‘நிலம் – குடியிருப்பு – வாழ்வுரிமை’ – கோரிக்கை மாநாடு

05 Jan 2023

நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு சார்பாக 04.01.2023 அன்று இம்மாநாடு சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகரத்தில் ‘நீர் நிலை, வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பூர்வகுடி – உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு விரட்ட கூடாது, நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம்/செம்மஞ்சேரி/கண்ணகிநகரில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்கவேண்டும், புறம்போக்கு நிலங்கள்/ கோயில் நிலங்கள் மற்றும் ரயில்வே நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அடிமனை பட்ட வழங்கவேண்டும், TNUHDB குடியிருப்புகளில் G+4 மாடிகள் மட்டுமே கட்டவேண்டும், கடலோரத்தை மீனவர் குடியிருப்புக்கு ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

தோழர் ஆர். கீதா (அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு) மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ஆர்.ஏ.புறம் கோவிந்தசாமி நகர் வீடுகள் இடிப்பதை கண்டித்து தீக்குளித்து உயிர்நீத்த தியாகி கண்ணையா அவர்களின் படத்தை அருட்சகோதரி சகாயம் திறந்துவைத்தார். காணொளி வாயிலாக தோழர் மேதா பட்கர்(NAPM) மற்றும் தோழர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (உழவர்களின் நில உரிமை இயக்கம் ) வாழ்த்துரை தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதி பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.

குடியிருப்பு மற்றும் நிலம் தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் கருத்துரையாற்றினார். தோழர்கள் சிறிராம் (சோசலிச தொழிலாளர் மையம் SWC), ஜோ.செபாஸ்டின் (வாழ்வுரிமைக்கான மக்கள் போராட்டக் கமிட்டி PSCRL), மோகன் (அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி), மகிழன் (தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்), கீ.சு. குமார் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்), இசையரசு (சமூக செயல்பாட்டாளர்), சுதிர்(கட்டிட வடிவமைப்பாளர்), அருள் NAPM, அருட்தந்தை போஸ்கோ DBMS, இளையபாபு (அம்பேத்கர் மக்கள் கழகம்), கமலா (பெண்ணுரிமை இயக்கம்) ஆகியோர் உரையாற்றினார்.பின்வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு குடியிருப்பு – நிலஉரிமை தொடர்பாக தமிழக அரசு கொள்கை வகுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:


1. நீர் நிலை, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பூர்வகுடி – உழைக்கும் மக்கள் வீடுகள் இடிப்பதை தமிழக அரசு உடனே நிறுத்தவேண்டும்! சென்னை நகரத்தை விட்டு மக்களை விரட்டக்கூடாது!


2.பெரும்பாக்கம் ,செம்மஞ்சேரி, கண்ணகிநகரில் இலட்சக்கணக்கான மக்களைக் குவிப்பதை நிறுத்த வேண்டும். அங்கு வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.

3. தலைமுறை தலைமுறையாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள் மற்றும் இரயில்வே நிலைங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் ! TNUDP / MUDP திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள பட்டாவை உடனே வழங்க வேண்டும்!

4. குடிசைமாற்று வாரியக் கட்டிடங்களில்(TNUHDB) ‘நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ என்று சொல்லி பராமரிப்பு பணிகளை மக்கள் மீது திணிக்காதே! மின்தூக்கி தேவைப்படாத வகையில் G+4 அடுக்கு மாடிகள் மட்டுமே உள்ள வீடுகளை இலவசமாக கட்டிக்கொடு!

5. சென்னை நகரத்தில் உள்ள காலிப் புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை உழைக்கும் மக்களின் குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.

6. தமிழக அரசின் ‘வரைவு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கையில்’, வீடுகள் அப்புறப்படுத்தப்படும்பொழுது மறுகுடியமர்வு அவ்விடத்தில் இருந்து 5 கீ.மி சுற்றளவிற்குள் செய்யப்படும் என்று திருத்தம் செய்ய வேண்டும்.

7. எந்த ஒரு TNHUDB குடியிருப்புகளும் இடித்து புதிதாக கட்டப்படும் காலம் வரை முறையான ‘தற்காலிக மாற்று குடியிருப்பு’ வழங்கவேண்டும். அனைத்து பிளாக்குகளையும் ஒரேநேரத்தில் இடிக்காமல் பகுதிபகுதியாக இடித்துக் கட்ட வேண்டும்.

8. ஏழைஎளிய மக்கள் வசிக்கும் TNHUDBவீடுகள் தரமற்று கட்டப்பட்டு வருகின்றன. எனவே முறையான ஆய்வுசெய்து தரமான கட்டிடம் கட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேற்பார்வை குழு அமைக்க வேண்டும்.


9. TNHUDB குடியிருப்புகளில் வாழும் மக்களை ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்புமீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்கிடு!

10. கடலோரம் உள்ள நிலங்களை மீனவர் குடியிருப்புக்கு ஒதுக்கிடு! பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவுள்ள ‘மெரினா தொழில்பூங்கா திட்டத்தை’ கைவிடு!

11. விவசாயம், சுற்றுசூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும் பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை கைவிடு!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW