சனாதன ஒழிப்பை ’இனவழிப்பு’ என மடைமாற்றும் இனவழிப்பாளர்கள்! – செந்தில்
கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் 262 புகழ்பெற்ற இந்திய குடிமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக தமிழ்நாடு அரசு மீது தாமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடிதம் வாயிலாக கோரியுள்ளனர். அப்படி கோரியவர்கள் யார் தெரியுமா? முன்னாள் நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதர்கள், உளவுத்துறை தலைவர், முன்னாள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள். மொத்தத்தில் அதிகார வர்க்கத்தின் அதியுயர் மட்டத்தில் இருந்தவர்கள் இவர்கள்.
உதயநிதி பேசியது வெறுப்பு பேச்சாம்! அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுக்காதது நீதிமன்ற அவமதிப்பாம்! அவர்களது கூட்டு மடலை உச்சநீதிமன்றம் கருதிப் பார்க்க வேண்டுமாம்!
கடந்த செப் 2 ஆம் நாள் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுதான் நாடு தழுவிய அளவில் ஓர் உரையாடலைக் கிளப்பியுள்ளது.
”கொசு, டெங்கு, மலேசியா, கொரோனா போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று அவர் பேசியது சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரது மனதைப் புண்படுத்தி விட்டதாம்!
இட்டுக்கட்டிய பாசக:
முதலில் கொழுத்திப் போட்டது பாசகவின் இணைய அணித் தலைவர் அமித் மாளவியாதான்! அவரது டிவிட்டர் பக்கத்தில், ”உதயநிதியின் பேச்சு என்பது இந்தியாவின் மக்கள் தொகையில் 80% இருக்கும் சனாதனிகளை இனவழிப்பு செய்வதற்கான அறைகூவல்” எனக் கரடி விட்டார்!
அதை தொடர்ந்து இராஜஸ்தானில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘வாக்கு வங்கி அரசியலுக்காகவும் சலுகை அரசியலுக்காகவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என இவர்கள் பேசுகிறார்கள். இது நமது பண்பாட்டையும் வரலாற்றையும் சனாதன தர்மத்தையும் அவமதிப்பதாகும் எனப் பற்ற வைத்தார்.
ஒன்றிய அமைச்சர் இராசீவ் சந்திரசேகர், ”சனாதன தர்மத்தை, இந்து சமயத்தை விமர்சனம் செய்தால் என்ன எதிர்வினை வரும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் பேசுகிறார். ஏனெனில், அவரது பணமும் குடும்பப் பின்புலமும் சொத்தும் ஆயிரக்கணக்கானோரின் மனதைப் புண்படுத்தும் துணிவை அவருக்கு கொடுக்கின்றன.” என்று உதயநிதியை சாடினார்.
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா, “சமூக ஒற்றுமையில் நஞ்சை கலப்பவர்கள் அடையப்போவது எதுவும் இல்லை, அரசியல் தலைவர்கள் சமயங்கள் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தார்.
பாசகவின் செய்தி தொடர்பாளர் செகுசத் பூனம்வாலா, “இது இனவழிப்புக்கான அறைகூவலுக்கு சற்றும் குறைவானதல்ல, இதை கார்த்திக் சிதம்பரம் ஆதரிக்கிறார். இதுதான் அன்புக்கு கடை விரிப்பதா? அல்லது வெறுப்பின் பல்லவியா?” என்று உதயநிதிப் பேச்சுக்கு இனவழிப்புச் சாயம் பூசினார்.
ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை அழிப்பது என்பது பண்பாட்டு இனவழிப்பு என்று பாடமெடுத்துள்ளார் தமிழக பாசக தலைவர் அண்ணாமலை.
மேலும் பாசக உதயநிதியை இட்லரோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளது. இட்லர் யூதர்களை உருவகப்படுத்தியது போல்தான் உதயநிதி சனாதன தர்மத்தைப் பற்றி பேசியுள்ளார். இட்லரின் யூத வெறுப்பு பேரழிவை ஏற்படுத்தி, 60 இலட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்படுவதிலும் சோவியத்தில் 50 இலட்சம் போர் கைதிகள் கொல்லப்படுவதிலும் போய் முடிந்தது என்பதை நாம் அறிவோம்” என்று சொல்லியுள்ளது. ”உதயநிதியின் பேச்சு கலப்படமற்ற வெறுப்புப் பேச்சாகும். இந்நாட்டில் உள்ள 80% மக்களை இனவழிப்பு செய்வதற்கான அறைகூவலாகும். இவரது வாந்தியை காங்கிரசும் ’இந்தியா (I.N.D.I.A)’ கூட்டணியும் ஆதரிப்பது கவலைக்குரியது” என்று ’இந்தியா’ கூட்டணியை நோக்கி அம்பை வீசியது. காங்கிரசும் ‘இந்தியா’ கூட்டணியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றது பாசக.
”இந்தியா’ கூட்டணியின் பகுதியாக இருக்கும் திமுக சனாதன தர்மத்தை காயப்படுத்தியுள்ளது. காங்கிரசு தலைவர்களான சோனியா, ராகுல், அசோக் கெலாட் போன்றோர் மெளனம் காப்பதேன்?” என்று இராஜஸ்தானில் பாசக தலைவர் ராஜ்நாத் சிங் ’இந்தியா’ கூட்டணியைத் தாக்கினார்.
ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ”உதயநிதி பேசியது அதிர்ச்சியளிப்பதாகவும் வெட்கக்கேடானதாகவும் உள்ளது” என்றும் ” ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி போன்றோர் மெளனம் காப்பதேன்? வாக்கரசியலுக்காக இந்துக்களின் உணர்வோடு விளையாடுகிறார்களா? நூற்றாண்டுக்கணக்கான இஸ்லாமிய ஆட்சியால் சனாதன தர்மத்தைத் துடைத்தழிக்க முடியவில்லை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அதை நீர்த்துப் போக செய்ய முடியவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் ரிசி சுனாக் தன்னை சனாதனி என்று அறிவித்துக் கொள்பவர்” என்று குமுறியுள்ளார்.
அனுராக் தாகூர், “‘இந்தியா’ கூட்டணி பிளவுபடுத்தும் அரசியலை நோக்கித் தாழ்ந்து செல்கிறது” என்று ’இந்தியா’ கூட்டணியையே குறிவைத்துள்ளார்.
பாசகவின் தில்லிப் பிரிவு ஒரு குழுவாக தில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு பவனுக்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றைக் செப்டம்பர் 4 ஆம் நாள் கொடுத்தனர். தில்லி பாசகவின் தலைவர் வீரேந்திர சச்தேவா இக்குழுவுக்கு தலைமை தாங்கினார். அக்கடிதத்தில், உதயநிதி தன் பேச்சை திரும்பப் பெறவும் மன்னிப்புக் கேட்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். மேலும் ”’இந்தியா’ கூட்டணியின் இந்து விரோத சிந்தனை வெளியே வந்துவிட்டது” என்று வீரேந்திர சச்தேவா ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
இந்து சாமியார்களின் காட்டுமிராண்டித்தனம்:
இதற்கிடையே, சமயத் தலைவர்கள் தமது வீராவேசமிக்க அரசியல் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி, “ சனாதன தர்மம் நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது, இன்னும் நீடிக்கும். ’இந்தியா’ கூட்டணியோடு தொடர்புடையவர்கள் நரேந்திர மோடியை எதிர்க்கவில்லை. அவர்கள் சனாதன தர்மத்தைத்தான் எதிர்த்து சண்டையிடுகின்றனர். அவர்களது நோக்கம் சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டுவதுதான். நாங்கள் ஸ்டாலினின் கருத்தியலையோ அல்லது கிறித்தவத்தையோ அல்லது இசுலாத்தையோ விமர்சித்துப் பேசுவதில்லை. பிறகு ஏன் அவர்கள் சனாதன தர்மத்தைக் குறிவைக்கிறார்கள்?” என்று இந்து-கிறித்தவ-இசுலாமியப் பிரச்சனையாக இதை முன்வைத்தார்.
சில்குர் பாலாஜி கோயிலின் தலைமை பூசாரி இரங்கராஜன், ” அரசமைப்புச் சட்ட பதவியில் இருப்பவர். இது போன்ற முட்டாள் பேச்சுகளைப் பேசக்கூடாது” என்று உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இராம ஜென்மபூமியின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “ உதயநிதிக்கு சனாதன தர்மம் பற்றிப் புரிதல் இல்லை, அவர் பேசியது முற்றிலும் தவறானது” என்று கண்டனம் தெரிவித்தார்.
அயோத்தியாவின் தபசுவி சாவ்னி கோயிலின் தலைமை பூசாரி பரமஹன்ச தாஸ், “சனாதன தர்மத்தின் வரலாற்றை முதலில் படித்துவிட்டுப் பின்னர் அதை பற்றி பேச வேண்டும். அவர் பேசியதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தலைமை அமைச்சர் மகனாக இருந்தால் என்ன? அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்.” என்று சொல்லி, அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்தார். இந்த தொகை போதாதென்றால் இன்னும் அதிகமான தொகையைக் கொடுக்க அணியமாக இருப்பதாகவும் சொன்னார். பின்னர் ஒருநாள் கழித்து, ”தேவைப்பட்டால் நானே உதயநிதியின் தலையைக் கொய்வேன்” என்று பொங்கினார்.
கின்னர் அகாடா என்று இந்தியில் அழைக்கப்படும் திருநங்கைகளின் சமய அமைப்பொன்றின் தலைவரான சுவாமி கெளசல்யானந்த் கிரி, உதயநிதி மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இது போல் சனாதன தர்மத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவோரின் நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ” இது போல் மசூதி, சர்ச்சில் சொல்லிப் பாருங்களேன்’ என்று பொங்கியுள்ளார்,
இடறிவிழுந்த ’இந்தியா’ கூட்டணி:
ஒருவழியாக பாசக கிளப்பிய புரளிப் புழுதி ’இந்தியா’ கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தியது. காங்கிரசு தொடங்கி ஆம் ஆத்மி, இராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரசு, சிவசேனா என முக்கிய கட்சிகள் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.
மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டும்தான் சனாதன தர்மத்தின் வர்ணாசிரம மற்றும் ஆணாதிக்க கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டி ’சனாதன ஒழிப்பு’ கருத்துக்கு வலுசேர்த்தன.
திரினாமுல் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் குனால் கோஷ், “ உதயநிதியின் பேச்சுக்கும் ’இந்தியா’ கூட்டணிக்கும் தொடர்பில்லை, ஒவ்வொரு சமயத்தையும் மதிக்க வேண்டும். இது போல் யார் பேசினாலும் அவரது கூற்றை நாம் கண்டிக்க வேண்டும்” என்று செப்டம்பர் 4 ஆம் நாளே கண்டனம் தெரிவித்தார். பின்னர் திரினாமூலின் தலைவர் மம்தா பானர்ஜி, தான் சனாதன தர்மத்தை மதிப்பதாகவும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் மதிப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு, மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தும்படியான விசயங்களில் எவ்வித கருத்தும் கூறக் கூடாது என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கான தனது பணிவான வேண்டுகோளாக வெளிப்படுத்தினார்.
காங்கிரசு தலைவர் கரண் சிங், உதயநிதியின் கூற்று முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கெடுவாய்ப்பானது” என்று கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரசு தலைவர் ஆச்சார்யா பிரமோத், இந்துக்களைப் புண்படுத்துவதற்கு ஒருவருக்கு ஒருவர் போட்டிக் போடுகின்றனர். சனாதன தர்மத்தை ஒழிக்க ஆயிரம் ஆண்டு காலமாக முயன்றுவருகின்றனர். ஆனால், யாராலும் அதை ஒழிக்க முடியவில்லை” என்றும் ”உதயநிதியின் பேச்சு இந்துக்களைப் புண்படுத்தும் முயற்சி” என்றும் சொல்லியுள்ளார்.
காங்கிரசு தலைவர் ரசீத் அல்வி, “கடந்த 9 ஆண்டுகளாக பாசக சமயத்தை அரசியல்படுத்திவிட்டது என்றும் இதை பேசியவர் தவறு செய்துவிட்டார் ஆனால், சமயத்தை அரசியல் படுத்தியதற்காக பாசக தலைவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.” என்றும் உதயநிதியை விமர்சித்தார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், “ நாம் ஒவ்வொரு சமயத்தையும் மதிக்க வேண்டும், அடுத்தவர் சமயத்தை எவரும் விமர்சனம் செய்யக் கூடாது” என்று உதயநிதிக்கு பாடம் எடுத்தார்.
காங்கிரசு பொதுச் செயலாளர் வேணுகோபால், “ஒவ்வொரு கட்சிக்கும் தமது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கொள்கை என்பது சமதர்மம்தான்” என்று உதயநிதியின் பேச்சு குறித்து அதிகாரப் பூர்வமாக கருத்து தெரிவித்தார்.
சிவசேனாவின் தலைவர் பிரியங்கா சதுர்வேதி, “சனாதன தர்மத்தைப் பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று பொருள்” என்று சொல்லிவிட்டு, ”சனாதன தர்மத்திற்காக கவலைப்படுவதாக நாடகமாடுகிறது” என்று பாசகவையும் விமர்சித்தார்.
இரண்டே இரண்டு விதிவிலக்குகள்தான்.
ஒன்று, காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங் கார்கே, “சம உரிமையை போதிக்காத ஒன்று சமயமாக இருக்க முடியாது, அது நோய்க்கு இணையானதுதான்” என்று தமது கருத்தை வெளியிட்டார். அவர் ஒரு தலித்.
இரண்டாவது, அம்பேத்கரின் பேரன் பிரகாசு அம்பேத்கர் பொட்டில் அடித்தது போல் ”சனாதனம் தீண்டாமையை ஆதரிக்கிறது, அதை எப்படி ஏற்க முடியும்?” என்ற கேள்வியை எழுப்பினார்.
விநித் ஜிண்டால் என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர், உதயநிதியின் பேச்சு தமது சமய உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தில்லி காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உதயநிதியின் மீதும் பிரியங் கார்கேயின் மீதும் இரு சமயப் பிரிவினருக்கு இடையே பகையை வளர்க்கும் குற்றத்திற்கான பிரிவாகிய 153A இன் கீழும் எந்தவொரு சமயப் பிரிவினரின் சமய உணர்வுகளையும் அதன் சமயம் அல்லது சமய நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களுக்கான பிரிவாகிய 295A இன் கீழும் முதல் தகவல் அறிக்கைப் போடப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசும் பொழுது, ”உதயநிதியின் பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்” என்று சொன்னதாக ஊடகங்கள் சொல்கின்றனர்.
யார் இனவழிப்பாளர்கள்?
உதயநிதியும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த தமுஎகச வும் சனாதன தர்ம ஒழிப்பு என்பதை சாதி அமைப்பு முறை , பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தும் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் எதிரான முழக்கமாக முன்வைப்பதாக மீண்டும்மீண்டும் தெளிவுபடுத்திவிட்டனர்.
தமிழ்நாட்டின் சாதி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் நடைமுறை இடைவெளிகள் இருப்பினும் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தில் ( வேங்கைவயல் குடிநீரில் மலம் கலந்த பிரச்சனை, நான்குநேரி சாதி வெறித்தாக்குதல், சாதி ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம்) இடர்பாடுகள் நிரம்பி இருப்பினும் கருத்தியல் தளத்தில் சாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக ஓங்கி ஒலித்த வண்ணம் இருக்கிறது.
சனாதன ஒழிப்பு என்று பேசப்படுவது தமிழ்நாட்டின் மரபான பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை உள்ளடக்கியது என்பதை தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டு வரலாற்றை அறிந்தோர் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆயினும் இதை இந்துக்களுக்கு எதிரானதாக திசைதிருப்பி, ஆங்கில ஊடகங்களில் விவாதங்களை நடத்தி, வட இந்திய மக்களிடம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாசக தலைவர்களும் பாசக ஆதரவு ஊடகங்களும் தயங்கவில்லை.
வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்ற பொய்ப் பரப்புரையை பீகார் பாசகவின் இணைய அணி மேற்கொண்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரானவர்களாகக் காட்டி திமுக உடன் நட்பை பேணும் பீகார் கட்சியான இராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு நெருக்கடி கொடுக்க முயன்றனர்.
இப்போது திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சை, ’இந்துக்களை இனவழிப்பு செய்வதற்கான அறைகூவல்’ என இட்டுக்கட்டி திமுகவும் திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசும் மற்றும் ஒட்டுமொத்த ’இந்தியா’ கூட்டணியும் இந்துக்களுக்கு எதிரானது என சித்திரிக்க முயன்றது பாசக.
இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமிய, கிறித்தவ இனவழிப்பை நிகழ்ச்சி நிரலாக கொண்டிருக்கும் கட்சிதான் இந்துக்களுக்கு எதிராக இனவழிப்பு அறைகூவல் விடுக்கப்பட்டதாக இட்டுக்கட்டி அரசியல் செய்ய துணிந்திருக்கிறது. உடனே, திமுகவை தவிர ஏனைய எதிர்க்கட்சிகள் பாசகவின் பொறியில் சிக்கிக் கொண்டு, தடுத்தாட தொடங்கிவிட்டனர்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக இனவழிப்பு நடத்திய குற்றவாளிகள்தான் மோடி – அமித் ஷா கும்பல். இவ்வாண்டுத் தொடக்கத்தில், பிபிசி வெளியிட்ட காணொளி, குஜராத் வன்முறைகள் ஓர் இனத் துடைப்பிற்கான அனைத்து முத்திரைகளையும் கொண்டிருந்தன, மோடி அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தன. ஆனால், எதிர்க்கட்சிகள், ”மோடி ஒர் இனவழிப்பு குற்றவாளி” என்று துணிவுடன் விமர்சிக்க தயங்கின.
கடந்த மே மாதத்தில் இருந்து மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு எதிராக நடந்தேறிவரும் இனத் துடைப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய ’இனவழிப்புக் குற்றவாளி மோடி’ என்று விமர்சிக்கத் தயங்கின எதிர்க்கட்சிகள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஓர் இனத் துடைப்பைச் செய்ய மோடி அரசு முயல்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தயங்கின.
இந்தியாவில் இனவழிப்பு அபாயம் இருக்கிறது என்று அமெரிக்காவை மையம் இட்டு செயல்படும் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆயினும், ஆட்சியில் இருக்கும் பாசக அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட வில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு திசம்பர் 16 – 17 வரை அரித்வாரில் நடந்த ‘தர்ம சன்சத்’ அல்லது ‘சமயப் பாராளுமன்றம்’ என்று அழைக்க்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் பாசக தலைவர் அசுவினி உபாத்யாய், பாசகவின் மகிளா மோர்ச்சா தலைவர் உதிதா தியாகியும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், இந்து ரக்ஷா சேனாவின் தலைவர் சுவாமி பிரபோனந்த் கிரி, “ நீங்கள் இறக்கத் தயாராகுங்கள் அல்லது கொல்லத் தயாராகுங்கள், வேறு வழியில்லை. அதனால்தான், மியான்மரைப் போல, இங்குள்ள காவல்துறையும் இங்குள்ள அரசியல்வாதிகளும் இராணுவமும் மற்றும் ஒவ்வொரு இந்துவும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும், நாம் இந்த தூய்மை இயக்கத்தை ( சஃபாய் அபியான்) நடத்த வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை” என்று மியான்மரில் ரோஹிங்கியாக்கள் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசினார்.
அதே மாநாட்டில், நிரஞ்சனி அகாராவின் தலைவரும் இந்து மகாசபையின் பொதுச் செயலாளருமான பூஜா ஷகுன் பாண்டே (எ) சாத்வி அன்னப்பூர்ணாவும் ஆயுதம் தாங்கிய இசுலாமிய இனவழிப்புக்கு அறைகூவல் விடுத்தார்.
ஆனால், இப்படிப்பட்ட வெறுப்புப் பேச்சுகள், இனவழிப்பு அறைகூவல்கள் இந்துத்துவ அரசியலுக்கும் சங் பரிவார கும்பலுக்கும் எதிரான கண்டனங்களை எழுப்பவில்லை. அல்லது எதிர்க்கட்சிகள் இதை நாடு தழுவிய விவாதமாக மாற்றுவதில் தோல்வி கண்டன.
உண்மையிலேயே இனவழிப்பை செய்து காட்டியவர்கள், இனவழிப்புக்கு அறைகூவல் விடுப்பவர்கள், இனவழிப்பை நிகழ்ச்சி நிரலாக கொண்டிருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். – பாசகவினர் ஆவர். ஆனால், அவர்களை இனவழிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த எதிர்க்கட்சிகள் தயங்கிக் கொண்டிருந்தன. ஆனால், உதயநிதியின் பேச்சை இட்டுக்கட்டி இந்துக்களை இனவழிப்பு செய்வதற்கு காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன என்று பரப்புரை செய்ய துணிகிறது பாசக. நமது எதிரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
சனாதன ஒழிப்பு என்பது பார்ப்பன எதிர்ப்பு என்பதையும் தாண்டி சாதி ஒழிப்பு , தீண்டாமை ஒழிப்பு என்பதாக விரிந்து செல்ல வேண்டியுள்ளது. போர்க்குணமிக்க வகையில் தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டத்தை கருத்தியல் மற்றும் நடைமுறை தளங்களீல் நடத்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதன் மூலம், சனாதன தர்மம் என்ற பெயரில் இவற்றைப் பாதுகாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் பிற்போக்கு அரசியலையும் தோலுரிக்க முடியும்.
இன்னொருபுறம் மோடி ஓர் இனவழிப்பு குற்றவாளி என்று அடையாளப்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் இசுலாமிய இனவழிப்பு அரசியலை மக்களிடையே அடையாளப்படுத்தி அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு நாம் துணிய வேண்டும்.