கஷ்மீர் – பறிக்கப்படும் அரசியல் மற்றும் நில உரிமைகள்! – ரியாஸ்
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 35A மற்றும் 370 ஆகியவற்றை ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டமன்றத்துடன் செயல்படும் என்றும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டமன்றம் இல்லாமல் செயல்படும் என்றும் அறிவித்தது. ஒரு மாநிலத்தின் நிலையை நாடாளுமன்றத்தில் போதிய விவாதங்கள் இன்றி சில மணிநேரங்களில் தலைகீழாக மாற்றியது பாசிச பா.ஜ.க. ‘தேச பாதுகாப்பு’ ‘தேச நலன்’ என்று பா.ஜ.க. கூப்பாடு போட்டதால் எதிர்கட்சிகளும் பெரிய எதிர்ப்புகளை காட்டவில்லை. டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் அரவிந்த கெஜ்ரிவால், ஜம்மு கஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதை வரவேற்றார். டெல்லியின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசாங்கத்தின் சட்ட மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறார் அதே கெஜ்ரிவால்.
‘அரசங்கத்தின் இந்த வீரமிக்க முடிவை வரவேற்கிறேன். ஜம்மு கஷ்மீருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் இது அவசியமாகும். அரசியல் நலன் மற்றும் வேறுபாடுகளை கடந்து அனைவரும் இதனை ஆதரிக்க வேண்டும்’ என்று வாழ்த்துப்பா பாடினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். அயோத்தியில் ராமர் கோயில், இந்தியாவில் பொது சிவில் சட்டம், கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிப்பு. இவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய இலக்குகள். அதனால்தான் தங்களுக்குள் பிரச்சனைகள் இருந்தாலும் பா.ஜ.க. அரசின் இந்த முடிவை வெகுவாக பாராட்டினார் பகவத்.
அடுத்த வருடம் (2020) ஆகஸ்ட் 5 அன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் மோடி. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தேதியை தற்போது தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதுடன் முஸ்லிம்களே ஆட்சியாளர்களாகவும் இருப்பதும்தான் ஆர்.எஸ்.எஸ். கண்களை உறுத்தி வந்தது. அதனால்தான் சிறப்பு அந்தஸ்துகளை நீக்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஜம்மு கஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்தார்கள். ஐந்து வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஜம்மு கஷ்மீர் இருந்து வருகிறது. இந்த அவலத்தை மறைப்பதற்காக கோமாளித்தனமாக உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட்டு ‘நாங்கள் அடித்தட்டு ஜனநாயகத்தை பலப்படுத்தி விட்டோம்’ என்று பெருமை பேசுகிறது பா.ஜ.க.
மக்கள் தொகை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் வேலைகளையும் சங்பரிவார் கஷ்மீரில் மேற்கொள்கிறது. இதனை நிறைவேற்றும் வகையிலேயே 370வது பிரிவு நீக்கப்பட்டது என்ற கஷ்மீர் மக்களின் அச்சம் நியாயமானது என்பதை பலரும் இப்போது புரிந்து வருகின்றனர்.
அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 370 மற்றும் 35A ஆகியவை கஷ்மீரின் நிலங்கள் மீதான உரிமையை அந்த மக்களுக்கு உறுதிப்படுத்தின. இந்த பிரிவுகள் நீக்கப்பட்ட பின் ஜம்மு மற்றும் கஷ்மீர் மறுகட்டமைப்பு உத்தரவை மார்ச் 31, 2020 அன்று ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 109 சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்ததுடன் 29 சட்டங்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டன. மிக முக்கியமாக கஷ்மீரின் நிலங்களை வெளிநபர்கள் வாங்குவதற்கு இந்த உத்தரவு வழிவகுத்தது.
இதன் மூலம், ஜம்மு கஷ்மீரில் 15 வருடங்கள் வசித்த நபர்கள், ஏழு வருடங்கள் அங்கு படித்து, பத்து அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள், பத்து வருடங்கள் அங்கு பணியாற்றிய ஒன்றிய அரசு அலுவலர்களின் பிள்ளைகள், மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் புலம்பெயர்ந்தவர் என்று சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் ஜம்மு கஷ்மீரின் குடியிருப்புவாசிகளாக கருதப்படுவார்கள் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இவர்கள் அனைவரும் ஜம்மு கஷ்மீரில் நிலம் வாங்கலாம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு பதினைந்து நாட்களுக்குள் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கடுமையான விதிகள் மே 18, 2020 அன்று கொண்டு வரப்பட்டன. கொரோனா பெருந்தொற்கு காலத்தில் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கஷ்மீரின் மக்கள் தொகை கட்டமைப்பை மாற்றுவதுடன் தேர்தல் களத்தில் முஸ்லிம் வாக்குகளை தேவையற்றவையாக மாற்றும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்று கஷ்மீர் மக்கள் குற்றம் சாட்டினர்.
தொகுதி மறுசீரமைப்பு அந்த மக்களின் நியாயமான அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஜம்மு கஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளை 83இல் இருந்து 90 ஆக மறுசீரமைப்பு ஆணையம் அதிகரித்த போதும் கஷ்மீர் பகுதியில் ஒரு தொகுதி மட்டுமே அதிகப்படுத்தப்பட்டது. அதாவது, 46 ஆக இருந்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்த்தப்பட்டது. அதே சமயம் ஜம்மு பகுதியில் 37 ஆக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்த்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 68,88,475. ஜம்மு பகுதியின் மக்கள் தொகை 53,78,538. ஆணையத்தின் வெளிப்படையான இந்த பாரபட்சம் சங்பரிவாரின் செயல்திட்டத்தின் வெளிப்பாடு என்பதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள்தொகை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் அடுத்த பகுதியாக அமைந்தது ஜூலை 5 அன்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட அறிவிப்பு. ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் நிலமற்ற மக்களுக்கு ஐந்து மர்லாகள் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார் மனோஜ் சின்ஹா. ஒரு மர்லா என்பது ஏறத்தாழ 270 சதுர அடி. 2024இல் 1.99 இலட்சம் மக்கள் இதனால் பயனடைந்திருப்பார்கள் என்ற துணைநிலை ஆளுநரின் அறிவிப்பு கஷ்மீர் மக்களின் தலையில் இடியாக இறங்கியது.
ஜம்மு கஷ்மீரில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை 19,047 மட்டுமே என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசாங்கம் 2021இல் தெரிவித்த நிலையில், 1.99 இலட்சம் மக்களை எங்கிருந்து கொண்டு வரப்போகிறார்கள் என்று அம்மக்கள் எழுப்பும் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. வீடற்ற மக்களுக்கு நிலம் வழங்குவது என்ற போர்வையில் வெளிநபர்களுக்கு ஜம்மு கஷ்மீரின் நிலங்களை தாரை வார்க்கும் வேலைகள் தொடங்கவுள்ளன என்பதே உண்மை.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்காக கொண்டு வரப்பட்ட வாடகை வீடு திட்டத்திலும்
‘வேலை, கல்வி, நீண்ட கால சுற்றுலா பயணம் என எதற்காகவும் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வந்த எவரும் பயன் பெறலாம்’
என்ற அறிவிப்பும் மக்களிடம் சந்தேகங்களை அதிகப்படுத்தியது. புலம்பெயர் தொழிலாளர்களை அதிகளவில் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீப காலங்களில் அங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையும் இதனுடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
கஷ்மீர் மக்கள் மீதான நெருக்கடிகள் பல தசாப்தங்களாக தொடர்ந்துள்ள போதும் 2019ற்கு பிறகு அது புதிய கட்டத்தை அடைந்துள்ளது. முஸ்லிம்கள்தான் இதன் பிரதான இலக்கு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிம்களை மட்டுமல்லாமல் ஒன்றிய அரசாங்கத்தின் முடிவு அனைவரையும் பாதிக்கிறது என்பதை தற்போதுதான் அம்மக்கள் உணர்ந்து வருகின்றனர். சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டதை வரவேற்றவர்கள் கூட தங்களின் முடிவு முட்டாள்தனமானது என்பதை தற்போது உணர்ந்துள்ளனர்.
லடாக் பகுதி மக்களின் தொடர் போராட்டங்கள், ஜம்மு பகுதியில் பெருநிறுவனங்களின் நுழைவை கண்டித்து இந்து வியாபாரிகள் நடத்திய போராட்டங்கள் ஆகியவை இதற்கான சில உதாரணங்கள். சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதை தொடர்ந்து ‘கஷ்மீரில் நாமும் நிலம் வாங்கலாம்’ என்று அறிவின்றி கூவிய இங்குள்ள சங்கிகள், அந்த பலனை அனுபவிக்கும் உரிமை கார்பரேட்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்துவிட்டனர்.
ஜம்மு கஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை தற்போதுதான் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. பறிக்கப்பட்ட உரிமைகளை நீதிமன்றம் மீட்டுத் தருமா என்ற நம்பிக்கையுடன் அம்மக்கள் உள்ளனர்.
– ரியாஸ்