ஈழத்தமிழர் அழிக்கப்படுவது பற்றியோ நிலங்கள் பறிக்கப்படுவது பற்றியோ இந்திய ஒன்றிய அரசிற்கு கவலை இல்லை – செந்தில்
நன்றி: உரிமை மின்னிதழ்
உரிமை மின்னிதழுக்கு வழங்கிய செவ்வி
- தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த 223 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுத் திட்டத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
”இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், 7469 வீடுகள் கட்டிக்கொடுக்கவிருக்கிறோம். முதல் கட்டமாக கடந்த ஆண்டு 176 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டும் மேலும் 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
பொருளியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஏதிலிகள் வந்தவண்ணம் உள்ளனர். இலங்கையில் இனச்சிக்கலுக்கு தீர்வு காணாமல் பொருளியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆனால், இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 2021 இல் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கும் தமிழர் தாயகம் எதிர்கொண்டுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் பிரச்சனையை ஏதிலியர் வாழ்வுரிமைப் பிரச்சனையாக சுருக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறது.
கடந்த கால தவறுகளை அறிந்தேற்று இன்றைக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்ற நேர்வகை அணுகுமுறை இன்றி தமது தவறுகளை மறைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் இணையப் பரப்புகளை செய்து கொண்டே இன்னொருபுறம் இந்த நலத்திட்ட அறிவிப்புகளை செய்வதை ஓர் உருமறைப்பு உத்தியாக மேற்கொண்டு வருகிறது. ஈழத் தமிழரின் அரசியல் கோரிக்கைகள் முன்னுக்கு வந்தால் அது அதிமுக-பாசக அணிக்கோ நாம் தமிழர் கட்சிக்கோ சாதகமாகிவிடக் கூடும் என்று அஞ்சுகிறது. பழையபடி ஈழத் தமிழர்தம் அரசியல் கோரிக்கைகளை முன்னுக்கு கொண்டு வந்து அதை மக்கள் இயக்கமாக மாற்றாவிட்டால் தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்கு எந்த உருப்படியான பங்களிப்பையும் செய்ய முடியாது.
2. ஐ.நா. தீர்மானத்தை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மீண்டும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளதே?
2015 ஆம் ஆண்டு 30/1 தீர்மானத்தை இரணில் – சிறிசேனா அரசு தாமே முன்மொழிந்து ஏற்றுகொண்டது. ஆனால், 40/1 தீர்மானத்தில் இருந்து விலகிக் கொண்ட கோத்தபய தலைமையிலான சிறிலங்கா அரசு 46/1 , 51/1 தீர்மானங்களை ஏற்கவே முடியாதென சொல்வதற்கு காரணம், இத்தீர்மானங்களில் சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்து அதற்கு நிதி ஒதுக்கியிருப்பதுதான். இதை இறைமை மீறலாக சிறிலங்கா அரசு கருதுகிறது. பன்னாட்டுப் புலனாய்வு செல்வதற்கான முதல்கட்ட ஆயத்தமாக சிறிலங்காவால் பார்க்கப்படுகிறது. சான்றுகளைப் பாதுகாப்பது தொடர்பில் தமிழர்கள் கவனம் செலுத்தி என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கண்காணிக்க வேண்டும்.
மேற்குலக ஆதரவு இரணில் சிறிலங்கா அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்துதான் 51/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுகளின் அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் தானும் ஓர் சட்டப்பூர்வ அரசு என்ற வகையில் தனக்கு இருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துகிறது சிறிலங்கா. தீர்மானங்களை அவர்கள் இயற்றுவதும் சிறிலங்கா ஏற்க மறுப்பதும் புவிசார் பேர அரசியல் காய் நகர்த்தல் என்பது இரு தரப்புக்கும் தெரிந்த ஒன்றுதான், இன்றைய அநீதியான உலக ஓழுங்கின் வாடிக்கையாகவும் இருக்கிறது.
3. கச்சத்தீவில் சிறிலங்கா அரசு புத்தர் சிலையை நிறுவியுள்ளதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?
குருந்தூர் மலையிலும் நெடுந்தீவிலும் புத்தர் சிலையை நிறுவியவர்கள் கச்சத்தீவை மட்டும் விட்டுவைக்கவா போகிறார்கள்?
முள்ளிவாய்க்கால் என்பது தமிழினப் படுகொலையை குறித்து நிற்கும் வரலாற்றுக் குறியீடு மட்டுமல்ல, முழுநீள இனவழிப்புக்கு தமிழர் தரப்பில் இருந்த தடைகள் அனைத்தும் தகர்த்தப்பட்டதன் குறியீடும்தான் அது. சிங்களக் குடியேற்றங்கள், படைமயமாக்கல், காணி பறிப்பு, ஆயிரக்கணக்கில் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள், காட்டு வளம் பறிப்பு, கடல் வளம் பறிப்பு என்ற வரிசையில் தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் பெளத்தமயமாக்கல் என்ற நிகழ்ச்சிநிரலைக் கடந்த 13 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறது. இதைதான் கட்டமைப்புவகைப்பட்ட இனவழிப்பு என்று சொல்கிறோம். இதை தடுக்க தவறினால் மலையகத் தமிழர்களைப் போல் சிதறடிக்கப்பட்ட மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்களை மாற்றுவதற்கு சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு ஒரிரு பத்தாண்டுகள் போதும்.
கச்சத்தீவு போனாலென்ன, வடக்குகிழக்கு போனாலென்ன இந்திய அரசு தமிழர்களின் பாரம்பரிய நிலம் பறிபோவது பற்றி கவலை கொள்வதில்லை. தன்னுடைய பேரரச மேலாதிக்க நலனில் இருந்து, தனது காலடியில் இருக்கும் இலங்கைதானே, ’பார்த்துக்கலாம்’ என்று தமிழர்கள் அழிக்கப்படுவதையும் தமிழர் தாயகம் பறிபோவதையும் வேடிக்கைப் பார்க்கிறது. உக்ரைன் மீது இரசியாவும் சைப்ரஸ் மீது துருக்கியும் படையெடுத்தது போல் தானும் இலங்கை மீது படையெடுத்துக் கொள்ளலாம் என்று இந்தியாவின் அதிகார வர்க்கம் கருதக்கூடும். ஆனால், சிறிலங்கா அரசு வளைந்து குனிந்து விட்டுக்கொடுத்து நூறாண்டு கடந்த திட்டமிடலுடன் செயல்படுகிறது என்பதற்கான சான்றுதான் வடக்கு நோக்கி அது செய்துவரும் பெளத்தமயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் ஆகும். ஈழத் தமிழர்களுக்கு உரிய தாயக நிலம் பெளத்தமயமாவது ஒரு பண்பாட்டு இனவழிப்பாகும்.
எட்டுக்கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் இறைமையைக் கோரி நிற்கும் இந்திய அரசு, இதை வேடிக்கைப் பார்க்காமல் கண்டிக்க வேண்டியது அதன் கடமையாகும்.
4. உக்ரைன் போர் ஈழத் தமிழர் பிரச்சனையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
உலகம் இரு துருவமாக மாறி நிற்பதை உக்ரைன் போர் வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது. அதே இருதுருவ நிலைதான் இலங்கையிலும் தைவானிலும் இருக்கிறது. எனவே, வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாட்டில் தங்கள் நலனை எப்படி உறுதிசெய்து கொள்வது? என்று தமிழர்கள் திட்டமிட்டு வினையாற்ற வேண்டும். மேலும் இரசியாவை சுற்றி வளைப்பதற்காக போர்க்குற்றச்சாட்டுகளை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க தலைமையிலான மேற்குலகம். இரசியா மீதான போர்க்குற்றச்சாட்டுகளை உரக்கப் பேசுவது, ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களுக்கு நீதிகோரும் போராட்டத்திற்கான வெளியை உருவாக்கியுள்ளது. எப்படி
’பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று மேற்கு ஆசியாவுக்கு எதிராக அமெரிக்கா ஏற்படுத்திய சுழியில் ஈழத் தமிழர் போராட்டம் தலைக்குத்தியது போல் கிழக்கு ஐரோப்பாவுக்கு எதிராக அமெரிக்கா ஏற்படுத்தும் ‘போர்க்குற்ற’ சுழியில் இராசபக்சேக்கள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. எனவே, நீதிக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய காலம் இது.
தமிழர்கள் ஒரு தரப்பாக தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டு இரு துருவமாகப் பிளவுபட்டிருக்கும் உலக வல்லரசுகளையும் பிராந்தியப் பேரரசுகளையும் கையாள்வதற்கு அணியமாக வேண்டும்.