இந்திய அரசு தனது சொந்த குடிமக்களின் மீது குண்டு போட்டதை நீங்கள் அறிவீர்களா?
ஏப்ரல் 7, 2023 அன்று, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா மற்றும் ஜப்பாகட்டா கிராமங்களின் பழங்குடிகள் மீது ஆளில்லா கலன்கள்(ட்ரோன்கள்) மூலம் வான்வழியாக இந்திய அரசு குண்டுகள் போட்டது.
காலை 6 மணியிலிருந்து குண்டுகள் விழத் துவங்கியபோது பழங்குடிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மகுவா இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். குண்டு போட்ட பிறகு, இந்திய விமானப் படையினர், விமானப் படைக்குச் சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்களிலிருந்து பழங்குடிகளை நோக்கி சுட்டனர். காடு, பயிர்கள், குடியிருப்புகள் என அனைந்தும் அழிந்தன. மேலும், தாக்குதலிலிருந்து தப்பிக்க ஓடும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் காயமடைந்தனர்.
2021 இலிருந்து இதுவரை நடத்தப்பட்டதில் இது நான்காவது குண்டு வீச்சு, 2023 இல் மட்டும் இது இரண்டாவது குண்டு வீச்சாகும். முதல் தாக்குதல் 19 ஏப்ரல் 2021 இலும், இரண்டாவது தாக்குதல் 15 ஏப்ரல் 2022 இலும் நடத்தப்பட்டது. 11 ஜனவரி 2023 இல் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப், க்ரேஹவுண்ட் மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் மாவட்ட ரிசர்வ் படையுடன் சேர்ந்து தெலங்கானா-சத்தீஸ்கர்-ஒரிசா எல்லைப்புற கிராமங்களைக் குறிவைத்துத் தாக்கினர்.
அமெரிக்க உளவுத்துறையான என்.எஸ்.ஏ. உதவியுடன்தான் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்திலிருந்து தான் இந்திய விமானப் படை அதிகாரிகள் அந்த ஆளில்லா கலன் தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்த தாக்குதல்கள் இந்திய அரசின் நீண்ட நாள் திட்டமான சமதன் – ப்ரஹர் (SAMADHAN Prahar – பச்சை வேட்டை போன்ற ) நடவடிக்கையின் பகுதியாகும். இதில் தொழில்நுட்ப மற்றும் பொருளியல் ரீதியான உதவியுடன் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானக் கருத்திய ரீதியான போருக்கு இஸ்ரேல், அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வழங்குகின்றன. 7 ஏப்ரல் 2023 அன்று நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த மாதம் பஸ்தர் வருகை புரிந்து, ’போராளிகளை ஒழிப்போம்’ என்று அமித் ஷா சூளுரைத்த பிறகு நடந்துள்ளது. அமெரிக்கா பிற நாடுகள் மீது குண்டு வீசும்போது அதை எதிர்க்கும் பல செயற்பாட்டாளர்கள், இந்திய அரசு தனது நாட்டுக்குள்ளேயே குண்டு வீசும்போது அமைதியாக உள்ளனர்.
ஏன் அரசு ஆளில்லா கலன் தாக்குதல்களை ஏவுகிறது அல்லது சமதன் – ப்ரஹார் திட்டம் என்றால் என்ன?
முன்னர் சுரண்டுபவர்கள் பிரித்தானிய காலனியாளர்களின் வடிவில் இருந்தனர்; இன்று பல்வேறு புதிய காலனியாளர்களாக, இயற்கை வளங்கள் மீதும் மக்களின் உழைப்பின் மீதும் தங்கள் தரகுகூட்டாளிகளின் உதவியுடன் ஏகாதிபத்திய சூறையாடலை நடத்துகின்றனர். அதானி, பிர்லா, வேதாந்தா, டாடா மற்றும் ஜிண்டால் போன்ற தரகுமுதலியர்கள் மத்திய, மாநில அரசுகளில் உள்ள தங்களது தரகு அதிகாரவர்க்க்கத்தினருக்கு பழங்குடி மக்கள் வாழுமிடங்களிலிருந்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்க உதவுவதற்கு பணம் கொடுக்கின்றனர்.
சுரங்கங்கள் மூலம் பெருங்குழுமங்களின் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட கொள்ளைகள், பழங்குடிகளிடமிருந்தும் பெசா சட்டத்திற்க் எதிராக இருப்பதால் பழங்குடிகளின் கிராம சபைகளிடமிருந்தும் தீவிரமான எதிர்ப்பை சந்திக்கின்றன. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இன்ன பிற வழியிலான அமைதிப் போராட்டங்கள் எப்பொழுதுமே கடும் அடக்குமுறைக்கு உள்ளாகின்றன. மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கும் போது, அரசு அவ்விடங்களில் மேலும் துணை இராணுவப்படையினரின் கூடாரங்களை அமைக்கிறது; நிலக்கிழார்களும் பெருங்குழுமங்களும் தமது படைகளை உருவாக்குகின்றன. காங்கிரசால் சத்தீஸ்கர் மாநிலத்தில் துவக்கப்பட்ட சல்வா ஜூடும் படையின் தேவைகளுக்கு டாடா நிறுவனம் நிதியளித்தது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஆயுதப் படையினர் பழங்குடிகளின் நிலங்களை, காடுகளை, அவர்களது நீர்நிலைகளை சிறையாகவோ அல்லது வதை முகாம்களாகவோ மாற்றிவிடுகின்றனர். அங்கு பழங்குடிகளின் வாழ்க்கை பெருங்குழுமங்களின் தயவில் தங்கி இருப்பதாக மாறிவிடுகின்றது. நிறுவனமயப்படுத்தப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பழங்குடிகளின் “உயிர் வாழ்வதற்கான உரிமையை” பறிக்கும் போதும் பழங்குடிகள் பிர்சா முண்டா போன்ற ஆதிவாசி தலைவர்களின் பாதையை தெரிவுசெய்யுமாறு தள்ளப்படுகின்றனர்.
மொழிபெயர்ப்பு:: பாலாஜி
கட்டுரையாளர்:ரெசாஸ் எம். சீபா சைதிக்
நன்றி: ஏசியன் ஸ்பீக்ஸ்