மோடி அரசு பிற மாநிலங்களின் முதலீடுகளை குசராத்திற்கு மடைமாற்றிய முறைகள்

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சியின் சமநிலைக்கு சவால் விடும் வகையில் பெரும்பாலான மாநிலங்களுக்கு எட்டாக்கனியாக ஒன்றிய அரசின் சலுகைகள் உள்ளன. சந்தேகங்களை எழுப்பும் வகையில் குசராத்தை நோக்கி பாயும் முதலீடுகளும் ஒன்றிய அரசின் பொருளாதார பாரபட்சமும் உள்ளன.
2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த செமிகண்டக்டர் நிறுவனம் தமிழ்நாட்டு தலைநகரான சென்னையில் அதிகளவு பணத்தை முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் புதுதில்லியில் இந்திய ஒன்றிய வணிகத்துறை அமைச்சரை (Commerce Minister) சந்தித்து தங்களது ஒப்பந்தங்களை விளக்கினர். அவர்கள் தங்களது கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள் சென்னையில் தங்களது முதலீட்டை செய்வதற்குமுன் அவர்களை குசராத்திற்கு அழைத்துசெல்ல கெலிகாப்டர் தயாராக இருந்தது. மோடியின் சொந்ந மாநிலமான குசராத்தில் இந்த முதலீட்டை மடைமாற்றம் செய்கின்றனர் என்று தமிழ்நாட்டு அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து டிஎன்எம்(TNM) இதழுக்கு தகவல் கிடைத்தது.
ஒரு மசாலா திரைப்படத்தின் காட்சிபோல இந்தக் “கெலிகாப்டர் தந்திரம்” இருந்தது. பிற மாநிலங்களுக்கு வந்த முதலீடுகளை குசராத்திற்கு மடைமாற்றம் செய்தது மோடி அரசின் பண்பற்ற செயல்களில் ஒன்றாகும். இந்த முதலீடுகளை குசராத்திற்கு திருப்பி அனுப்புவதை பாசக அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் பலமுறை சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். எடு. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வந்த ரூ. 6,000 கோடி முதலீட்டை குசராத்திற்கு திருப்பி விட்டனர் என்று குற்றம்சாட்டினார். அதுபோல தெலுங்கானா மேனாள் ஐடி அமைச்சர் திருமிகு கே.டி.ஆர். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களை குசராத்திற்கு மாற்றுவதற்கு ‘பலவந்தப்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டினார். கர்நாடகாவின் ஐ.டி. அமைச்சர் பிரியங்க் கார்கே பல முதலீடுகளை குசராத்திற்கு பலவந்தமாக திருப்பிவிட பல நிறுவனங்களுக்கு மோடி அலுவலகத்திலிருந்து அழுத்தம் வந்தது என்று குற்றம் சாட்டினார். அதுபோல மகாராட்டிராவில் சட்டமன்ற தேர்தலுக்குமுன் மகாராட்டிராவில் இருந்து வெகுதொலைவில் உள்ள வதோதராவில் நிறைவேற்றப்படவிருந்த “டாடா – ஏர்பசு வசதி போன்ற பெரிய திட்டங்களை வேண்டுமென்றே குசராத்திற்கு திசை மாற்றிவிட்டனர் என்று மகா விகாசு அகாதி(MVA) தலைவர்கள் பாசக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீவிரப்படுத்தினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? அப்படி இருந்தால் இவை எவ்வாறு செயல்படுகின்றன. இது குறித்து டிஎன்எம் ( The News Minute) என்ற இதழ் மகாராட்டிரம், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், ஒன்றிய அரசு, குசராத்தின் அதிகாரிகளுடன் ஆழமான உரையாடல்களை நடத்தியது. அடிக்கடி பயன்படுத்தப்படும் நான்கு உத்திகளை நாங்கள் அடையாளம் கண்டோம்.
- ஓன்றிய அரசின் கணிசமான மூலதன மானியங்கள் இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்கான உறுதிமொழிகள்
- உற்பத்திக்கான அரசாங்க கொள்முதல் உறுதிமொழிகள்
- ஓன்றிய அரசின் பிரதிநிதிகளால் தோலேரா, கிஃப்ட் சிட்டியை(smart city projects) முதலீட்டு இடங்களாக மேம்படுத்துதல்
- ஓன்றிய அரசு பிற மாநிலங்களின் முன்மொழிவுகளைப் புறக்கணித்து, முக்கியமான அரசுத் திட்டங்களை ஒருதலைப்பட்சமாக குசராத்திற்கு வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் உள்ளன.
நரேந்திர மோடி பிரதமராக வந்ததிலிருந்து அவரது சொந்த மாநிலமான குசராத்துக்கு ஆதரவு வழங்கப்படுவதாக பலர் கருதியதால் நுணுக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஒன்றியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவக் கண்காட்சி போன்ற மிக முக்கியமான நிகழ்வுகளை நடத்துவது மூலமாக, குசராத்தை முன்னிலைப்படுத்துகிறது. அதனால் பிற மாநிலங்கள் முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் இழந்ததாக உணர்கின்றன.
தமிழ்நாடு, தெல்ங்கானாவில் இருந்து குசராத்திற்கு கைமாறிய மைக்ரான் நிறுவனம்;
தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வந்த மைக்ரான் நிறுவன முதலீடுகளை குசராத் மாநிலத்திற்கு திருப்பிவிட்டனர். 2023 ஆம் ஆண்டு சூன் திங்கள் அன்று அமெரிக்காவைச் சார்ந்த மைக்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் குசராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள சானந்த் (குசராத் தொழில் வளர்ச்சி துறை – Gujarat Industrial Development Corporation – GIDC) அருகே ஒரு செமிகண்டக்டர்(Semiconductor) சேர்க்கை, பரிசோதனை நிறுவனம் அமைக்க 825 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6, 770 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது வெளியானது. அப்போது அவர் குசராத்தை முதலீட்டு இலக்காக; முன்னிறுத்தியதாக கூறப்படுகிறது. நமக்கு கிடைத்த தரவுகளின்படி மைக்ரோன் நிறுவனம் இந்திய ஒன்றியத்தில் தனது செமிகண்டக்டர் சேர்க்கைப் பிரிவை அமைக்க இடம் தேடிக்கொண்டிருந்தது. மேலும் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ஆர்வம் காட்டியிருந்தது. ஆனால இறுதியாக; அதை குசராத்தில் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, மொத்த திட்டத்தின் செலவில் 70 விழுக்காட்டை (அதாவது 2.75 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்) இந்திய ஒன்றிய அரசும், குசராத் அரசும் வழங்குகின்றன. இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகளும், என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எடு. எச். டி. குமாரசாமி, இந்திய ஒன்றிய தொழில்துறை, எஃகு துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு பெங்களுருக்கு திரும்பும்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றிய அரசு இவ்வளவு பெரிய முதலீடு செய்வது எப்படி நியாயமாகும்? என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கருத்தைப் பிறகு திரும்பபெற்றார். ஆனால் தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் மைக்ரோன் முதலீடு கைமாறியதில் ஏற்பட்ட அதிருப்தியின் பிரதிபலிப்பாக இது பார்க்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் மைக்ரோன் நிறுவனம் தனது ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை ஐதராபாத்தில் தொடங்கியதன் மூலம் இந்திய ஒன்றியத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐதராபாத்தின் முக்கிய டெக் காரிடர் பகுதியில் அமைந்த இந்த மைய நினைவகம், சேமிப்புக்கான தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களை உருவாக்க ஒரு முக்கிய மையமாக உருவாக்கப்பட்டது. இந்த நகரத்தின் திறமையான பொறியியல் வளத்தைப் பயன்படுத்தும் நோக்குடன் நிறுவப்பட்டது. சில ஆண்டுகளிலேயே இந்த மை;யத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 5,000 தைக் கடந்து, இந்திய ஒன்றியத்தில் மைக்ரோனின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக வளர்ந்தது. 2023 ஆம் ஆண்டு வந்தபோது மைக்ரோனின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக தொழிற்சாலை அமைப்பதற்கு ஐதரபாத் சரியான இடமாக அமையும் என்று முடிவுசெய்தனர்.
தெலுங்கானா அரசு டாவோஸ்(Davos) மாநாட்டில் பெரிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் ஒன்றிய அரசின் அழுத்தத்தால் இந்த திட்டம் குசராத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தெலுங்கானா அரசுக்கும் தொழில்துறை வட்டாரங்களிலும் அதிருப்தி ஏற்பட்டது.
அன்றைய தெலுங்கானா அரசில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரி, டிஎன்எம்(TNM) இதழில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொணடு தெரிவித்ததாவது இவர்கள் ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் இந்த திட்டம் ஏன் குசராத்திற்கு மாற்றப்பட்டது? என்ற வினாவை எழுப்பி இருந்தனர். ஒன்றிய அரசின் அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செமிகண்டக்டர் கொள்கையை (Seminconductor Policy) மேற்கோள் காட்டினர். தைவானில் உள்ளதுபோல முதலில் ஒரு தொழில்துறை வளாகம் தொடங்க முக்கியத்துவம் கொடுத்து, பிறகு பிற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்ய தீர்மானம் எடுக்கப்படும் என்று இந்தக் கொள்கை கூறுவதாக ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளித்தனர். முதன் முதலில் தொடங்கிய தொழில் வளாகம் நன்கு செயல்பட்டு, முழு வளர்ச்சி அடையும்போது பிற மாநிலங்களுக்கு கொண்டுசென்று கூடுதல் உற்பத்தி வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று ஒன்றிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதே; காரணததைக் காட்டியதன் விளைவாக; 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த கெயின்சு தொழில்நுட்பத் (Keynes Technology) திட்டத்தை குசராத்திற்கு மாற்றினர்.
குசராத் எதற்காக இந்த தொழில்துறை வளாகத்தின் இடமாக தேர்வு செய்யப்பட்டது? என்ற வினா பதிலளிக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அதிகளவில் அருமையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான தொழில்துறைச் சு+ழலை தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராட்டிரம் போன்ற மாநிலங்கள் உருவாக்கியுள்ளன என்று அந்த ஓய்வுபெற்ற அதிகாரி சுட்டிக்காட்டினார். எடு. தெலுங்கானா மாநிலம் 1,000 க்கு மேற்பட்ட மைக்ரோ சிறு, நடுத்தர நிறுவனங்களை எம்எஸ்எம்(MSME) மின்னணுப் பொருட்கள் துறையில் வைத்துள்ளது. இது உற்பத்திக்கு தேவையான விரிந்து பரந்த தொழில்துறை வளாகத்தை உருவாக்கப் பயன்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் குசராத்தில் டாடா, மைக்ரோன், முருகப்பா (டிஎஸ்எம்சி கூட்டணி), கெயின்சு ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் குசராத்தில் நிறுவப்பட்டுள்ளன. இப்போது ஒன்றிய அரசு பிற மாநிலங்களில் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களை தொடங்க அறிவிப்பு தந்துவருகிறது. ஆனால் அவை ஏற்கனவே தொழில்துறைச் சூழல் உருவாகியுள்ள எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இல்லை. அவை பாசக ஆளும் மாநிலங்களான உத்திரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.
முதலில் குசராத் பிறகு உத்திரபிரதேசம், ஆனால் எப்போதும் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு இல்லை.
2023 ஆம் ஆண்டு சூன் திங்களில் ஒரு நிறுவனம் சென்னையில் உள்ள டைடல் பார்க்கில் உற்பத்தி நிலையத்தை அமைத்து, உண்மையாகவே 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டதாக அறிவித்தது. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளுர் செமிகண்டக்டர் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவுமென்றது. ஆனால் இந்த அறிவிப்பு வந்த சில காலத்திலேயே அந்த நிறுவனம் தனது கவனத்தை குசராத்தின்மீது திருப்பியது. கிடைத்த தகவலின்படி ஒன்றிய அரசு அழுத்தம் தந்ததாகக் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மே திங்களில் சென்னையை தலைமையிடமாக வைத்து ஒரு செமிகண்டக்டர் நிறுவனம் கர்நாடகாவில் முக்கிய முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. அந்த நிறுவனம் பெங்களுரில் உள்ள செமிகண்டக்டர் உற்பத்திக்கான தொழிற்துறைச் சூழலைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இணைந்த ஒரு தொழிற்துறை மையம் உருவாக வாய்ப்புள்ளது என்று நம்பினர். ஆனால் ஒரு வாரத்திற்குள் அந்த தொழில் நிறுவனம் கர்நாடகாவில் முதலீடு செய்ய முடியாது என்று அறிவித்தது. தில்லியிருந்து வந்த எதிர்பாராத உத்தரவுதான் அதற்கு காரணம் என்று தெரிவித்தனர். அந்த உத்தரவில் “அந்த நிறுவனத்தின் கவனம் முதலில் குசராத்தின்மீதும் பிறகு உத்திரபிரதேசத்தின்மீதும் இருக்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது” என்று இருந்ததாக கர்நாடக அரசைச் சார்ந்த ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். இங்கு “எதிரி மாநிலங்கள்” என்ற சொல் எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் கர்நாடகம் போன்ற மாநிலங்களைக் குறிக்கிறது.
இதே கதை தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழ்நாடுதான் மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்திய ஒன்றிய மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திறமையான பணியாளர்கள், வலுவான ஆய்வு- வளர்ச்சி அமைப்புகள், உள்ளுர் சந்தைகள் உள்ளன. பல ஆண்டுகளாக உலகளாவிய நிறுவனங்களை (எம்என்சி-கள் – MNCs) செமிகண்டக்டர் உற்பத்தியில் முதலீடு செய்ய உற்சாகப்படுத்துகிறோம் என்று தமிழ்நாட்டு அரசின் அதிகாரி டிஎன்எம் – க்கு தெரிவித்தார். ஆனால் பெரிய முதலீடுகள் வரும்பொழுது இதை இன்றியமையாததாகக் கருதுவதில்லை. இந்தியா ஒன்றியத்தில் தொழில் தொடங்க 80 விழுக்காடு வரை (50 விழுக்காடு ஒன்றிய அரசும் 30 விழுக்காடு மாநில அரசும்) அரசு முதலீட்டை தர மோடி அரசு உறுதியளிக்கிறது. ஆனால் ஏதாவது நிறுவனம் தமிழ்நாட்டைத் தேர்வுசெய்தால் ஒன்றிய அரசின் நிதியைப் பெற முடிவதில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பலாம். ஆனால் உண்மையான வினா “அரசுகள் தனியார் திட்டங்களில் எப்படி முதலீடு செய்ய முடியும்? இது பொது நிதியுடன் செயல்படும் நிறுவனமல்ல” என்று கர்நாடகாவின் அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். இந்த நிறுவனங்களுக்கு குசராத் அரசு வழங்கும் நிதியை நாம் வழங்க முடியாது என்றல்ல. ஆனால் ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பில் சிக்கல் உள்ளது. ’குசராத’; என்ற நிபந்தனை ஒன்றுதான் அந்தச் சிக்கல் என்று அவர் கூறினார்.
மகாராட்டிராவின் பெரும் இழப்புகள்
2022 ஆம் ஆண்டு சூன் திங்கள் மகாராட்டிராவில் எம்விஏ (MVA) அரசு வீழ்ந்தபோது இந்த மாநிலத்தில் உள்ள பல முக்கிய திட்டங்களும் பாதிக்கப்பட்டன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றவுடன் பல பெரும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குசராத்துக்கு மாற்றமடையத் தொடங்கின. அதில் முக்கியமான ஒன்றாகவே வேதாந்தா – ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை இருக்கிறது. மகாராட்டிர அதிகாரிகளும் ஒன்றிய அரசின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு “ஒன்றிய அரசு வழங்கிய மிகப்பெரிய ஊக்குவிப்புகள்;தான்” காரணம் என்று தெரியவந்தது. 30 விழுக்காடு முதலீட்டு மானியம், சிறப்பு நிலத் தள்ளுபடி, கூடுதல் ஜிஎஸ்டி குறைப்பு, இறக்குமதி வரிகளில் தள்ளுபடி போன்ற சலுகைகள் இதில் அடங்கும். இந்தச் சலுகைகள் குசராத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) மட்டும் கொடுக்கப்பட்டன. மற்ற எந்த மாநிலத்திற்கும் கிடைக்கவில்லை.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒன்றியத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்துடன் கூட்டணியமைத்தது. சூலை திங்களுக்குள் மகாராட்டிராவில் உள்ள தலேகாவோன் (Talegaon) என்ற இடம் 22 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செமிகண்டக்டருக்கான, காட்சி உற்பத்தி தொழிற்சாலைக்கான முதன்மையான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தால் 2 இலட்சத்திற்கு மேலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பல கூறுகளை ஆய்வுசெய்யும் போது, கடந்த எம்விஏ அரசும், முதல்வர் ஏக்நாத் சிண்டேயும் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவீசும் ஃபாக்ஸ்கான் -வேதாந்தா நிறுவனத்துடன் பல முறைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாராட்டிரம் தொழில் மேம்பாட்டுக் கழகம்(MIDC –Maharastra Industrial Development Corporation) கூட ஓர் அதிகாரப்பூர்வமான செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் தலேகாவோனில் திறமையான பணியாளர்கள், வலுவான தொழிற்துறை வசதிகள், தொழிற்துறை உள்கட்டமைப்பு போன்றவை இந்தத் தொழிற்சாலைக்கு ஏற்றவகையில் உள்ளன என்று தெரிவித்தது. ஆனால் எவ்வித அதிகாரப்பூர்வமான விளக்கமும் தராமல் இந்த பெரிய திட்டம் குசராத்துக்கு மாற்றப்பட்டது.
வேதாந்தா – ஃபாக்ஸ்கானின் மதிப்பீட்டு அறிக்கை, பொறியியல் கல்லூரிகள், வலுவான விற்பனைச் சங்கிலி போன்றவை நிறைந்த நகரமான புனேவிற்கு அருகில் தலேகாவேன் இருப்பதால் இது தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடமாக கணித்ததை ஆதாராங்கள் விளக்குகின்றன. இந்த இடம் திறமையான தொழிலாளர்களை எளிதாக அணுகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட தளவாடங்களை வழங்கவும் அவர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. இவ்வளவு வசதிகள் இருந்தும் ஒன்றிய அரசின் அழுத்தத்தின் காரணமாக இத்திட்டம் குசராத்தில் உள்ள தோலேராவுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தோலேரா ஒரு வரவிருக்கும் தொழிற்துறை மையமாக நியமிக்கப்பட்டிருந்தாலும்; புவியியல், தளவாட சவால்களை நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறினார். இது அகமதாபாத்திற்கு வெகுதொலைவில் உள்ளது. வாக்குறுதிகள் கொடுத்திருந்தாலும் இன்னும் விமான நிலையம் கட்டப்படவில்லை. மேலும் திறமையான தொழிலாளர்கள், போதுமான பயிற்சி வசதிகள் போன்றவை பெரிய சவாலாகவும் உள்ளன.
கிப்ட் சிட்டி(GIFT city), தோலேரா போன்ற தொழிற்துறை மையங்கள்
இந்திய ஒன்றியத்தின் முதல் பன்னாட்டு ; நிதி சேவை மையமாக(International Financial Service Centre – IFSC) குசராத்தில் உள்ள குசராத் பன்னாட்டு நிதி தொழிற்நுட்ப நகரம்(Gujarat International Financial Tec – City – GIFT City) உள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்துடன் செயல்படும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நேரடி ஊக்குவிப்புகள், வரிச்சலுகைகள், முதலீட்டு ஆதரவு, தனித்துவமான விதிமுறைகள் போன்றவை கிப்ட் சிட்டிக்கு வழங்கப்படுவதால் இது நாட்டின் பிற மாநிலங்களில் உளள மண்டலங்களைவிட வேறுபட்ட மண்டலமாக உள்ளது. இந்தக் கிப்ட் சிட்டி பன்னாட்டு வங்கி, நிதி நிறுவனங்கள் போன்வற்றிற்கு தனி விதிமுறைகள், உயர்நிலை தொழில்நுட்ப, பொருளாதார உள்கட்டமைப்பு, அதிகளவில் வரிச்சலுகைகள் போன்றவற்றை வழங்குகிறது. ஒன்றிய அரசின் நேரடி ஆதரவால் இந்தக் கிப்ட் சிட்டி செயல்படுவதால் நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்காத வகையில் சிறப்பு வரிச்சலுகைகளைப் பெறுகிறது. இந்தக் காரணத்தால் பல பன்னாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் கிப்ட் சிட்டியை இந்திய ஒன்றியத்தின் ‘உலக நிதி மையமாக’ உருவாக்க முனைந்து வருகின்றனர்.
இந்திய ஒன்றியத்தின் முதல் பன்னாட்டு நிதி சேவை மையமாக மும்பையை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான பெர்சி மிஸ்ட்ரி (Percy Mistry) குழுவின் அறிக்கையில், இந்திய ஒன்றியத்தின் நிதி தலைநகரமான மும்பையை உலக நிதி மையமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டதென்று உள்ளது. ஆனால் அந்த நேரத்தில் உபிஏ(UPA) அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
2008 ஆம் ஆண்டில் குசராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தனது மாநிலத்திற்கே தனியாக ஒரு பன்னாட்டு நிதி மையத்தை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனால் காந்தி நகருக்கு அருகில் கிப்ட் சிட்டி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் நானோ சிட்டியாக கருதப்பட்ட கிப்ட் சிட்டி அகமதாபாத்துக்கும் காந்திநகருக்கும் இடையில் 886 ஏக்கர் நிலப்பராப்பில் வணிக குடியிருப்பும் பொழுதுபோக்கு வளாகங்களும் கொண்ட ஒரு மைய வணிக மாவட்டமாக(Central Business District – CBD) உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்ய மக்கின்சே என்ற நிறுவனம்(McKinsey & Co.) ஆலோசனை நிறுவனமாக நியமிக்கப்பட்டது. முதன் முதலில் இது குசராத் நகர வளர்ச்சி துறை, ஐஎல் எப் எஸ் ( IL & FS) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாக ரூ. 78, 000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை; இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தினாலும் மாநில அரசு 673 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, தொடக்க வேலைகளை மேற்கொண்டது. 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி கிப்ட் சிட்டியை ஒரு குடியிருப்பு மையமாக உருவாக்கும் திட்டத்திலிருந்து இந்திய ஒன்றியத்தின் முதல் ஸ்மார்ட் நகரமாகவும் உலகளாவிய நிதி மையமாகவும் மாற்ற கவனம் செலுத்தினார். இந்த மாற்றம் ஒன்றிய அரசின் 2015 – 16 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டது. அப்போது ஒன்றிய அரசின் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அவர்கள் மும்பையில் இருந்த நிதி மையத்திட்டத்தை கிப்ட் சிட்டிக்கு மாற்றினார். சிங்கப்பூர் அல்லது துபாயில் உள்ள உலகளாவிய நிதி மையமாக கிப்ட் சிட்டியை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டார். 2016 ஆம் ஆண்டில் வணிகத் தலைவர்கள், மகாராட்டிராவின் அரசியல் வட்டாரங்கள் மும்பையில் ஒன்றாக கூடி பன்னாட்டு நிதி சேவை மையத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டது. அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜெயந்த் சின்காவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இருப்பினும் திட்டத்தின் திசைமாற்றம் தொடர்ந்தது. மோடி அரசு கிப்ட் சிட்டிக்கு முழு ஆதரவை வழங்கியது. 2020 ஆம் ஆண்டில் கிப்ட் சிட்டியில் பன்னாட்டு நிதி சேவை மையங்களுக்கான குழுமம் (International Financial Services Centres Authority – IFSCA) நிறுவப்பட்டதன் மூலம் இது இந்திய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வமான பன்னாட்டு நிதி சேவை மையமாக உரிமை பெற்றது. மோடியின் செல்வாக்கால் மும்பை புறக்கணிக்கப்பட்டு குசராத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதென்ற குற்றச்சாட்டுகளை மகாராட்டிர தலைவர்கள் முன்வைத்தனர்.
கிப்ட் சிட்டியின் வரி அமைப்புதான் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக காணப்படுகிறது. இந்தக் கிப்ட் சிட்டியில் நிறுவனம் தொடங்கும் நிறுவனங்களுக்கு முதல் 10 ஆண்டுகளுக்கு 100 விழுக்காடு வருமான வரி விலக்கைப் பெறலாம். அதோடு, இவை பத்திரப் பரிமாற்ற வரி ( Securities Transaction Tax – STT ) சரக்கு பரிமாற்ற வரி (Commodity Transaction Tax(CTT) போன்ற பெரிய நிதி பரிமாற்ற வரிகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதனால் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கான செலவுகளைக் குறைக்க முடியும். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள உலகளாவிய நிதி மையங்களோடு போட்டியிடும் அளவிற்கு கிப்ட் சிட்டிக்கு நிதி வழங்குவதில் முன்னுரிமை வழங்குகிறது.
கிப்ட் சிட்டியில் குறைந்தபட்ச மாற்று வரி (Minimum Alternate Tax – MAT) வெறும் 9 விழுக்காடு மட்டும் உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் 15 விழுக்காடு உள்ளது. பன்னாட்டு நிதி சேவை மையங்களின் அதிகாரமுள்ள நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை பரிமாற்றம் செய்ய அனுமதி உள்ளது. தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதி (Dholera Special Investment Region – SIR) என்னும் மிகப் பெரிய தொழிற்துறை மையமும் உருவாக்கப்பட்டள்ளது. இந்த மையம் முக்கியமான உள்கட்டமைப்பு முதலீடுகளாலும் அரசு திட்டங்களின் ஆதரவாலும் பயனடைகிறது. இங்கு சரக்கு நகர்வு மேலாண்மை வசதிகள் (developed logistics), தனியாக மின்சாரம் வழங்கல், வலுவான போக்குவரத்து இணைப்புகள் போன்றவை உள்ளன. ஒன்றிய அரசு தோலேராவில் சாலைகள், குடிநீர் வழங்கல், ஆற்றல் அமைப்புகள் போன்றவற்றை மேம்படுத்தும் எண்ணத்தில் பெரிய தொகையை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் உயர் தொழில்நுட்பத் துறைகள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றை ஈர்க்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு கொள்கலன் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), மண்தரைத் துறைமுகங்கள் (Dry ports) போன்ற தரப்படுத்தப்பட்ட சரக்கு நகர்வு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இவைப் பொருட்களை திறம்பட நகர்த்துவதற்கு உதவுகின்றன.
நம்பகதன்மையுள்ள மின்சார விநியோகத்தை உறுதிசெய்ய, அரசு தனியான ஆற்றலமைப்புகளில் முதலீடு செய்கிறது. சூரிய சக்தி, காற்றாலை; மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதால் தோலேரா மையம் ஒரு நீடித்துநிலைக்கவல்ல தொழிற்துறை மண்டலமாக(Sustainable Industrial Zone) உருவாகும் வாய்ப்புள்ளது.
கிப்ட் சிட்டியும் தோலேராவும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு என்ற திட்டத்தின்கீழ் செயல்படுகின்றன. இந்தத் திட்டம் மின்னணுவியல், மருந்து தயாரிப்பு, மோட்டார் வாகனத் தொழில் போன்ற குறிப்பிட்ட துறைகளில் நிறுவனங்களை நிறுவுவதற்காக ஊக்குவிக்கப்படுகின்றது. எளிதான அனுமதி பெறும் முறைகள், தனியார் நலனுக்கான தொழிலாளர் சட்டங்கள், ஏராளமான வரிச்சலுகைகள் உள்ளதால் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. குசராத்திற்கு அதிக ஆதாயம் தரும் வகையில் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று விமர்சனங்கள் எழுகின்றன.
ஒருதலைப்பட்சமான தேர்வுகளும் பிற மாநிலங்களைப் புறக்கணித்தலும்
ஒன்றிய அரசு பிற மாநிலங்களுக்கு கொடுக்காமல் இரண்டு முக்கிய திட்டங்களை நேரடியாக குசராத்திற்கு கொடுத்துள்ளது. ஒன்று. மாபெரும் ஒருங்கிணைந்த ஆடைப் பகுதியும் பூவேலைப்பாடும் – பிஎம் மித்ரா (PM MITRA – Mega Integrated Textile Region and Apparel) என்ற திட்டம் நவ்சாரியில் செயல்படுத்தப்படுகிறது. இது மூன்று இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இரண்டு. தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மாபெரும் மருந்து தொழிலுக்குரிய உள்கட்டமைப்பு (Mega Pharmaceutical Infrastructure for Technological Advancement – Megha) என்ற திட்டம் மேக் இன் இந்தியா(Make in India) என்ற திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, ஒரு சிறப்பு மருந்து தயாரிப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வித விளக்கமளிக்காமலும் இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கான தகுதி, நிபந்தனைகள் என்ன? பிற மாநிலங்கள் ஏன் மறுக்கப்பட்டன? போன்ற வினாக்களுக்கு தெளிவாக எவ்வித விடைகளும் தரப்படவில்லை. இந்தத் திட்டங்களுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்புகள் எங்கள் மாநிலங்களில் இருந்தும் அவை குசராத்திற்கு மட்டும் வழங்கப்பட்டன என்று மகாராட்டிரத்தின் ஓர் உயர் அதிகாரி டிஎன்எம் – க்கு தொpவித்தார்.
இந்த முன்னெடுப்பு ஏன் பிரச்சனையாகும்?
மோடி அரசு; குசராத்திற்கு சிறப்பு முன்னுரிமை தருவதால் மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக முதலீடுகள் செய்திருந்த போதும் குசராத்துடன் போட்டிப் போடுவதற்காக போராடுகின்றன. ஒரு மாநிலம் பெரிய முதலீட்டை இழக்கும்போது அது வெறும் நிதியை மட்டும் இழக்கவில்லை. மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளையும், சமுதாய மேம்பாட்டின் வழிகளையும் இழக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
பெரிய முதலீடுகள் உயர்வான ஊதியமுள்ள வேலைகளை உருவாக்கும். உள்நாட்டு வணிகங்களுக்கு நிலையான வருவாயைக் கொடுக்கும். புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி ஒரு வளர்ச்சியான பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது. ஆனால் இந்த முதலீடுகள் வேறு இடத்திற்கு செல்லும்போது தொழிலாளர்கள் மட்டுமல்ல, சிறு வணிகங்;களும், நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களும் பாதிக்கப்படுகின்றன.
மேலும், ஒரு மாநிலம் ஒரு முக்கியமான திட்டத்தை இழக்கும்போது அந்த இழப்பு அந்த மாநிலத்தின் பிற முதலீட்டாளர்களிடம் உள்ள நம்பிக்கையையும் சீர்குலைக்கிறது. எதிர்கால தொழில் வாய்ப்புகளை தவறவிடும்; நிலையை உருவாக்குகிறது.
The news laundry இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு. கட்டுரையாளர் – பூஜா பிரசன்னா , மொழிபெயர்ப்பு – ராதா
நன்றி: the newslaundry