ஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு! உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்!

09 Jan 2019

கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவிற்குத் தடை விதித்தது. தடைக்கு எதிராக வேதாந்தாவின் மேல்முறையீடு மற்றும் மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு ஆகியவற்றைப் பரிசீலித்த டெல்லி உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத் தடையைத் தற்போது இரத்து செய்துள்ளது.தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லை ஆலை மீண்டும் திறக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார். ஆலையை மூட கொள்கைத்தீர்மானம் நிறைவேற்ற மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி உட்பட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடவடிக்கைககளை தமிழக அரசின் காவல்துறை ஒடுக்கி வருகிறது.

சட்டப் போராட்டங்கள் மூலம் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை வீழ்த்த முடியாது. தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் படுகொலையான 15 உயிர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்திப் போராடும் தூத்துக்குடி மக்களின் போராட்டமே தீர்வாகும். தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது தமிழக புரட்சிகர, சனநாயக சக்திகளான நமது கடமையாகும். ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் போராட்டங்களை முன்னெடுப்போம்!

 

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW