தமிழக அளவில் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை என்ன?  முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்

11 Apr 2020

விதைக்கிற காலத்தில் விளையாடிக் கொண்டிருந்தால், அறுக்கிற காலத்திலும் விளையாடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான், ஊரடங்கு காலத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதில் இருந்துதான் அதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்று முடிவாகிறது. மருத்துவக் குழு இன்னும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று ஏப்ரல் 10 அன்று காலையில் பரிந்துரைந்துள்ளது. ஏப்ரல் 10 மாலையில் மத்திய  சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்னும் மூன்று வாரங்களுக்கு இந்திய அளவில் நீடிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லியுள்ளார். இன்று காலை பிரதமருடன் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துரையாடியுள்ளனர். மாலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்கின்றது. ஒருவழியாக, முழு ஊரடங்கை மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிப்பதாக அறிவிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஊரடங்கின் நோக்கம் என்ன?

ஊரடங்கு என்பது தொற்று இருப்போரையும் தொற்று இல்லாதோரையும் வலுக்கட்டாயமாக சமூக இடைவெளியைப் பேணச் செய்வதாகும். அத்துடன், ஊரங்கு என்பது கொரோனா கிருமியோடு வாழப் பழகுவதற்கானத் தயாரிப்புகளை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் மிகக் குறுகிய மற்றும் வலிநிறைந்த காலம். இக்காலத்தில் உரிய அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டு கிருமித் தொற்றைப் புரிந்து கொள்ளுதல், மருத்துவக் கட்டமைப்பை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு ஏற்ற வகையில் தயாராக்கிக் கொள்ளுதல், மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், அவர்களின் பாதுகாப்புக்கான தயாரிப்பை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்திருக்க வேண்டும். ஊரங்கு என்பதே ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தயாரிப்பை மேற்கொள்வதற்கு எடுக்கும் காலம் தான். எனவே, முழு ஊரங்கு கால நீட்டிப்பு என்பது வெறுமனே கொரோனா கிருமியை மட்டும் சார்ந்ததில்லை அரசின் செயல்திறன், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை சார்ந்துள்ளது.

ஊரடங்கு பற்றித் தமிழக அரசுக்கு தெளிவு இருக்கின்றதா?

பிரதமர் ஊரடங்குக்கு அறிவிப்புக் கொடுக்கும் முன்பே தமிழக அரசு மார்ச் 31 வரையான ஊரடங்குக்கு தயாராகி இருந்தது. அதாவது மார்ச் 24 மாலை 5 மணியோடு ஊரடங்கிற்குள் தமிழகம் சென்றுவிட்டது. பிரதமர் அதே நாள் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்தான் நான்கு மணி நேர இடைவெளி தந்து நள்ளிரவு 12 மணி தொடங்கி 21 நாள் ஊரடங்கு என்று 2005 ஆண்டைய தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் தரக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தி நாடு முழுமைக்குமான ஊரடங்கை அறிவித்தார். இதுகுறித்து மாநில அரசுகளோடு கலந்து பேசவில்லை. உடனே, தமிழக அரசும் ஏற்கெனவே தான் அறிவித்த ஒரு வாரகால ஊரடங்கை 21 நாள் ஊரடங்காக நீடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. அப்படியென்றால், மார்ச் 25 இல் இருந்து மார்ச் 31 வரை ஊரடங்கு என்று தமிழக அரசு எதன் அடிப்படையில், என்னென்ன காரணங்களைக் கணக்கில் எடுத்து அறிவித்திருந்தது? மத்திய அரசு என்ன காரணங்களை முன் வைத்து 21 நாள் ஊரடங்கை அறிவித்தது? ஒரு வார கால ஊரடங்கு போதுமென்ற தமிழக அரசின் மதிப்பீடு தவறா? அல்லது 21 நாள் ஊரடங்கு தேவை என்ற மத்திய அரசின் மதிப்பீடு தவறா? இதற்கெல்லாம் என்ன அறிவியல் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன? ஊரடங்கு என்பது மக்களுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கையை நிறுத்தி வைப்பதாகும். அதுகுறித்து இவ்வரசுகள் ஒரு வாரம் , 21 நாள், மேலும் இரண்டு வாரம் என எண் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஊரடங்கு காலத்தில் பரிசோதனை?

”ஆய்வு, ஆய்வு, ஆய்வு” என்று உலக நலவாழ்வு மையம் உலக நாடுகளை நோக்கி சொல்லியிருந்த போதும் இந்தியா இன்றளவும் ஆய்வில் பின் தங்கியிருக்கிறது. தமிழகம் தன்னுடைய முதலாவது கொரோனா நோயாளியை பிப்ரவரி 28 அன்று பரிசோதித்தறிந்துவிட்டது. ஆனால், நாளொன்றுக்கு அரசு செய்யும் பரிசோதனை எண்ணிக்கை இன்றும் குறைந்தபட்சம் 1000 என்ற எண்ணிக்கையைக்கூட எட்டவில்லை. கிட்டத்தட்ட தமிழகத்தை ஒத்த மக்கள் தொகையைக் கொண்ட பிரான்சு நாளொன்றுக்கு சுமார் 10000 பேருக்கு பரிசோதனை செய்கிறது. ரேபிட் ஆண்டிபாடி பரிசோதனை அல்ல, RT-PCR பரிசோதனையே இந்த அளவுக்கு செய்கிறது. தென்கொரியா, ஈரான் என எந்த நாட்டை எடுத்தாலும் தமிழகம் இதில் கிட்டவே நெருங்க முடியாது. ஆனால், பிற நாடுகளோடு ஒப்பிட்டால் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிட்டாலும் தமிழகம் பின் தங்கியிருக்கிறது. தில்லியையும்விடவும் மராட்டியத்தைவிடவும் கேரளாவைவிடவும் தமிழகம் பின் தங்கியிருக்கிறது வெறும் 3.5 கோடி மக்கள்தொகையைக் கொண்ட கேரளா இதுவரை 13339 பேருக்கு பரிசோதனை செய்துள்ளது. ஆனால், எட்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகமோ இதுவரை 8,410 பேருக்குதான் பரிசோதனை செய்துள்ளது. எவ்வளவுக்கு நோய்த் தொற்று உள்ளோர் எண்ணிக்கை கூடுகிறதோ அவ்வளவுக்கு நோய்த் தொற்றுக்கான பரிசோதனை தேவையும் கூடுகிறது. அப்படிப் பார்த்தாலும்கூட கேரளத்தில் நோய் உறுதி செய்யப்பட்டோர் மொத்தம் 364 பேர் தான், தமிழகத்தில் நேற்றுவரை உறுதிசெய்யப்பட்டிருப்போர் 911 பேர்.  இந்த வகையிலும் தமிழகம் பரிசோதனையில் பின் தங்கியிருக்கிறது. பரிசோதனை விசயத்தில் தமிழக அரசு முன் பாதியில் தூங்கிவிட்டது தெளிவாக தெரிகிறது. மார்ச் 31 வரை தமிழகம் செய்திருந்த மொத்த பரிசோதனை 2354. ஏப்ரல் 1  – ஏப்ரல் 10 வரை செய்தவை 6056. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 600 பரிசோதனைகள் கடந்த பத்து நாட்களில்தான் செய்து வருகிறது. இது மிக குறைவு.

  1. ஊரடங்கை அறிவித்த பொழுது ( மார்ச் 24) தமிழக அரசு பரிசோதனை தொடர்பாக வைத்திருந்த இலக்கு என்ன?
  2. கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் நாளொன்றுக்கு 3 shift வீதம் shift ஒன்றுக்கு 100 பரிசோதனைகள் என மொத்தம் 300 பரிசோதனைகள் செய்ய முடியும் என்று நலவாழ்வுத் துறைச் செயலர் சொன்னார். அப்போதும், பிற மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்ய முடியும் என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஒவ்வொரு பரிசோதனை மையங்களிலும் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்?
  3. விரைவுப் ஆண்டிபாடி பரிசோதனைக் கருவிகள் 4 இலட்சம் வாங்குவதற்கு purchase order கொடுத்த தேதி என்ன?
  4. அடுத்த இரு வாரங்களில் தமிழக அரசு பரிசோதனை தொடர்பில் வைத்திருக்கும் இலக்கு என்ன?

ஒரே தேசம், ஒரே ஊரடங்கு பல்லவி:

ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என்று வெறிப்பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் காவி-கார்ப்பரேட் கும்பல் வழக்கம்போல ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த நாட்டுக்கு 21 நாள் ஊரடங்கு என அறிவித்தது. இதில் எப்போதும் போல தனது பெரியண்ணன் தனத்தை மோடி வெளிபடுத்திக் கொண்டார். ஆனால், 21 நாள் முடிவதற்கு முன்பே இன்னும் இரு வாரங்கள் தேவை என்ற அறிவிப்பை ஒடிசாவும் பஞ்சாப்பும் அறிவித்துக் கொண்டன. உண்மையில் மத்திய அரசின் குழுவும் சரி கேரள அரசின் நிபுணர் குழுவும் சரி ஊரடங்கை விலக்குவது என்பது நாடு தழுவிய அளவில் ஒரே நேரத்தில் செய்யக் கூடியதல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படியென்றால் ஊரடங்கை அமல்படுத்தியதும் அவ்வண்ணம் செய்திருக்க வேண்டியதில்லைதானே. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவிலான விவரங்கள், மருத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்திருக்க வேண்டும். இனி, அப்படித்தான் நடக்கப் போகிறது.

கேரள அரசின் நிபுணர் குழு, ஒரு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். எத்தனை hotspot கள் இருக்கின்றன, தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்து ஊரடங்கைப் படிப்படியாக விலக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு நோய்த்தொற்று கூட கண்டறியப்படவில்லை. சுமார் 9 மாவட்டங்களில்( நீலகிரி, தென்காசி, கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை) நோயாளிகள் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ளது. சேலம், திருவள்ளூர், திருவாரூர், விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருபத்தூர், கன்னியாகுமரி, வேலூர், கடலூர் என 10 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டோர் 20 க்கும் குறைவாக உள்ளனர். இவையன்றி 15 மாவட்டங்களில் 20 பேருக்கு மேல் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை போன்ற நகரங்களில் எண்ணிக்கை 50 க்கும் அதிகமாக உள்ளது. எனவே, நாள்தோறும் எண்ணிக்கை தமிழக அளவில் அதிகரிக்கிறதே என்று அலறாமல் மாவட்ட அளவில் எண்களைப் பரிசீலிக்க வேண்டும். அதிலும் பெரும்பாலானவை ஒரே தொற்று மூலத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதும் பதறுவது தேவை இல்லை என்பதை காட்டுகிறது.

மார்ச் 31 இல் இருந்துதான் தீவிர அறிகுறிகளான மூச்சு திணறல் இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்வது என்ற முடிவை எடுத்து, தில்லி சென்று வந்தோர் அனைவரையும் தமிழக அரசு பரிசோதிக்க தொடங்கியது. அதே அணுகுமுறையை முன்பே தொடங்கியிருந்தால் வேறு தொற்று மூலத்தில் இருந்து நோய்க் கண்டறியப்பட்டோரின் தொடர்புகளையும் இந்நேரத்திற்கு பரிசோதித்திருக்க முடியும். மாநிலப் பட்டியலில் வரும் நலவாழ்வுத் துறைத் தொடர்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல் என்பது பரிந்துரையே அன்றி, கட்டளை இல்லை. தமிழகம் முன்பே தொற்று அறியப்பட்டோரின் தொடர்புகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யத் தொடங்கி இருக்க வேண்டும். ஆயினும் நேற்று தலைமைச் செயலர் பேட்டியின்படி, இன்னும் இரு நாட்களில் தில்லி பயணித்தோர் அல்லாத நோய்த் தொற்றாளர்களின் தொடர்புகளுக்கும் பரிசோதனையை முடித்துவிடுவோம் என்று சொல்லியுள்ளார். எனவே, ஏப்ரல் 14 க்கு முன்பே நமக்கு இன்னும் துல்லியமான வரைப்படம் தெரிந்துவிடும்.

நோய்த் தொற்றியல் ஆய்வு ( epidemiological study)

உலகம் முழுக்கவே நோய்த் தொற்று ஏற்பட்டோரில் 65% விழுக்காட்டினர் எந்த அறிகுறியும் இல்லாதவர்கள்தான். தமிழகத்தில் இப்போது கண்டறியப்பட்டுள்ளோரில் கனிசமானோர் நோய் அறிகுறி இல்லாமல் இருக்கின்றனர். இது குறித்த epidemiological study இன்னும் செய்யப்பட வில்லை. மூன்று நாட்களுக்குமுன்புதான், நலவாழ்வுத் துறை செயலர் பீலா இராஜேஷ் இத்தகைய ஆய்வை செய்ய National Institute of Epidemology ஐ அழைத்துள்ளோம் என்று சொன்னார். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், ஊரடங்கின் நோக்கங்களில் ஒன்று நோய்த் தொற்றின் தன்மை, கிருமி ஒரு குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் விதம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் golden time மதிப்புவாய்ந்த மணித்துளிகள் ஆகும்.

  • ஊரடங்கை அறிவிக்கும் பொழுது தமிழகம் இது குறித்து கொண்டிருந்த திட்டமிடல் என்ன?
  • சரியாக, எப்போது epidemiological study க்காக NIE க்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது?
  • இப்போதும் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து தமிழக அரசு கொண்டிருக்கும் இலக்கு என்ன?

போதிய பரிசோதனை இல்லாததால் பதற வேண்டுமா?

நாம் போதிய பரிசோதனை செய்யவில்லை. எனவே, நமக்கு தெரியாமல் சமூகத்தில் எண்ணற்றோர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்க கூடும் என்பது தொடக்கம் முதலே இருக்கும் ஒரு வாதம். அதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. ஆனால், இந்த 21 நாள் ஊரடங்கு அமலில் இருக்கும் பட்சத்தில் தொற்றுப் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு பெருமளவிலான தொற்றுப் பரவல் ஏற்பட்டிருக்குமாயின் அது பரிசோதனை இல்லாவிட்டாலும் இந்நேரம் வெடித்து இருக்கும். தீவிர மூச்சுத் திணறல் பிரச்சனையுடன் வழக்கத்தைவிட அதிகமானோர் மருத்துவமனைகளை நோக்க் வந்திருப்பர். SARI Severe Acute Respiratory Infection கொண்டோர் எண்ணிக்கையில் திடீர் உயர்வு எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, SARI பிரச்சனையுடன் மருத்துவமனை வந்தோரில் 71 பேருக்குப் பரிசோதனை செய்ததில் ஒருவருக்குகூட கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பதைக் கண்டறிந்தோம் என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தலைமைச் செயலர் சண்முகம் சொல்லியுள்ளார். எனவே, தீவிர நோய்த் தொற்றுப் பரவல் இருக்குமாயின் இந்த 21 நாட்களில் ( 14 நாட்கள் incubation period என்ற வகையில்) ஒன்று மருத்துவமனைகளில் அது தெரிந்திருக்க வேண்டும் அல்லது சாவு எண்ணிக்கையின் அதிகரிப்பில் தெரிந்திருக்க வேண்டும். இரண்டிலுமே வெளிப்படாத நிலையில் உண்மையில் சமூகத் தொற்று என்பது ஏற்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். எனவே, ஊரடங்கை எப்படி விலக்குவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது!

திடீர் வெடிப்பு ஏற்பட்டுவிட்டால்?

ஒருவேளை திடீர் வெடிப்பு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது? என்று சிலர் கேட்கக் கூடும். முதல் நோய்த் தொற்றாளர் கண்டறியப்பட்ட நாள் பிப்ரவரி 28. நூறாவது நோய் தொற்றாளர் கண்டறியப்பட்ட நாள் மார்ச் 31. ஏப்ரல் 10 வரை 1000 பேரைத் தாண்டவில்லை. Exponential rise ஏற்பட்டிருந்தால் இந்நேரத்திற்கு பல்லாயிரங்களைத் தொட்டிருக்க வேண்டும். இதுவே நெருக்கடிக்கு உள்ளானப் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்டும் mathematical model.

நாடு 100 நோய்த் தொற்று நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்
ஸ்பெயின் மார்ச் 2 மார்ச் 14
இத்தாலி பிப்ரவரி 23 மார்ச் 9
ஈரான் பிப்ரவரி 26 மார்ச் 13
இங்கிலாந்து மார்ச் 5 மார்ச் 24
தமிழ்நாடு மார்ச் 31 மார்ச் 25

 

எனவே, நாம் நோய்ப் பரவல் தீவிரமடையும் முன்பே ஊரடங்குக்கு சென்றுவிட்டோம். அதுமட்டுமின்றி, வெப்ப நிலை, இந்தியர்களுக்கு உள்ள மரபணுவின் குறித்த அம்சம், இந்தியாவின் சுகாதாரமற்ற சூழலால் இருக்கும் கூடுதலான எதிர்ப்புச் சக்தி, வைரஸின் வீரியம் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படும் பல்வேறு காரணங்களாலோ அல்லது அறியப்படாத காரணங்களாலோ ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு தன்மையில் இந்தியாவில் நோய்ப் பரவல் இல்லை. இதற்கான காரணம் என்ன என்று நோய்த் தொற்றியல் ஆய்வில் கண்டறிய வேண்டும். நாம் அதில்தான் பின் தங்கியிருக்கிறோம்.

இந்த மதிப்பீடுகளைத் தாண்டி திடீர் வெடிப்பு ஏற்பட்டு விட்டால்? அந்த திடீர் வெடிப்பை எதிர்நோக்கிய தயாரிப்புகளுக்குத்தான் இந்த ஊரடங்கே ஒழிய, ஊரடங்கை நீட்டித்துச் செல்வதற்கு அல்ல ஊரடங்கு! வெடிப்பு ஏற்பட்டால் என்ன நிகழும்? நமது மருத்துவ கட்டமைப்பு தாங்கு திறன் இன்றி முறிந்துவிழும். அதாவது, தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள், உயிர்வலியூட்டிகளோடு கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டு மனிதப் பேரவலம் நிகழும்.

இப்போதுவரை சுமார் 911 பேர் நோய்த் தொற்றில் இருக்கும்பொழுது ஒரே நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கை 10 ஐ தாண்டவில்லை. நோய்த் தொற்றில் இந்தியாவில் பெரும்பாலானோர் 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட அகவையினர் என்ற கணக்கும் தெரியவந்துள்ளது. தமிழகத்திலும் இந்த மதிப்பீடு அப்படித்தான் உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கணிசமாணோர் நோய் அறிகுறி இன்றி நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்கள். அவ்வகையில் திடீர் என்று நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை உயருமாயின் நூற்றுக்கு ஒருவர் என்ற விழுக்காட்டில் ஆயிரம் பேருக்கு 10 பேருக்கு தீவிர சிகிச்சையின் தேவை ஏற்படலாம். தற்போதைய கையிருப்புப் படி 3371 உயிர்வலியூட்டிகள் நம்மிடம் உள்ளது. அதாவது இன்றிருக்கும் மொத்த நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 மடங்கு உயர்ந்தாலும் அதன் விகிதத்திற்கு ஏற்றாற் போல் தீவிரச் சிகிச்சைப் பிரிவுத் தேவைக்கான உயிர்வளியூட்டிகள் நமக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி, இத்தாலியில் சுமார் 60% விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேலான முதியோர் ஆவர். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை முதியவர்களின் மொத்த விழுக்காடு இந்த அளவுக்கு அதிகம் கிடையாது.

மேலும் தனிமைப்படுத்தும் படுக்கைகளைப் பொருத்தவரை 29,074 வரை கண்டறியப்பட்டுள்ளது. இதை ஒரு இலட்சம்வரைக் கூட நம்மால் உயர்த்த முடியும். அந்த அளவுக்கு நமக்கு வளம் இருக்கிறது. அதாவது, கல்லூரி, பல்கலைக் கழகங்கள், தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், கட்சி அலுவலங்கள், இராணுவ முகாம்கள், இரயில் பெட்டிகள் என ஏராளமானோர் தங்கள் இடத்தைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

எஞ்சிய இருப்பது மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவப் பணியாளர்கள் தொடர்பான தாங்குதிறன். அதைப் பொருத்தவரை நேற்று தலைமைச் செயலரின் பேட்டியின்படி மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு – முகக்கவசம், பாதுகாப்பு உடை, கையுறை ஆகியவற்றுக்கு உள்நாட்டு உற்பத்தியை முடுக்கிவிட்டிருப்பதாக சொல்லியுள்ளார். மாநில அரசு தன்னுடைய சொந்த திறனில் இருந்து அணியமாகிக் கொள்ள முடியும் என்றும் சொல்லியுள்ளார். ஏற்றுமதி முழுக்க தடைப்பட்டு இருப்பதால், திருப்பூரின் உற்பத்தியைக் கொண்டே இதை செய்து கொள்ள முடியும் என்பது வெள்ளிடை மலை.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பொருத்தவரை அரசு நம்முடைய கொள்திறன் என்ன? என்பது பற்றி மதிப்பீடு செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகள் அன்றாட அரசின் செய்தி அறிக்கையில்(bulletin) களில் பதிவிடப்படுவதில்லை.

திடீர் வெடிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கான தயாரிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே படுகிறது. அப்படியிருந்தும் தமிழக அரசு இந்த முழு ஊரடங்கை  நீடிக்குமாயின் அதற்கான காரணங்களை சொல்லியாக வேண்டும். ஊரடங்கு காலத்தில் தாங்கள் எதை செய்யத் தவறியதால் ஊரடங்கை நீட்டிக்கிறோம் என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வைரஸோடு வாழப் பழகுவதை தொடங்குதல்:

தடுப்பு மருந்தோ, நோய் தீர்க்கும் மருந்தோ கண்டுபிடிக்கப்படும் வரை வைரஸோடு எப்படி வாழ்வது? என்பதுதான் இனி சிந்திக்க வேண்டியது. ஊரடங்கை தன் விருப்பம் போல் தமிழக அரசு நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது. நீண்ட கால ஊரடங்கு யாரால் செய்ய முடியும் என்றால் எந்த அரசு தன் சொந்த மக்களைப் பட்டியில் கிடத்தாமல் சோறு போட முடியுமோ அந்த அரசுகள் தான் செய்ய முடியும். சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவைப் போல் தன் நாட்டு மக்களுக்கு போதிய நிதி ஒதுக்கக் கூடிய அரசுகள் கால அவகாசம் எடுத்துக் கொண்டு ஊரடங்கை நீட்டிக்கலாம்.

’உங்களுக்கு சோறு போடுகிறோமே, உங்களுக்கு எதுக்கு ஊதியம்” என்று புலம்பெயர் தொழிலாளரிடம் கேட்கும் இரக்கமற்ற  அரசு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டு செல்ல முடியாது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் இந்தியா அமெரிக்காவையும், இங்கிலாந்தையும், கனடாவையும் பார்த்து ஊரடங்கு என்ற தெரிவை நீட்டித்துக் கொண்டு போக முடியாது.

தமிழக அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் அறிவிப்புக்கூட ஒரு வார ஊரடங்குக்காக கொடுக்கப்பட்டதுதான். இப்போது ஒரு வாரம் மூன்று வாரம் ஆகி, மூன்று வாரம் ஐந்து வாரமானால் மக்களைக் கொரோனா கொல்வதற்கு முன் பட்டினிக் கொன்றுவிடும். வாடகை வாங்காமல், முழு சம்பளத்தைக் கொடுப்பது, வட்டியில்லாமல் கடன் கொடுப்பது, வேலை நீக்கம் செய்யாமல் இருப்பது என்பது அனைத்தையும் எப்படி அரசு மேற்பார்வையிடும். ஊரடங்குக்குப் பின்னான வாழ்க்கை நிலைமை கொரோனாவைவிடவும் கொடியதாக இருக்கப்போகிறது. கொரோனா சாவுக்கு மட்டும் அரசு பொறுப்பு அல்ல, மக்களின் பட்டின்ச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் நடந்து வந்து செத்தவர்களுக்கும் அரசு தான் பொறுப்பு. ஊரடங்கை நீட்டிக்கப் போகிறீர்களென்றால் மக்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன நிதி ஆதாரங்கள் இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லியாக வேண்டும்.

ஊரடங்கு என்பதே கிருமியோடு வாழ்வதற்கு சமூகத்தை, வாழ்க்கை முறையை, மருத்துவக் கட்டமைப்பை தயார் படுத்த எடுத்துக் கொள்ளும் காலம் தான். ஊரடங்கைப் பகுதியளவேனும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றால் இந்த தயாரிப்புக் காலத்தில் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, மாநிலம் விட்டு மாநிலம் செல்வது நாடு விட்டு நாடு செல்வது என படிப்படியாக இயல்பு நிலைக்கு செல்வதற்கு இன்னும் வெகுகாலம் பிடிக்கும். கேரள அரசின் நிபுணர் குழுவும் மத்திய அரசின் ஊரடங்கு விலக்கல் நிபுணர் குழுவும் கொடுத்திருக்கும் பரிந்துரைகளைப் பார்த்தால், ஊரடங்கை விலக்கிக் கொண்டு முன்னேறும் பாதை மிகக் கடினமானதாக தெரிகிறது. மக்களுக்கு இன்னும் அதிகமான வலியைக் கொடுக்க கூடியது. எனவே, அந்த கடினமான நிகழ்முறையை எவ்வளவு விரைவாக தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவாக மக்களையும் அரசு இயந்திரத்தையும் புதிய வாழ்க்கை முறைக்குப் பயிற்றுவிக்க முடியும், அவ்வளவு விரைவாக படிப்பினைகளைப் பெற்று முன்னேற முடியும்.

இறுதியில் சுமை யார் தலையில் ஏற்றப்படும்?

தமிழக அரசு இதை கிருமித் தொற்றைத் தடுக்கும் விவகாரமாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஊரடங்கு நடைமுறை மக்களின் சமூக, பொருளியல், பண்பாட்டு வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளவிட முடியாதது. கொரோனாவைவிடவும் கொடியது. சமகால தலைமுறைக் கண்டிராத பேரவலம். மத்திய அரசு பரிந்துரைக்கிறது, கூடுதல் எச்சரிக்கை என்ற பெயரில் எல்லாம் கண்மூடித்தனமாக ஊரடங்கை நீட்டித்துவிட்டு அதற்குப் பின்னான பொருளாதார சுமைகள் யார் தலையில் ஏற்றி வைக்கப்படும்? பெட்ரோல் வரி, போக்குவரத்துக் கட்டண உயர்வு, டாஸ்மாக், வீட்டு வரி உயர்வு போன்று எதில் எல்லாம் மக்களிடம் இருந்து பணத்தை உருவ முடியுமோ அதைத்தான் மாநில அரசு செய்யப் போகிறது. முதுகெலும்பில்லாத தமிழக முதல்வர் நீதிமன்றத்தை நாடி ஜி.எஸ்.டி. பணப் பாக்கியைக் கேட்கவா போகிறார்?

தலைமைச் செயலர் சண்முகம், மருத்துவ இயக்குனர் குழந்தைசாமி போன்றோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சரியான மதிப்பீட்டில் இருப்பதாகவே தெரிகிறது. அவர்களது பேட்டியில் அச்சமோ, பதற்றமோ தெரியவில்லை. ஊரடங்குக்குப் பின்னான வாழ்க்கைமுறைப் பற்றி இயக்குநர் குழந்தைசாமி பேசத் தொடங்கிவிட்டார். ஆனால், முதல்வர் பழனிச்சாமியோ கொரோனாவை ஆட்கொல்லியென்றும் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டம் என்றும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த அளவுக்குப் பீதி ஏற்படுத்துகிறோமா அந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தடுத்த பெருமைகளைப் பேசிக் கொள்ளலாம் என்ற சூது அதில் இருக்கிறது. முதல்வர் பீதியூட்டுகிறார், ஆர்பி உதயக்குமார் முதல்வருக்கு புகழாராம் சூட்டுகிறார், அமைச்சர் ஜெயக்குமார் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை என்கிறார், நலவாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் திரையில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டுவிட்டார். இந்தப் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் அடுத்த சில வாரங்களில் ‘கொரோனா வென்றான்’ என்று முதல்வருக்குப் பட்டம் சூட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம். அதைப் பற்றி உண்மையில் கவலைப்பட்டிருக்க வேண்டியது தூங்கிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் தான். ஆனால், நமது கவலையெல்லாம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் வாழ்க்கைப்பாடு குறித்தும் ஊரடங்கிற்குப் பின்னான வேலையிழப்புகள் குறித்தும் மக்களின் தலைமேல் ஏற்றி வைக்கப்படும் சுமையைக் குறித்தும்தான். எண்ணிப்பார்த்தாலே தலை கிறுகிறுவென சுற்றுகிறது.

எனவே, முழு ஊரடங்கை நீட்டிப்பது இந்நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளின் நிலையைக் கருத்தில் எடுக்காத மேட்டுக்குடித்தனமான, அறிவியலுக்கு முரணான, அலட்சியத்தனமான, தனிநபர் அரசியல் இலாப நட்டங்களை குறி வைத்த முடிவாகும். ஊரடங்கைப் படிபடியாக விலக்குவதை தொடங்க வேண்டிய நேரமிது. இல்லையென்றால், ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிவியல் மற்றும் கணித மாதிரிகள் அடிப்படையிலான காரணங்களை மக்களுக்கு முதல்வர் முன் வைத்தாக வேண்டும்.

கொரோனா ஆட்கொல்லியுமல்ல, தமிழகம் கனடாவும் அல்ல, முழு ஊரடங்கு என்பது விளையாட்டல்ல, மக்கள் நீங்கள் தட்டி விளையாடும் பந்தும் அல்ல! கொரோனாவுக்கு என்று ஊரடங்கை நீட்டித்துக் கொண்டு செல்வது ஏழைகளைப் பட்டினிச் சாவில் தள்ளும் அரசு இயந்திரத்தின் கோர முடிவே!

-செந்தில்

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW