அநுர சிறிலங்காவின் மீட்பராக வழியென்ன? – செந்தில்

அநுரகுமார திசநாயக்காவின் வெற்றி தெற்காசிய அளவில் உள்ள பெரும்பாலான, இனச்சிக்கலைக் கருத்தில் கொள்ளாத இடதுசாரி கட்சிகளால் வரவேற்கப்பட்டு வருகிறது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் சிறிலங்கா மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது என்று பார்க்கப்படுகிறது. இனவாதப் புதைக்குழியில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள் மீண்டுவிட்டனர் என்று மதிப்பிடப்படுகிறது.
இராசபக்சேக்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிங்கள மக்களால் புறக்கணிக்கப்பட்டது நாட்டைக் கொள்ளையைடித்தார்கள் என்ற காரணத்திற்காகவே அன்றி தமிழர்களுக்கு எதிராக இனக்கொலை செய்தவர்கள் என்பதற்காக அல்ல. அதேநேரத்தில் புலிகளை வெற்றிக் கொண்டது ஒன்று மட்டுமே மக்களைக் கட்டிப்போடுவதற்கு போதுமான காரணமாக இருக்கவில்லை. ஆனால், இனவாதத்தைப் புறந்தள்ளும் இடதுசாரி கட்சியா ஜேவிபி? இனவாதத்தில் இருந்து விடுதலையாகி சிங்கள மக்கள் ஒரு புதிய தலைவரை தெரிவு செய்துவிட்டனரா? போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கேள்விகளை வரலாறே எழுப்புகிறது. அதற்கானப் பதிலையும் வரலாறே வழங்கிச் செல்கிறது. வரலாறே நமக்கு வழிகாட்டுகிறது. அந்த வரலாற்றில் இருந்தே தொடங்குவோம்.
1930, 1940 களில் சிங்கள ஆளும் வகுப்புக் கட்சிகளிடம் இனவாதம் பூத்துக் குலுங்கத் தொடங்கிய காலப் பகுதியில் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு முற்போக்கானதாக இருந்தது.
தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை உடையவர்கள்” என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1944 ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழரின் பிரச்சனையை முழுமையான தேசிய இன அடிப்படையிலான பிரச்சனையாக லங்கா சமசமாச கட்சி 1950 களில் வாதிட்டது.
1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் அதை எதிர்த்து மொழி ஒன்றென்றால், நாடு இரண்டு, மொழி இரண்டென்றால் நாடு ஒன்று என்ற பொருளில் உரையாற்றினார் இடதுசாரி தலைவர் கொல்வின் ஆர்.டி. சில்வா. டாக்டர் எம்.என்.பெரேரா ஆற்றிய உரையும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதே கொல்வின் ஆர்.டி சில்வா தான் 1972 ஆம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டத்திற்கு அரசமைப்புச் சட்ட தகுதி வழங்கிய, பெளத்தத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய குடியரசு அரசமைப்பை இயற்றினார். இப்படி இக்கட்சிகள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்ற நிலையில் இருந்து தொடங்கி இனவாதச் சேற்றில் சிக்கிக் கொண்டதே வரலாறே.
1965 இல் தொடங்கப்பட்ட ஜேவிபியைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே, சிங்கள தேசியவாதத்தின் பெயரால் இனவாதப் பாதையில் பயணிக்கலாயினர். தமது பாடத்திட்ட தலைப்புகளில் ஐந்தாவதாக இந்திய விரிவாதிக்கம் என்பதை வைத்திருத்த ஜேவிபி, தமிழர்களை இந்திய விரிவாதிக்கத்தின் ஓர் அங்கமாக விளக்கலாயினர்; தமிழர்களை இந்தியக் கைக்கூலிகள் என்றனர். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீது இத்தகைய வன்மத்தைக் கொண்டிருந்தனர்.
இன்று அதிபராகியிருக்கும் அநுரா, 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது மீள்கட்டமைப்புக்காக சந்திரிகா அரசும் புலிகளும் சேர்ந்து உருவாக்க முயன்ற பொதுக்கட்டமைப்பை எதிர்த்து அமைச்சர் பதவியைத் துறந்தவர்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் பெறுபேறாய் விளைந்த வடக்கு கிழக்கு இணைப்பை நீக்குவதற்கு நீதிமன்றத்தை அணுகி வெற்றி கண்டது ஜேவிபிதான். அதற்கும் அநுர பங்களித்துள்ளார்.
அனுராவும் விமல் வீரவன்சவும் இணைந்துதான் புலிகளுக்கு எதிரானப் போரை நடத்துவதற்காக சிறிலங்கா படைக்கு 60,000 பேரை ஆட்சேர்த்துவிட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது இராசபக்சேவுடன் கூட்டணியில் இருந்தது மட்டுமின்றி போரை நடத்துவதில் இருந்து பின் வாங்காமல் தடுத்தது தாங்கள்தான் என்று முரசறைந்து கொண்டது ஜேவிபி.
இத்தகைய பின்னணி கொண்ட ஜேவிபியை உள்ளடக்கி தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணி சார்பாக போட்டியிட்ட ஜேவிபியின் தலைவர் அநுர, சுமார் 56 இலட்சம் வாக்குகளைப் பெற்று அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகள் தாம் இவரது வெற்றியை தீர்மானித்துள்ளது. வடக்கு கிழக்கு வாழ் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களில் பெரும்பாலானோர் அநுரவை தெரிவு செய்யவில்லை.
அநுரவின் மீது நம்பிக்கை கொண்டு, இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கு அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளை எதிர்ப்பார்த்து காத்திருக்குமாறு நல்லெண்ணக்காரர்கள் அறிவுரைப் பகன்று வருகின்றனர். அதற்கு அநுரவின் வசீகரமான பேச்சும் இடதுசாரி பின்புலமும் தமிழர்களின் கையறு நிலையும் காரணங்களாகும்.
சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி தலைமையிடம் உரையாடல் நடத்துவதையும் கோரிக்கைகள் முன்வைப்பதையும் அதற்காகப் போராடுவதையும் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை.
அதேநேரத்தில் கடந்த கால பட்டறிவைப் புறந்தள்ளி, ”நடந்தவை போகட்டும் நடப்பவை நல்லவையாக அமையட்டும்” என்று சொல்லிக் கொண்டு நல்லெண்ணங்களால் வழிநடத்தப்பட்டால் அது நரகத்திற்கானப் பாதையாகவும் அமைந்துவிடலாம்.
முற்றி நிற்கும் முரண்பாடுகள் சிலவற்றை உரசிப் பார்த்தால் உண்மை சுடுவதை எளிதில் உணரலாம்.
- உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு தொடர்புடையவர்கள் எத்தகைய அதிகாரபலம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்துவோம் என்று அநுர உறுதிமொழி தந்துள்ளார். அதுபோலவே விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றில் தொடர்புடைய அரச, படைத் தலைவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா?
- எப்படி முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோப்புகள் உள்ளனவோ அதுபோல் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் புகைப்படங்கள், காணொளிகள், பன்னாட்டு மனித உரிமை அறிக்கைகள் இருக்கின்றன. அவற்றைப் பொருட்படுத்துவாரா அநுர?
- பன்னாட்டு நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் தொடரப்படும். கடனை அடைப்போம் என்று சொல்லியுள்ளார் அனுர. பன்னாட்டு அமைப்பான ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிப்பாரா? பன்னாட்டு நீதிபதிகளில் பங்கேற்புடன் ஒரு கலப்பு புலனாய்வு செய்யக் கோரும் 30/1 தீர்மானத்தை சிறிசேனா – இரணில் தலைமையிலான சிறிலங்கா அரசு தாமே முன்மொழிந்தது. அதை அவர்கள் செயல்படுத்தவில்லை என்றாலும் நான்கு ஆண்டுகள் அத்தீர்மானம் சிறிலங்கா அரசால் பன்னாட்டு மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இருந்தது. பின்னர், பதவிக்கு வந்த கோத்தபய இராசபக்சே இத்தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதாக ஐ.நா. வில் அறிவித்துவிட்டார். இப்போது அக்டோபர் முதல் வாரத்தில் பன்னாட்டு சட்டமீறல்களுக்கான சான்றுகளை சேகரிக்கவும் தொகுக்கவும் பாதுகாத்து வைக்கவும் கோரும் 51/1 தீர்மானத்தை மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கப் போகும் தீர்மானம் வருகிறது. அநுர தலைமையிலான சிறிலங்கா, சிறிசேனா – ரணில் வழியில் தாமே தீர்மானத்தை முன்மொழியப்போகிறதா? அல்லது கோத்தபய வழியில் அத்தீர்மானத்தை எதிர்க்கப் போகிறதா?
- சிறிலங்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் 40% படையினருக்கு செலவழிக்கப்பட்டு வருகிறது. பெரும் பொருளியில் நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாட்டை மீட்பதற்கு பற்பல வழிகளை சிந்தித்துக் கொண்டிருக்கும் அநுர, வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் படையினரை ஆட்குறைப்பு செய்ய முன்வருவாரா? 15 ஆண்டுகளாக எவ்வித குண்டுத் தாக்குதலும் நடக்காத நிலையில், தமிழர்களை ஒடுக்கி வைப்பதற்கு செலவு செய்வதை விடவும் சிங்கள உழைக்கும் மக்களின் வறுமைக்கு முகம் கொடுப்பது முக்கியம் என்று கருதுவாரா அனுர?
சிறிலங்காவின் பொருளியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது இனச்சிக்கலே. இனச்சிக்கலுக்கு தீர்வு காணாமல் பொருளியல் நெருக்கடியில் இருந்து மீள முடியாது.
சிறிலங்காவில் வாழும் வெவ்வேறு இனங்களின் சம உரிமையை உறுதிசெய்து ஒரு பயணத்தை தொடங்கியிருந்தால் சிறிலங்கா ஒரு சிங்கப்பூராக மாறியிருக்கக் கூடும். ஆனால், அது தேடிக் கொண்ட பேரினவாதப் பாதை அதை ஒரு சோமாலியாவாக மாற்றியிருக்கிறது. இனச்சிக்கலுக்கு தீர்வு காணாமல் பொருளியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது, சிறிலங்காவுக்கு மீட்சியும் இருக்காது.
அநுரவோ, சஜித்தோ, இரணிலோ யார் அதிபர் ஆனால் என்ன? அவர்கள் வரலாற்றின் கருவிகள் என்ற வகையில், இரத்தம் பெருக்கெடுத்து ஓடிய தீவில் அமைதியும் நீதியும் பொறுப்புக்கூறலும் மீளிணக்கமும் ஒற்றுமையும் ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவையாகும்.
சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் வரலாற்றில் அவ்வப் போது வந்த கட்சிகளும் தலைவர்களும் வரலாற்றின் கருவிகளாக இருந்து தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை முன்னகர்த்தியே வந்துள்ளனர்.
தமிழர்களோடு பேசப் புறப்பட்டவர்கள் சிங்கள அரசியலில் பின்னடைவையே சந்தித்துள்ளனர். ஒருபடி மேலே போய் உடன்பாடு கண்டவர்களில் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறும் உண்டு. தமிழர்களின் மண்டையைப் பிளந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொத்துக் குண்டு வீசியவர்கள், இனவாதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் அரசியலில் மென்மேலும் வளர்ந்து செல்வாக்கு செலுத்திய வரலாறே உண்டு.
சிங்கள பெளத்தப் பேரினவாதத்தைப் பொறுத்தவரை நாட்டைப் பெரும் நெருக்கடிக்கு தள்ளும் விளைவை ஏற்படுத்திய இனவழிப்புப் போரை நடத்தி, முள்ளிவாய்க்காலில் தமிழர்களையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் மூழ்கடித்துள்ளனர். பெரும் விலை கொடுத்து இதை நடத்தி முடித்திருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம், வலிமையற்ற தமிழர்களுக்கு தங்க தாம்பாலத்தில் வைத்து உரிமைகள் எதையும் அள்ளிக் கொடுத்துவிடப் போவதில்லை.
இனவாதத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிராக கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை செயல்படுத்தி வருகிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் படைக்குவிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், காணிகள் ஆக்கிரமிப்பு, பெளத்த விகாரைகளை நிறுவுதல் எனப் பற்பல வழிகளில் தாயகச் சிதைப்பு நடந்து வருகின்றது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலையை மாற்றி அங்கே தமிழர்களை சிறுபான்மையாக்குவதுதான் அவர்களின் நோக்க்கம்.
அநுரவின் முன் இருக்கும் தெரிவு என்ன? ஏற்கெனவே செய்யப்பட்ட கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பு முயற்சிகளை திருத்தியமைப்பாரா? அல்லது இனியேனும் அவை நடக்காமல் தடுத்து நிறுத்தவாரா? அல்லது கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியறாமல் முன்னெடுப்பாரா?
கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பில் ஒரு பகுதி, இந்திய இலங்கை உடன்படிக்கையின் பெறுபேறாய் உருவாக்கப்பட்ட மாகாண சபை என்ற ஏற்பாட்டையே இல்லாதொழிப்பதாகும். அதற்கு அரசமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும். ஒரு புதிய அரசமைப்பின் வழியாகத்தான் அதை செய்ய முடியும். 2014 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கு சிறிலங்கா அரசு தேர்தல் நடத்தவில்லை.
இந்திய இலங்கை உடன்படிக்கையை ஏற்காத, 13 ஆவது திருத்தத்தை வெளிப்படையாக எதிர்க்கிற ஜேவிபி ஆட்சியில் இருக்கிறது. இந்தியாவுக்கு சமாதானம் சொல்லும் வகையில் சமரசம் செய்து கொள்வது போல் இன்னும் ஓராண்டில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துவதாக சொல்லியுள்ளார் அநுர. ஆனால், இதற்கு ஏற்ப ஜேவிபியின் கொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லையே! முதலாளித்துவ கட்சிகள் போல் இடதுசாரி கட்சிகள் சந்தர்ப்பவாதமாக திடீர் முடிவுகளை எடுக்க முடியாது.
சிங்கள பெளத்த பேரினவாத வரலாற்றின் கருவியாக இருந்து மாகாண சபைகளை முடிவுக்கு கொண்டு வரப் போகிறாரா? அல்லது இனச் சிக்கலுக்கு தீர்வு கண்டு சிறிலங்காவின் மீட்பராக மாறப்போகிறாரா? தமிழர்களுடைய கோரிக்கைகள் என்ன? என்பதை பொதுவேட்பாளர் வழியாக தமிழ் மக்கள் அறியத் தந்துள்ளனர். அக்கோரிக்கைகளூக்கு முகம் கொடுத்து இனச்சிக்கலைத் தீர்க்க முற்படுவாரா?
புதிய வரலாறு படைக்க நினைக்கும் சிறிலங்கா அதிபர் அநுரவிற்கு அயர்லாந்து தேசிய இனப் போராட்டம் தொடர்பான மார்க்சின் கருத்தொன்று இத்தருணத்தில் உதவக் கூடும்.
“இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்து செல்வது சாத்தியமற்றது என நான் முன்னர் நினைத்தேன். இப்பொழுது அது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன்” … “ஆழ்ந்து ஆராய்ந்ததில் எதிர் நிலையில் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது என இப்போது நம்புகிறேன். அயர்லாந்தைக் கைவிடும்வரை ஆங்கிலத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.”
நன்றி உரிமை மின்னிதழ்