மோடி அரசின் அரசியல் ஆயுதம் : பண மோசடி தடுப்புச் சட்டம்! – மணிமாறன்
‘பண மோசடி தடுப்புச் சட்டம்’ ஒன்றிய அரசால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2005 ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. பலமுறை சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட போதும், 2019 ஆம் ஆண்டு பண சட்டங்களுடன் (Money Bill) சேர்த்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்தம், அமலாக்கத் துறைக்கு சொத்துகளை முடக்குதல் உட்பட மிகையான அதிகாரங்கள் பலவற்றை வழங்கியுள்ளது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியலைமைப்பு சட்டப்பிரிவு 5ன்படி, பண மோசடி தடுப்புச் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
”அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்கில் பின்பற்றப்படும், ‘இசிஐஆர்’ (அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை) என்பதை காவல்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையுடன் (எஃப்ஐஆர்) ஒப்பிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த இசிஐஆரை வழங்க வேண்டிய கட்டாயமில்லை. கைது செய்வதற்கான காரணங்களை மட்டும் அமலாக்கத்துறை தெரிவித்தால் போதுமானது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்களை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அவை வருமாறு:
*பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 8(4) – சொத்துக்களை முடக்க அதிகாரம் வழங்குகிறது.
- சட்டப்பிரிவு 17(1), 18(1) – ஊர்திகள், பொருட்களைப் பறிமுதல் செய்யவும், வங்கி லாக்கரை உடைத்து அதிலிருக்கும் ஆவணங்களைக் கைப்பற்றவும் அதிகாரம் அளிக்கிறது.
*சட்டப்பிரிவு 19 – காரணம் சொல்லாமல் கைது செய்ய அதிகாரம்.
*சட்டப்பிரிவு 44 – சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம்.
*சட்டப் பிரிவு 45 – பிணை வழங்க மறுப்பது.
காங்கிரஸ் கட்சி ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, பண மோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அதன் வரம்பை விரிவுபடுத்தியது. ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் அனைத்தும் அதனை மேலும் கொடூரமானதாக மாற்றியுள்ளது.
கொடூரமான சட்டப் பிரிவுகள்
காவல்துறை அதிகாரியிடம் ஒருவர் கொடுக்கும் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, அவருடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாது. ஆனால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அத்தகைய பாதுகாப்பு எதுவும் இல்லை.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே சட்டம் இதுதான். அமலாக்கத்துறையிடம் உண்மையை வெளிப்படுத்தாதது கூட தண்டனைக்கு வழிவகுக்கும். அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறுவதில்லை.
பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் வெளிவருவதற்கு, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்; மேற்கொண்டு எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டார் என்று நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். பிணை பெறுவதற்கான இந்த இரட்டை நிபந்தனைகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. (நிகேஷ் தாராசந்த் ஷா Vs யூனியன் ஆஃப் இந்தியா) ஆனால், இந்த சட்டப் பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றன. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் வெளி வருவதற்கான விதிகள், தடா, பொடா சட்டங்களை விட கடுமையானவை.
பண மோசடி தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர் தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டும் இழப்பதில்லை. அவருடைய சொத்துக்கள், வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறையால் கையகப்படுத்த முடியும் என்பதால், அவர் பொருளாதார மரணத்தை சந்திக்க நேரிடும்.
அமலாக்கத்துறை 1,518 சொத்துக்களை தற்காலிகமாக கையகப்படுத்தியதில், 2.1% மட்டுமே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி, காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாவிட்டாலும், அமலாக்கத்துறையால் ஆய்வு மேற்கொள்ளவோ சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ முடியும். ஆனால் அதற்கு முன்பே நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (குற்றச் சதி) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளில் வருமான வரித்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருப்பதே போதுமானது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது. அதாவது, அமலாக்க இயக்குநரகத்தின் வரம்புக்கு உட்பட்ட குற்றங்களின் அட்டவணையில் இந்த சட்டப்பிரிவுகள் இருப்பதால், வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்ததே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப் போதுமானது என்ற வாதத்தை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
அடுத்து, பண மோசடி குற்றச்சாட்டுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றும் அமலாக்க துறையால் விசாரிக்க முடியும்.
வாஜ்பாய் அரசு காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பண மோசடி தடுப்புச் சட்டத்தில், 11 முறை திருத்தங்கள் செய்யப்பட்டு மிகக் கொடூரமானதாக மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ‘அடக்கி வைப்பதற்கு’ இவையே போதுமானதாகும்.
அரசியல், பொருளாதாரத்தை ஊழல், முறைகேடுகளில் இருந்து தூய்மைப்படுத்துவது அவசியமானதே. அதற்காக, தூய்மைப்படுத்துவது என்ற பெயரில் அரசியல் எதிரிகள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதையும் துன்புறுத்துவதையும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
இது போன்ற நடவடிக்கைகள் ஊழல், முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கு மாறாக, மோடி அரசுடன் இணக்கமாக(?) இல்லாத தொழில் அதிபர்களையும் எதிர்க்கட்சிகளையும் முடக்கவே பயன்பட்டு வருகிறது.
இதற்கு ஓர் அண்மைய எடுத்துக்காட்டு, சாங்கி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் வாங்கியதுதான். சாங்கி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஸ்ரீசிமெண்ட்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வந்தது. அதானி குழுமமும் பங்குகளை வாங்க முயற்சித்தது. இந்நிலையில், ஸ்ரீசிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு நடைபெற்றது. அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசிமெண்ட்ஸ், சாங்கி நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. பிறகென்ன, அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகள் பாசிசப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடாகும்.
மதப் பகைமையையும் வெறுப்பையும் அரசியலாக வளர்த்து வரும், இந்த பாசிச ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக பரந்த மக்கள் இயக்கம் கட்டப்பட்டு முடிவுரை எழுதப்பட வேண்டும்.