‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II
ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’ என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ‘பட்டேலின் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும்’ என்கிறார் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். ‘சுயமரியாதை உள்ளவர்களோ,அறிவார்ந்தவர்களோ இந்த அரசாங்கத்தில் வேலை செய்ய முடியாது’ என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக பட்டேல் தெரிவித்தாலும் அவரது ராஜினாமாவிற்கான பல்வேறு காரணங்கள் ஊகமாக அறியக் கூடியவைதான். ரிசர்வ் வங்கியின் மீதான மோடி அரசின் தலையீடுகள் பட்டேலின் ராஜினாமா வழியாக மேலதிகமாக விவாதபொருளாகியுள்ளதே தவிர முற்றுப் புள்ளி வைக்கவில்லை!பட்டேல், பதவி விலகலுக்கான காரணங்கள், அவ்வாறே நிலைவி வருகிற நிலையில்தான் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற சக்திகாந்த தாசை உடனடியாக ஆளுநராக நியமித்துள்ளது மத்திய அரசு.
இறுதியாக கசிந்த தகவலின்படி வாராக் கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவிருந்த உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசின் கோரிக்கைக்கேற்ப தளர்த்திக் கொள்வதற்கு ஆளுநர் ஒப்புக்கொண்டதாகவும், கைமாறாக வங்கிகளின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பையும் நடவடிக்கைகளையும் உறுதி செய்கிற பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் விட்டு விட வேண்டும் என்ற பட்டேலின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாகவும் தெரிகிறது. மேலும் டிசம்பர் -14 இல் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதி காட்டிவந்துள்ளது.
இந்த பின்புலத்தில்தான் மோடி அரசின் அழுத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ராஜினாமா மூலமாக பட்டேல் வெளிப்படுத்தியுள்ளார். தனது முடிவில் உறுதியாக இருந்த மோடி அரசு, இடைக்கால ஆளுநர் நியமன பரிந்துரையை ஏற்காமல் உடனடியாக சக்திகாந்த தாசை ஆளுநராக நியமித்துள்ளது.
1
மோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவர்தான் இன்றைய ஆளுநர் சக்தி காந்த தாஸ். ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசிற்கும் இடையே இதுவரை நிலவி வந்த முரண்பாட்டை, அரசு சார்பான நடவடிக்கைகளின் ஊடாக ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை நீர்த்து போகச் செய்ய வைப்பதே சக்தி காந்த தாஸ் நியமன பின்னணியாக இருக்க முடியும்! ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையும் சுயசார்பையும் பாதுகாப்பதை முதல் இலக்காக அறிவித்துவிட்டு, அதன் நம்பகத்தன்மையும் சுயசார்பையும் முதலில் அழிப்பதே அவரக்கு வழங்கப்பட்ட பணி! பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ரிசர்வ் வங்கியின் சுயசார்பு பற்றி பேசுவதும், ஆளுநர் வளாகத்திற்குள்ளாக மத்திய அரசிற்கு விசுவாசியாக செயல்படுவதே அவருக்கு விதிக்கப்பட்டதாகும்! அதை தொடங்கியும் விட்டார்.
முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜனின் அண்மைய நூலான “I DO WHAT I DO” என்ற நூலில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் பொறுப்பும் கடமையும் குழப்பமாக தெளிவற்று இருப்பதாக சுட்டிக் கட்டியிருப்பார். இது தற்செயலானதும் அல்ல! மத்திய அரசின் அன்றாட அரசியல் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் கொள்கையை கட்டுப்படுத்துகிற வகையில், வெளிப்படையாக சுயசார்பையும் அதன் அடிக்குறிப்பில் அரசின் கட்டுப்பாட்டையும் தலையீட்டையும் மத்திய அரசு உறுதி செய்துகொள்கிறது. அப்படியான சரத்து தான் பிரிவு-7! மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் மாற்றம், உச்ச நீதிமன்றத்தில் தலையீடு என நாட்டின் சுயசார்பான ஜனநாயக நிறுவனங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிற நிலையில் ரிசர்வ் வங்கி விவகாரத்தில் வெளிப்படையான தாக்குதலை தவிர்க்க பிரிவு-7 ஐ தற்காலிகமாக கைவிட்டு மற்ற உக்தியை கையிலெடுத்துள்ளது.
அது தனது சொந்த நலனிற்கேற்ப ரிசர்வ் வங்கி நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைப்பது. முன்னதாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினராக ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியை மோடி அரசு நியமித்தது. அதைத்தொடர்ந்து தற்போது மோடி அரசின் செல்லப்பிள்ளையான சக்தி காந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார். பிறகு சொல்லவேண்டியதில்லை. இன்னும் ஒரு இடிதான் மசூதியை இடி என்றவர்கள் தற்போது இனி ஒரு இடிதான் என ரிசர்வ் வங்கியை செங்கல் செங்கலாக பெயர்க்கத் தொடங்கி விட்டார்கள். பதவியேற்ற ஒரு சில நாட்களில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தாஸ், ரிசர்வ் வங்கியின் நிர்வாக கட்டமைப்பு குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
உர்ஜித் பட்டேல் பணி காலத்திலயே இதற்கான அஸ்த்திவாரம் போடப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகார வரம்பை சுருக்குகிற வகையிலே ரிசர்வ் வங்கிக்குள் பல்வேறு துணைக் கமிட்டிகள் உருவாக்கப்பட்டது. நிதிக் கொள்கை கமிட்டி இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐந்து நபர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கமிட்டியில், இரண்டு நபர்களை மத்திய அரசு நியமிக்கும். மீதமுள்ள மூவரை ரிசர்வ் வங்கி நியமிக்கும். ரிசர்வ் வங்கியின் நிதிசார்ந்த முக்கிய கொள்கை முடிவிற்குள், எளிதாக தலையீடு செய்வதற்கு சிறப்பான உக்தியாக துணை கமிட்டி வடிவத்தை மோடி அரசு கையாள்கிறது. நிதிக் கமிட்டியைத் தொடர்ந்து தொழில்நுட்ப கமிட்டி, வங்கி நிர்வாகத்திற்கான கமிட்டி, அபாய மேலாண்மை கமிட்டி என பல்வேறு கமிட்டிகள் வரும் நாட்களில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்களிலும் பல குருமூர்த்திகளை மத்திய அரசு நியமிக்கும். இறுதியாக மோடி அமித்ஷா கும்பலாட்சியின் கீழ் நிதித்துறை அமைச்சகத்தின் நிர்வாக அலகாக, ரிசர்வ் வங்கி செயல்பாடுகள் குறுக்கப்படும்.
2
வளர்ந்த முதலாம் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிற மூலதனத்தை பெரிதும் சார்ந்துள்ள இந்தியப் பொருளாதாரமானது அடிப்படையிலேயே ஊசலாட்டப் பண்பு கொண்டதாகும். தொடர்ச்சியான எண்ணெய் விலையேற்றம், அந்நிய மூலதன வெளியேற்றம் போன்ற ஒருசில வெளிப்புற மாற்றங்கள் நிகழ்ந்தாலே திடுமென இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தில் சரிகிற ஆபத்துள்ளது. தாராளமய சகாப்தத்தில் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலையும் இதுதான். தாராளமய சேவகர்களாக அந்நிய மூலதன சக்திகளுடன் பிண்ணிப்பிணைத்து கைகுலுக்கிக் கொள்கிற ரிசர்வ் வங்கியும் பாஜகவும், ஒரு சில அரசியல் காரணங்களுக்காக முரண்படுகிறது. பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் வங்கிகளும் ஆளும் கட்சியும் இவ்வாறு முரண்படுகிறது. ஏன் அமெரிக்கவின் பெடரல் வங்கியும் அமெரிக்க அதிபரும் எலியும் பூனையுமாக உள்ளனர்.
தாராளமய சகாப்தத்தின் நெருக்கடியான காலத்தில், உலகமயத்தின் தோல்வியானது அனைத்து நாடுகளையும் கவ்விப் பிடித்துவருகிறது. இந்த சூழலில், அதிகார தக்கவைப்பிற்கு வெகுஜனவாத பாப்புலிச கொள்கையை ஆட்சியாளர்கள் தேர்ந்துகொள்கின்றனர்.ஆட்சியாளர்களின் இந்த சந்தர்ப்பவாத பொருளியில் கொள்கைகளுக்கு, நாட்டின் மத்திய வங்கி முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் தாராளமயத்திற்கு எதிராக திரும்பாத ஆளும்கட்சியின் கத்தியானது, பாபுலிச கொள்கைக்கு இசைவிக்காத ரிசர்வ் வங்கியின் மீது திரும்புகிறது. தாராளமயத்தின் விளைபொருளான சமூக நெருக்கடிகளை வகுப்புவாதம், புலம் பெயர் ஏதிலிகளுக்கு எதிர்ப்பு, அதீத தேசியவாதம் போன்றவற்றால் அரசியல் ரீதியாக மடைமாற்றுக்கின்றனர். பொருளாதாரத் தோல்விகளை மறைக்க அரசியல் ஆதாயத்திற்கான தற்காலிக பொருளியில் கொள்கை முடிவுகளை எடுக்கின்றனர். இந்தப் புள்ளியில்தான் நாட்டின் மத்திய வங்கி செயல்பாட்டுடன் ஆளும் கட்சி முரண்படுகிறது!
வங்கிகள் மேற்கொள்கிற வட்டிவீத உயர்வு கொள்கை முடிவுகள், முதலீடுகளை குறைக்குமெனவும், பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்குமெனவும் வங்கிகளின் வட்டி வீத உயர்வு நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பும் துருக்கி அதிபர் எர்டோகனும் மத்திய வங்கியை கடித்து குதறுகின்றனர். ஒரு கட்டத்தின் துருக்கி வங்கியின் ஆளுநரை நியமனம் செய்வதற்கும் நீக்குவதற்குமான அதிகாரத்தை ஜனாதிபதி மேற்கொள்கிற வகையில் சட்டத் திருத்தத்தை எர்டோகன் கொண்டுவந்தார்.துருக்கி ஆளுநரை தனது கைப்பாவை ஆக்கினர்.
துருக்கியில் அதிகரிக்கிற கடன் சுமை, அந்நிய மூலதன வெளியேற்றம், டாலருக்கு நிகரான துருக்கி லிரா நாணய வீழ்ச்சி போன்ற நிகழ்வுகள் துருக்கி பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்து வருகிறது. கத்தார் நாட்டின் ஆதரவு கரத்தால் தற்காலிகமாக மூச்சுவிட்டு வருகிறது. தற்போது துருக்கி வங்கியையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால் அடுத்து துருக்கி நாட்டின் அரசியல் பொருளாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது!
இந்தியாவில் கிட்டத்தட்ட துருக்கியின் மறு பதிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தாராளமய பொருளாதார கர்த்தாக்கள் வாசித்த பிடிலுக்கு ஏற்ப சிறப்பாக நடனமாடி வந்த மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், தாராளமய நெருக்கடி காலத்தில் அதே பிடில் இசைக்கு கோணல் மானலாக நடனமாடி வருகிறார்கள்!
எவ்வகையாயினும் ஆட்சியை தக்க வைக்க தற்காலிக பாப்புலிச கொள்கை முடிவிற்கு செல்கிறார்கள். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, விவசாய நெருக்கடி, ஜி எஸ் டியின் எதிர்விளைவுகள், ஐந்து மாநில தேர்தல் தோல்வி எதிரொளி, போன்ற நெருக்கடிகளை வெகுஜன கவர்ச்சிவாத அரசியலால் எதிர்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது. அதற்கு தடையாக உள்ள முட்டுக் கட்டைகளை எதேச்சதிகார துணைகொண்டு அகற்றுகிறது. இனி நடக்க உள்ள சம்பவங்களை நாம் ஊகம் செய்ய இயலும் என நம்புவோம்! அவை வருமாறு,
- சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்படுகிற கடன்களில் கடும்போக்கை கையாண்டு வந்த ரிசர்வ் வங்கியின் பல் பிடுங்கப்பட்டு கடன்கள் வாரி வழங்கப்பாடும். தேர்தல் அறிக்கைகளில் சிறு,குறு தொழில்களுக்கு ஆதரவாக பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் சாதனையாக மாற்றப்படும்.
· வாராக் கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பலவீனப் படுத்தப்படும். ஒரே ஒரு கடனை செலுத்தமுடியாத மல்லையாவை திருடன் என்பதா என்ற பாஜக அமைச்சர் நிதின் கட்கரியின் ‘நியாமான ஆதங்கத்தை’ வழிமொழிந்து மென்மேலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கி கடன்கள் வாரி வழங்கப்படும்.
- ரிசர்வ் வங்கி இருப்பில் உள்ள கூடுதல் இருப்புத் தொகையை இனி விருப்பம் போல பாஜக அரசு பயன்படுத்தும்.
ஆக,உலகளாவிய தாராளமய நெருக்கடி சூழலில் பாசிச வலது சக்திகளுக்கும் லிபரல் முதலாளித்துவ ஜனநாயக சக்திகளுக்குமான முரண்பாட்டின் இந்தியப் பதிப்பாக ராஜன், பட்டேலின் வெளியேற்றம் நடைபெற்றுவருகிறது. இத்தோடு இப்போக்கு முடியப் போவதுமில்லை!
-அருண் நெடுஞ்சழியன்
arunpyr@gmail.com, 8825425912
ஆதாரம்:
https://thewire.in/economy/meet-shaktikanta-das-rbis-new-governor-and-and-the-bureaucrats-bureaucrat