திமுக அரசே! வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் திருத்தச்சட்டம் 65 ஏ வை திரும்பப்பெறுக!
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் (மா-லெ-மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர் அறிக்கை
கடந்த மார்ச் 23 அன்று தொழிற்சாலைகள் சட்டத்தில் 65 ஏ என்ற புதிய பிரிவை சேர்த்து 51, 52, 54, 55, 56, 59 ஆகிய பிரிவுகளை ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது ஒருவகையான தொழிற்சாலைகளுக்கோ பொருந்தாது என தமிழ்நாடு அரசு அறிவிக்க வழிசெய்யும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி விதிகள் – எட்டுமணிநேர வேலை, விடுமுறை நாளில் பணியாற்றினால் ஈடுகட்டும் மாற்று விடுமுறை, மிகை நேரப்பணிக்கு இரட்டிப்பு ஊதியம், வேலை நேரத்திற்கு இடையில் உணவு, இயற்கை தேவைகள் ஆகியவற்றுக்கான இடைநேரம் போன்றவை குறித்து வரையறுப்பவையாகும். அரசு நினைத்தால் இந்த ஒழுங்குமுறை எதுவும் குறிப்பிட்ட தொழிலகங்களுக்குப் செயல்படாது என விதிவிலக்கு அளிக்கலாம். அதாவது 8 மணி நேர வேலைக்கு பதிலாக 11 அல்லது 12 மணி நேரம் வேலை வாங்கலாம், மிகை நேரம் பணியாற்றினால் வழங்கப்படும் இரட்டிப்பு ஊதியம் இல்லாமல் போகும். விடுமுறை நாளில் பணியாற்றினால் அதற்கு கிடைக்கக்கூடிய ஈடுகட்டும் விடுமுறை என்பது இனி இருக்காது. உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வேலைநேரத்தில் நெகிழ்ச்சி தன்மையைக் கொண்டு வருவதற்கும் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் இது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கட்டாய சட்டம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மின்னணு தொழிற்சாலைகள், தோல் அல்லது காலனி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகிய துறைகளிலேயே இச்சட்டம் அமலபடுத்தப்படும் என்றும் திமுக அரசு சொல்கிறது.
திமுக அரசைப் பொருத்தவரை இது ஒரு புதிய போக்கல்ல, இது அதிர்ச்சிக் கொள்ளத்தக்க ஒன்றும் அல்ல.
நிரந்தர ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக சொல்லி அதை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர் பணி, செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளிலும் நிரந்தர ஊழியர்களைப் பணியமர்த்தாமல் ஒப்பந்தப் பணியாளர்களையும் தினக்கூலிகளையும் வைத்து குறைந்தக் கூலி கொடுத்து வேலை வாங்குகிறது. துப்புரவுப் பணியாளர்கள், செலிவிலியர்கள் என எந்த துறையினருக்கும் அரசு வரையறுத்துள்ள குறைந்தபட்சக் கூலி கொடுக்கப்படுவதில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இந்த நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்திருப்பதாகவும் மேலும் குறைப்பது பற்றியும் பேசப்பட்டது. ஆனால், அதற்கு வழிவகையாக, செலவினங்களைக் குறைப்பதே முன்வைக்கப்பட்டது. இதுதான் உலக வங்கியின் வலியுறுத்தலும் ஆகும். அதாவது மக்கள் நிலத் திட்டங்களை செலவினங்களாகப் பார்த்து அதை குறைக்க வேண்டும். மானிய வெட்டு, வரியேற்றம், பொதுத் துறைகளை தனியார்மயமாக்கல் ஆகியவை செலவினக் குறைப்புகக்கான வழிவகைகளாக முன்வைக்கப்படுகிறது. இவையாவும் ஏற்கெனவே காங்கிரசு ஆட்சி கடைபிடித்து வந்துள்ள உலகமய, தனியார்மய, தாராளமயப் பொருளியல் கொள்கையே ஆகும். இதைத் தான் திமுகவும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றாகவும் தனித்துவமாகவும் ஒரு பொருளியல் கொள்கையை திமுக கொண்டிருக்கவில்லை. திமுகவின் கொள்கையும் புதுத்தாராளியமே..
ஒன்றிய அரசின் ஆட்சியில் இருக்கும் பாசக நிதிமூலதனத்தைக் குவிப்பதன் மூலம் சில ஏகபோகங்களை உருவாக்கி சிலராட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு திருத்தச் சட்டம், திவால் சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை கொண்டு வருகிறது. பாசகவின் இந்த சிலராட்சியை எதிர்த்து போராடுவதாக சொல்லிக் கொள்ளும் திமுகவும் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் சட்டத்திருத்தைக் கொண்டு வருகிறது. சிலராட்சிக்கு அடிப்படையாக இருப்பதே நிதிமூலதன சிறுகும்பல் ஆதரவு பொருளியல் கொள்கைகளே ஆகும். பாசிச பாசக ஆட்சியின் பொருளியல் அடித்தளத்தை எதிர்க்காமல் அதன் மக்கள் பகை கொள்கையை திமுக எதிர்க்கப் போகிறதா?
மாநிலத் தொழில் வளர்ச்சி என்பதே கடந்த 30 ஆண்டுகாலமாக அயல் முதலீடு சார்ந்த தொழில் வளர்ச்சியாக மாறிப் போயிருக்கிறது. அப்படி இந்த 30 ஆண்டுகளில் அயல்முதலீடுகள் சார்ந்த, நகர்ப்புறத்தை மையமிட்ட வளர்ச்சிக் கொள்கையின் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து இலட்சக்கணக்கானோர் மக்கள் உழைப்பாளர்களாக மாறி நகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினரது வாழ்க்கைச் சூழலில் இப்போதுதான் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத்திருத்தம் என்பது அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னுக்கு தள்ளக்கூடியதாகும். பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் வரைமுறையின்றி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய சட்டத்திருத்தம் இதுவாகும். இப்போது கடைபிடிக்கப்பட்டுவரும் அயல் முதலீட்டியம் சார்ந்த மாநிலத் தொழில் வளர்ச்சிக் கொள்கை என்பது தொழிலாளர்களைப் பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் இலாப வேட்டைப் பலிபீடத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் பெயரில்தான் இந்த அயல் மூதலீட்டு ஆதரவுக் கொள்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த அயல்மூதலீடுகளால் ஏற்படக் கூடிய வளர்ச்சிக் கொள்கை என்பது வேலையற்ற வளர்ச்சி ( Jobless growth) ஆக இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் தற்சார்பற்ற அயல்முதலீடு சார்ந்த வளர்ச்சிக் கொள்கைக்காக செய்யப்படும் மேற்படி சட்டத் திருத்தங்கள் வாழ்வாதாரத்தைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன.
சமூகநீதியின் வழி இந்துத்துவப் பாசிசத்தை எதிர்ப்பதாக திமுக சொல்கிறது. ஆனால், பாசிச எதிர்ப்புக்கும் முதலீட்டியத்தை மையமிட்ட அரசின் பொருளியல் கொள்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? பாசிசத்திற்கு அடிப்படையான பொருளியல் கொள்கையை எதிர்ப்பதில் திமுக அரசின் பார்வை என்ன? என்ற கேள்வியெழுகிறது.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் பெயரால் தொழிலாளர் வகுப்புப் போராடிப் பெற்ற உரிமைகளை தீயிலிடுவது என்பது தொழிலாளர் பகைப் போக்காகும். இந்த போக்கு தொடர்ந்தால் அது மக்கள் பகைத் தன்மைக்குதான் வழிவகுக்கும்.
இந்தியாவில் முதன்முதலாக தோழர் சிங்காரவேலரின் முன்னெடுப்பில் தொழில்நகரமான சென்னையில் மே நாள் கடைப்பிடிக்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடையும் இந்த வரலாற்றுத் தருவாயில் தொழிலாளர்கள் குருதி சிந்திப் போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையுரிமையை ஒழித்துக்கட்டுவது மிகுந்தக் கண்டனத்திற்குரியது. இவ்விசயத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள், பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பாரிடமும் திமுக அரசு தனிமைப்பட்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு இச்சட்டத் திருத்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மே 12 அன்று நடைபெறவிருக்கிற அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமையுடன்
பாலன்
பொதுச்செயலாளர்
த.க.க (மா-லெ-மாவோ சிந்தனை)