொழி, ஆட்சிப்புலம், பொருளியல் வாழ்வு, வரலாறு ஆகியவை அமைகின்றன.
இங்கு ஒரு தேசம் உருப்பெறுவதற்கு இன்றியமையாத காரணியாக தேசிய தன்மை அல்லது தேசியப் பண்பாடு அல்லது நாம் என்ற உளத்தியல் அமைவு தேவைப்படுகிறது. தேசியம் இல்லாமல் தேசம் இல்லை. அதேநேரத்தில், எல்லாத் தேசியங்களும் தேசமாக உருப்பெருவதில்லை.
நாம் என்ற உணர்வு ஏற்படுவதற்கு இன, மத,மொழி, பிராந்தியம் சார்ந்த பொதுத்தன்மை தேவைப்படுகிறது.
இன, மத, மொழி, பிராந்திய அடையாளங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பினும் அவை சனநாயகத்தோடு இணையும் போதுதான் தேசியமாக உருப்பெறுகிறது. வெறுமனே மொழியோ அல்லது மதமோ அல்லது இன அடையாளமோ தேசியம் ஆகிவிடாது.
”பிறப்பால் அனைவரும் சமம்” என்ற சனநாயக உள்ளடக்கத்தோடு இணையும்போதே அவை ’’நாம்’’ என்ற உணர்வை உருவாக்குகிறது. அதுதான் தேசியம் என்றாகிறது. அதில் பொதுமொழி என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது.
அதேநேரத்தில், ஒரு பொதுமொழி மட்டும் தேசியத்திற்கு போதுமானதல்ல, ஒரே அரபு மொழி பேசக் கூடியவர்களாக தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருந்தாலும் 22 அரபு நாடுகள் ( தேச அரசுகள்) தோற்றம் பெற்றுள்ளன. வெவ்வேறு அரசுகளின்கீழ் வாழ்ந்த காரணத்தால் மேற்படி 22 நாடுகளும் அரச தேசியத்தை அடிப்படையாக கொண்டு தனித்தனியே விளங்குகின்றன.
ஒரே சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பினும் ஐரோப்பியர்கள் மொழிவழித் தேசங்களாகவே பிரிந்துள்ளனர். ஒரே மொழி பேசக் கூடிய தெலுங்கர்கள் ஆந்திரமாகவும் தெலங்கானமாகவும் பிர்ந்துள்ளனர். இங்கு மொழியையும் தாண்டி அவர்களுக்கு வேறுபட்ட வரலாறு இருப்பதால் அது ’நாம்’ என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை.
காந்தி இந்தியா – பாகிஸ்தான் – வங்கதேசம் தழுவிய நிலப்பரப்புக்கான விடுதலைப் போராட்டத்தை கட்டியெழுப்பியிருந்த போதும் மதவழிப்பட்ட தேசிய அடிப்படையில் பாகிஸ்தான் பிரிவினையை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
மதவழிப்பட்ட ஒரு தேசியத்தைக் கட்டியமைத்துவிட்டதாக ஜின்னா கருதியிருக்கக் கூடும். ஆனால், அது மொழியடிப்படையில் பாகிஸ்தான், வங்கதேசம் எனப் பிரிந்துபோன வரலாற்றை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, ’நாம்’ என்ற உளவிய்ல உருவாக்கம் எழுமாத்திரத்திலோ தலைவர்களின் மன விருப்பங்களுக்கு இணங்கவோ உருப்பெறுவதில்லை.
அமெரிக்க தேசியம், பிரெஞ்சு தேசியத்தில் தொடங்கிய மேற்கு ஐரோப்பிய தேசியங்கள், ஜப்பான் தேசியம், யூத தேசியம், கிழக்கு ஐரோப்பாவில் தேசியங்கள், இலங்கை தீவில் தேசியம், ஆப்பிரிக்க – இலத்தீன் அமெரிக்க தேசியங்கள், இந்திய தேசியம், சீன தேசியம், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தேசியம், நேபாளில் மன்னராட்சிக்கு எதிரான தேசியம் என தேசியம் பற்றிய கோட்பாடு வரலாற்று நடைமுறைக்கு ஊடாக வளர்ந்து செல்கிறது.
- தொடரும்…
- – தோழர் செந்தில்