தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26 – தோழர் சமந்தா

24 Mar 2025

நம்ம நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செஞ்சுருந்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையோட நிறை குறைகளை இப்போ பாப்போம். 2024-25ல தமிழ்நாட்டோட வருவாய் வரவினங்கள் 2,93,906 கோடி ரூபாயா இருந்துச்சு. அதை விட 12.8% அதிகமா 2025-26ல 3,31,569 கோடி ரூபாயா உயரும்னு மதிப்பிட்டிருக்காங்க. 2024-25ல 3,40,374 கோடி ரூபாயா இருந்த வருவாய் செலவினங்கள் அதை விட 9.6% கூடுதலா 2025-26ல  3,73,204 கோடி ரூபாயா உயர்த்தப்படும்னு அறிவிச்சிருக்காங்க. 2024-25ல 46766 கோடி ரூபாயா இருந்த மூலதனங்களுக்கான செலவு அதை விட 22% கூடுதலா 2025-26ல 57,231 கோடி ரூபாயா ஒதுக்கீடு செய்யப்படும்னு அறிவிச்சிருக்காங்க. கல்விக்கு போன நிதியாண்டுல 52,254 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வோம்னு அறிவிச்சிருந்தாங்க, இந்த நிதியாண்டுல அதை 55,261 கோடி ரூபாயா உயர்த்தியிருக்காங்க. நகர்ப்புற வளர்ச்சிக்கு போன நிதியாண்டுல 41,733 கோடி ரூபாய் ஒதுக்குறதா சொல்லியிருந்தாங்க இப்போ அதை 34,396 கோடி ரூபாயா குறைச்சுட்டாங்க. எரிசக்தித்துறைக்கு போன நிதியாண்டுல 22,310 கோடி ரூபாய் ஒதுக்குவோம்னு சொல்லியிருந்தாங்க, இந்த நிதியாண்டுல அதை 21,178 கோடி ரூபாயா கொறைச்சுட்டாங்க. தொழில்துறை, சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு போன நிதியாண்டுல 4,481 கோடி ரூபாய் ஒதுக்குவோம்னு அறிவிச்சிருந்தாங்க, இப்போ அதை 5,833 கோடி ரூபாயா உயர்த்தியிருக்காங்க. ஊரக வளர்ச்சித்துறைக்கு போன நிதியாண்டுல 27,922 கோடி ரூபாய் ஒதுக்கப்போறதா சொன்னாங்க இப்போ அதை 29,465 கோடி ரூபாயா உயர்த்தியிருக்காங்க. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்கு போன நிதியாண்டுல 3,706 கோடி ரூபாய் ஒதுக்கப்போறதா சொல்லியிருந்தாங்க இப்போ அதை 3924கோடி ரூபாயா உயர்த்தியிருக்காங்க.

நகர்ப்புறத்துல இருக்குற அரசு உதவி பெறும் பள்ளிகளோட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்போறோம்னு அறிவிச்சிருக்கது வரவேற்கத்தக்கது. வரும் 5 ஆண்டுகள்ல 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்குறதுக்கான திட்டத்தை செயல்படுத்தப்போறதா அறிவிச்சிருக்காங்க. பெண்கள் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுமாம். இத்திட்டத்துக்கான மானிய உதவிக்காக இந்த ஆண்டில் ரூ.225 கோடி ஒதுக்கப்படும்னு அறிவிச்சிருக்காங்க. தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் என்ற 5 ஆண்டு திட்டம் ரூ.500 கோடி மதிப்புல செயல்படுத்தப்போவதாகவும், ஓசூரை ஒட்டி உலகத் தரம் வாய்ந்த அறிவுசார் பெருவழித்தடத்தை உருவாக்குவதாகவும் அறிவிச்சிருக்காங்க.  20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூர், கடலூரில் ரூ.250 கோடியில் காலணி தொழில் பூங்காக்கள் உருவாக்கப்போறோம்னு சொல்லியிருக்காங்க. சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைஞ்சு நவீன முறையில் சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்போறோம்னு அறிவிச்சிருக்காங்க.  இதையெல்லாம் வரவேற்கலாம்.

சென்னைய சுத்தியே இன்னொரு உலகத்தரமான நகரத்தை உருவாக்கப்போறோம்னு அறிவிச்சிருக்காங்க. இதை தமிழ்நாட்டோட மத்த பகுதிகள்ல உருவாக்குனா நல்லாருக்கும். தமிழ்நாட்டுல மாவட்டங்களிடையே தனி நபர் வருவாய்ல ரொம்ப ஏற்றத்தாழ்வுகள் காணப்படுது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை போன்ற வட மாவட்டங்களோட தனி நபர் வருவாய் அதிகமா இருக்கு, ஆனா திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற கிழக்கு மாவட்டங்களோட தனிநபர் வருவாய் குறைவா இருக்கு, இந்த ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளனும்னு பொருளாதார ஆய்வறிக்கை வழிகாட்டியிருந்துச்சு, ஆனால் அதற்கேத்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளல, தொழில்வளர்ச்சில பின்தங்கிய மாவட்டங்கள்ல தொழில்மையமாக்கத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இல்லாதது குறைபாடா இருக்கு. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாத்துவோம்னு வாக்கு கொடுத்தாங்க, ஆனா அதை நிறைவேத்தல, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்போம்னு சொல்லியிருந்தாங்க. அதையும் செய்யல. காலியா இருக்குற 3.5 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்னு சொன்னாங்க. அதுல இப்போ  40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துருக்காங்களாம். இந்த நிதி ஆண்டுல மேலும் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லியிருக்காங்க. புதுசா 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்னு சொல்லியிருந்தாங்க, அதையும் நிறைவேத்தல. பெட்ரோல் விலைய லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம்னு சொன்னாங்க, அதையும் செய்யலையே. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்போறோம்னு சொன்னாங்க அட அதைக்கூட செய்யலையே. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைஞ்சுருக்காங்க. தமிழ்நாட்டுல பத்திரப்பதிவுத்துறை முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்த்திட்டாங்க. முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்காம பெண்கள் பேருல பதிவு செஞ்சா 1% கட்டணம் குறைக்கப்படும்னு அறிவிக்கிறது ஏமாத்து வேலைனு ஒரே பேச்சா கெடக்கு. அட இந்த பெட்ரோல், டீசல் விலையைக் கூட குறைக்காம ஏமாத்திட்டாங்க பாருங்க, அதாங்க ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கு. அதே மாதிரி விவசாய பட்ஜெட்லயும் சாகுபடிப் பரப்பை அதிகரிக்குறதுக்கான எந்த திட்டமும் இல்ல. குறைந்தபட்ச ஆதரவு விலை பத்துன எந்த அறிவிப்பும் இடம்பெறல. அடுத்த வருசம் தேர்தலைக் கணக்கு பண்ணியாவது இந்த முறை வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேத்துவாங்கன்னு எதிர்பாக்கலாமா? பாப்போம் திமுக அரசு என்ன தான் பண்ணப் போறாங்கன்னு பொருத்திருந்து பாப்போம். 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW