வேங்கைவயல் – வன்கொடுமை வழக்குகளில் சாதி சார்பற்றவர்களா இரு கழகங்கள் ? – சிறிராம்

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகம் நிகழும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. பொதுப்பாதையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தடைவிதிப்பது தொடங்கி ஆணவக் கொலை வரை பலவிதமான தீண்டாமை – சாதி கொடுமைகள் உண்டு. SC/ST வன்கொடுமை சட்டம் 26க்கும் மேற்பட்ட வன்கொடுமை செயல்களைப் பட்டியலிட்டுள்ளது…அவை புதிய புதிய வடிவங்களில் நடப்பதால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 2002 ஆம் ஆண்டு திருச்சி திண்ணியத்தில் இரண்டு தலித் இளைஞர்களை மனித மலத்தை திங்க வைத்தும் திண்டுக்கல் கவுண்டம்பட்டியில் ஒரு தலித் விவசாய தொழிலாளரை மூத்திரத்தை குடிக்க வைத்தும் வன்கொடுமை நடந்தேறியுள்ளது. இதுபோன்ற இழிவான ஒடுக்குமுறைகள் வரலாற்றில் ஆண்டான் அடிமை சமூகத்தில் கூட உலகத்தில் எங்கும் நிகழ்த்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் வேங்கை வயல் வரை அது தொடர்வதை என்னவென்று சொல்ல ? இன்றளவில் உலகில் அதிகப் படியான குற்றம் என்பது ‘மனிதகுலத்திற்கு எதிரானக் குற்றம் Crimes Against Humanity’ என்பதே. அவை ‘இனப்படுகொலை குற்றத்திற்குத்தான்(Genocide’) இன்றளவில் ஐநாமன்றம் பயன்படுத்துகிறது.
21ஆம் நூற்றாண்டில் மனித மலத்தைக் குடிக்க வைத்து தலித் மக்களை இழிவுபடுத்தும் செயல் ஏன் ‘மனித குலத்திற்கு எதிரானக் குற்றமாக’ கருதக்கூடாது என்ற கேள்வி எழுகிறது
வேங்கைவயல் வன்கொடுமையில் திமுக அரசின் அணுகுமுறை –
தந்தைப் பெரியார் மண்ணில் தலித் மக்களைப் பீ தண்ணீரைக் குடிக்க வைத்து இழிவுபடுத்தும் கொடூரச் செயல் நடந்தேறி இரண்டு ஆண்டுகளில் ஏன் சமூகநீதி காவலர்களான முதலமைச்சர், துணை முதலமைச்ர் அல்லது கழக நிலைசெயலாளர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை?
சம்பவம் நடந்த போதே பெயர் தெரியாத ஒருசிலரே இதை செய்துள்ளனர் என்பது வெட்டவெளிச்சம். முத்தரையர் சமூகம் கூட்டாக செய்த செயல் அல்ல என்று தெரிந்தும் ஒட்டுமொத்த கிராமத்தையே இரண்டு ஆண்டுகளாக திறந்தவெளி சிறைச்சாலை போல் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து அனைத்து மக்களையும் துன்புறுத்தியது. இரு சமூகத்திற்கு இடையே நிரந்தர பகையை ஏற்படுத்தும் என்ற சமூகவியல் அணுகுமுறைகூட இல்லாமல் வெறும் சட்டஒழுங்குப் பிரச்சனையாக ஏன் தமிழக அரசு கையாண்டது ?
யாருடைய தூண்டுதலில் யாருடைய மலத்தை யார் குடிநீரில் கலந்தார்கள் என்பனப் போன்ற விவரங்கள் உடனுக்குடன் வெளிவந்த போதும் மலத்தை DNA ஆராய்ச்சி செய்கிறோம் என்று காலந்தாழ்த்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல், நயவஞ்சகமாக பட்டியல் சமூக இளைஞர்களையே குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாக்கிடும். அணுகுமுறையை புதியவகை சமூகநீதி என்று எடுத்துக்கொள்வதா ?
இதுவரை நடந்த வன்கொடுமைகளுக்கு நீதி பெறப்பட்டதா ?
பொதுவாக வன்கொடுமை வழக்குகளில் அரசுதான் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நீதிமன்றத்தில் வாதிடுகிறது ஏனெனில் கிரிமினல் குற்றம் என்பது தனி நபருக்கு எதிரான குற்றம் அல்ல, அவை ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரானது. முதல் தகவல் அறிக்கையில் அதிக தண்டனைக்குரிய பிரிவுகளைச் சேர்க்காமல் தவிர்ப்பது தொடங்கி விசாரணையை முழுமையாகவும் விரைந்து நடத்தாமல் இழுத்தடிப்பது, குற்றவாளிகள் தரப்பு வாதங்களுக்கு முறையாக counter கொடுக்காமல்விடுவது, கீழ்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அதற்கு மேல்முறையீடுசெய்யாமல் இருப்பது என்று பல உத்திகளைக் கையாண்டு ஆதிக்க சாதி குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் திமுக, அதிமுகவின் வழமையான சட்ட நடைமுறை. குற்றம் ஓர் ஆட்சியின் காலத்தில் நடந்தாலும் அடுத்துவரும் ஆட்சி இதே நடைமுறையைத்தான் பின்பற்றும், அதற்குக் காரணம் இரு கழக கட்சிகளின் சாதி – வர்க்கச் சார்பு ஒன்றுதான்
மேலவளவு படுகொலை – நயவஞ்சகத்தின் உச்சம்
1997 கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்த மேலவளவு படுகொலை. மதுரை மேலூரை அடுத்த மேலவளவில் பெரும்பான்மையாகவும் ஆதிக்கத்திலும் இருந்த கள்ளர் சமூகம் உள்ளாட்சித் தேர்தலில் அந்த தொகுதி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வந்த சூழலில், பட்டியல் சமூகத்தைச் சேர்த்த முருகேசன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் முருகேசன் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக்கொலை செய்தனர். இந்த செய்தி இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. 40 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்ட நிலையில் அவை வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவுகள் கீழ் பதியப்படவில்லை. 2001இல் கீழ்நீதிமன்றம் 23 பேரையும் விடுதலை செய்து 17 பேருக்கு மட்டும் தண்டனை வழங்கியது. ஆனால் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மேல்முறையீட்டில் இதனை எதிர்க்கவில்லை. மேலும் 2006இல் சென்னை உயர்நீதிமன்றம் sc/st வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு நடத்தவில்லை என்பதை கண்டித்து17 பேரின் தண்டனையை உறுதிசெய்தது. இத்தோடு முடியவில்லை. குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இறுதி தீர்ப்புவருவதற்கு முன்னரே 2008 இல் தண்டனை அனுபவித்து வந்த மூவரை அண்ணா நினைவு நாளில் திமுக அரசு விடுதலை செய்தது (பொதுதேர்தலுக்கு ஓராண்டு முன்னர்).
2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மீதமுள்ள 14 பேருக்கு தண்டனையை உறுதிசெய்தது. 2019 தேர்தலுக்கு முன்னர் கலைஞர் காட்டிய வழியில் அனைவரையும் அதிமுக அரசு விடுதலை செய்தது. வேங்கைவயல் விவகாரத்தில் சிலர் கூறுவது போல ‘காவல்துறையில் உள்ள சில சாதிவெறியர்கள்தான் காரணம்’என்பது ஓர் அபத்தமானவாதம் என்பது மேலவளவு வழக்கு நமக்கு உணர்த்தும்.
பொதுமக்கள் விழிப்புப்பெற்ற 21ஆம் நூற்றாண்டில் இந்த நிலை என்றால் 1968 கீழ்வெண்மணியில் 44 பட்டியல் சமூக விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு குறைந்த தண்டனையாக 10ஆண்டுகள் மட்டுமே அளித்த கீழ் நீதிமன்றம். ஆனால மேல்முறையீட்டில் 1975 சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை குற்றவாளி கோபாலக்ரிஷ்ண நாயுடு’வுக் நற்சான்று அளித்து விடுதலை செய்தத கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான் வழக்கை நடத்தியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக அரசாங்கங்கள் சாதி சார்போடு நடத்திய அரசு வன்கொடுமை/படுகொலைகள்(State Atrocity &Killing) –
1992 வாச்சாத்தி– ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் காவல்படை/ வருவாய் அதிகாரிகள் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ என்ற போர்வையில் தர்மபுரி வாச்சாத்தி பழங்குடி கிராமத்தில் புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியதில் 18 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் விளைவாக 1995 இல்வழக்கு CBI க்கு மாற்றப்பட்டு 2011 இல் குற்றஞ்சாட்டப்பட்ட 215 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது இந்த வழக்கை தொடர்ந்து நடத்திட CPIM கட்சி ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
1995 கொடியன்குளம் – எம்ஜிஆர் காலம் தொட்டு மறவர், சேர்வை, கள்ளர் என்ற முக்குலத்துசாதிகளை அணிதிரட்டி வந்த அதிமுக பட்டியல் சமூகத்தை சேர்ந்த பள்ளர் / தேவேந்திரகுல வேளாளர்களை அடக்கி ஒடுக்குவதை சமீப காலம்வரை செய்து வந்துள்ளது. அன்று ஜெயலலிதா தலைமையிலான காவல்படை கொடியங்குளம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடி அவர்களிடம் இருந்த சொத்துக்களை அழித்து வெறியாட்டம் ஆடியது.CBI விசாரணையைத் தவிர்த்து ,ஜெயலலிதா அரசு நியமித்த ஒரு நபர் கோமதிநாயகம் ஆணையம் 1996இல் அறிக்கை அளித்தது – காவல்துறையினர் மீது எந்த குற்றமும் இல்லை என்று நீதியைக் குழி தோண்டி புதைத்தது.
1999 மாஞ்சோலை படுகொலை – கலைஞர் தலைமையிலான திமுக அரசின் காவல்படை திருநெல்வேலி தேயிலை தோட்டப் பட்டியல் சமூக தொழிலாளர்களின் அமைதி பேரணியில் புகுந் துவன்முறை நடத்தியதால் 17 பேர் உயிர் இழந்தனர். அரசு நியமித்த மோகன் ஆணையம் காவல்துறையினரை விடுவித்து அனைத்துப் பழியையும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே சுமத்தி விசாரணையை முடித்துக் கொண்டது இப்படியான கடந்த கால் விசாரணைகளோடு பொருத்திப் பார்த்தால் வேங்கைவயல் விசாரணை முடிவுகள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடாது.
2013 பரமக்குடிபடுகொலை: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் முக்குலத்து சாதி ஆதரவோடு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளர் / தேவேந்திர குல வேளாளர்கள் 7 பேரை சுட்டுக்கொன்றது. இதை விசாரிக்க சம்பத் ஆணையம் அமைத்தார்கள்- காவல்துறையினரை விடுவித்து அனைத்துப் பழியையும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே சுமத்தி வழக்கை முடித்துக்கொண்டனர்.
இறுதியாக, 2012 தர்மபுரி நாயக்கன்கொட்டாய் , கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய மூன்று தலித் கிராமங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டர்களால் (பாமக தலைமையில்) சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கிராமம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாதி மறுத்து திருமணம் செய்த இளவரசன் ஆணவக் கொலை செய்யப்பட்டார் அதை தற்கொலை என்று திரித்து வழக்கை முடித்தது அரசு. இதை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் மீதே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பழிவாங்கியது அன்றைய அதிமுக அரசு.
இவைதான் சமூகநீதியை நிலைநாட்டிய இரு கழகங்களின் வரலாறு. சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களின் விடாமுயற்சியின் விளைவாக நீதிபெறப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு கண்ணகி முருகேசன் காதல் தம்பதிகளை ஊரே சேர்ந்து கொடூர கொலை செய்தவழக்கில் அம்பேத்கரிய வழக்கறிஞர் ரத்னத்தின் முயற்சியால் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது.
2015 ஆம் ஆண்டு சேலம் கோகுல்ராஜ் கொலைவழக்கில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் ப.ப. மோகன் அவர்களின் சமசரமற்ற வாதத்தின் விளைவாக குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது.
2017 ஆம் ஆண்டு உடுமலை சங்கர் ஆணவக் கொலைவழக்கில் அவரது மனைவி கௌசல்யா தனது குடும்பத்தினர் மீது கொடுத்த பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது
ஆக, இரு கழக கட்சிகள் தொடர்ந்து சாதி வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப்போக முயற்சிகளையும் செய்யும் அதனை முறியடித்து பாதிக்கப்பட்டோரின் விடாப்பிடியான முயற்சியும் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தொடர் அரசியல் இயக்கமும் தான் தற்போது வேங்கைவயல் மக்கள் நீதி பெற ஒரே வழி.
27.01.25 9500056554