ட்ரம்பின் நாடு கடத்தல்கள் – எளியோரின் மீது பாயும் அதிகாரம் – தோழர் மோ. சதீஷ்

சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் சரியான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்கின்றனர். நமது ஊரில் வட இந்திய தொழிலாளர்கள் எப்படி கட்டுமானம், உணவக துறைகளில் வேலை செய்கிறார்களோ, அதே போல் அந்நாட்டில் இந்த ஆவணங்களற்ற தொழிலாளர்கள் முறைசாரா தொழில்துறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். கட்டுமானத்துறை, உணவகங்கள், உணவு பதப்படுத்துதல் (food processing), உற்பத்தி மற்றும் சேவை துறைகள், துப்புரவு (landscaping) ஆகிய துறைகளில் இவர்கள் ஈடுபட்ட போதிலும் விவசாயத்துறையில் பெரும்பான்மையானோர் இவர்களாகவே இருக்கின்றனர். அமேரிக்க விவசாயத் துறை 86 சதவீதம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியுள்ள நிலையில் இதில் 45 சதவிதத்தினர் ஆவணங்களற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய தொழிலாளர் வர்க்கத்தைத்தான் சட்டவிரோத குடியேறிகள் என்று அடையாளப்படுத்தி கடந்த சனவரி மாதம் பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனிதத்தன்மையற்ற முறையில் அவர்களது பூர்வீக நாட்டிற்கு விரட்டியடித்து வருகிறார். இராணுவ விமானங்கள் மூலம், சங்கிலியால் ஒருவர் பின் ஒருவர் கட்டப்பட்டு அவர்களை அனுப்பி வைத்த காணொளிகளை நாமும் பார்த்தோம்.
பதற்றமான சூழ்நிலை
அமெரிக்க அரசின் வரி வருவாயில் ஆவனமற்ற குடியேறிகளின் பங்கும் இருக்கின்றபோதிலும், இயற்கை குடியுரிமை (Natural citizenship) பெற்றவர்கள் மற்றும் சரியான ஆவணங்களைக் கொண்டு குடியேறிய மக்களைக் (legal immigrants) காட்டிலும் இந்த வர்க்கத்தினர் பெரிய அளவில் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். மேற்சொன்ன மற்ற இரு பிரிவினர்களை காட்டிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறைவே. தொழிலாளர்கள் நல சட்டங்களால் கிடைக்கப்பெறும் உரிமைகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற உரிமைகள் இவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனினும் தனது சொந்த நாட்டில் கிடைக்கப் பெறும் கூலியை ஒப்பிடுகையில் அங்கு அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதால் இந்த இன்னல்களை சமாளித்துக்கொண்டு அங்கே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களது ஆவணங்களற்ற சூழ்நிலை காரணமாக அமெரிக்க அதிகாரிகளிடம் அணுகுவதற்கு அச்சப்படும் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் மாந்தக் கடத்தகை (human trafficking), பாலியல் துன்புறுத்தல், அடிமைப்பணி போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று அந்நாட்டு குடியேற்ற துறையின் வலைத்தளத்திலேயே தெரிவித்து இருக்கின்றனர்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறைக்கு (Immigration and Customs Enforcement – ICE) ஒதுக்கி இந்த நாடு கடத்தல் (Deportation) நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அவ்வரசு. பதவியேற்ற முதல் மாதத்தில் மட்டும் 37,000க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியுள்ள டிரம்ப் அரசு, ஒரு நாளைக்கு 800 முதல் 1000 நபர்கள் வரை கைது செய்து வருகிறது (முந்தைய அதிபர் ஜோ பிடென் ஆட்சிக்கட்டத்தில் இது 312ஆக இருந்தது). இந்த கைது வேகம் போதவில்லை என்று கருதி அதனை அதிகரிக்க கடும்போக்காளர்களை அதிகாரிகளாக நியமித்தும், அமெரிக்க காங்கிரஸ் மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய ஏதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட வேட்டையாடுதலால், வீட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு சென்றாலோ அல்லது எந்நேரமும் அதிகாரிகள் கதவை தட்டி தங்களை கைது செய்யலாம் என்ற பதற்றமான சூழ்நிலையே அங்கிருக்கும் ஆவனமற்ற குடியேறிகளுக்கு நிலவுகிறது. இந்த நாடுகடத்தல்கள் தொடங்கிய உடனேயே அமெரிக்காவில் இதற்கு எதிராக அலபாமா, கலிபோர்னியா, கொலராடோ, ஜார்ஜியா, இலினொய்ஸ் போன்ற பல நகரங்களில் அமெரிக்க மக்களே அறப்போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்த ஒட்டுமொத்த நாடுகடத்தல் நடவடிக்கையை பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் எதிர்ப்பாளர்களையும் நாடுகடத்த முயற்சிக்கிறார் டொனால்டு டிரம்ப். கொலம்பியா பல்கலைக்கழக மாணவரும், அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை (green card) பெற்றவருமான மஹ்மூத் காலில் என்பவரை அவருடைய பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளுக்காக, அவருடைய மாணவ நுழைவுச்சான்றையும் (student visa), நிரந்தர குடியுரிமையையும் திரும்பப்பெறுகிறோம் என்று அறிவித்து, அவரை கைது செய்து நாடுகடத்த முயற்சித்தது டிரம்ப் அரசு. இந்த நடவடிக்கைக்கு நியூ யார்க் நகர நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சென்ற வருடம் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அமெரிக்காவின் இசுரேல் ஆதரவு நிலைப்பாட்டையும் எதிர்ப்பதில் அமெரிக்க நாட்டில் இந்த கொலம்பியா பல்கலைக்கழகம் மையப் புள்ளியாக விளங்கியிருக்கிறது, அதன் முதன்மை செயற்பாட்டாளராக மஹ்மூத் காலில் இருந்துள்ளார். இந்த போராட்டச் செயல்பாடுகளை தடுப்பதற்கு பல்கலைக்கழகத்திற்கு சேர வேண்டிய நிதியை முடக்கியும், காலிலை நாடுகடத்த முயற்சித்தும் வருகிறது டிரம்ப் அரசு.
கூடுதல் தடுப்பு மையங்கள். கூடுதல் அதிகாரிகள்
மிகுந்த நிதிச்சுமையை ஏற்படுத்தியிருக்கும் இந்த தடாலடி நாடுகடத்தல் நடவடிக்கை அவ்வரசுக்கு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்பவர்களை தடுப்பு காவலில் வைக்க குடியுரிமை துறையின் (ICE) கட்டுப்பாட்டில் இருக்கும் (சுமார் நாற்பதாயிரம் படுக்கைகள் கொண்ட) தடுப்பு மையங்கள் தனது கொள்ளளவுகளை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு துறை (department of defense), சிறைகளின் அமைவனம் (bureau of prisons) ஆகிய இதர துறைகளின் ஒருங்கிணைப்போடு கூடுதல் தடுப்புக்காவல்களை அமைக்க முயற்சிக்கிறது. ‘எல்லை ஜார்’ (Border Czar) என்று பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படும் கடும்போக்கு அதிகாரியான டாம் ஹோமன், இந்த நாடுகடத்தலை இன்னும் தீர்க்கத்துடன் செயல்படுத்த கூடுதலாக ஒரு லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கியூபாவில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான சித்திரவதைக்கு பெயர்போன குவாண்டனமோ விரிகுடா மையத்திலும் முகாம்கள் அமைத்து தடுப்புக் காவலுக்கு பயன்படுத்துவோம் என்று ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். சுமார் 20,000 பணியாளர்கள் நிறைந்த குடியுரிமைத் துறையின் பலம் இந்த வேட்டைக்கு போதாமலிருப்பதால், இதர சட்ட ஒழுங்கு துறை பணியாளர்கள் – உள்நாட்டுப் பாதுகாப்பு, மார்ஷல்கள், போதைமருந்து தடுப்பு, மது, புகையிலை மற்றும் வெடிமருந்து அமைவனம், ஒன்றிய சிறைகளின் அமைவனம் போன்ற துறைகளின் அதிகாரிகளும் கைதுகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒருபுறம் இந்த கூடுதல் மாற்று அதிகாரிகளுக்கு எந்த அளவு குடியுரிமை சட்டங்கள் தெரிந்துவிடப்போகிறது என்ற சிக்கல் மற்றொருபுறம் இவர்களை இதில் திசை திருப்பியிருக்கும் சமயத்தில் அத்துறையினர் பாதுகாக்க வேண்டியவற்றில் குற்றங்கள் அதிகரிக்கக்கூடிய நிலையும் இருக்கிறது.
உலக நாடுகள் வினையாற்றிய விதம்
இந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் (சுமார் 37% / நாற்பது லட்சம் மக்கள்). அமெரிக்காவுக்கு கிழக்கு திசையில் அமைத்திருக்கும் இந்நாடு சுமார் மூவாயிரம் கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளது. பதவியேற்ற நாளன்றே இந்த எல்லையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி 1500 படை வீரர்களை அங்கு பணியமர்த்தினார் டிரம்ப். இந்த எல்லையை சுவர்கள் எழுப்பி மெக்சிக்கோவினரின் குடியேற்றத்தை தடுக்க போகிறோம் என்று சென்ற ஆட்சியிலே டிரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போதைய ஆட்சியில் அந்த பணிகளை முடிப்போம் என்று அறிவித்துத்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் அமெரிக்க நாடுகடத்தல் விமானத்தை தரையிறங்க அனுமதிக்காமல் சிற்சில போக்குகளைக் காட்டினாலும், ‘மெக்ஸிகோ உங்களை அரவணைக்கிறது’ என்கிற திட்டத்தின் கீழ் தன்னாட்டை சார்ந்த மக்களை ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
எல்-சால்வடார், ஹாண்டுராஸ் மற்றும் காண்டமேலா போன்ற மத்திய அமெரிக்க கண்டத்து நாடுகளைச் சார்ந்த சட்டவிரோத குடியேறி மக்கள் கூட்டாக 18%, சுமார் இருபது லட்சம் மக்கள் ஆவர். உலக பொருளாதாரத்திலும் புவிசார் அரசியலிலும் மிகச் சிறிய நாடுகள் இவை. எல்-சால்வடோரும் காண்டமெலாவும் உடனடியாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இணங்கி தன்னாட்டு பிரஜைகள் மட்டுமின்றி ஏனைய நாட்டவரையும்கூட ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிவிட்டன. ஆனால் ஹாண்டுராஸ் இதனை எதிர்த்தது. “எங்களது சகோதரர்களை இப்படி விரோதத்துடன் குண்டுக்கட்டாக விரட்டி அடித்தால், இதுவரை அமெரிக்காவுடன் கொண்டிருந்த எங்களுடைய ஒத்துழைப்பு நிலைபாட்டினை, முக்கியமாக இராணுவரீதியிலான ஒத்துத்துழைப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும்” என்று அந்நாட்டு அதிபர் சையோமரா காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார். பலகாலமாக அமெரிக்கா தங்களது நாட்டிற்கு ஆதரவு வழங்கி வந்திருந்தாலும் இப்போது கொடுப்பதுபோல நெருக்கடி கொடுத்துவருமாயின் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவியினை நாட வேண்டி வரும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பத்திரிகைகளில் தெரிவித்திருந்தார்.
கொலம்பியா எதிர்த்த விதம்
கொலம்பியா நாடு அமெரிக்காவை எதிர்த்தது பேசுபொருளாகியது. சங்கிலி பிணைப்புடன் குடியேறிகளை பிரேசில் விமான நிலையத்தில் தரை இறக்கிய காணொளியை அந்நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ X தளத்தில் பதிவிட்டு, “வேண்டாம் என்று கூறும் நாட்டில் குடியேறிகள் தங்குவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்; ஆனால் அந்நாடு அவர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என்றால் அவர்களுடைய கண்ணியம் குறையாமலும் நம் நாட்டிற்கு மரியாதை தரும் விதமாகவும் இருக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார். அதே சமயம் அமெரிக்காவின் இரண்டு நாடுகடத்தல் இராணுவ விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதி மறுத்தார். விசா கட்டுப்பாடுகள், உடனடியாக விசாக்களை திரும்பப் பெறுதல், பயணக் கட்டுப்பாடுகள் விதிப்போம் என்ற டிரம்பின் மிரட்டல்களுக்கு, “உங்களது தடைகள் என்னை பயங்கொள்ளச் செய்யாது. ஏனெனில், கொலம்பியா என்னும் நாடு அழாகான நாடு மட்டும் அல்ல, இவ்வுலகத்தின் இதயம் இதுவாகும்” என்றும், “கொலம்பிய குடியேறிகளை அமெரிக்கா குற்றவாளிகள் போல் நடத்தமுடியாது. கொலம்பியாவிலும் 15,660 அமெரிக்கர்கள் முறையின்றி தங்கியிருக்கின்றனர்” என்றும் X தளத்தில் பெட்ரோ பதிவிட்டிருந்தார். இந்த போட்டாபோட்டி பதிவுகள் சில நாட்கள் சென்ற பின்னர், கொலம்பியாவின் சரக்குகளுக்கு 25% வரிவிதிப்பும், பின்னர் 50 சதவீதமாக அது உயர்த்தப்படும் என்று அறிவித்து தன்னுடைய வழக்கமான ரவுடித்தனத்தை வெளிக்காட்டிதான் கொலம்பியாவை அடிபணியவைத்தது அமெரிக்கா. வர்த்தகத்தில் அமெரிக்காவை முதன்மையாக நம்பியிருக்கும் தென்னமெரிக்க நாடான கொலம்பியா சுமார் இரண்டுலட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகளாக அமெரிக்காவில் கொண்டுள்ளது. பிரேசில், வெனிசுவெலா போன்ற நாடுகளும் குடியேறிகளை நாடுகடத்திய விதத்தை கேள்வி எழுப்பியது. பிரேசில் இது ‘மனிததன்மையற்ற முறை’ என்றது.
கழுதை வழி (Donkey Route)
2022 பியூ(PEW) ஆய்வின்படி இந்திய நாட்டை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் மட்டும் சுமார் ஏழேகால் லட்சம் பேர், 6.25 சதவீதம். இதில் பெரும்பாலானோர் நல்ல வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து மோசடியான முகவர்களிடம் Iலட்சங்கள் முதல் கோடி ரூபாய் வரை பணம் ஏமாந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளனர். இப்படிப்பட்ட சட்டவிரோத முகவர்கள் இது வரை 3024 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தி இந்து கட்டுரை தெரிவிக்கிறது. இவர்களில்ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள் பெரும்பான்மை. ‘டாங்கி வழி’ (கழுதை வழி) என்று சொல்லப்படும் கடுமையான அபாயகரமான வழித்தடம் மூலம் நாங்கள் அமெரிக்கா சென்றடைந்தோம் என்று அங்கிருந்து சமீபத்தில் திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர். இங்கிருந்து தென்னமெரிக்கா நாடுகளுக்கு எளிதாக சென்றடைந்து பின்னர் அடர்ந்த காடுகள், உறைபனிகள், முகமூடி கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், பாம்புக்கடி, காயங்கள், பசி என அNAIத்தையும் கடந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவின் தெற்கு எல்லை மூலம் அவர்கள் உள்நுழைந்திருக்கிறார்கள். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலோனோர் பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இப்படி திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தங்களது வீடு நிலம் ஆகியவற்றை அடமானம் வைத்து, பல இலட்சம் பணத்தை முகவர்களிடம் கொடுத்து, அதனை சீக்கிரம் மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்று இப்போது அதே கடன் சுமையினை சுமந்தவாறு திருப்பியுள்ளனர். நாடு திரும்பியுள்ள குருப்ரீத் சிங்கின் பேட்டி அவர்கள் நடத்தப்பட்ட விதத்தை தெளிவாக விளக்குகிறது, “சுமார் நாற்பது மணி நேரம் நாங்கள் கை விலங்குகளாலும், இடுப்பில் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருந்தோம். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எழுந்து நிற்பதற்கு அனுமதி கிடையாது. கழிவறை பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு பக்க கைவிலங்கினை மட்டும் கழற்றி விடுவார்கள்” என்று பிபிசி பேட்டியில் அவர் தெரிவித்தார். தாய், மனைவி, ஒன்றரை வருட குழந்தையுடன் வாழும் குருப்ரீத், “வேறுவழியில்லாமல்தான் இந்தியாவை விட்டு செல்கிறோம். ஒரு முப்பதாயிரம் வருமானம் ஈட்டும்விதம் வேலை கிடைத்து குடும்பத்தை பராமரிக்கும் வழி இருந்திருந்தால் இங்கிருந்து வெளியேறும் எண்ணம் வந்திருக்காது. தாள்களில் பொருளாதாரத்தைப் பற்றி உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உண்மை என்ன என்பது களத்தில் இறங்கி பார்த்தல் தான் தெரியும். பணிபுரியவோ அல்லது தொழில் தொடங்கவோ இங்கு எந்த வாய்ப்பும் கிடைக்கப்பெறுவதில்லை” என்கிறார் குருப்ரீத். 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் அவருடைய சரக்கு வண்டி தொழிலும் முடங்கியது. பின்னர் முயற்சி செய்த லாஜிஸ்டிக்ஸ் தொழில்களும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முடங்கிப் போயிற்று. கனடா, இங்கிலாந்து விசாக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு, நிலம் விற்ற பணம், உறவினர்களிடம் பெற்ற கடன் என்று சுமார் நாற்பது லட்சம் ரூபாய் திரட்டி முகவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் ‘கழுதை வழித்தடம்’ மூலம் சுமார் ஐந்து மாதங்கள் (28/08/2024 – 15/01/2025) மற்றும் இருபத்தேழு ஊர்கள் வழியாக பயணம் செய்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார். சென்ற மூன்றே வாரங்களில் இராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டு இப்போது அவருடைய சொந்த ஊரான பஞ்சாப் சுல்தான்பூர் லோதியில், கடன்களைத் திருப்பி செலுத்தவும், குடும்பத்தைப் பராமரிக்கவும் வேலை தேடி முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்று அந்த பிபிசி கட்டுரை முடிவடைகிறது.
இந்தியாவின் எதிர்வினை?
இந்தியா எந்தவித கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. மாறாக இந்திய வெளியுறவுத்துறை, பிரதமர் என அனைவரும் இதனை மூடி மறைத்தும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் பேசி வந்திருக்கின்றனர். டிரம்பின் நாடுகடத்தல் அறிவிப்பு வந்தபோது, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், ரந்திர் ஜெய்ஸ்வால், “சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள், ஏனெனில் அது திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புகொண்டது. ஏதேனும் நாடுகளில் இந்திய நாட்டவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அடையாளங்களை சரிபார்த்த பின்னர் நாங்கள் திரும்ப ஏற்றுக்கொள்வோம்” என்றார். நாடு திரும்பியவர்கள் வந்தடைந்த காணொளிகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கமிட்டு கடும் அமளியை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கைவிலங்கிட்டு சங்கலிகளில் கட்டி இழுத்து வந்ததை, “நிலையான இயக்க முறைமை” (Standard operating procedure) என்றார். “இந்த செயல்பாடு புதிதல்ல. எப்பொழுதும் நடப்பது தான்” என்று மழுப்பினார். இதுவெல்லாம் நடந்து முடிந்து திருவாளர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று தனது உற்ற நண்பர் என்று மார்தட்டி சொல்லிக்கொள்ளும் டிரம்பை சந்தித்த போதும் இது பற்றி எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பில் இதை பற்றி கேட்டபோது, “இது உலகிற்கே பொருந்தும், சட்டவிரோதமாக நுழையும் யாவரும் அங்கே தங்குவதற்கு உரிமை இல்லை” என்று உலக நியாயத்தை பேசிவிட்டு வந்தார்.
பெரும்பான்மைவாதம் – மதம் மற்றும் இனம்
நிறவாத சட்டங்கள் அமெரிக்காவிற்கு புதிதல்ல. 1965 ஆம் ஆண்டு வரை பெருவாரியான கறுப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்ததில்லை. கலாச்சாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகள் என்று மேற்கு உலகால் கட்டமைக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகள்கூட வரலாற்றில் ஒரு பெண்ணை பிரதமராக அல்லது அதிபராக ஏற்றுக்கொண்ட போதும் உயரிய கலாச்சாரம் என்று தற்பெருமைகொள்ளும் அமெரிக்காவால் இன்று வரை ஒரு பெண், அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் நிலைமையை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆண் பாலின + வெள்ளை இன ஆதிக்கம் என்பது அந்நாட்டின் நெடுங்கால கலாச்சார தொடர்ச்சி. இதனுடைய முழுவீச்சின் பிரதிநிதி தான் டொனால்டு டிரம்ப் என்று சொன்னால் அது மிகையாகாது. டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் நடந்த மிக மோசமான பெட்ரோமேக் விமான விபத்தை, ‘பன்முகத்தன்மை என்ற பெயரில் திறமையற்ற பணியாளர்களை பிடென் அரசு நியமித்ததுதான் விபத்துக்குக் காரணம்’ என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் பேசினார். வெள்ளையினத்தவர்கள் முதன்மையானவர்கள் என்பது அந்த வார்த்தைகள் கூறும் நேரடி கருத்து. ஆண் பெண் தவிர இதர பாலின அடையாளங்களை ரத்து செய்தல், இராணுவத்தில் பணிபுரிந்துவந்த அனைத்து திருநர்களையும் பணிநீக்கம் செய்தல், இனச்சமத்துவம் மற்றும் நேர்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (gay) எதிராக நிகழுவும் குற்றங்களைத் தடுக்கும் விதமாக முந்தைய பிடென் அரசு கொண்டுவந்த ஆணைகளை திரும்பப்பெறுதல் என்று டிரம்பின் நிறவாத காட்டாட்சி அமெரிக்காவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதனுடைய நீட்சியே இந்த மனிதத்தன்மையற்ற பெருந்திரள் நாடுகடத்தல் நடவடிக்கை. இந்திய மக்களிடம் இந்து பெரும்பான்மைவாதத்தை வளர்ப்பதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை போல, அங்கிருக்கும் வெள்ளை இன மக்களிடம் தனக்கான செல்வாக்கு குறையாமல் இருப்பதற்கு இப்படியான வலிமையற்ற மக்களிடம் அதிகாரத்தை செலுத்திவருகிறது டிரம்ப் அரசு.
– மோ. சதீஷ்