சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது.

கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி மற்றும் தோழர்கள் கதிர், ஜீவா ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். கருப்பு நாளென முகநூலில் பதிவிட்டததற்காக மூத்த தோழர் கி.வெ.பொன்னையன் சிறைப்படுத்தப்பட்டார்.

கேரள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நிதி திரட்டிக் கொண்டிருந்த மாணவ தோழர் வளர்மதி, தோழர் அருந்தமிழன் உள்ளிட்ட தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தோழர் வளர்மதியைப் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி அவர்களைப் போராடத் தூண்டியது உளவுத்துறையின் திட்டமிட்ட நடவடிக்கையாகும். காவல்துறையை தோழர் வளர்மதி உள்ளிட்ட தோழர்கள் தாக்கினர் என்று சொல்லி அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளது காவல்துறை.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மீது அன்றாடம் புதுப்புது வழக்குகளைப் போட்டு வந்த நிலையில் அவ்வியக்கத்தின் மீதான அடக்குமுறையின் உச்சமாக அவர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்(UAPA) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சட்டத்தின்படி எளிதில் பிணைக் கிடைக்காது,  

இந்தப் பின்னணியில் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்( இனி – ஊபா) பற்றி உரையாடல் எழுந்துள்ளது. இந்த சட்டத்தின் உள்ளடக்கமும் இந்நாள்வரை அது பயன்படுத்தப்பட்ட விதமும்  நமக்கு கூடுதலான புரிதலை வழங்கக் கூடும்.

முதலாவதாக, ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவோவியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தியவர்.

தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சாய்பாபா மற்றும் ஐவர் இச்சட்டத்தின் கீழ் 2014 இல் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபா 90% செயல்பட முடியாத மாற்றுத்திறனாளி. தேச விரோத செயல்களில் இவர் ஈடுபடாமல் தடுப்பதற்காக இவரைக் கைது செய்ததாக காவல் துறை சொன்னது.

மராட்டியத்தில் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் இவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருத்தியலுக்காகவும் மாவோவிய கட்சியின் அனுதாபிகள் என்றும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இவ்வாண்டு சனவரி 1 அன்று பீமா கோரேகான் பேரணியின் போது வன்முறை வெடித்தது. வன்முறைக்கு காரணமான சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் சம்பாஜி பிண்டே, மிலிண்ட் எக்போடே ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைத் தளத்தில் இயக்கம் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு நடந்த வன்முறையோடு தொடர்புபடுத்தி இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கத்தின் நாக்பூர் மாவட்டப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங், நாக்பூர் பல்கலைக் கழக ஆங்கில துறைத் தலைவரும் பேராசிரியருமான சோமா சென், விட்ரோகி பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் தவாலே, அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழுவின் மக்கள் தொடர்பு செயலாளர் ரோனா வில்சன், பாரத் சன அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த இடப் பெயர்வுக்கு எதிரான செயல்பாட்டாளர் மகேஷ் ரவுட் ஆகியோர் ஊபாவின் கீழ் ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 36 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மாவோவியக் கட்சிக்கு ஆதரவாக முழக்கம் போட்டதைத் தவிர வேறெதுவும் செய்யாதவர்களும் உண்டு. இத்தனைக்கும் அங்கு ஆட்சியில் இருப்பது மார்க்சிஸ்ட் கட்சி!

இச்சட்டம் 1967 இல் இயற்றப்பட்டதாகும். கடந்த ஆண்டோடு இச்சட்டத்திற்கு பொன் விழா ஆண்டு முடிந்துள்ளது. அடிப்படையில் இச்சட்டம் அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, சங்கமாய், அமைப்பாய் ஒன்றுபடும் உரிமை ஆகியவற்றை மறுக்கின்றது. 1967 வரை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு ஊறு ஏற்பட வில்லை என்று கருதிவிட வேண்டாம். பிறந்த குழந்தையின் கழுத்தை நெரிப்பது போல் இந்தியா குடியரசான அடுத்த ஆண்டே அதாவது 1951 இலேயே இந்த அடிப்படை உரிமைகளுக்கு குழிதோண்டத் தொடங்கிவிட்டது இந்திய ஆளும்வர்க்கம். நேருவின் தலைமையில் இந்திய அரசமைப்பின் முதல் சட்டத்திருத்தத்திலேயே இது நிகழ்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஓதுக்கீடு கொடுக்கும் சட்ட்த் திருத்தமாகத் தான் முதல் சட்ட திருத்தம் அறியப்பட்டு வருகின்றது. ஆனால், அதில் தேசப் பாதுகாப்பின்(National Security) பெயரால் பேச்சுரிமை, கருத்துரிமை மட்டுப்படுத்தப்பட்டதே இந்த சட்டவிரோத தடுப்புச் சட்டத்திற்கு எல்லாம் முன்னோட்டமாகும். மீண்டும் 1962 இல் தேசப் பாதுகாப்போடு சேர்த்து இறையாண்மையும் காரணம் காட்டப்பட்டு பேச்சுரிமை, கருத்துரிமை மேலும் சுருக்கப்பட்டது. இந்திய சீனப் போரும், திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிய தனிநாட்டுக் கோரிக்கையும் இத்திருத்தத்திற்கான காலப் பின்னணியாக அமைந்தது. ஆனால், இச்சட்டத் திருத்தம் வந்த நேரத்திற்கெல்லாம் தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையத் தொடங்கி இருந்தது.

இத்தகைய வரலாற்று வழித்தடத்தில், 1967 இல் ஐந்தாவது மக்களவையில் சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் ஊபா சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு முன்னதாக இரண்டு முறை இச்சட்டம் முன்வைக்கப்பட்டு மக்களவையில்  ஏற்பு கிடைக்கவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1908 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் சட்டத் திருத்தத்தின்( Criminal Law Amendment) இன் மறுபதிப்பாக ஊபா வந்தது. அன்றைக்கு இந்திய விடுதலைப் போராட்ட அமைப்புகளைத் தடை செய்யும் நோக்கத்தில் ஆங்கிலேயர் அதை கொண்டு வந்தனர். ஊபா பிரிவினைத் தடுப்புச் சட்டமாக இந்திய அரசால் முன்வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மிசா (MISA), தடா (TADA), பொடா (POTA) என்ற மூன்று பெரும் கருப்புச் சட்டங்களின் இருண்ட பக்கங்களை நாடு கடக்க நேரிட்டது.. தடாவும் பொடாவும் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டங்களாகும்.  தடா 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  போதும் போதும் என்ற அளவுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால், தடா கைவிடப்பட்ட இடத்தில் 2002 இல் பொடாவை அறிமுகப்படுத்தியது அன்றைய பா.ச.க. அரசு. பொடாவுக்கு எதிராகப் பெரும் இயக்கங்கள் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் பொடா அடக்குமுறைகளும் 2004 இல் தி.மு.க. காங்கிரசு கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிப் பெறக் காரணமாய் அமைந்த்தன. பொடாவை நீட்டிக்காமல் கைவிட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஆனால், பொடாவுக்கு எதிராகப் போராடிய தி.மு.க. பங்குபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடா, பொடாவின் அம்சங்களை ஊபாவில் சேர்த்தது.. இப்போது ஊபா சட்டம் என்பது பயங்கரவாதத்தோடும் இணைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மும்பைத் தீவிரவாத தாக்குதலை ஒட்டி அதிவிரைவாக ஊபாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு நாள் தான் விவாதம் நடத்தப்பட்டது!

மீண்டும் 2012 இல் இச்சட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.  2010 ஆம் ஆண்டு இந்தியா Financial Action Task Force(FATA) என்ற அனைத்துலக அமைப்பில் உறுப்பினரானது. இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதிமூலங்களைக் கட்டுப்படுத்துவதற்கானது. மொத்தத்தில், இந்த திருத்தங்கள் அனைத்தும் சேர்ந்து மக்களை நசுக்குவதற்கான வலிமையான சட்டமாக ஊபா உருப்பெற்றது. மக்களோ வெறுங்கையர்களாக இவ்வரசின்முன் வாய்ப்பொத்தி, கைக்கட்டி நிற்க வேண்டுமென அரசால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இச்சட்டத்தின்படி எது சட்ட விரோதம்? எது பயங்கரவாதம்? எது குற்றம்? யார் குற்றவாளி?

இச்சட்டம் இரண்டு குற்றங்களை வரையறுக்கிறது. ஒன்று ‘சட்டவிரோத செயல் (Unlawful ஆக்ட்)’   மற்றொன்று  பயங்கரவாத செயல் (Terrorist Act); விரிவாக பார்க்க  இணைப்பு-1

1985 இல் உருவாக்கப்பட்ட தடா சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலானோரைக் கைது செய்து சிறையில் அடைத்து வைப்பதில் முடிந்தது. இதில் தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் காவல் துறையின் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கடும் அழுத்த எழுந்த நிலையில் 1995 இல் தடா கைவிடப்பட்டது. பின்னர் பாரதிய சனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2002 இல் பொடாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் வெவ்வேறு மக்கள் பிரிவினரிடம் இருக்கும் இணக்கத்தைச் சீர்குலைப்பதைப் பயங்கர நோக்கமுடையதென வரையறுக்கும் பிரிவு நரித்தனமாக நீக்கப்பட்டது. ஆக, மதவாத வன்முறை பயங்கரவாத செயல் இல்லையாம். ஆனால், அரசு சொத்தை சேதப்படுத்துதல் பயங்கரவாத செயலாம்!

சாலை மறியல், இரயில் மறியல், அரசு அலுவலக முற்றுகைப் போராட்டங்களைக்கூட  இச்சட்டத்தின்கீழ் பயங்கரவாத செயலாக வரையறுக்க முடியும். அது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஏற்கெனவே தனித்தனி குற்றவியல் சட்டங்கள் இருக்கும் போது அவற்றை ஏன் ஊபாவின் பகுதியாக்க வேண்டும்?

மேலும் பயங்கரவாத செயல் பற்றி உலகளாவிய அளவில்கூட  தெளிவான வரையறை இல்லை. ஆகவே, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் அதிகாரத்தில் இருப்போர் தன் விருப்பத்திற்கேற்ப வரையறுத்துக் கொண்டு போகலாம். இந்தித் திணிப்பை எதிர்த்தால், பேரழிவுத் திட்டங்களை எதிர்த்தால், சல்லிக்கட்டு உரிமையைக் கோரினால், தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தால், மதவாதத்தை எதிர்த்தால், பகுத்தறிவுப் பரப்புரை செய்தால் என எதை வேண்டுமானாலும் பா.ச.க. அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் போல் பயங்கரவாதமாக  பரப்புரை செய்யலாம். கெளரி லங்கேஷ், தபோல்கர் போன்றோரின் கொலை வழக்கில் தொடர்புடைய சனாதன சன்ஸ்தி, பாபர் மசூதி இடிப்புக்கு நாடெங்கும் பரப்புரை செய்த விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் போன்ற சங் பரிவார் அமைப்புகள் ‘தேசப் பற்றாளர்கள்’ ஆகிவிடுவார்கள்.

தண்டனைகள்:

ஐந்தாண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை தொடங்கி கொலைத் தண்டனை, வாழ்நாள் சிறைத்தண்டனை வரை  இச்சட்டத்தின் கீழ் வழங்க முடியும். மேலும் இச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க முடியும்.

இதில் உள்ள முரண்பாடுகளுக்குள் செல்வதை விட இச்சட்டத்தின் கீழ் எத்தைகைய மனித உரிமை மீறல்களை எல்லாம் புலனாய்வு காலத்திலேயே செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

சட்டத்தின் கொடுமை:

 1. வழக்கமாக குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி ஒருவரைக் குற்றவாளி என்று மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டும் அரசுத் தரப்புடையதாகும். ஆனால், இச்சட்டத்தின்படி, தான் குற்றமற்றவர் என்று மெய்பித்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியப் பொறுப்பு குற்றம் சுமத்தப்பட்ட குடிமகனையே சாரும்.
 2. இச்சட்டத்தின்படி குற்றப்பத்திரிகை எழுதாமலே ஒருவரை 180 நாட்கள் (6 மாதம்) வரை சிறையில் வைக்கலாம். அதுவரை அவருக்குப் பிணை கிடைக்காது.
 3. 30 நாட்கள் வரை ஒருவரை விசாரணைக்காக காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
 4. பொடா, தடா போன்ற சட்டங்கள் காலவெல்லைக்கு உட்பட்டவை. அவை நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே காலாவதியாகிவிடும். ஆனால், ஊபாவோ எந்நேரமும் இந்நாட்டு குடிமகனின் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாகும். இது நிலைத்த சட்டம்.! அதுவும் கருப்புச் சட்டம்!
 5. எவ்வித ஆணையும் இன்றி ஒருவரைக் கைது செய்யலாம், ஒருவரின் வீட்டையோ சோதனையிடலாம்.
 6. காவல்துறை எந்த சாட்சிகளின் பெயரால் வழக்கு தொடுக்கிறதோ அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காவல் துறை விசாரனையின் போது பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இச்சட்டத்தின் கொடுந்தன்மையைப் புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்.

 • இல் ஜோதி பாபாசாகேப் என்ற 19 வயது கல்லூரி மாணவி பூனாவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஊபா வின் கீழ் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டு அவரிடம் மாவோயிஸ்ட் இலக்கியம் ஒன்று இருந்தது என்பதாகும். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்குப் பிணை கிடைத்தது. அப்போது அவரைப் பிணையில் விடுவித்த நீதிபதி, ஒருவரின் கருத்தியலுக்காக அவரைக் கைது செய்யலாமா? என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
 1. 2008 இல் 18 இஸ்லாமிய இளைஞர்கள் ஜிகாத் இலக்கியங்கள் வைத்திருந்தனர் என்ற காரணத்தின் பெயரால் கைது செய்யப்பட்டனர். இதுதான் புகழ்ப்பெற்ற ஹூக்ளி சதி வழக்காகும். 2015 இல் ஆறாண்டு சிறைவாசத்திற்குப் பின்பு குற்றமவற்றவர்கள் என இவர்கள் விடுதலையாயினர். இவர்களிடம் இருந்த அந்த இலக்கியம் குர்ரான் ஆகும்.
 2. 2006 ஆம் ஆண்டு வாகித் சேக் என்ற பள்ளி ஆசிரியர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 9 ஆண்டுகள் 5 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்!
 3. 2014 இல் 12 அகவையுடைய சிறுவன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் ஊபாவின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டின் அரசுப் புள்ளி விவரப்படியே இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டவர்களில் 72.7% குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். அதாவது 10 இல் 7 பேர் குற்றமற்றவர்களாவர்! பெரும்பாலும் இச்சட்டத்தின் கொடுமைக்கு இரையாவோர் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆவர்.

இச்சட்டம் அரசமைப்பு உறுப்பு 19, 21 வழங்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, அமைப்பாக, சங்கமாக ஒன்றுபடும் உரிமை, வாழ்வுரிமை மற்றும் ஆள் வகை சுதந்திரம் ஆகியவற்றை அடியோடு மறுக்கிறது.

இச்சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் சட்டவிரோதி என முத்திரையிடலாம். பா.ச.க. அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, மத்திய அரசு தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்று பேசிய திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபாலையும் நிதிப்பகிர்வில் மத்திய அரசு தமிழகத்திடம் கடைபிடிக்கும் பாகுபாடு தொடர்ந்தால் அது இந்திய ஒற்றுமைக்கு ஊறு செய்யும் என்று பேசிய தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் மீது இந்தியாவுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பியக் குற்றத்தின் பெயரால் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்;  கைது செய்து சிறையிலடைக்கலாம். செய்வார்களா? மாட்டார்கள்.

இச்சட்டம் இந்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி ஆளப்படுவோரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. ஊபா என்ற இந்த கருப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதுவே ஊபாவால் குழிதோண்டிப் புதைக்கப்படும் குடியியல் உரிமைகளை மக்களுக்கு உறுதிசெய்ய முடியும்.

தோழர்கள் முருகன், திருமுருகன், சாய்பாபா மற்றும்  இச்சட்டத்தின் கீழ் நாடெங்கும் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும் இன்னபிற தோழர்களையும் விடுதலை செய்யக் கோருவோம்!

ஊபா வை நீக்குவதற்கு மக்களைத் தட்டியெழுப்புவோம்!

—————————————————————————————————————————————————-

இணைப்பு – 1

சட்டவிரோத செயல்(Unlawful Act)

ஒரு தனியாள் அல்லது அமைப்பின் செயல்பாடு ( செயல், பேச்சு, எழுத்து, குறியீடு, காணொளி அல்லது இன்ன பிற)

அ.   இந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல் அல்லது இந்திய ஒன்றியத்தில் ஏதேனும் ஒரு பகுதி பிரிந்து செல்லுதல் ஆகிய கோரிக்கைகளை ஆதரித்தோ அல்லது அந்த நோக்கத்தில் செய்யப்பட்டாலோ அல்லது தனியாளையோ அல்லது குழுவையோ இதை செய்ய தூண்டினாலோ

ஆ. இந்தியாவின் நிலவியல் கட்டுக்கோப்பையும்(teriirorial integrity)   இறையாண்மையையும் மறுத்தாலோ, கேள்விக்குட்படுத்தினாலோ, பாதித்தாலோ அல்லது அப்படி பாதிக்கும் நோக்கங் கொண்டிருந்தாலோ

இ. இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தினாலோ அல்லது ஏற்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தாலோ

அவை சட்ட விரோத செயல்பாடென வரையறுக்கிறது இச்சட்டம்.

ஆக, சாறத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பற்றிய உரையாடலுக்கு இடமின்றி செய்து விடுகிறது இச்சட்டம்.  சுரண்டல், பார்ப்பனிய ஆதிக்கம், தேசிய இன ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை இன்ன பிறவற்றினால் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் முனகலைக்கூட குற்றமாக்கிவிடுகிறது ஊபா. இந்த மூன்றாவது வகை (இ) 2004 இல் சேர்க்கப்பட்டதாகும்.

 1. பயங்கரவாத செயல்:

பயங்கரவாத செயல்பாடு அதன் நோக்கத்தில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை, கட்டுக்கோப்பு, பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தும் நோக்கிலோ அல்லது வகையிலோ செயல்பட்டால் அல்லது இந்தியாவில் உள்ள மக்களையோ அல்லது இந்தியாவிலோ வெளிநாட்டிலோ வாழும் மக்களின் ஒரு பிரிவினரையோ அச்சுறுத்தும் நோக்கிலோ அல்லது வகையிலோ செயல்பட்டால் அவர் இச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்படுவார்.

பொதுவாக, பெருந்தொகையான படுகொலைகள், அமைதிக் காலத்திலானப் போர்க்குற்றங்கள் என்பதைப் பயங்கரவாதமாக வரையறுப்பதுண்டு. ஆனால், இச்சட்டம் அதன் எல்லைகளை விரிக்கிறது.

 1. வெடிகுண்டு டைனமைட் அல்லது இன்னபிற வெடிக்கும் பொருட்கள் ………வேறெதேனும் வகையிலோ

அ. ஓர் ஆளுக்கோ அல்லது ஆட்களுக்கோ மரணத்தையோ காயத்தையோ உண்டாக்கினால் அல்லது

ஆ. பொது சொத்திற்கு இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்தினால் அல்லது

இ. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ வாழும் மக்களின் இன்றியமையாத சேவைகளுக்கு தடை ஏற்படுத்தினாலோ அல்லது

ஈ. இந்திய இராணுவத்திற்குப் பயன்படக்கூடிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ

 1. அரசு பணியாளர்களிடம் பலப் பிரயோகம் செய்தாலோ அல்லது அவர்களைக் கொலை செய்தாலோ அல்லது கொலை செய்ய முயன்றாலோ
 2. யாரேனும் ஒருவரைத் தடுத்து வைத்து, கடத்தி, காணாமலாக்கி அவரைக் கொல்வதென்றோ அல்லது காயப்படுத்துவதென்றோ இந்திய அரசையோ அல்லது மாநில அரசுகளையோ அல்லது வெளிநாட்டு அரசுகளையோ அல்லது தனியாளையோ மிரட்டி ஒன்றை செய்யச் சொன்னாலோ அல்லது செய்யவிடாமல் தடுத்தாலோ

இவையெல்லாம் பயங்கரவாத செயல் என்கிறது சட்டம்.

குறிப்புகள்:

 1. https://thewire.in/rights/uapa-anti-terrorism-laws
 2. http://pudr.org/content/terror-law-uapa-and-myth-national-security
 3. https://timesofindia.indiatimes.com/city/kozhikode/Rights-activists-decry-detentions-under-UAPA/articleshow/54386911.cms

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW