அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது ஆட்சியில் நீடிப்பது என்பதற்கு அப்பால் அரசியல் செய்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த பாசக, இந்த ஓராண்டுக்குள் மீண்டெழுந்திருக்கிறது, சறுக்கி விழுந்த குதிரையைப் போல்.

எதிர்க்கட்சிகளோ 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு இந்தியா கூட்டணி முடிந்துவிட்டது என்று விளக்கம் சொல்லிக் கொண்டு சிதறிக் கிடக்கின்றன.

மராட்டியம், அரியானா, தில்லி என பாசக அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளை ஈட்டி நிற்க பாசிசத்தின் இரட்டை இன்ஜின் ஆட்சியில் புல்டோசர்களின் சத்தம் கேட்டபடி உள்ளது. 

தமிழ்நாட்டிலோ சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தேர்தலின் வாயிலாகவும் படிப்படியாக தமது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டு வருகிறது பாசக.

தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் சாதிய வன்முறைகளையும் சாதி பெருமிதத்தையும் என கிடைக்கும் வழிகளிலெல்லாம் சாதியுணர்வைக் கிளறிவிட்டு, சாதிய கட்டமைப்பை இறுக்கமடையச் செய்யும் தன்மையில், தனித்த சாதிகளின் அணிதிரட்சிக்கு கடும் முயற்சி செய்துவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் 40 இடங்களிலும் பாசக தோல்வி கண்டிருப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருவித அலட்சியம் நிலவிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் திமுக ஆதரவு எதிர் திமுக எதிர்ப்பு என இருமுனையாக வடிவம் பெற்றிருப்பது நீடிக்கிறது.

இன்றைய நிலைக்கு தமிழ்நாட்டின் தனித்த முற்போக்கு அரசியல் மரபுதான் காரணமாக இருக்கிறது. ஆனால், ஒன்றிய் அரசு பாசிச வடிவம் எடுக்குமாயின் அது தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற அடிப்படைகளையே ஆட்டங் காணச் செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த சூழலில் பாசிச பாசக எதிர்ப்பை முதன்மைப் படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி உறுதிபூண்டுள்ளது. அதுவும் திசையற்ற, தன்னெழுச்சியான எதிர்ப்பு அரசியல் என்பதற்குப் பதிலாக எந்தெந்த முனைகளில் ஒன்றிய பாசக அரசின் பாசிச சக்கரங்கள் உருண்டோடுகின்றனவோ அந்தந்த முனைகளில் அதை மறித்தால்தான் ஒன்றிய அரசு முற்றுமுழுதான பாசிச வடிவம் எடுப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசியல், பொருளியல், பண்பாட்டுத் துறைகளில் கட்டமைப்பு வகைப்பட்ட மாற்றங்களை ஒன்றிய பாசக அரசும் ஆர்.எஸ்.எஸ். உம் செய்து கொண்டிருக்கின்றன.

பொருளியல் துறையில் அதானியையும் அம்பானியையும்  திதிமூலதன ஏகபோகங்களாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாசக அரசு அதற்கு துணைசெய்யும் வகையில் பின்வரும் மூன்றுமுனைகளில் வேகவேகமாக முன்னேறி வருகிறது.

  1. நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு எதிராக..  

நாடாளுமன்ற அமைப்புமுறை அதில் இடம்பெற்றுள்ள தன்னாட்சி நிறுவனங்கள் இந்திய அரசு முழுமையான பாசிச அரச வடிவம் எடுப்பதற்கு தடையாக இருக்கின்றன. அதை வெளிப்படையாக எதிர்க்காமல் உள்ளுக்குள் இருந்தபடி அவற்றை செல்லரிக்கச் செய்யும் வேலையைக் கடந்த 11 ஆண்டுகளாக பாசக செய்து வருகிறது. திட்ட ஆணையத்தைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, நடுவண் புலனாய்வு துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் என தன்னாட்சி நிறுவாங்களை கைப்பாவை ஆக்கிவிட்டது. ஊடகங்களை தம்து ஊது குழலாக மாற்றுவது அல்லது அச்சுறுத்தி வாய் மூடச் செய்வது. மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை, நாடாளுமன்ற நிலைக்குழுக்களை செல்லாக்காசாக்கி தலைமை அமைச்சர் ( பிரதமர்) அலுவலகத்தின் வழியாக மோடி – ஷா சிறுகும்பல் முடிவு எடுத்து வருகிறது.

இந்த தருணத்தில்கூட நீதித்துறையை விழுங்குவதற்கு கொலிஜிய முறையை ஒழித்துக்கட்ட  ஆர்.எஸ்.எஸ். பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. கூடவே, நாட்டின் துணை குடியரசு தலைவராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரரான ஜகதீப் தன்கரும் முனைப்புடன் விவாதத்தைக் கட்டமைத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றியதன் மூலம், எல்லோருக்கும் ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற புரட்சிகரமான முன்னேற்றத்தைக் குழப்பிவிட்டது. தோல் இருக்க சுளை முழுங்கியது போல் தேர்தல் நடத்திக் கொண்டே மக்கள் தீர்ப்பை விழுங்கிக் கொண்டிருக்கிறது பாசக.

ஊடகவியலாளர்கள், அறிவுத்துறையினர், முன்னாள் நீதிபதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குடிமைச் சமூகத்தினர் இதில் அக்கறைக் காட்டும் அளவுக்கு கட்சிகள், அமைப்புகள் கவனம் செலுத்துவதில்லை.

புதுமக்கால முதலிய சனநாயக விழுமியங்கள் ஊறித் திளைக்காத நிலை நீடிக்கும் வரை அச்சமூகம் பாசிசத்தின் விளைநிலமாகவே இருந்துவரும். நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டி பாசிச ஆட்சியை நிறுவத் துடிக்கும் பாசிச பாசகவின் முயற்சிகளை  முறியடித்தாக வேண்டும். இதுவோர் வரலாற்றுக் கடமையும் தேவையும் ஆகும்.

  1. அரைகுறை கூட்டாட்சியை ஒழித்துக்கட்டுவதற்கு எதிராக..

பாசிச பாசக ஒன்றியத்தில் மென்மேலும் அதிகாரத்தைக் குவிப்பதன் மூலம் அரைகுறை கூட்டாட்சியை ஒழித்து ஒற்றையாட்சியை நிறுவத் துடிக்கிறது. இது பாசிச அரச வடிவம் எடுப்பதற்கு வழிவகுக்கும்.

மாநிலங்களுக்கான நிதி பகிர்வைக் குறைக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் இல்லாத செஸ், சர்ஜார்ஜ் ஆகிய வரிகளை உயர்த்திக் கொள்வது, மக்கள்தொகை அடிபப்டையில் கணக்கிட்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு வரி  பகிர்வைக் குறைப்பது, ஆளுநர் வழியாக இரட்டை ஆட்சி, துணைவேந்தர்கள் பணியமர்த்தலில் மாநில உரிமையைப் பறிப்பது, மும்மொழிக் கொள்கையை ஏற்க வற்புறுத்தி நிதி கொடுக்க மறுப்பது, நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் தர மறுப்பது, தொகுதி மறுசீரமைப்பு என்னும் சூழ்ச்சி, தமிழ்நாட்டுக்கு, தெலங்கானா, கர்நாடகா, மராட்டியத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை குஜராத்துக்கு மடைமாற்றுவது என மாநிலங்களுக்கு எதிரான ஒன்றிய பாசக அரசின் ஒடுக்குமுறைகளின் பட்டியல் நீண்டது.

தமிழ்நாட்டில் இது விசயத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.  கோரிக்கைகள் சட்டப்பேரவை தீர்மானங்களாகவோ அல்லது சட்ட வரைவுகளாகவோ மாறி ஆளுநர் மாளிகையின் குப்பைத் தொட்டியை நிரப்புவதோடு முடிந்துவிடுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்  பெற வைத்தது உழவர் போராட்டம். ஆனால், தமிழ்நாட்டிலோ பாசக மீதான அதிருப்தியை வளர்ப்பதற்கு தேசிய ஒடுக்குமுறைப் பற்றி ஆரவாரமாக பேசப்படுவதற்கு அப்பால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்பதற்காகப் போராடுவதில்லை, மற்றுமொரு தேர்தலுக்காக காத்திருபப்தே அரசியலாக சுருங்கிப்போய் உள்ளது.

இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். கோரிக்கைகளை மக்கள்மயம் ஆக்குவதோடு போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும். அதுவே பாசிச எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை வளர்க்க உதவும்.

இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக

இசுலாமியர்கள், கிறித்தவர்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக மாற்ற நினைக்கிறது பாசக. அதற்கேற்ப முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வஃபு வாரிய சட்டத்திருத்தம், பசு பாதுகாப்பு தடை சட்டம் , மதமாற்ற தடை  சட்டம், பொதுசிவில் சட்டம், பாப்புலர் ஃப்ரண்ட் தடை என சட்டங்கள் கொண்டு வரப்படுவதும் திருத்தப்படுவதும் நடந்து வருகிறது. இன்னொருபுறம் வன்கும்பல் அடித்துக் கொலைகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவக் குறைப்பு, வாக்காளர் அட்டை மறுப்பு, அன்றாடம் வெறுப்புப் பேச்சுகள், தடுப்பு முகாம்கள், அடக்குமுறை சட்டங்களின் கீழ் சிறையிலடைப்பது என தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் வாக்குவங்கி அரசியலாக  மேற்படி சட்டங்களும் சட்ட திருத்தங்களும் எதிர்க்கப்படும் அதேவேளையில் என்.ஐ.ஏ. வின் சோதனை, கைதுகள், பொய்ப் பரப்புரை பற்றியோ நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இசுலாமியர் – கிறுத்தவர்கள் பிரதிநிதித்துவக் குறைப்பு பற்றியோ சிறுபான்மை ஆதரவு அரசியல் அலட்டிக் கொள்வதில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 11 ஆண்டுகால மோடி ஆட்சி சிறுபான்மை மகக்ளிடையே இந்நாட்டின் மீது தமது சொந்த மக்கள் மீதும் எதிர்காலம் மீதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மை மென்மேலும் திடப்பட்டுக் கொண்டிருப்பது குறித்து கவலை கொள்வதில்லை.

iவாக்குவங்கி அரசியலைக் கடந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதலை எதிர்த்து முறியடிக்க வேண்டும்; சிறுபான்மையினர் உரிமைகளைத் தக்க வைக்க வேலைத்திட்டமும் உணர்வூபூர்வமான செயல்பாடும் வேண்டும்.

இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலின் பகுதியாக பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, இந்தி வழியாக சமற்கிருத திணிப்பு, இசுலாமிய வெறுப்பை முன்வைத்து ஆரிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக  வரலாற்றைத் திரிப்பது ஆகியவை நடந்துவருகின்றன. இந்தி, இந்து, இந்துராஷ்டிரம் என்ற நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதற்கான விழிப்பும் செயல்பாடும் தேவை.

தமிழ்நாட்டில் பாசிச எதிர்ப்பு சனநாயக இயக்கம் அறிந்தோ அறியாமலோ திசை திருப்பப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக திட்டமிட்டவகையில் பாசிச எதிர்ப்பு இயக்கம் முன்னெடுக்கப் பட வேண்டும். பாசிச எதிர்ப்பை முதன்மைபடுத்திய வேலைத்திட்டம் வேண்டும். அந்த வேலைத்திட்டம் பாசிச இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

அந்த நோக்கில்,  தமிழ்த்தேச மக்கள் முன்னணி மேற்சொன்ன மூன்று முனைகளில் – நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு எதிராக, அரைகுறை கூட்டாட்சியை ஒழித்துக்கட்டுவதற்கு எதிராக. இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக தமது செயல்பாடுகளைக் குவிமையப்படுத்த உள்ளது.

பாசிச அபாயத்தை உணர்ந்து அதற்கு எதிரான சனநாயக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஆற்றல்களும் அமைப்புகளும் தனித்தும் கூட்டாகவும் தமது செயல்பாடுகளை மேற்சொன்ன முனைகளில் திசைவழிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி அன்போடு வேண்டுகிறது; தமிழ்த்தேச மக்கள் முன்னணியோடு தோழமைப் பாராட்டும் ஆற்றல்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ததேமமு அறைகூவல் விடுக்கிறது.

தோழமையுடன்,

தி. செந்தில்குமார்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்த்தேச மககள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW