ஆன்மீக வேடத்தில் அரசியல் சதுரங்கம்! – மீ.த.பாண்டியன்

இராமாயணம், மகாபாரதம் இரு பெரும் காப்பியங்கள். இராமாயணத்தில் கதாநாயகன் இராமர், வில்லன் இராவணன். மகாபாரதத்தில் அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள் கதாநாயகர்கள், வில்லன் துரியோதனன் . கதைகள் வடக்கில் உருவாக்கப்பட்டு தெற்கு வரை பரப்பப்பட்டுள்ளது. இராமன், சீதா, லெட்சுணன், அனுமார் சகிதமான படங்கள் மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்களில் வரவேற்பறையில் தொடங்கி பூஜை அறைக்குள் நுழைந்தன. நமக்கு ஏது பூஜை அறை? இராமன் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் பிறந்ததாகவும் இராமஜென்ம பூமி எனவும் நாடு முழுவதும் அரசியல் சதுரங்க வேட்டை நடந்தது.

செங்கல் ஊர்வலங்களும், இரத யாத்திரைகளும் ஆர்.எஸ்.எஸ் – பாசக – சங்பரிவார அமைப்புகளால் நடத்தப்பட்டு 1992 டிசம்பர் 6 இந்துமதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் ழுவிய அம்பேத்கர் நினைவு நாளில் இஸ்லாமியர்களின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019 வரை அதே இடத்தில் இராமர் கோவில் கட்டுவோம் என இந்துமத வெறியூட்டப்பட்டு, இஸ்லாமிய வெறுப்பு பரவலாக்கப்பட்டு இந்திய (இந்து) நீதிமன்றம் இடித்தவர்களிடமே இடத்தை ஒப்படைத்தது.

இந்திய மக்கள் எனச் சொல்லப்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இரத்தக் கண்ணீர் வடித்தனர். அமைதி காத்தனர். நீதியை எதிர்பார்த்த சிறுபான்மை மக்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டு வருகிறது. 2024 சனவரி 22 அயோத்தியில் மோடி அரசு முயற்சியில் கட்டப்பட்டு திறக்கப்படுகிறது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கோவில் படமும், அச்சதைக்கு அரிசியும் வீட்டில் விளக்கேத்த அறிவிப்பும் வந்த வண்ணம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பாசக – சங்பரிவார் அமைப்புகள் இராமரையும் மோடியையும் இணைத்தே 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்தை நடத்தி வருகின்றனர். நாடுதழுவிய வகையில் இலவச இரயில் பயணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரப்புரை அணிதிரட்டலாக மாறியுள்ளது.
தென் மாநிலங்கள் பாசக எதிர்ப்பு மாநிலங்களாக நீடிக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் – பாசக தலைவர்களின் வருகை குறிப்பாக தமிழ்நாடு, கர்னாடகா, கேரளா நோக்கி அடிக்கடி பயணப்பட்டு வருகின்றனர். ஆன்மீகப் பயணம் எனும் பெயரில் அரசியல் பயணமாகக் கிளம்பியுள்ளார் மோடி. திருச்சி, இராமேஸ்வரம், மதுரை என இராமாயண இராமன் வந்த வழித்தடத்தில் தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் பயணப்பட்டு நேரே அயோத்தி செல்கிறார். வீட்டிற்குள்ளிருந்த பக்தியை வீதியில் விநாயகர் ஊர்வலமாக, அனுமன் ஜெயந்தியாக, தற்போது இராமர் கோவிலாக பக்தியை காப்பியக் கதாபாத்திரத்தின் மீது ஏற்றி மதவெறிச் சூழலை உருவாக்கி வருகின்றனர். சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் பாபர் மசூதி வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் பெரும்பான்மை என அணிதிரட்டல் நடத்த வாக்கு வங்கி வேட்டைக்காக இராமர் கோவில் அரசே கட்டுவதும், அரசு விடுமுறை அளிப்பதும் என்ன வகை நீதி?

இதை எப்படி எதிர்கொள்வது? 2024 தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் ஒரு வகை! வாக்கு அரசியலில் அதிகாரத்திலிருந்து பாசகவை அகற்றுவது அரசியல்! மக்கள் மனங்களில் காசித் தமிழ்ச் சங்கமம், சௌராஸ்ட்ரா தமிழ்ச் சங்கமம், இராமர் கோவில் கும்பாபிசேகத்திற்கு தமிழ்நாட்டு நதிகளிலிருந்து கலசங்களில் நீர் என காப்பியக் கதாபாத்திரத்தை கடவுள் என முன்னிறுத்தும் சதுரங்கத்தில் மக்கள் சார்பில் நாம் எப்படி எதிர்கொள்வது? தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்பும் தமிழ்நாடு, தென் மாநிலங்கள், இந்திய ஒன்றியம் முழுமையும் மதச்சார்பற்ற சனநாயகத்திற்காகப் போராடும், சிந்திக்கும் கருத்தாளர்கள் முன் சவாலாக இந்துத்துவ, காவி பயங்கரவாத அரசியல் கார்ப்பரேட் நலனுக்கான பாசிச மோடி இராமர் பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவர்கள் நடத்திய படுகொலைகளில் மகாத்மா காந்திக்கு அடுத்து கிறித்தவப் பாதிரியாரை வண்டியோடு எரித்த சம்பவங்கள் மறக்க முடியாதது. மன்னிக்க முடியாதது. இராமாயணம் நம்மைக் வானரக் குரங்குகளாக்கி தெற்கின் மீது வடக்கு வென்ற கதையாக உள்ளது. பாசிச மோடியின் பாசக இராமர் கோவிலைப் புறக்கணிப்போம்! சனாதன சங்கராச்சாரியார்களே புறக்கணிக்கின்றனர்.
கதையை மாற்றி எழுத வேண்டிய சூழல் நம்முன்னே உள்ளது. சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்தவ, பௌத்த, சமண மதங்களின் மக்களுடன் இணைந்து பெரியார், அம்பேத்கர், மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி கருத்தியல், பண்பாட்டு, அரசியலில் வீரியமிக்க தாக்குதலை எதிரிகளுக்கு கொடுக்கும் அதே வேளை, சாதி மறுத்த, சமத்துவ, சகோதரத்துவ, மதச்சார்பற்ற சனநாயகச் சிந்தனைகளை மக்கள் மயமாக்குவோம்!
மாபெரும் கடமை நம்முன்னே உள்ளது தோழர்களே! ஒன்றிணைவோம்!
தோழமையுடன்
மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பேச: 94431 84051
It’s waste of time
Unless you Guys comes down to streets agitate against
Modi fascist Guys
Atleast you Guys issues bit notices affix Posters hoarding about corrupt Fascist Acts of Modi in a democratic manner throughout India in all languages 😀
Another sad even at this juncture dravidan Parties leaders running 🏃♂️ behind money only
Congress leaders throughout India in darment Stage
Failed and neglected to Strengthen it’s Youth and Legal wings to face these two top class Criminals from Gujarat