தனிமையில் புத்தகங்களுடன்: ஷர்ஜில் இமாமின் சிறை வாழ்க்கை

26 Mar 2025

(மாணவ செயல்பாட்டாளரான ஷர்ஜில் இமாம் பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ கிராமத்தைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது அவர் அளித்த உரைகளுக்காக, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். டெல்லி, அஸ்ஸாம், உத்தர பிரதேசம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவுகளும் சுமத்தப்பட்டுள்ளன. 2020 டெல்லி கலவரங்களுடன் தொடர்புடைய சதி வழக்கிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மே 2024 இல் தேசத்துரோக வழக்கில் ஜாமீன் பெற்றாலும், UAPA வழக்கு காரணமாக அவர் இன்னும் சிறையில் உள்ளார். 

The Quint இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இங்கு கொடுக்கப்படுகிறது.)

இந்த ஆண்டு ஜனவரியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) முனைவர் பட்டப்படிப்பு ஆய்வாளர் ஷர்ஜீல் இமாம், ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்தார். டெல்லி கலவர சதி வழக்கில் அவரது ஜாமீன் மனு 2022 முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் (59/2020), இமாம் மற்றும் பதினெட்டு நபர்கள் மீது கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது சிறைவாசத்தின் தொடக்கத்திலிருந்து, தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இமாமைப் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.

திகார் மத்திய சிறையில் எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த பிரத்யேக நேர்காணலில், 37 வயதான அவர் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள் மற்றும் அவரின் பூனை நண்பர்கள் பற்றி குறிப்பிடுகிறார். வெளி உலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் (AI தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களில் அவர் ஆர்வமாக உள்ளார். தனது முனைவர் பட்டத்தை முடிக்க விரும்புகிறார்) தனது தாயின் உடல்நிலை குறித்து கவலை கொள்கிறார்.

ஷர்ஜில் இமாம் தனது நிலையை தனது சொந்த வார்த்தைகளில் சொல்ல அனுமதிக்கவும் சமூகமும் அரசும் சிறைவாசிகளுக்கு மறுக்கும் உரிமையை மீட்டெடுக்கவும் இந்த நேர்காணல் சிறிதளவு மட்டுமே திருத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது? 

ஒருவரின் நிலையை வார்த்தைகளில் துல்லியமாக விவரிப்பது எப்போதும் கடினம். என் விஷயத்தில் அது இன்னும் கடினமாகிறது. ஏனென்றால், மானுடவியல் மாணவனாக, அதில் ஓர் அரசியல் பங்காளராக உள்ள நான், என்னையும் மற்றவர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது சாத்தியமில்லை. 

“நீர்த்துளியில் நதியையோ, 

பகுதியில் முழுமையையோ உன்னால் காண முடியாவிட்டால்,

உள்ளுணர்வு பார்வை பெறாது, குழந்தைகளின் விளையாட்டுப் பார்வையே உன்னிடம் உள்ளது.”

என்ற கவிஞர் காலிப் வார்த்தைகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

எனினும், எனது உடல் நலத்தைப் பொறுத்தவரை, நான் சிறப்பாகவே உள்ளேன். குறிப்பிடத்தக்க எந்த நோய்களும் என்னை அலைக்கழிக்கவில்லை. சிறை வாழ்க்கையின் கட்டுப்பாடுகள் சில சிறு அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும், புலம்புவதற்கு எதுவும் இல்லை.

நான் ஆர்வமாக இருக்கும் விஷயங்களைப் பற்றி பேச, என்னுடன் அதிகம் பேர் இல்லாததால் ஒருவித தனிமையை உணர்கிறேன். இது நாளடைவில் என்னைப் பாதிக்கிறது.

இப்போது நீங்கள் எதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சமீபத்தில் நீங்கள் வாசித்த புத்தகம் அல்லது பத்திரிகையில் எதை ரசித்தீர்கள்? எதற்காக ரசித்தீர்கள்?

எப்போதும் போலவே, நான் ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படித்து வருகிறேன்.

இஸ்லாமிய ஆய்வுகளில், கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய அறிஞர் ரஷீத் ஷாஸ் எழுதிய ஐந்து புத்தகங்களைப் படித்துள்ளேன். தற்போது அவரது “இத்ராக்-எ-ஸவால்-எ-உம்மத்” (2005) என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுதியைப் படித்து வருகிறேன். இதில் அவர், இஸ்லாமிய விவாதங்களின் பழமையான பிரிவினை மற்றும் சட்டவியல் தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறார். இவை பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய தோற்றம் கொண்ட வரலாற்று விவரணைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இவை புராணக் கதைகளும் புனைவுகளும் கலந்து, எளிதில் ஏமாறக்கூடிய, குழப்பமடைந்த அல்லது சில சமயங்களில் பொய்யான அறிஞர்களால் நமக்கு கொடுக்கப்பட்டவை.

ஷாஸ், இரண்டாம் நிலை வரலாற்று நூல்களையும் விவரணைகளையும் புனிதப்படுத்தும் போக்கை விமர்சிக்கிறார். வரலாற்று ஆய்வுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், அவை “நித்திய அல்லது முழுமையான உண்மைகளை” பிரதிபலிக்க முடியாது என்பதையும், முதன்மை ஆதாரமான குர்ஆனிற்கு மேலாகவோ அல்லது அதே தரத்திலோ அவற்றை வைக்க முடியாது என்பதையும் நினைவூட்டுகிறார். இந்த விவாதங்களால் குர்ஆனின் செய்தி மறைந்து, ஒரே கடவுள் நம்பிக்கையும், தனிப்பட்ட பொறுப்பு, நீதி, சமத்துவம், தெரியாதவற்றைப் பற்றிய ஆச்சரியம், வியப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் புரட்சிகரமான மத உணர்வும் மறைவதை அவர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். குறிப்பாக, பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களிடையே இது நிகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இது “புனித” மற்றும் “புனிதமற்ற” (அதாவது மதம் மற்றும் மதமற்ற) அறிவியல்களுக்கு இடையே செயற்கையான மற்றும் தவறான பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசியமான பணி இருபதாம் நூற்றாண்டின் ஜாம்பவான்களான இக்பால் போன்றவர்களால் அமைக்கப்பட்ட பாதையை முன்னெடுத்துச் செல்கிறது என்று நான் கருதுகிறேன். 

புனைகதைத் துறையில், நான் ஓர்ஹான் பாமுக்கின் “ஸ்னோ” என்ற புத்தகத்தை முடித்துவிட்டேன். தற்போது ஜான் மோர்டிமரின் “ஃபாரெவர் ரம்போல்” என்ற புத்தகத்தைப் படித்து வருகிறேன். ரம்போல் கதைகளை நான் ரசித்தேன். வழக்கறிஞரான ரம்போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்தித்த மிகவும் சுவாரசியமான புனைகதை கதாபாத்திரங்களில் ஒருவர். கவிதையில், தற்போது அக்பர் இலாஹாபாதியின் மூன்று தொகுதிகளைப் படித்து வருகிறேன்.

வரலாற்றில், நான் தற்போது வில்லியம் டால்ரிம்பிளின் “ஃப்ரம் தி ஹோலி மவுண்டன்” என்ற புத்தகத்தைப் வாசிக்கிறேன். இந்த வரலாற்று புத்தகம் 1990களில் லெவண்ட் பகுதியில் (சிரியா, லெபனான், ஜோர்டான் பகுதிகள்) வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பயணக் குறிப்பாகும்.

அறிவியலில், மேக்ஸ் ஜாம்மரின் மற்றொரு புத்தகமான “கான்செப்ட்ஸ் ஆஃப் ஸ்பேஸ்” (1993 பதிப்பு) என்ற புத்தகத்தைத் தொடங்கியுள்ளேன். இது, கடந்த மூன்று ஆண்டுகளில் நான் வாசிக்கும் அவரது நான்காவது புத்தகமாகும். இறுதியாக, ஜெர்மன் இலக்கியத்தில், கடந்த வாரம் “டெர் டோட் இன் வெனெடிக்” (வெனிஸில் மரணம்) என்ற புத்தகத்தை முடித்தேன்.

உங்கள் குடும்பத்தினருடன் உங்களால் உரையாட முடிகிறதா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? உங்களின் கடைசி உரையாடல் எது குறித்து அமைந்திருந்தது?

நீதிமன்ற உத்தரவுப்படி வாரத்திற்கு மூன்று முறை தலா ஐந்து நிமிடங்கள்,  வாரத்திற்கு ஒரு முறை 15 நிமிட வீடியோ அழைப்பு என மொத்தம் 30 நிமிடங்கள் குடும்பத்தினருடன் உரையாடுகிறேன். என் அம்மா பொறுமையாக இருக்கிறார். நான் “விரைவில்” வெளியே வருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 60களின் இறுதியில் உள்ள அவர் பெரும்பாலும் உடல்நலம் சரியில்லாமலே இருக்கிறார்.  பெரும்பாலான பெண்களைப் போலவே பொறுமையும் கஷ்டமும் நிறைந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கைது செய்யப்பட்டது ஆகியவை அவரது வாழ்க்கையை மேலும் கடினமாக்கியது. நான் வெளியே சென்று அவருடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று நம்புகிறேன்.

என்னை விட இரண்டு வயது சிறியவனான என் தம்பி இருக்கிறான். அவனுக்கு ஏப்ரலில் 35 வயது பூர்த்தியாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவன் என் அம்மாவையும் என்னையும் கவனித்து வருகிறான். அதைத் தவிர, என் கோரிக்கைகளை (புத்தகங்கள் போன்றவை), புகார்களை, சில சமயங்களில் திட்டுகளையும் அவன் கேட்டு வருகிறான். நானும் மற்றவர்களும் கேட்டுக் கொண்ட போதிலும், அவன் திருமணம் செய்ய மறுக்கிறான். நான் விடுதலையாகும் வரை (தற்காலிக ஜாமீனில் அல்லாமல்) திருமணம் செய்ய முடியாது என்கிறான். அவனது முடிவை நான் ஏற்கவில்லை, ஆனால் அவனது உணர்வை புரிந்து கொள்ள முயல்கிறேன்.

எங்கள் உரையாடல்கள் சாதாரணமானவை. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி, குறிப்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் என் நீண்டகால ஜாமீன் விசாரணை பற்றி பேசுகிறோம். உறவினர்கள் குறித்து—யார் என்ன செய்கிறார்கள், யார் இறந்தார்கள் – போன்றவற்றைப் பேசிக்கொள்வோம்.  பீகார் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள் பற்றி பேசுகிறோம். எங்கள் கிராமம் பற்றியும், நான் வளர்ந்த பாட்னாவிலுள்ள சுப்ஸிபாக் பகுதி பற்றியும் பேசுகிறோம். அங்கு என் மாமா வசிக்கிறார்.

நீங்கள் மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கிறீர்கள். மோசமான காலம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

நான் நீதிமன்றக் காவலில் ஆறாவது ஆண்டைத் தொடங்கியுள்ளேன். மோசமான காலம் முடிந்துவிட்டதா? என்று சொல்ல முடியாது. இந்த UAPA வழக்கில் என் ஜாமீனை மட்டும் நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால், ஐந்து ஆண்டுகள் ஜாமீன் பெறுவதற்கு போதுமானதாகத் தோன்றி எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடன் இருக்கலாம்.

ஆனால், முன்பு குறிப்பிட்டது போல, உண்மையான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. நான் கார்ப்பரேட் உலகில் என் வாழ்க்கையை விட்டுவிட்டு வரலாறு படிக்கவும், என் சமூகத்திற்கும் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கப் போராடவும், இந்திய அரசியல் முறையை ஜனநாயகப்படுத்தவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுவதற்காக இதைச் செய்திருப்பது உண்மையெனில்,, ஜாமீன் பெறுவது மட்டும் “மோசமான காலம் முடிந்துவிட்டது” என்று அர்த்தமாகாது. அப்படி ஒரு பகுப்பாய்வு செய்தால், பாசிசவாதிகள் நம்மை பயமுறுத்தி அடிபணிய வைத்துவிட்டார்கள் என்று ஆகிவிடும். இந்தியாவின் முஸ்லிம்கள் இந்த ஜனநாயக அமைப்பில் தங்களுக்கு உரிய பங்கைப் பெறும்போதுதான் மோசமான காலம் முடியும். இந்தப் போராட்டமும் சிறைவாசமும் தனிப்பட்ட போராட்டம் அல்ல.  நான் பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு பெரிய நிகழ்வின் ஒரு பிரதிநிதி மட்டுமே. இன்னும் நீண்ட பயணம் முன்னால் உள்ளது.

(உருது கவிஞர்) மஜாஸின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“இந்த உலகத்தைச் சீர்படுத்துவது மிகவும் கடினம்,

உன் கூந்தலின் சுருள்களை சீர்படுத்துவது போல எளிதல்ல.

என் கடினமான நாட்களில் துணையாக இருப்பவர்களே,

நானே வருத்தப்படவில்லை 

நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள்?”

உங்கள் மிகக் கடினமான தருணங்களில், நீங்கள் எதை நினைவுபடுத்துகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு என் பதில் இரண்டு பகுதிகளாக உள்ளது.

முதலாவது தனிப்பட்டது—என் தனிப்பட்ட முடிவுகளுக்கும் செயல்களுக்கும் கடவுள் முன்பு நான் பொறுப்பாளி. எனவே, கடவுளை நினைவு கூர்ந்து, என் சொந்த குறைபாடுகளை உணர்ந்து, என்னை மீண்டும் புதுப்பித்து வாழ்க்கையின் திசையைத் தேட முயற்சிக்கிறேன்.  “நிச்சயமாக, கடவுளை நினைவு கூர்வதில்தான் இதயங்கள் திருப்தி அடைகின்றன” (குர்ஆன் 13:28) என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

மற்றொரு பகுதி, (தேச) பிரிவினையிலிருந்து எங்கள் சமூகத்திற்கு

நிகழ்ந்த அநீதியுடன் தொடர்புடையது. ஒரு உதாரணம் தருகிறேன். 1950ஆம் ஆண்டு FPTP – First Past The Post – தேர்தல் முறை (அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும்) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசியல் சாசன சபையில் பல முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் கூடிய தேர்தல் முறையைக் கோரினர்.

ஹஸ்ரத் மொஹானி (உத்தர பிரதேசம்), தஜமுல் ஹுசைன் (பீகார்) மற்றும் பிறரின் அரசியல் சாசன சபையில் FPTP-க்கு எதிரான கருத்துகளைப் படித்தால், 1950இலேயே முஸ்லிம்களின் அரசியல் விலக்கம் உறுதி செய்யப்பட்டது என்பது தெரியும். 1950 முதல் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளனர். 2014க்குப் பிந்தைய நிகழ்வுகள் இதே போக்கின் தர்க்கரீதியான முன்னேற்றங்கள் மட்டுமே.

 இணையம் (இன்டர்நெட்) இல்லாத காலத்தில் இந்த ஆராய்ச்சி சாத்தியமாக இருந்தாலும், பெரிய அளவிலான விவாதம் இணையம் இல்லாமல் சாத்தியமில்லை என்பதை உணர்த்தவே FPTP உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன் . CAA எதிர்ப்பு போராட்டங்கள், இந்தச் சிறைவாசம் மற்றும் இணையம் ஆகியவை எனக்கு ஒரு மேடையை அளித்துள்ளன. இதன் மூலம் இந்தக் கருத்துகள் தெற்காசிய மொழிகளில் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளன. இணையம் இல்லாத 15 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இந்த விவாதங்கள் முஸ்லிம்களிடையே பழைய காங்கிரஸின் “மதச்சார்பின்மை” மற்றும் அது உருவாக்கிய கட்டமைப்பின் வெறுமையை உணர வைக்கும் என்று நம்புகிறேன்.

இந்த தியாகத்திற்கு மதிப்பு இருக்கிறது என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இது உடனடி பலன்களைத் தராவிட்டாலும், இறுதியில் மதச்சார்பற்ற பெரும்பான்மைவாதத்தின் செயல்முறைகளை புரிய வைக்கும். என்னைப் போன்றவர்களின் போராட்டங்கள் உண்மையான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறேன். (உருது கவிஞர்) ஜஹீர் காஷ்மீரியின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“நாங்கள் இரவின் இறுதியில் எரியும் விளக்குகள் என்பதை அறிவோம்,

எங்களுக்குப் பின் இருள் இல்லை, பகல் ஒளிதான் இருக்கிறது”.

சிறை அனுபவங்களால் நீங்கள் மாறிவிட்டதாக உணர்கிறீர்களா?

என் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சக கைதிகளுடன் வாழ்ந்து, சிறை அத்துமீறல்களை நேரடியாக பார்த்தது என்னை ஆழமாக பாதித்துள்ளது.

முதலாவதாக, குடும்பம், நண்பர்கள், புத்தகங்கள், இணையம், கவ்வாலி மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் என இதற்கு முன் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்ட விஷயங்களை சிறை வாழ்க்கை மதிக்க வைத்துள்ளது.

இரண்டாவதாக, பொதுவாக மனிதர்களை நம்புவது குறைந்துவிட்டது. ஏனெனில், சிறையில் யாரும் தங்களைப் பற்றி உண்மையை பேசுவதில்லை. இது ஒருவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறை மனித இயல்பின் மோசமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதே நேரத்தில், இது பல்வேறு அநீதிகள் மற்றும் புறக்கணிப்புகளை நோக்கி என்னை மிகவும் உணர்வுள்ளவனாக மாற்றியுள்ளது.

இங்கு பெரும்பாலும் ஏழை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளுடனான என் தொடர்புகள் என் புரிதலை வளப்படுத்தியுள்ளன. அஸ்ஸாம், டெல்லி, ஹரியானா என பல்வேறு சிறைகளில் மக்களுடன் நேரம் செலவிட்டதால், என் பார்வை விரிவடைந்துள்ளது. நான் எழுப்ப விரும்பும் பிரச்சினைகளை மிகவும் விரிவாக வெளிப்படுத்துவதற்கு நான் தயாராகிவிட்டேன்.

நேரத்தின் மதிப்பை சரியான கண்ணோட்டத்திற்கு கொண்டு வந்தது மற்றொரு மாற்றமாகும். இது சற்று எதிர்மறையாகத் தோன்றலாம், ஏனெனில் சிறையில் நிறைய ஓய்வு நேரம் உள்ளது. முதலாவதாக, குடும்பத்துடனான ஐந்து நிமிட அழைப்புகள் ஐந்து நிமிடங்களின் மதிப்பை உணர வைக்கின்றன. இரண்டாவதாக, ஐந்து ஆண்டுகள் சிறையில் செலவழித்தது சில கேள்விகளை எழுப்புகிறது— என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியாகிய இந்த ஐந்து ஆண்டுகளில், நான் என்ன சாதித்தேன்? நான் என்ன படித்து கற்றுக்கொண்டேன்? நான் எவ்வளவு திறமையாக இருந்தேன்? வெளியில் இருந்தபோது இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திறமையாக இருந்தேனா?

இந்தக் கேள்விகள் நேரத்தை நோக்கிய என் அணுகுமுறையில் நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இறுதியாக, சட்டங்கள், சட்ட நடைமுறைகள் மற்றும் அவை கைதிகள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய என் புரிதல் பெருமளவு விரிவடைந்துள்ளது. தீர்ப்புகள், உத்தரவுகள், மனுக்கள், சட்டங்கள், குற்றப்பத்திரிகைகள் என பல்லாயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட சட்ட ஆவணங்களைப் படித்துள்ளேன். கணினி அறிவியலில் என் பயிற்சி சட்டத்தின் வழிமுறை, அதன் தர்க்கரீதியான மற்றும் தொடரியல் பக்கங்களை புரிந்து கொள்ள உதவியது.  அதே சமயம் வரலாற்று ஆய்வுகளில் என் கற்றல் அதன் சொற்பொருளை ஆராய்ந்து பிரித்து அறிய உதவியது. நான் வெளியே வந்த பிறகு இதைப் பற்றி இன்னும் நிறைய சொல்வேன்.

சிறையில் நண்பர்களை உருவாக்கியிருக்கிறீர்களா? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பல ஆண்டுகளில் பலருடன் அறிமுகமாக்கியிருக்கிறேன். அவர்களில் சிலரை நண்பர்கள் என்றும் அழைக்கலாம். ஆனால் சிறை ஒரு நிலையற்ற இடம். மக்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள், வேறு வார்டுகளுக்கு அல்லது சிறைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். ஒரே இரவில் உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த ஒருவரை இழந்து விடுவீர்கள்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இங்கு யாரையும் நம்பக் கூடாது என்பதைத்தான் முதலில் கற்றுக் கொள்கிறோம்.  ஏனெனில் கிட்டத்தட்ட அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்வார்கள். பலர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக்கூட உங்களிடம் சொல்ல மாட்டார்கள். இது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது. எனவே, ஒருவர் தனது குற்றம்/நிரபராதம் அல்லது நோக்கங்களைப் பற்றி நேர்மையாக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துவது கடினம். இப்படிப்பட்ட சூழலில் நட்பு என்பது அரிதாகவே உருவாகும்.

இருப்பினும், சிலர் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களுடன் எனக்கு அர்த்தமுள்ள உரையாடல்கள் நடக்கின்றன. சூழ்நிலைகளுக்கு பலியான சிலரும் இங்கு உள்ளனர். அது அவர்களை முழுமையாக நிரபராதிகளாக்காவிட்டாலும், அவர்கள் மீது அனுதாபம் கொண்டு அவர்களின்  நிலையைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

 நூற்றுக்கணக்கான கைதிகள் தங்கள் குற்றப்பத்திரிகைகள் போன்றவற்றுடன் என்னிடம் வருகிறார்கள். நான் தினமும் குற்றப்பத்திரிகைகள் மற்றும் தீர்ப்புகளைப் படித்து, கைதிகளுடன் அவற்றைப் பற்றி விவாதிக்கிறேன். இது இந்த வழக்குகள் மற்றும் கைதிகளைப் பற்றிய பல விவரங்களை எனக்கு தந்துள்ளது. அவர்களின் நம்பிக்கையை மதித்து நான் மௌனமாக இருக்கிறேன்.

இங்கு எப்போதும் சில அரசியல் கைதிகளும் இருக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த உரையாடல்களை நான் மிகவும் ரசிக்கிறேன்.

என் அறையில் என்னுடன் மூன்று வயது ஆண் பூனை சோட்டு மற்றும் இரண்டு வயது லிசா என இரண்டு பூனைகள் வாழ்கின்றன.  லிசாவின் இரட்டையர் மேக்ஸ் கடந்த வாரம் உடல்நலம் குன்றியதால் ஒரு குடும்பத்திடம் வெளியே அனுப்பப்பட்டது. மூன்று பூனைகளும் பிறந்தபோது அவற்றின் தாய் என்னிடம் கொண்டு வந்தது. அதிலிருந்து அவை என்னுடன் வாழ்ந்தன. இப்போது இரண்டு என்னுடன் உள்ளன. சோட்டு இங்கு என் சிறந்த நண்பன். நான் விடுதலை ஆனால் அவற்றை என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

மற்றபடி, என் புத்தகங்களுடன் நான் கழிக்கும் ஒரு தனிமையான வாழ்க்கை.

உங்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறீர்கள்?

நான் தினமும் 4-5 மணி நேரம் அல்லது சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் வாசிக்கிறேன். எனக்கு ஐந்து ஆங்கில பத்திரிகைகள், இரண்டு உருது பத்திரிகைகள், ஒரு இந்தி பத்திரிகை மற்றும் ஒரு மாதாந்திர வங்கமொழி பத்திரிகை கிடைக்கின்றன. இவற்றைப் படிப்பதற்கு தினமும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிடுகிறேன். மீதி நேரம் புத்தகங்கள் வாசிக்கிறேன்.

நான் தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் டிவி பார்க்கிறேன், குறிப்பாக செய்திகள், சில ஆங்கில டிவி தொடர்கள் (சமீபத்தில் ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் பார்த்து வருகிறேன்) மற்றும் திரைப்படங்கள் பார்க்கிறேன். டிடி உருது சேனலில் கவ்வாலி மற்றும் கஸல் நிகழ்ச்சிகள் பார்ப்பேன். அதுமட்டுமல்லாமல், டிவியில் ரேடியோவும் உள்ளது. நான் படிக்கும்போது, சிந்திக்கும்போது அல்லது அறையில் நடக்கும்போது பின்னணியில் இசையைக் கேட்பது எனக்கு பிடிக்கும். குறிப்பாக கஸல்கள், பழைய பாலிவுட் பாடல்கள் மற்றும் பழைய ராக் இசை எனக்கு பிடிக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரேடியோவில் நுஸ்ரத் [ஃபதே அலி கான்] பாடல்கள் வருவதில்லை.

வார்டில் ஒரு பள்ளிவாசல் உள்ளது, தினமும் குறைந்தது இரண்டு முறை—அஸ்ர் மற்றும் மக்ரிப் (மாலை மற்றும் முன் இரவு தொழுகைகள்)—கூட்டு தொழுகைகள் நடக்கின்றன. நான் தினமும் சிறிது நேரம் பள்ளிவாசலில் செலவிடுகிறேன். மீதமுள்ள தொழுகைகளை அறையிலேயே தொழுகிறேன். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, நான் ஒரு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடுகிறேன் அல்லது வார்டில் நடக்கிறேன். செஸ் தவறாமல் விளையாடுகிறேன்.

நீங்கள் வெளியே வந்த பிறகு எதை மிகவும் எதிர்பார்க்கிறீர்கள்?

இது பதிலளிக்க கடினமான கேள்வி. தனிப்பட்ட முறையில், நான் என் அம்மா மற்றும் தம்பியுடன் நேரம் செலவிட எதிர்பார்க்கிறேன்.

கணினி அறிவியல் மாணவனாக, AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றி உற்சாகமாக உள்ளேன். அவற்றைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். நவீன வரலாற்று மாணவனாக, AI மூலம் வரலாற்றை வேகமாக எழுத முடியும் என்பதை உணர்கிறேன். ஏனெனில் மிகப்பெரிய அளவிலான முதன்மை தரவுகள் டிஜிட்டல் வடிவத்தில் உள்ளன அல்லது எளிதாக டிஜிட்டல் மயமாக்கப்படலாம். 

நான் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு இறுதி வடிவம் பெற்று வந்த ‘பசு வதை மற்றும் சமூக மோதல்’ பற்றிய என் முனைவர் பட்ட ஆய்வறிக்கையை முடிப்பதையும் எதிர்பார்க்கிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, கற்றல் மற்றும் போராட்டங்களால் நிறைந்த ஒரு வாழ்க்கையை எதிர்பார்க்கிறேன். அது இன்ஷா அல்லாஹ் மிகவும் பலனளிக்கும். மஜாஸின் அழகிய வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“இன்னும் பெரிய புயல்கள் என் இதயத்திலிருந்து எழும்,

இப்போது நான் காதலின் கனவுகளை இன்னும் அதிகமாகக் காண்பேன்”.

Source: ‘A Lonely Existence, With My Books:’ Sharjeel Imam Writes Back from Prison, www.thequint.com

https://www.thequint.com/news/politics/sharjeel-imam-exclusive-interview-prison-muslims-delhi-violence-uapa

மொழிபெயர்ப்பு: ரியாஸ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW