ச. தமிழ்செல்வனின் தெய்வமே சாட்சி நூல் திறனாய்வு – ஆதவன் அமுதா பாஸ்கர்

ஒரு தலைவர் இறந்துவிட்டால் அவர் இறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களின் செயல்பாடுகளை மறந்து புனிதராக்கியவர்களும் உண்டு. இன்று காவல் தெய்வங்களாய் சமூகத்தில் உலாவும் நம்மிடையே வாழ்ந்த மனிதர்களை கொன்று தெய்வமாக்கி கோயில் கட்டி புனிதாராகியோரும் உண்டு. அதனடிப்படையில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடையே வாழ்ந்த மனிதர்கள் இன்று காவல் தெய்வமாக குலத்தின் குடும்பத்தின் சாமியாக மாறியுள்ளன . இவ்வாறு வணங்கப்படும் நாட்டார் தெய்வங்களை பற்றிய ஆராய்ச்சி நூல்களில் முக்கியமானது சா.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தெய்வமே சாட்சி ‘ என்ற நூல். இப்புத்தகம் தமிழகம் முழுவதும் உள்ள பெண் நாட்டார் தெய்வங்களின் வரலாற்றையும், இவற்றிற்கு பின்னால் உள்ள சமூக உளவியலையும். இவற்றின் தோற்றத்தை அறிவியல் ரீதியாக உட்படுத்தி தற்கால சமூகத்துடன் ஒப்பிடுகிறார்.
தெய்வமான பெண்கள்
பெண்ணை உயிருள்ள உணர்வுள்ள சக மனிதராக மதிக்காமல் அவர்களின் காதலையும் ஆசைகளையும் இலட்சியங்களையும் நசுக்கி தன்னுடைய ஆணாதிக்க அரிப்பிரற்காக கொல்லப்பட்ட இந்த தெய்வங்கள் பற்றிய ஒவ்வொரு கதைகளிலும் ஒரு பெண் எவ்வாறு பிறந்து வாழ்ந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை விவரிக்கிறது. உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள், பிறருடன் சம்பந்தப்படுத்தி கொல்லப்பட்ட பெண்கள்,கற்பை நிரூபிக்க உயிர்விட்ட பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் என பெண் தெய்வங்களின் சோகக்கதைகளை தொகுத்துள்ளார். சிலர் தாமாக முன்வந்து மரணித்துள்ளனர். இது அவர்களின் வாழ்க்கை எவ்வாறு விடுதலையடைய முடியாத சிறையாக இருக்கிறது என்பதையும் இந்த சமூகத்தின் வாழ்நாள் கைதியான அவர்கள் சாவையே பெரும் விடுதலையாக எண்ணியுள்ளனர் என்பதையும் கூறுகின்றன.
கொன்ற மனிதர்கள் நின்ற தெய்வங்கள்:
பெரும்பாலும் கொன்றவர்களே தெய்வமாக்கி வணங்கியுள்ளனர். இதற்கு காரணமாக குற்றவுணர்வு, கொன்றவர்கள் பேயாக வந்துவிடுவார்களோ , இதனால் பொருளாதாரம் காலியாகிவிடுமோ என்ற அச்சம் போன்றவை காரணமாக இருக்கலாம். கொல்லப்பட்டவர்கள் கொன்றவர்கள் கனவில் தோன்றி கோயில் கட்டி கும்பிட கூறிய கதைகளும் உண்டு. அவர்கள் கோயில் கட்டி வணங்க சொன்னார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை கோயிலுக்கு பதில் நியாயத்தை கேட்டிருந்தால் . அது அவர்களை இவையனைத்தையும் விட பயமுறுத்தியிருக்கும்.
இன்று இந்த மனிதர்கள் கொல்லப்பட்டு தெய்வமானதற்கு காரணம் நம்முடைய சமூக அமைப்பு தான். சாதிய சட்டமும் ஆணாதிக்க மனோபாவமும் தான் எல்லைச்சாமிகளும் , காவல் தெய்வங்களும் உருவாக காரணம். பண்பாட்டை விழுங்கி செரிக்கும் பார்ப்பனிய இந்து மதம் நம்முடைய தமிழ் கடவுள் முருகனை சிவனின் மகனாக்கி சுப்பிரமணியமாக மாற்றி நம்மிடமிருந்து பிரித்து. இன்று கலவர கருவியாக மாற்றிவரும் கூத்துக்கு திருப்பரங்குன்றம் முருகனே சாட்சி.அங்குள்ள இஸ்லாமியர்கள் பல நூறு ஆண்டுகளாக ஆடு கோழிகளை தங்கள் முன்னோர்களுக்கு படைத்து வருகின்றனர். இறந்தவர்களை வணங்கும் தர்காக்களும் நாட்டார் தெய்வ பண்பாட்டின் தொடர்ச்சி தான். அவர்களின் குறி தர்காவும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல சாதனத்தால் பலியான நாட்டார் தெய்வங்களும் தான். பார்பனியத்தால் ஒருமுறை கொல்லப்பட்டு தெய்வமான நாட்டார் தெய்வங்களை மீண்டும் பார்ப்பனியம் கொல்லாமல் பாதுகாக்க வேண்டும். சமூக ஒடுக்குமுறையால் பலியான
இவர்களை அவற்றிற்கு எதிரான கேடயமாக்கி போராட வேண்டும். நாட்டார் தெய்வங்கள் இச்சமூகத்தால் சிதலாமான சாட்சிகள் .
-ஆதவன் அமுதா பாஸ்கர்