பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? – தோழர் செந்தில் – பகுதி – 2

09 Mar 2025

அண்ணாவா? பிரபாகரனா? என்ற கேள்வியின் உள்ளடக்கத்தில் சமூக விடுதலையா? தேசியவாதமா? என்ற  கேள்வி முன்னெடுக்கப்படுகிறது.

இங்கு சமூக விடுதலை என்பது அரசு, அரசதிகாரம் அரசியல் விடுதலை என்பதற்கு தொடர்பற்ற ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் தேசியவாதம் என்ற பெயரில் இறைமை, அரசதிகாரம், அரசியல் விடுதலை என்பது சமூக விடுதலைக்கு எதிரான ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. இதுவா? அதுவா? என்ற இருமையாக முன்வைக்கப்படுகிறது.

லெனின் சர்வதேசியத்தை மறுக்கும் பிற்போக்குவாதம் என்ற பொருளில் தேசியவாதம்( Nationalistic) என்ற சொல்லைப்  பயன்படுத்துகிறார். தேசிய விடுதலை, தேசியம் என்பதற்குப் பதிலாக மேற்படி விவாதத்தில் ’தேசியவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதே அதை எதிர்மறைப் பொருளில் சொல்வதற்குத்தான். அதாவது, இங்கு தேசியவாதம் என்பது சர்வதேசியத்திற்கு எதிரான ஒன்றாக சொல்லப்படாமல் சமூக விடுதலையை இரண்டாம் பட்சமாக கருதும் அரசியலாக முன்வைக்கப்படுகிறது.

மேலும் சிங்கள பெளத்த பேரினவாதத்தாலும் , பர்மிய பெளத்த பேரினவாதத்தாலும் தமிழர்கள் விரட்டப்பட்டதையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்டதையும் திமுகவின் அரசியல் பயணத்தையும் தமிழர்களுக்கு ஏற்பட்ட தேசிய அனுபவம் என இக்கருத்தரங்கத்தில் பேசப்பட்டது.

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்காமல் திமுக சமூக விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடியதாகவும் ஒப்புநோக்கி, திமுகவின் வழி வெற்றியடைந்திருப்பதாகவும் ஈழப் போராட்டம் தோல்வி அடைந்திருப்பதாகவும் இக்கருத்தரங்கம் முன்வைத்தது.

 இதில் சில மாறுபாடுகள் நமக்கு உண்டு.

  1. தேசியவாதம் என்று இங்கு சொல்லப்படுவது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு  இறைமை மீட்புக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். சமூக விடுதலை என்பது தேசிய அரசுரிமைக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் தொடர்பு அற்ற ஒன்றாகவும் சாதி ஏற்றத்தாழ்வை ஒழித்துக் கட்டுவதையும் மையமாக வைத்து பாவிக்கப்பட்டுள்ளது..

தேசியப் போராட்டத்தையும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தையும் எதிரெதிராய் நிறுத்திப் பேசுவது இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியாவில் உருப்பெற்ற ஒரு போக்காகும். அதாவது, பெரியாரும் அம்பேத்கரும் சமூக விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்து காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து விலகி நின்று சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிரானப் போராட்டத்தை நடத்தினர்.

உலகளாவிய வரலாற்று அனுபவம் என்னவென்றால் சமூகத்திற்கு உள்ளே இருக்கும் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதும் வெளியில் இருந்து வரும் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதும் தேசியத்தின் இரு பக்கங்களாகும். இவ்விரண்டும் ஒன்றுக்கு ஒன்று துணைசெய்யக் கூடியவை. வெளியில் இருந்து வரும் ஆதிக்கத்தை  ( மன்னராதிக்கம் காலனிய ஆதிக்கம், மத ஆதிக்கம், இன ஆதிக்கம்) எதிர்த்துப் போராடி இறைமையுள்ள குடியரசைப் படைத்துக் கொள்வது தேசிய விடுதலைப் போராட்டமாகும். இத்தகைய அரசியல விடுதலை என்பது சனநாயகத்திற்கு எதிரானது அல்ல. இத்தகைய அரசியல் விடுதலை இல்லாமல் சமூக பொருளாதார விடுதலை என்பது சாத்தியமில்லை என்பது அரசியலில் ஒரு பாலபாடம்.

இறைமை மீட்புப் போராட்டத்தையும் சமூகத்திற்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தையும் எதிரெதிராய் நிறுத்தும் மரபைக் கைவிட வேண்டும். சீனாவில் நிலவுடைமை ஆதிக்க எதிர்ப்பும் வல்லரசிய எதிர்ப்பும் பின்னிப் பிணைந்து முன்னெடுக்கப்பட்டது. நமது  சொந்த வரலாறு வேறு விதமாக இருந்தது என்பதாலேயே அதை திறனாய்வுக்கு உட்படுத்தக் கூடாது என்பதல்ல; அதே தவறை மீண்டும் செய்ய வேண்டும் என்பதுமல்ல.

அரசியல் விடுதலை, சமூக விருதலை, பொருளாதார விடுதலை என்று தனித்தனியாகப் புரிந்து கொண்டு ஒன்றுக்கு ஒன்று எதிராக நிறுத்துவது உலகத்தை ஒட்ட ஒழுகலும் அல்ல.

நாம் தேச அரசின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் தேச அரசுகளின் கீழ்தான் இருந்து வருகிறது. தேசியம், தேச அரசு, தேசப் பாதுகாப்பு என்பதை நீக்கிவிட்டு உலகில் எதுவும் தனித்து இயங்கிக் கொண்டிருக்கவில்லை.

உலக வர்த்தக கழகம், உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம், ஐ.நா., நேட்டோ, குவாட், சார்க், பிரிக்ஸ் இந்த நிறுவனங்களில் இருப்பதும் இவற்றுடன் ஊடாடுவதும் தேச அரசுகள் தான். எங்களுக்கு தேசியம் வேண்டாம், தேச அரசு வேண்டாம் என்பவர்களுக்கு இவற்றைப் பற்றியெல்லாம் ஏதாவது அக்கறை உண்டா?

பழமைவாத சிந்தனை கொண்ட காந்தியார் தலைமையிலானலும் சரி மன்னர் தலைமயிலானாலும் சரி வல்லரசியத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் சனநாயக உள்ளடக்கம் கொண்டது என்பது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டல் ஆகும்.   

”தேசம், தேசியம், தேச அரசு, தேசப் பாதுகாப்பு கடல் பாதுகாப்பு, பொருளாக்கம், வணிகம் இவை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு இறைமை வேண்டாம், தமிழ் மக்கள் தமது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ள வேண்டியதில்லை, தமிழ் மக்களுக்கு இறைமை முக்கியமல்ல “ என்று சொலவதன் பொருளென்ன?

இந்த துணைக்கண்டத்தில் உள்ள தேசிய இனங்களின் இறைமையை மறுப்பதன் மூலம் பலனடையக் கூடிய ஆளும் வகுப்பாருக்கும் மேற்படி வரிகள் சேவை செய்யாதா? தேசிய அரசின் தேசிய ஒடுக்குமுறையை ஏற்றுக்கொண்டு இப்படியே காலந்தள்ளுவதா? அதற்கு மாற்று வழிதான் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.

  1. தமிழ்த்தேசிய அரசியல் வானத்தில் இருந்து எழுந்துவந்ததாக இனவாத அரசியல் முகாம் சொல்கிறது; முற்றுரிமை கோருகிறது. வரலாற்று வழியில் வளர்ந்து வந்ததை ஏற்க மறுக்கிறது. தென்னிந்திய நல்வுரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், திராவிடர் கழகம், சுதந்திரத்திற்கு முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு ஊடாகத் தான் தமிழ்த்தேசிய அரசியல் கருக் கொண்டு வளர்ச்சியடைந்தது. உண்மையில் மத, இனக்குழுப் பிரச்சனையாக அல்லாமல் உலகியல் ( secular )  கண்ணோட்டத்துடன் அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சனையாக எழுந்து அது வந்தது. அதை வளர்த்தெடுத்து நடைமுறைக்கு செல்லவில்லை என்பதே நமது திறனாய்வு. இனவாத அரசியல் முகாம் இந்த வரலாற்றை முற்றாக மறுக்கிறது. தேசிய அரசுரிமையின் தேவையை மறுப்பது என்பது மறைமுகமாக இனவாத அரசியலின் முன்வைப்புக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடக் கூடும். 
  2. அறிஞர் அண்ணா எங்காவது ஓரிடத்தில் தமிழ்நாட்டுக்கு இறைமை வேண்டாம் என்று சொன்னாரா? திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு மாநில சுயாட்சி என்று முழக்கத்தை முன்வைத்தார். அதுவும்கூட அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சனைதான். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற இடத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கான அதிகாரத்தை இந்திய தேசிய ஏற்பாட்டிற்குள் ஒரு நிர்வாகப் பிரச்சனையாக சுருக்கினார் என்பது நமது திறனாய்வு.

 அண்ணா தோற்றுவித்த  அரசியல் போக்கு ஈட்டிய வெற்றிகள்கூட மாநில அரசுக்கு உள்ள குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தின் வழியாகத்தான். வல்லரசிய சார்புடன் முதலாளித்துவ பொருளியல் கொள்கைகளின் கீழ் அண்ணா தோற்றுவித்த அரசியல் போக்கு ஈட்டக்கூடிய அதிகபட்ச வெற்றியின் வரம்பை தீர்மானிப்பதுகூட மாநில அரசிற்கு இருக்கும் அதிகார வரம்புதான். அண்ணா விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு சீர்திருத்தப் பாதையை தெரிவு செய்தாரே ஒழிய அரசியல் அதிகாரத்தின் தேவையை மறுத்தாரில்லை. அவர் தோற்றுவித்த போக்கு சீர்திருத்தக் கோரிக்கைகளின் வழி அடிப்படை மாற்றத்தை நோக்கிச் செல்லவில்லை என்பதே நமது திறனாய்வாகும்.

  1. பார்ப்பனரல்லாதோர் ஆயினும் அந்த சாதிகளிடையே திட்டவட்டமான வகுப்புகள் தோற்றம் பெற்றுள்ளன. அதாவது ஒவ்வொரு சாதியிலும் வகுப்புகள் உருவாகிவிட்டன, அண்ணா தோற்றுவித்த திமுக எந்த வகுப்பு நலனை தலைமையாகக் கொண்ட கட்சி என்பதைப் பற்றி பார்க்காமல் அண்ணாவின் வழி பற்றிய மதிப்பீட்டுக்கு வந்துவிட முடியாது.
  2. எவரும் போராட்டக் களத்தில் விரும்பிச் சாவதில்லை. அதே நேரத்தில் சாவுக்கஞ்சி போராடமல் இருப்பதும் இல்லை. இறைமை வேண்டும் என்பது வீம்பல்ல, அது ஓர் இன்றியமையாத தேவை, அந்த ந்லனை அடைவதற்காக மக்கள் போராட வருகின்றனர். ஈகம் செய்வதற்காகவே எவரும் ஈகம் செய்வதில்லை. ஈழத் தமிழர்கள் இறைமைக்காக போராடியதே குற்றமா? அந்த தனிநாட்டுக் கோரிக்கை தவறா? போராட்டம் தோற்றுப் போனதற்கு காரணம் கோரிக்கை தவறு என்பதாலா? ஈழத் தமிழர்களைக் ?கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பில் இருந்து காப்பதற்கு போராடுவதை தவிர வேறு வழியென்ன?  போராட்டங்களை ஆளும் வகுப்பு இரத்த சகதியில் மூழ்கடிப்பதால் அக்கோரிக்கைகளே தவறு என்பதல்ல, மாறாக அக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அண்ணாவா? பிரபாகரனா? என்ற விவாதம் எனப்து தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு இயக்க்கத்தை ஒழித்துக்கட்டுவது, ஈழ்ப் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடுகளை இனவாத நோக்கில் அல்லாமல் சரியான வகையில்  திறனாய்வுக்கு உட்படுத்துவதை மழுங்கடிப்பது, அடிப்படை மாற்றத்திற்கு பதிலாக சீர்திருத்தங்களோடு நிறுத்திக் கொள்ள சொல்வது ஆகிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது..

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம் என்று சொல்லிக் கொண்டு இந்துராஷ்டிரத்தை நோக்கி இந்த நாட்டை ஒன்றிய பாசக அரசு நகர்த்திக் கொண்டிருக்கும் காலத்தில் பாசிச எதிர்ப்பு அணி சேர்க்கைக்கு தேவைப்படும் விவாதத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக ஆளும்வகுப்புக் கட்சியான திமுகவின் பலவீனங்களுக்கும் சமரசங்களுக்கும் வரம்புக்கும் கோட்பாட்டு முலாம் பூசும் முயற்சியாகும் இது..

 இக்காலகட்டத்தில் பாசிச எதிர்ப்பு முகாமில் தவிர்க்க முடியாமல் நீடிக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்பட்டிருப்பதால், பாசிச எதிர்ப்பில் திமுகவை ஊன்றி நிற்க வைக்கும் நோக்கிலான பரப்புரைகளூம் விவாதங்களும் தேவையாகும்.

முற்றும்…

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW