ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள் – தோழர் செந்தில்

பின்வருவன தமிழ்த்தேசிய நோக்கு நிலையில் இருந்து அதன் எதிர்காலம் குறித்த அக்கறையோடு எழுதப்படுகிறது. மேலும் ”ஆரிய இந்து – தமிழ் இந்து” என்று முன்வைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனுக்கு இதில் உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்ற நோக்கத்தில் விவாதிக்கும் பொருட்டு இக்கருத்தை அவர் முன்வைப்பதால், இதன் பொருட்டு அவரை ஆர்.எஸ்.எஸ். உடன் இணைத்துப் பேசுவது அறிவுநாணயமாகாது.
- தேசியம் என்பது இன, மத, மொழிச் சண்டைப் போல் தோற்றமளித்தாலும் அதன் உள்ளடக்கம் சனநாயகம் பற்றியதே. சாதி, மத, பாலின, நிற வேற்றுமையின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை எதிர்ப்பதும் சனநாயகத்திற்காகத் தான்! இறைமை மீட்பின் வழி தேச – அரசு அமைக்க போராடுவதும் சனநாயகத்திற்காகத் தான்! எனவே, தமிழ்த்தேசியம் என்பது ’ஆரியர் எதிர் திராவிடர்’ அல்லது ’ஆரியர் எதிர் தமிழர்’ அல்லது ’தமிழர் எதிர் தெலுங்கர், கன்னடர், மலையாளி, இந்திக்காரர்’ சண்டை அல்ல.
- 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான வகையில் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றாற் போல் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை வளர்த்தெடுக்கும் பொறுப்பு சமகாலத்தவர்களுக்கு உண்டு.
- தமிழ்த்தேசியம் இன்றைக்கு அதன் உடனடி பொருளில், தில்லி அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு இறைமை கொண்ட தமிழ்த்தேச குடியரசைப் படைப்பது பற்றியதாகும். அதன் இலட்சியம் என்ற வகையில் நமக்குள் இருக்கும் சாதிய, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட்டு சமதர்ம சமூகம் காண்பதாக இருக்க முடியும். இன்றைய உலகமய காலத்தில் வல்லரசிய எதிர்ப்பின்றி தமிழ்த்தேசியம் முழுமையடையாது.
- நடப்பில் இருப்பது இந்திய தேசிய அடிப்படையிலான இந்திய தேச – அரசு. இந்து தேசிய அடிப்படையில் இந்து தேச – அரசு காணத் துடிப்போரது கையில் ஒன்றிய ஆட்சி அதிகாரம் உள்ளது. தமிழ்த்தேசிய அடிப்படையில் தமிழ்த்தேச – அரசு அமைக்கப் பாடுபடும் மிக மிகச் சிறுபான்மையினர் உள்ளனர். இது எதிர்காலத்தில் மாபெரும் மக்கள் திரள் அரசியலாக வளரும் என்பது நம் எல்லோரது விருப்பமும் மதிப்பீடும் ஆகும்.
- ’இந்து’ என்ற தொகுப்பு காலனியர்களால் உருவாக்கப்பட்டாலும் இன்றைக்கு வரை அதை அடிப்படையாக கொண்டு அரசியல் நடத்தும் இந்துத்துவ ஆற்றல்களாலேயே ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாத சொல்லாக இருந்து வருகிறது. அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் விளக்கம் கொடுக்கக் கண்டோம். ஆர்.எஸ்.எஸ். ஐ பொருத்தவரை இந்து என்பது அரசியல் ரீதியான வெளிப்பாடே தவிர மதரீதியானதோ இறையியல்ரீதியானதோ அல்ல. இந்து என்பது ஒரு தேசிய அரசியல் அடையாளமாகவே பாவிக்கப்படுகிறது. அதுவும் கிறித்தவர் , இஸ்லாமியர் அல்லாத எல்லோரும் இந்துக்கள் ( பெளத்த, சமண, சீக்கிய) என்று முன்வைத்து ஓர் அரசியல் அணிதிரட்டலை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது.
- தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இன்று வரை வேர்ப்பிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் வரலாறு நமக்களித்திருக்கும் கொடையே அகும். நம் மக்களிடையே மொழிவழி தேசிய அடிப்படையில் அரசியல் அதிகாரம் பற்றிய உணர்வு வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. தனிநாட்டுக் கோரிக்கை அல்லது மாநில சுயாட்சி என்பது அரசியல் அதிகாரம் பற்றியதே ஆகும். இசுலாமிய படையெடுப்பு எதிர் இந்துக்கள் என்று கட்டமைக்கப்படும் வரலாற்றுச் சுமை வடவருக்கு உண்டு. ஆனால், ஓப்பீட்டளவில் அப்படி எதுவும் நமக்கு இல்லை. இதைப் போல இந்துத்துவ அரசியல் வளர்வதற்கு வாய்ப்பளிக்காத சமூக இயைபு(social composition), சமயங் கடந்த இணக்கமான வாழ்வு ஆகிய காரணிகள் உள்ளன. ஆகவே, தமிழர் என்பதே நம் தேசிய அடையாளம் என்பதை மக்களிடம் மென்மேலும் வலுவாக கொண்டு சென்றாலே ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்கொள்ளப் போதுமானதாகும்.
- அது மட்டுமின்றி, இந்து தேசியம் என்ற அரசியல் தேவைக்காக இந்து என்ற சமயத்தை உருவாக்கும் முயற்சிதான் இப்போது நடந்து வருகிறது. எனவே, இந்து என்ற ஒருபடித்தான சமயத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். இந்து என்று தம்மை கருதிக் கொள்வோர் இருக்கத் தான் செய்வர் என்றாலும் லிங்காயத்து மரபு, ஜார்கண்ட் பழங்குடிகலின் சர்நா மரபு, நாராயண குரு, அய்யாவழி, வள்ளலார் ஆகியோரது மரபுகள் இந்து சயமத்தின் பகுதியல்ல என்பதற்காக போராடுவது பற்றி கூட ஆய்வு செய்ய வேண்டும்..
- பல்வேறு சாதி, மொழி, வட்டார அடையாளங்கள் இருப்பினும் அனைத்தையும் இந்து என்ற அரசியல் அடையாளத்திற்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்( இந்து தேசிய நோக்கில்) . அதற்கு நேரெதிராக அனைத்து அடையாளங்களையும் தமிழர் என்ற அடையாளத்திற்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாடாக இருக்க முடியும்..
- தமிழ்த்தேசியத்தைப் பொருத்தவரை தமிழர்களில் இந்து, கிறித்தவ, இசுலாமிய சமய நெறியைப் பின்பற்றுவோர் உண்டு என்று சொல்லும் போது ’தமிழர்’ என்ற அடிப்படை அரசியல் அலகு தக்க வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழ் இந்து, தமிழ் கிறித்தவர், தமிழ் முசுலிம் என்று சொல்லும் போது இந்து என்ற சொல்லுக்கு சமய அடையாளத்தைத் தாண்டி அரசியல் உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது. ”இந்தியாவெங்கும் இந்துக்கள் உள்ளனர், அவர்கள் பல்வேறு மொழி பேசுகின்றனர், தமிழ் இந்து, மலையாள இந்து, தெலுங்கு இந்து, கன்னட இந்து” என்றுதான் ஆர்.எஸ்.எஸ். அடையாளப்படுத்துகிறது. எனவே, ’தமிழ் இந்து’ என்று சொல்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இன் அரசியல் அடையாளப் படுத்தலோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள வழியேற்படுகிறது. இந்து என்ற எக்காரணம் கொண்டு சமய அடையாளத்திற்கு அப்பால் அரசியல் அடையாளமாகப் பயன்படுத்துவதை ஏற்கக் கூடாது.
- எப்படி ஆரியருக்கு எதிராய் திராவிடர் என்ற குறியீட்டு அரசியல் இன்று ’தமிழர் எதிர் திராவிடர்’ என்று உள்ளடக்கத்திலேயே மாற்றமடைந்து வருகிறதோ அது போல் ’ஆரிய இந்து’ எதிர் ’தமிழ் இந்து’ என்ற சட்டகம் ’தமிழ் இந்து எதிர் தமிழ் இஸ்லாமியர்’ என்று மிக இலகுவாக திருப்பப்படுவதற்கு வழி வகுத்துவிடும். தமிழ்த்தேசிய ஓர்மையை ஆரிய இந்து எதிர் தமிழ் இந்து என்று இனம் பிரித்து காப்பதைவிட தமிழ்நாட்டெல்லையில் சாதி, சமய, வட்டாரம் கடந்த தமிழ்த்தேசிய உணர்வூட்டல், அணிதிரட்டலின் வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழரின் பாதுகாப்பு, நல்வாழ்வு பற்றி அக்கறை கொள்ளும் அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுப்பதே தமிழ்த்தேசியர்களின் கடமை.
- ஆரியர் – தமிழர் சண்டையாக தமிழ்த்தேசிய அரசியலை தோழர் பெ.ம. விளக்கப்படுத்துவதால் விளையும் சறுக்கலே தமிழ் இந்து – ஆரிய இந்து ஆகும். வரலாற்று குகைக்குள் சென்று பார்த்து புரிந்து கொள்வது வேறு, வரலாற்றுக் குகைக்குள் தலையை விட்டுக் கொண்டு மாட்டிக் கொள்வது வேறு.
- அதுபோலவே, இந்துத்துவ அரசியலை பார்ப்பனிய மேலாண்மையாக மட்டும் புரிந்து கொள்ளும் திராவிட அரசியலுக்கு இருக்கும் அதே குறைபாடு ஆரிய இந்து – தமிழ் இந்து விளக்கத்திலும் உள்ளது. அதாவது, ஆரியத்துவா என்பது ஆரியர், சமற்கிருதம், பகவத் கீதை பற்றிய பிரச்சனை மட்டும் இல்லை. அது இந்து தேசியம் – இந்து தேச அரசு/இந்துராஷ்டிரம் பற்றிய பிரச்சனையாகும். தேசியம் பற்றிய பிரச்சனையாக இதை கையாளாமல் ஆரிய ஆதிக்கம், மதச் சார்பு என்ற புள்ளிகளில் கையாண்டு வெற்றிக் கொள்ள முடியாது.
- ’தமிழ் இந்து’ என்பது நெருப்போடு விளையாடுவதாகும்.. மதவழிப்பட்ட தேசியம் – இந்து தேசியம் என்ற அரசிலை நாடு தழுவிய சமுதாய சக்தியாக வளர்த்தெடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். முனைப்புடன் உழைத்து வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கன் ,ஈரான் எனப் பிராந்திய அளவிலான இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலகளாவிய இஸ்லாமிய அரசியல் உள்ளது. ’இந்து’ என்ற சொல்லுக்கு அரசியல் உருவேற்றக் கூடிய பன்னாட்டு, பிராந்திய மற்றும் உள்நாட்டு சூழல் நிலவுகிறது. அதாவது, இந்து என்ற சொல் இஸ்லாமிய, கிறித்தவ எதிர்ப்பில்தான் அதிகம் அரசியல்தன்மை பெறுகிறது. தமிழ் இந்து – ஆரிய இந்து முன்வைப்பில் இந்த பேருண்மையைக் கிஞ்சித்தும் கருத்தில் எடுத்ததாக தெரியவில்லை.
- திருக்குறளையும் தமிழையும் ஏற்றுக் கொண்டால் பார்ப்பனர்களை தமிழர் என்ற வரையறைக்குள் சேர்த்துக் கொள்வதாக சொன்ன பெரியாரின் கூற்றோடு ஒத்துப்போகிறது ’தமிழ் இந்து – ஆரிய இந்து’ விளக்கம். கீதையில் பற்று கொள்வதோ சமற்கிருதப் பற்றோ ஒருவரின் தனிப்பட்ட தெரிவு உரிமை இல்லையா? அதை எப்படி ஓர் இன அளவுகோலாக வைக்க முடியும்? அவரது சமய நம்பிக்கை காரணமாக அவரை ’அயலார்’ என்று சொல்வதா? கீதையில் பற்றுக் கொண்ட ஒருவர் தமிழ்த்தேசியத்திற்கு உழைக்க முன் வரமாட்டார் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? சமற்கிருதமும் தமிழும் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே சங்கிகளின் வாதம். ஒருகையில் தேவாரத்தோடும் மறுகையில் கீதையோடும் வந்தால் அவர் தமிழ் இந்துவா? ஆரிய இந்துவா? ஒரு தமிழ் இந்து இந்துதேசியத்தை ஏற்றுக் கொண்டால் என்ன செய்வது? ஆரிய இந்து தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொண்டால் என்ன செய்வது? கூடவே இந்து தேசியத்திற்கு உழைக்கும் அண்ணாமலை, பொன். இராதாகிருஷ்ண், எல். முருகன் போன்றோர் ஆரிய இந்துவா? தமிழ் இந்துவா? அவர்களேகூட வருங்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று எப்படி முடிவு செய்ய முடியும்? இன்னும் பல கேள்விகள் உண்டு.
- தமிழ் இந்து முன்வைப்பு சாதிய சிக்கலில் இது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? சாதியை இறுக்கமடையச் செய்யுமா? அல்லது தளர்த்துமா? என்பது விவாதத்திற்குரியதே ஆகும். சமயங் கடந்த தமிழ்த்தேசிய ஒர்மைக்கும் இந்துத்துவ தேசிய எதிர்ப்புக்கும் இது உதவுமா? என்பதே முதன்மை விவகாரமாகும். தமிழ் இந்து முன்வைப்பு சனாதனத்திற்கு துணை செய்து விடும் என்பதை முதன்மைப்படுத்தவதே ஒருவகையில் இந்து சமூக அமைப்பிற்குள் சிந்திக்கும் முறைமையின் பகுதியாகும். அதாவது ’பார்ப்பனர் எதிர் பார்ப்பனரல்லாதோர்’ அரசியலும் ’சாதி இந்துக்கள் எதிர் தலித் மக்கள்’ அரசியலும் இந்து சமூக அமைப்பிற்குள் நடக்கும் சண்டையே ஆகும். இந்து சமூக அமைப்பிற்குள் இருக்கும் சாதிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் தன்மை வேறு இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் தன்மை வேறு. வெவ்வேறு சாதிகளாக தமக்குள் சண்டையிட்டுக் கொள்வோர்கூட இசுலாமியர் எதிர்ப்பு என்று வரும்போது ஒன்றுபடுகின்றனர் என்பதே வரலாறு தரும் பட்டறிவாகும். இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்று கவலைப்படுவதில் பாதியளவுக்கூட அந்த இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகிவிடக் கூடும் என்பது குறித்து சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் கவலைக் கொள்வதில்லை.
- தேசியம் பற்றிய கோட்பாட்டாளர்கள் வரலாற்றின் மீதும் சொந்த மக்களின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியிலும் மற்றும் தமிழ்த்தேச அளவிலும் திட்டவட்டமான வர்க்கங்கள் உருப்பெற்றிருக்கும் நிலையில் வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமல் தமிழ்த்தேசியத்தை விளக்கப்படுத்த முடியாது. தொலைநோக்குப் பார்வையுடன் வரலாற்றுக்கும் தன் தேசத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும். ’திமுக எதிர்ப்பு’ என்பதை மையமாக்கி கொண்ட போது பெரியார் தவறான நிலைப்பாடுகள் எடுக்க நேர்ந்தது. அதுபோலவே, திராவிட எதிர்ப்பை மையப்படுத்துவதால் அதையே உலகமாய் கருதி, மயக்கத்தில் சிக்கி விடுகிறாரோ தோழர் பெ.ம. என்ற ஐயம் எழுகிறது. இயங்கியலில் ஒரு விதி உண்டு. எதை எதிர்க்கப் புறப்படுகிறோமோ அதன் பிம்பமாகவே மாறிப் போவது நேர்ந்துவிடும். அதுபோல் தோழர் பெ.ம திராவிட அரசியலின் கோட்பாட்டுப் பிழைகளுக்கு தமிழ்முலாம் பூசிக் கொண்டிருக்கிறார். திமுக 2.0 தான் ’நாம் தமிழர்’ கட்சி. ஆனால், தோழர் பெ.ம திமுகவுடன் முரண்படும் அளவுக்கு நாம் தமிழர் கட்சியுடன் முரண்படுவதில்லை. ’திராவிடர்’ எதிர் ’தமிழர்’ என்ற சொல் பிரச்சனையாக விசயத்தைப் பார்த்து உள்ளடக்கத்தை தவற விடுவதுதான் இதற்கு காரணம்,
- மொத்தத்தில், தமிழ் இந்து முன்வைப்பு ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்த்து முறியடித்து தமிழ்த்தேசியம் வளர உதவாது; மாறாக, ஆர்.எஸ்.எஸ். இன் இந்துதேசிய அரசியலுக்கு சேவை செய்வதில் போய் முடியக் கூடும் என்பதை தோழர் பெ.ம. கருதிப்பார்பாராக.