தமிழ்நாடு அரசே, பீகார் தொழிலாளர்கள் கொலை என வதந்தி பரப்பி ’கோயபல்சு’ வேலையை செய்த பாசகவினர் மீது சட்டநடவடிக்கை எடுத்திடுக!வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கலுக்கு அடிப்படையான தீர்வு காண கொள்கை முடிவெடுத்து செயல்படுத்திடுக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் கண்டன அறிக்கை

10 Mar 2023

நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கல் தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் எவ்வித சட்டப் பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருகின்றனர். ஒருபுறம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதீத சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் இன்னொருபுறம் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவதும் நடந்து வருகிறது. அத்துடன் கூடவே ஆயிரமாயிரமாய் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்து குவிவதால் மக்களிடையே  பண்பாட்டு வகையிலான முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வான சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி நிலைமை இருக்கிறது.  பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியது குறித்து அங்குள்ள கட்சிகள் கருதிப் பார்க்க வேண்டும். உண்மையில் வட இந்தியாவில் இருந்து இங்கு வந்து கொத்தடிமைகள் போல் வேலை செய்யும் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் அந்தந்த மாநிலங்களில் உள்நாட்டு வேலைகளை உருவாக்குவதை நோக்கி அங்குள்ள கட்சிகள் சிந்தித்து , அரசியல் பொருளாதாரக் கொள்கையை மாற்ற முயலவேண்டும். ஆண்டொன்றுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என்றும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து அதை கொஞ்சமும் நிறைவேற்றத் தவறிய தலைமை அமைச்சர் மோடியையும் பாசகவையும் நோக்கி பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.   

தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டவர்க்கே வழங்கப்பட வேண்டும். எப்படி தமிழ்நாட்டில் உள்ள மாநில, ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களே பணியமர்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோமோ அதுபோலவே தனியார் துறைகளில் உள்ள வேலைகளும் தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் துறை வேலைகளில் 80% தமிழ்நாட்டவர்களுக்கே என்று தமிழ்நாடு அரசு சட்டமியற்றி அதை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும்.  ”வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வராது, தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை” என்று சொல்லி இங்குள்ள பெருமுதலாளிகள் குறைந்த கூலிக்கு வெளிமாநிலத்தவர்களைப் பணியமர்த்தி ஒட்டச் சுரண்டுவதற்கு ஒத்தூதக் கூடாது.

முதன்மையாக தமிழ்நாட்டில் எந்தெந்த தொழில்துறையில் வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டிய தேவையுள்ளது?. எத்தனை விழுக்காடு அனுமதிக்கலாம்? வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வது, தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர்  வருவதை முறைப்படுத்த உள்நுழைவு அனுமதி சீட்டுப்( Inner Line Permit) பெறும் முறையைக் கொண்டுவருவதற்கான அரசமைப்பு சட்டத் திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம் 1979 ஐ கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர், தமிழ்நாட்டுத் தொழிலாளர் என்ற வேறுபாடின்றி தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் குறைந்தபட்சக் கூலிச் சட்டம், சம வேலைக்கு சம ஊதியச் சட்டம் ஆகிய சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்பிரச்சனையை மேலோட்டமாக பாவித்து பாசக கிளப்பும் வதந்திப் பிரச்சனையாக மட்டும் கையாண்டுவிட முடியும் என்று திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கருத வேண்டாம். ’தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே’ என்பதையும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் தேவையையும் வருகையையும் நிரந்தரமாக தங்குவதையும் ஒழுங்குபடுத்தவல்ல கொள்கை முடிவெடுத்து செயல்படுத்துவதையும் இப்போதிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை தமிழ்நாட்டில் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கடைபிடித்துவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கை அயல்முதலீடு சார்ந்த, நகரங்களை மையப்படுத்திய வளர்ச்சிக் கொள்கையாகும். வேளாண்மையை ஒழித்துக் கட்டி உழவர்களை வெளியேற்றும் கொள்கையாகும். இதனால் நாட்டின் ஒரு சில நகரங்களை நோக்கி குவியும் அயல்முதலீடு சார்ந்த தொழில்மயமாக்கல் குறைந்த கூலிக்கு உழைக்கும் தொழிலாளர்களை  தன்னை நோக்கி ஈர்க்கிறது. உலகமய, தாராளமய, தனியார்மயம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கையில் இருந்து விடுபடாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கலுக்கு முழுத்தீர்வுக் கண்டுவிட முடியாது. உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதோடு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கையை எதிர்க்க தமிழ்நாட்டு மக்கள்  முன்வரவேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்.

                                                                                      தோழமையுடன்

மீ.த. பாண்டியன்,

  தலைவர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி          

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW