இந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் ?…… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கேள்விகள்
பிப்ரவரி 9,10 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் நடக்கவுள்ள ‘the huddle’ நிகழ்விற்கு இலங்கையின் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வருகை தந்து, இந்திய இலங்கை உறவின் எதிர்காலம் பற்றி உரையாற்ற இருப்பதை தங்கள் பிப் 04 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழில் ஒரு விளம்பர அறிவிப்பாகக் கண்டோம். அதிலிருந்து தங்கள் பார்வையில் ‘fringe elements’ என்று அழைக்கப்படும் தமிழ் அமைப்புகள் இராசபக்சே வருகையைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட அணியமாகி வருகின்றன. சனநாயகத்தின் மீது பற்று கொண்டோரெல்லாம் மோடியின் ஆட்சியைப் பாசிச ஆட்சி என்று சொன்னபடி மிகப் பெரிய அணி சேர்க்கைக்கு முயன்றுவரும் வேளையில் மகிந்த இராசபக்சேவை தி இந்துக் குழுமம் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதால் சில கேள்விகள் எமக்கு எழுகின்றன.
- அண்மையில் ஆளுநர் அலுவலகத்தின் புகாரின் பேரில் காவல் துறை நக்கீரன் கோபாலைக் கைது செய்ய முயன்ற போது ஊடக சுதந்திரத்திற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டுப் போராடக் கண்டோம். அதில் தாங்களும் முக்கிய பங்கு வகித்தீர்கள். மகிந்த இராசபக்சே இலங்கையில் அதிபராய் இருந்த காலத்தில் அங்கே ஊடக சுதந்திரம் பூத்துக் குலுங்கியதா? அண்மையில் மகிந்த இராசபக்சே குறுக்கு வழியில் பிரதமராக முயன்ற போதுகூட ஊடக சுதந்திரத்தின் நிலை என்னவாகுமோ என அங்குள்ள ஊடகங்கள் கவலையுற்றது தங்களுக்கு தெரியாதா? மீரா சீனிவாசனைக் கேட்டுப் பாருங்களேன்.
- சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்ரமசிங்கே சனவரி 8,2009 அன்று கொலை செய்யப்பட்டார். இன்றைக்குவரை அவர் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இப்போது இந்தியாவில் போய்க்கொண்டிருக்கும் ரஃபேல் ஊழல் போல் இலங்கையில் MIG விமானப் பேர ஊழலுக்கு எதிராக கோத்தபய இராசபக்சேவை அம்பலப்படுத்தி எழுதியதற்காகத் தான் அவர் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு அவரது மகள் எழுதியிருக்கும் கட்டுரையின் சுட்டி https://www.colombotelegraph.com/index.php/what-they-did-to-my-father-and-why-they-did-it/
தந்தையின் இழப்பினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் வெறுமைப் பற்றி மெல்போர்னில் இருக்கும் அவரது மகள் எழுதிய கடிதம் இது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் இப்போது 90,000 விதவைகள் இருக்கிறார்கள் என்றால் தந்தையை இழந்த குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருப்பார்களே, அவர்களின் துயரத்தை யார், எங்கே எழுதுவார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன? அதைவிட இந்திய இலங்கை உறவின் எதிர்காலம்தான் தங்களுக்கு முக்கியமல்லவா?
- இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப் போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா.கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசப்படைகளிடம் சரணடைந்த குடும்பங்களோடு இருந்தவர்கள். தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி போரின் முடிவில் தாமாக முன்வந்து சிறிலங்கா அரசப் படைகளின் கைகளில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட தமிழர்கள் இதில் அடங்குவர். சரணடைந்தவர்களும் அதிலும் குழந்தைகளும் காணாமலடிக்கப்பட்ட கதைகள் இலங்கையைத் தவிர வேறெங்கேனும் உண்டென்று தங்களால் காட்ட முடியுமா?
- உண்மை மற்றும் நீதித் திட்டக் குழுவினர் (ITJP) அளித்த அறிக்கை சிறிலங்காப் படை நடத்திய “வல்லுறவு முகாம்கள்” பற்றிய தரவுகளை வெளியிட்டது. இந்த முகாம்கள் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தன.
இந்த அறிக்கை சொல்கிறது:
”மூத்த அதிகாரி அறைக்குள் வந்தார். நாங்கள் ஏதோ இறைச்சி அங்காடியில் கடைவிரிக்கப்பட்டுள்ள இறைச்சி என்பது போல் தனக்குப் பிடித்ததைப் பொறுக்கியெடுத்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினர். அவர் சுற்றுமுற்றும் பார்த்து, என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். என்னை வேறு அறைக்குக் கூட்டிப்போய் வன்புணர்வு செய்தார்.”
“பெண்களில் இருவர் விவரித்தபடி, அவர்கள் ஓர் அறையில் குழுவாக அடைத்து வைக்கபட்டனர். எந்தப் படையாள் வேண்டுமானாலும் அங்கு வந்து ஒருவரைப் பொறுக்கியெடுத்து, அடுத்த அறைக்கோ கூடாரத்துக்கோ கொண்டுசென்று வன்புணர்வு செய்யலாம்” என்கிறது உண்மை மற்றும் நீதித்திட்டக் குழு.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் வைத்திருந்த ’comfort women’ எங்களது நினைவுக்கு வருகிறது. தங்களுக்கு? மாந்த உரிமை செயற்பாட்டாளர் யாஷ்மின் சூகாவால் வெளிக்கொண்டுவரப்பட்ட இந்த அறிக்கை 2009 இல் வந்த பழைய கதையல்ல, பிப்ரவரி 2017 இல் வந்த சூடான செய்தி. ஆயினும், வல்லுறவுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ்ப் பெண்களின் எதிர்காலத்தைவிட இந்திய இலங்கை நல்லுறவுதான் தங்களது கவலைக்குரியதல்லவா?
- அண்மையில் சிறிலங்காவில் வட மாகாணத்தில் மன்னார் நகரத்தில் ஒரு பெரிய கூட்டப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு ஊடகச் செய்தியறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி, இந்தக் கூட்டப் புதைகுழியில் இது வரை 300 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 அகவைக்குட்பட்ட 23 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கும். சிலரைக் கட்டி வைத்துக் கொன்றுள்ளனர். சடலங்களைக் கல்லறையில் போல் அடுத்தடுத்து வரிசையாக அடக்கம் செய்வதற்கு மாறாக, குவித்து வைத்துப் “புதைத்து” முடித்திருப்பது தெரிகிறது. இந்தக் கூட்டப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு கட்டடத்தில்தான் இராணுவ உளவுத்துறை இடம் பெற்றிருந்தது. சற்றொப்பப் பத்தாண்டுக்கு முன்பு போர் முடிந்து விட்டது என்றாலும் இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் பெருந்தொகையான பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட்டப் புதைகுழிகளில் கிடைத்துள்ள சான்றுகள் உட்பட போர்க்குற்றச் சான்றுகளைக் கெடுக்கவும் அழிக்கவுமே உதவக் கூடும். 1990கள் தொடக்கம், பல கூட்டப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றுக்காவது பொறுப்புக் கூறப்பட்டிருக்கிறதென்று தங்களால் மெய்பிக்க முடியுமா?
- இந்திய அரசமைப்பை பாசிஸ்ட்களிடம் இருந்து காக்க வேண்டும் என்று அரசமைப்பை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். ஸுக்கு எதிராகப் போர்ப்பரணி பாடுகிறீர்களே, இராசபக்சே குடும்பமும் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையின் அரசமைப்பைக் காலில் போட்டு மிதித்தது தங்கள் நினைவில் இருந்து அகன்றுவிட்டதா? இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தூவியும் சபாநாயகரின் நாற்காலியில் தண்ணீர் ஊற்றியும் இராசபக்சே கட்சியினர் செய்த ஆர்பாட்டங்கள் ‘the huddle’ நிகழ்வில் ஒலிபரப்பப்படுமா? ‘நான் தான் பிரதமர், நான் தான் அதிபர், நான் தான் எல்லாம்” என்ற பொருளில் மகிந்த இராசபக்சே இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியதைத் தங்கள் நிகழ்வில் ஒலி பரப்பியப் பின் இராசபக்சேவைத் தொடக்கவுரையாற்ற அழைப்பீர்களா?
- குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு நீதி கோரி டீஸ்ட ஸ்டெல்வார்ட் போன்றவர்கள் போராடிக் கொண்டிருப்பது நியாயம் என்றால், சிறிலங்காவில் ஐநா செயல்பாடு என்பது குறித்து ஐநா பொதுச் செயலரின் உள்ளக ஆய்வுக்குழு 2012 நவம்பரில் அளித்த அறிக்கையின்படி 2009இல் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட 70,000 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நீதி கோரிப் போராடுவது?
ஐ.நா. வின் கணக்குபடி 70,000 த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் முன்வைப்பின் படி சுமார் 1,46,000 பேர் வன்னிப் பகுதியில் இருந்து காணாமல் போய் உள்ளனர். வன்னியில் அப்போது மொத்தம் இருந்த 4.5 இலட்சம் பேரில் 1.5 இலட்சம் பேர் என்றால் மூன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். இவை எல்லாம் ‘cross firing’ இல் நடந்தவையா? தமிழர்கள் பாதுகாப்புக்காகக் கூடியிருந்த “சூட்டுத்தவிர்ப்பு வலையம்” என்று அழைக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குண்டுவீச்சும் செல்லடியும்தான் பெரும்பாலாரைச் சாகடித்தன. சிறிலங்கா மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதோடு, “சூட்டுத்தவிர்ப்பு வலையத்தில்” சிக்கிக்கொண்டவர்களுக்குப் போதிய உணவும் மருந்தும் கிடைக்க விடாமலும் தடுத்த போது பட்டினியாலும் குருதியிழப்பாலும் செத்தவர்கள் பலர். 1941 இல் லெனின்கார்டை இட்லர் முற்றுகையிட்டதால் சோவியத் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியில் பட்டினியால் மட்டும் சுமார் 40 இலட்சம் பேர் கொல்லப்பட்டதை உலகம் கண்டது. போரில் மக்களைப் பட்டினிப் போட்டுக் கொல்வது, மருந்துகளைத் தடுப்பதெல்லாம் மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றமிழைத்த மகிந்த இராசபக்சே பொறுப்புக்கூற வேண்டியதில்லை என்றால் பாசிச எதிர்ப்பு என்பதெல்லாம் தங்களின் சந்தை உத்தியா?
- இந்திய இலங்கை நட்புறவின் எதிர்காலம் பற்றி கவலையுறும் தாங்கள் போர் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் செய்ததற்காக ஒரே ஒரு சிங்களப் படையைச் சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று காட்ட முடியுமா?
- ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தானே முன் மொழிந்த தீர்மானத்தைக் கூட இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. 2015 இல் இலங்கை ஒப்புக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கொடுத்த காலக்கெடு இந்த ஏப்ரலோடு முடிவடைகிறது. வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசு மீதான குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு ஐ.நா. பொதுச்சபைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது இராசபக்சேவை இந்திய இலங்கை நட்புறவு குறித்து பேச அழைப்பீர்களானால் இராசபக்சேவை இக்குற்றங்களில் இருந்து பாதுகாப்பதன்றி இது வேறென்ன?
- வெகுமக்களின் ஆதரவு பெற்றவர் என்பது மட்டும் தான் அளவுகோல் என்றால் மோடியும் இந்தியாவில் வெகுமக்களின் ஆதரவு பெற்றவரே. அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதைவிட அவரது கொள்கைகள் தான் அளவுகோல் என்றால் இராசபக்சேவுக்கும் இந்த கொள்கை அளவுகோல் பொருந்தாதா?
- விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் நீங்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் புலிகள் எதிர்த்து நின்றதால் தங்களுக்கு புலிகள் மீதுள்ள வன்மம் நாடறிந்தது. எனவே, 2009 வரை தாங்கள் ’சிங்கள ரத்னா’ விருது பெற்ற பத்திரிகையாளராக, இலங்கை அரசுக்கு பக்கத் துணையாக நின்று ‘zero casualities’ என்று செய்தி கொடுத்ததும் முள்வேலி முகாம்களைப் பார்த்து புளங்காகிதம் அடைந்ததும் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், 2009 க்குப் பிறகு ஓர் இராணுவ இயக்கமாக களத்தில் புலிகள் இல்லாத நிலையில், பத்தாண்டுகள் சிங்கள இராணுவத்தின் பிடியில் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழ்ந்துவரும் நிலையில், தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் தடை கற்களை வீசுவதற்கு தங்களை உந்தித் தள்ளுவது எது?
- லசந்தா விக்ரமசிங்கே தன் மரணத்தை முன்பே அறிந்து வைத்திருந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் சில வரிகளை இப்போது தங்களுக்கு நினைவுப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
பத்திரிகை துறையினருக்கு அங்கே உள்ள உயிர் அச்சுறுத்தலைப் பற்றிச் சொல்லிவிட்டு பின்வரும் வரிகளை எழுதியுள்ளார்.
”பின் நாம் ஏன் இதை செய்கிறோம்? நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு பெண்ணுக்கு கணவன், மூன்று அழகான குழந்தைகளின் தந்தை. சட்டத் துறையோ அல்லது பத்திரிகை துறையோ எதுவாயினும் என்னுடைய தொழிலுக்கு அப்பால் எனக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. இந்த இடர்கள் வெகுமதியானதா? இல்லை என்றே பலரும் சொல்கின்றனர். பத்திரிகை துறையைவிட மேம்பட்ட, பாதுகாப்பான வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய சட்டத் துறைக்கு போய்விடுமாறு என்னுடைய நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு.
இரு கட்சிகளிலும் உள்ள அரசியல் உள்ளிட்ட பிறர் பல்வேறு தருணங்களில் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளனர், நான் தெரிவு செய்யும் துறைக்கு அமைச்சர் பதவிக்கூட தருவதற்கு முன் வந்துள்ளனர். பத்திரிகை துறை இலங்கையில் சந்தித்துவரும் இடரை அறிந்த தூதர்கள் பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேறு அவர்தம் நாடுகளில் குடியேறச் செய்வதற்கு முன்வந்துள்ளனர்.
தெரிவுகளுக்கு என்றுமே எனக்குப் பஞ்சம் இருந்ததில்லை.
ஆனால், பதவி, புகழ், ஆதாயம், பாதுகாப்பு எல்லாவற்றுக்கு மேலாக ஒரு குரல் இருக்கிறது. அது மனசான்றின் குரல்.”
அந்தக் குரல் தான் சண்டே லீடர் பத்திரிகையில் ஸேட், திருடன் அல்லது கொலைகாரன் ஒரு பொருள் என்னவாக கண்ணில் படுகிறதோ அந்த பெயரிலேயே அழைக்கும் துணிவை அவர்களுக்கு வழங்கியதாம்.
மகிந்த இராசபக்சே ஓர் இனப்படுகொலையாளன். அப்படி அழைக்கும் துணிவு தி இந்து குழுமத்திற்கோ அல்லது தங்களுக்கோ உண்டா?
செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499