கொரானாவுக்கான ஊரடங்கு – சொந்த ஊருக்குப் போவதற்கா? 

21 Mar 2020

கொரானாவுக்காக வீட்டிலே இருந்து வேலை செய்யுமாறு சிற்சில நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. நாளை பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க முழுநாள் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த வேலை நிறுத்தங்கள், ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. இந்நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும் படிப்பாகவும் நகரங்களுக்கு வந்துள்ளவர்கள் இதை நீண்டநாள் விடுப்பாக கருதி மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போய்க் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இது கொரோனா பரவுவதை தடுப்பதற்காக செய்யப்பட்ட முன்னெடுப்புகளுக்கு உதவாமல் எதிர்மறை விளைவுகளையே கொடுக்கும். இது துயரமானது!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் இவர்களோடு நகரங்கள்தான் அதிகம் தொடர்புக் கொண்டுள்ளன. அவர்களின் வழியாகத் தான் கொரோனாப் பரவி வருகிறது. எனவே, கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்போர் நகரத்தில் இருப்பதற்குதான் வாய்ப்பு அதிகம். எப்படி நாடுவிட்டு நாடு வருவது, மாநிலம் விட்டு மாநிலம் வருவது தடுக்கப்பட்டுள்ளதோ அதுபோல் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் போவதும் நிறுத்தப்பட வேண்டும். இன்றியாமையாப் பொருட்கள் வருவதற்காக மட்டுமே பெரு நகரங்கள் திறந்துவிடப்பட வேண்டும். ஏதோ நீண்ட நாள் விடுமுறைப் போல் நம்மவர்கள் ஊருக்கு செல்வது என்பது நகரங்களில் வாங்கிய கொரோனா நோய்த் தொற்றை தங்களுடைய சிறு நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் கொண்டு செல்வதாகும். அதுவும் தங்கள் பெற்றோர்கள் குறிப்பாக முதியவர்களுக்கு இம்முறை மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டு செல்வதோடு கொரோனா நோய்த் தொற்றையும் கொண்டு சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்!

இன்று உலகிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் இப்படித்தான் நடந்தது. நான்கு நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை(red alert) விடுக்கப்பட்ட பொழுது விவரம் புரியாமல் ஆயிரக்கணக்கானோர் நகரத்தை விட்டு வெளியேறி வேறு அக்கம்பக்கத்து ஊர்களுக்கு சென்றார்கள். அவர்கள்தான் இத்தாலி முழுக்க கொரோனாவைப் பரப்பியவர்களாக மாறிப்போனார்கள்!

எந்த நெருக்கடியானாலும் நம்முடைய பண்பாட்டு மனம் சொந்த ஊருக்கு போய்விட்டால் பாதுகாப்பு என்று கருதுவதுண்டு. நல்லதோ கெட்டதோ நம் ஊரில் இருந்துவிட்டால் சமாளித்துவிடலாம் என்று நம் மனம் சிந்திக்கும். அதனால் வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்கள் கூட எப்படியாவது இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும் என்று தவிக்கிறார்கள். இந்திய அரசும் தனி விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது. ஆனால், இதில் உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அந்தஅந்த நாடுகளில் இருந்தபடி கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று அந்நாட்டு அரசு மற்றும் மக்களோடு சேர்ந்து எதிர்கொள்வதுதான் அறிவியல் கண்ணோட்டமாக இருக்க முடியும். இதுவே பொருத்தமான கொள்கை அணுகுமுறையாக இருக்கும். இதை அணுகுமுறையைத்தான் நாம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் கடைபிடிக்க வேண்டும். இது எல்லைப்புற மாவட்டங்கள் மற்றும் பெருநகரங்களுக்கு வெளியே இருக்கும் உள்பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க உதவும்.

வழக்கமான சிந்தனை முறைக்கு மாறாக இந்த குறிப்பான நிலைமைக்கு ஏற்றாற் போல் நம்முடைய சின்னஞ்சிறு நகர்வுகளும்கூட இருக்க வேண்டும். இதை செய்தால் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்குமா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

எல்லோருக்கும் கொரோனா நோய் தொற்றலாம். ஒவ்வொருவரும் தமக்கு நோய் தொற்ற வாய்ப்புண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. சொல்லப் போனால், கொரோனா நோய் தொற்றி ஒருசிலநாட்கள் கழித்துதான் அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்குகின்றன. இக்காலத்தை incubation period  என்று சொல்கிறார்கள். எனவே, எந்தவொரு நபரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி incubation period இல் இருக்கலாம். எனவே, தமக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று எண்ணிக் கொள்வதற்கு மாறாக தாம் ‘incubation period’ இல் இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வு கொரோனா நெருக்கடி காலம் முடியும் வரை நம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். incubation period இல் இருக்கும் போது இன்னொருவருக்கும் அந்த கிருமியைப் பரப்பிவிடக் கூடாது என்ற உணர்வோடு நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றிய பிறகு உயிர் போகும் ஆபத்து இளைஞர்களைவிட முதியவர்களுக்குத்தான் அதிகம் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். எனவே, இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இதுவரை ஊருக்கு கிளம்பிச் சென்றவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும், இனிமேலும் சொந்த ஊருக்குப் போய்விடுவோம் என்று கிளம்புகிறவர்கள் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும். அதுதான் அவர்களுக்கும் அவர்களுடைய அன்பிற்கு உரியவர்களின் பாதுகாப்புக்கும் நல்லது.

தமிழக அரசும் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற முக்கிய நகரங்களை சீல் வைத்து யாரும் தேவையில்லாமல் வருவதையும் போவதையும் தடுக்க வேண்டும்.

கொரோனாவைப் பொருத்தவரை சொந்த ஊர் பாதுகாப்பானது என்பது பழைய கருத்து. இருக்கும் ஊரில் பாதுகாப்பாக இருப்பதுதான் கொரோனா தடுப்புக் காலத்திற்குரிய கருத்து.

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW