தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்

26 Jun 2018

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மா)   இரண்டாவது மாநாட்டுத் தீர்மானங்கள்

2018 ஜூன் 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய – மாவோ சிந்தனை) யின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

தமிழக உழைக்கும் மக்களே!

 1. தூத்துக்குடி மண்ணைக் காப்பதற்காக மே 22 ஆம் தேதி பன்னாட்டு குழுமமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு அரசின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான ஈகியர்களுக்கு வீரவணக்கம்!
 2. உலகமயப் பொருளாதாரம் முட்டுச் சந்தில் வந்துநிற்கும் பின்புலத்தில் ஏகாதிபத்திய மேற்குலக நாடுகளில் வளர்ந்துவரும் வலதுசாரி ஆற்றல்களின் செல்வாக்குக்கு எதிரான சர்வதேசப் பாட்டாளி வர்க்க இயக்கத்தை வலுப்படுத்த உறுதியேற்போம்.
 3. சிரியாவிலும் ஏமனிலும் நடந்துவரும் உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்தி அமைதியைக் கொண்டுவர சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவோம்.
 4. ரோஹிங்கியா ஏதிலியர்களைக் கணக்கெடுத்து இந்தியாவை விட்டு வெளியேற்றி மியான்மருக்கு திருப்பியனுப்பும் இந்திய அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்திப் போராடுவோம். ரோஹிங்கியா மக்களுக்கு துணை நிற்போம்.
 5. ஆளுநர் ஆட்சியின் கீழ் இருக்கும் காஷ்மீரில் இந்திய பா.ச.க. அரசு கட்டவிழ்த்துள்ள நரவேட்டையில் சிக்குண்டுள்ள காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு தோள் கொடுத்து துணை நிற்போம். காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகளை வெளியேற்றி போராளி இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசை வலியுறுத்துவோம்.
 6. எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதான திருத்தத்தை ரத்து செய்து, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இச்சட்டத்தை இணைப்பதன் மூலம் அதைப் பாதுக்காப்பதுடன் அச்சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வலியுறுத்திப் போராடுவோம்.
 7. தொடரும் கச்சநத்தம் உள்ளிட்ட சாதி ஆதிக்கத் தாக்குதல்களை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு புரட்சிகர சனநாயக சக்திகள் துணைநிற்போம்.
 8. சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்திப் போராடுவோம்.
 9. கோயில், மடம், தனியாரிடம் குவிந்திருக்கும் நிலங்களைப் பறிமுதல் செய்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வலியுறுத்திப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
 10. காவி பயங்கரத் தாக்குதல்கள், பாலியல் வன்முறை, பசு வதை தடுப்பு, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் என பல வகைகளிலும் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் மதச் சிறுபான்மையினரைக் குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களைப் பாதுகாக்க மதச் சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்திப் போராடுவோம்.
 11. சாதி ஆணவக் கொலைகள், அமில வீச்சு என தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக இயக்கங்களை முன்னெடுத்து சாதிய நிலவுடைமை கால ஆணாதிக்க சமூக உறவுகளை அறுத்தெறியப் போராடுவோம்.
 12. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுக்கான வாக்குறுதியை அமலாக்க பா.ச.க. அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்போம்.
 13. ஒவ்வொருவரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருவதோடு ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட தகவல்களையும் வணிக நோக்கில் திரட்டுவதும் பொது விநியோகத் திட்டம், வங்கிக் கணக்கு, ஓய்வூதியம், சத்துணவு, பிறப்புச் சான்றிதழ், பள்ளி சேர்க்கை என பிறப்பு முதல் இறப்பு வரையிலான மக்களின் அனைத்து விவகாரங்களிலும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்ப்போம்.
 14. அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தி மாநில உரிமைகளை அடியோடு மறுத்து முழுமையான ஒற்றையாட்சியை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் கூட்டு சர்வாதிகார நகர்வுகளை முறியடிப்போம்.
 15. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்திய அரசின் முகவரான ஆளுநரின் அத்துமீறிய அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த, ஆளுநர் பதவியை நீக்கப் போராடுவோம்.
 16. தமிழக மருத்துவக் கல்வியையும் சுகாதாரத் துறையையும் பாழ் படுத்தக்கூடிய தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வை(NEET) நீக்க வலியுறுத்தும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.
 17. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமைக்காகப் போராடும் அதே வேளையில் நீதித்துறை, இந்திய, தமிழக அரசுப் பணிகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
 18. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் 90% இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட்டுவோம்.
 19. ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவோம்.
 20. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடும் கொள்கை முடிவை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திப் போராடுவோம். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வலியுறுத்துவோம். தொடரும் கைதுகளை நிறுத்துவதோடு இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சுமார் 400 பேரை உடனடியாக விடுதலை செய்வதுடன் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம். தூத்துக்குடியில் கருத்துரிமை உள்ளிட்ட சனநாயக உரிமைகளைத் தடைசெய்யும் அரசின் சர்வாதிகாரப் போக்கை முறியடிக்க தமிழ்நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்க அனைத்து சனநாயக ஆற்றல்களும் ஓரணியில் திரள இம்மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.
 21. சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகள் எடுத்துச் செல்வதற்கு ’வளர்ச்சி’ என்ற பெயரில் காடு மற்றும் விளை நிலங்களையும் பசுமையையும் அழித்து அமைக்கப்படுகிறது. ஆனால், இது முழுக்க இராணுவ பயன்பாட்டிற்காகவும் சேலத்தில் அமைய உள்ள இராணுவ தொழிற்பேட்டைக்கான சிறப்பு சாலையாகவும் செயல்படப் போகிறது. இது தமிழகத்தை இராணுவமயமாக்குவதற்குதான் பயன்படும். இதற்கு எதிரானப் போர்க்குணம் மிக்கப் போராட்டங்களை முன்னெடுப்போம்.
 22. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கும் பன்னாட்டு இலாப வெறித் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்.
 23. தேனி மாவட்டத்தின் பல்லுயிர் சூழலைப் பாழ்செய்யும் வகையில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை விரட்டியடிப்போம்
 24. கோடிக்கணக்கான மீனவ விவசாய மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து கடலோரப் பகுதிகள் நெடுக கடலோரப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து மிகச் சொற்ப விலையில் நிலத்தைக் கொடுத்து வரி ஏதுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்ட வழிவகை செய்யும் சாகர்மாலா திட்டத்தைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்.
 25. கூடங்குளத்தில் 3,4 அணு உலைகளை நிறுவி அணு உலைப் பூங்கா அமைக்கும் முயற்சியை முறியடிக்கப் போராடுவோம்.
 26. ரியல் எஸ்டேட் கொள்ளையைத் தடுக்க, உணவு உற்பத்தியைப் பாதுகாக்க விளைநிலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்திப் போராடுவோம்.
 27. காவிரிப் படுகையாம் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் தொடங்கி இராமநாதபுரம் வரையான மாவட்டங்களில்  ஹைட்ரோகார்பன், மீத்தேன், சேல் மீத்தேன், நிலக்கரி எடுப்பதற்காக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களை விரட்டியடித்து காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்திப் போராடுவோம்.
 28. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு அடியில் எண்ணெய் எரிவாயு குழாய்ப் பதிக்கும் கெயில் போன்ற திட்டங்களைக் கைவிட வலியுறுத்திப் போராடுவோம்.
 29. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(UAPA) ஆகிய காலனிய கால அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சனநாயக ஆற்றல்களை விடுதலை செய்ய வலியுறுத்திப் போராடுவோம். மேற்படி சட்டங்களை நிரந்தரமாக நீக்க வலியுறுத்துவோம்.
 30. தமிழ்நாட்டில் சூழ்ந்துள்ள கடும்நெருக்கடிகளை முறியடித்து புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க புரட்சிகர சனநாயக ஆற்றல்களை ஒரணியில் திரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

தோழமையுடன்

பாலன்,

பொதுச்செயலாளர்,

த.க.க.(மா-லெ-மா)

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW