குஜராத்தில் பாஜக வென்றது எப்படி? – அருண் நெடுஞ்செழியன்

11 Dec 2022

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 182  தொகுதிகளில்  156 இல் வெற்றி பெறுவது, அதுவும் நீண்டகாலமாக ஆளும் கட்சியாக இருந்து இமாலய வெற்றி பெறுவது கவனிக்கத்தக்க முடிவாக உள்ளது.

குஜராத் தேர்தல் வெற்றியானது, இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் டில்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக அடைந்த தோல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றே கூறலாம். இந்த  வெற்றி பாஜகவிற்கு  எப்படி சாத்தியமானது என பார்ப்பதற்கு முன்பாக தேர்தல் முடிவுகள் குறித்த சில புள்ளி விவரங்களை பார்ப்போம்.

  • குஜராத்தில் அடுத்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சி உறுதியானதையடுத்து,  தொடர்ந்து 32 ஆண்டு காலமாக மாநில ஆட்சியை தக்க வைத்த சாதனையை பாஜக படைக்கும். தொடர்ச்சியாக 34 ஆண்டு காலம் மேற்குவங்காளத்தை ஆண்ட(2011 வரை) இடதுசாரிகளின் சாதனையை நெருங்கும்.
  • பாஜகவின் ஒட்டு வங்கி  இத்தேர்தலில் மூன்று விழுக்காடு அதிகரித்து 57 விழுக்காடாக உள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்த பழங்குடிப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் இம்முறை பாஜக வென்றுள்ளது.
  • காங்கிரசின் ஒட்டு வங்கி இத்தேர்தலில் -14 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த  தேர்தலைவிட 60 தொகுதிகளை காங்கிரஸ் இழந்துள்ளது.
  • இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13 விழுக்காடு ஒட்டு பெற்றுள்ளது. ஐந்து தொகுதிகளில் வென்றுள்ளது.
  • காங்கிரஸ் (27.28%) மற்றும் ஆம் ஆத்மியின் (13%) ஒட்டு வங்கியை சேர்த்தால் கூட(40 விழுக்காடு), கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் மட்டும் பெற்ற 41 % வாக்கு  வங்கிக்கு ஈடாகவில்லை. ஆகவே ஆம் ஆத்மியின் நுழைவானது  பாஜகவின்  வெற்றியை பாதிக்கவில்லை என்றாலும் மும்முனைப் போட்டியால் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை குலைத்துவிட்டது.
  • குஜராத்தில் அனைத்து சாதிப் பிரிவினரின் ஓட்டையும் பாஜக பெற்றுள்ளது. குறிப்பாக பட்டிடார்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், பழங்குடிகள் மற்றும் தலித்களின் ஓட்டை பாஜக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து மக்கள் பிரிவினரும் வழங்கிய வெற்றி என தேர்தல் வெற்றிக்கு பிந்தைய பேச்சில் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

போராட்ட அலையை மிஞ்சிய மோடி அலை:

குஜராத்தில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலைகள் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள், பழங்குடிகள் போராட்டம், விவசாயிகளின் போராட்டம், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுப்  போராட்டம், கொரோனா நெருக்கடியை தவறாக கையாண்டது, வேலை வாய்ப்பின்மை   மற்றும் 120 மக்களை பலி வாங்கிய கோரமான மோர்பி பால விபத்து போன்ற மாநில /மைய அரசின் நிர்வாகக் கோளாறு மற்றும் தவறான கொள்கை முடிவுகள் ஆளும் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவில்லை என்பது சாதாரணமாக கடந்து போகிற நிகழ்வாக இருக்கவில்லை.

அரசு ஊழியர்களின் போராட்டம்: குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற இறுதி ஓராண்டு காலத்தில், முதல்வர் பூபேந்திர  பட்டேல் சந்தித்த போராட்டங்களில் முக்கியமானது அரசு ஊழியர்களின் போராட்டம். நிரந்தர ஊழியர்கள், தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கிக் கோரி போராட்டத்தை மேற்கொண்டனர். போலீஸ் துறையில் இருந்த ஊழியர்களும் சாலையில் இறங்கி  போராடினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிகள் போராட்டம்: 2022-23 ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட பர்-தப்தி-நர்மதா நதி நீர் இணைப்பு அறிவிப்பானது தெற்கு குஜராத்தின் பழங்குடிகள் மத்தியிலிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் படேல் தலைமையேற்று நடத்தினர். போராட்டம் தீவிரமானதை அடுத்து இந்ததிட்டத்தை கைவிடுவதாக மோடி அரசு அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியாக அமைந்தாலும், பழங்குடிகள் பகுதிகள் இருந்து ஆனந்த் படேல் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்தாரிகள் போராட்டம்: தெரு மாடுகள்  சாலைகளில் சுற்றித் திரிவிதை தடுக்கும் மசோதா பூபேந்தர படேல் அரசுக்கு பெரும் பின் விளைவை ஏற்படுத்தியது. இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த (மால்தரிகள்) மாடு உரிமையாளர்கள், பால் பண்ணை உரிமையாளர்கள் பல்வேறு போராட்டத்தை மேற்கொண்டனர். இறுதியில் இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக குஜராத் அரசு அறிவித்தது.

இவ்வாறு ஆளும் மாநில அரசிற்கு எதிரான போராட்ட அலை குஜராத்தில் சுழற்றியடித்தாலும் பாஜக இந்த எதிர்ப்பை மீறி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்ட CSDS –லோகினி மையமானது கீழ்வரும் புள்ளி விவரங்களை வழங்குகிறது.

  • வாக்காளர்கள் வேட்பாளர்களை பார்த்து ஓட்டைச் செலுத்தாமல் கட்சிக்காக ஒட்டு போட்டுள்ளார்கள். பாஜக என்ற கட்சிக்காகவும் மோடிக்காகவும் ஒட்டு போட்டவர்கள் அதிகம்.
  • எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என தேர்தல் நாளுக்கு முன்பே முடிவு செய்தவர்களில் பாஜகவிற்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கருதியவர்கள் அதிகமாக உள்ளனர்.
  • தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுகிற முடிவில் இருந்தவர்கள் அதிகம் பேர் பாஜகவிற்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.மோடி அமித்ஷாவின் இறுதி கட்ட சாலை ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் இதை சாத்தியப் படுத்தின.
  • தீர்மானித்துள்ள வாக்காளர்கள் இறுதி நேர வாக்களர்கள் என இரண்டு தரப்பு மனநிலை கொண்ட மக்களிடமும் பாஜக செல்வாக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மோடி மற்றும் பாஜகவை மக்கள் தேர்த்தேடுப்பத்ற்கான அடிப்படை விஷயங்கள் மக்களின் அரசியல் உணர்வு மட்டத்திலும் எதிர்க் கட்சிகள், சமூக ஜனநாயக இயக்கங்களின் பலவீனங்களிலும்  வேர்விட்டுள்ளன.

முதலாவதாக, குஜராத் மாதிரி என்ற பிம்பத்தை முன்வைத்த பிரச்சார கட்டைமைப்பை முன்னெடுத்த பாஜக 2014 பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. குஜராத்தில் எப்படியேனும் வெற்றி பெறுவது பாஜகவின் இந்திய தேர்தல் அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியமான முடிவாக இருந்தது.குஜராத்தில் பாஜகவின் தோல்வி மோடியின் தோல்வியாக மாறிவிடும் என்ற ஆபத்தை பாஜக-ஆர்.எஸ்.எஸ் அதிகம் உணர்ந்திருந்தது. ஆகவே தனது சகல பலத்தை இத்தேர்தலில் பாஜக மற்றும் அதன் கரை சேவக அமைப்புகள் பிரயோகித்தன.

குஜராத் மண்ணின் மைந்தன் மோடி நாட்டின் பிரதமராக உள்ளார், உலகத் தலைவர்களின் வரிசையில் ஒருவர்கள் ஒரு குஜராத்தி வலம் வருகிறார் என்ற மண்ணின் மைந்தன் பிரச்சாரம் மக்களை கவ்வி பிடித்துக் கொண்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு குஜராத்தி, பிரதமர் ஒரு குஜராத்தி, இரு குஜராத்திகள் ஒட்டுமொத்த நாட்டையே கட்டுப்படுத்துகிறார்கள் என்ற குஜராத்தி மையம் மாநில மக்களின் அரசியல் உணர்வை மட்டுப் படுத்திவிட்டன. பாதகமான விஷயங்கள் யாவும் மண்ணின் மைந்தன் மோடி  பிம்பத்தில் கரைந்துபோனது.

இரண்டாவதாக, மைய மாநில அரசின் மோசமான தனியார் மைய கொள்கையால் மக்களின் அன்றாட பிரச்சனைகளான வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்களின் ஊதியக் குறைவு போன்ற சிக்கல்களை அம்பலப் படுத்தி அரசியல் உணர்வை ஊட்ட வேண்டிய காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக கட்சிகளின் செயலின்மை பாஜகவிற்கு பெரும் ஊக்க சக்தியாக அமைந்திவிட்டது. 2017 குஜராத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி சில தவறுகளால் பெரும்பான்மை வெற்றி பெற இயலாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் 77 இடங்களில் காங்கிரஸ் வெல்வதற்கு காரணமாக இருந்தார். ஆனால் இம்முறையோ கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தினர் யாருமே பெரிதாக குஜராத் தேர்தலை கண்டு கொள்ளவில்லை என்றே கூறலாம். பாரத் ஜோடோ என்ற முழக்கத்தில் நாடெங்கிலும் ஊர்வலம் செல்கிற ராகுல் காந்தி, குஜராத்தை முற்றிலுமாக கைகழுவிவிட்டார்.

பிற காங்கிரஸ் தலைவர்கள் தலைமை அதிகார மோதல்களால் கவனம் சிதறடிக்கப்பட்டு, குவித்த தேர்தல் கவனத்தை செலுத்த முடியாமல் போனதாக தெரிகிறது.

மூன்றாதாக, ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத்தில் நடைபெற்ற மும்முனை தேர்தல் போட்டியானது, காங்கிரசை பெரிதும் காவு வாங்கி விட்டது. குறிப்பாக காங்கிரசிற்கு வரவேண்டிய இஸ்லாமியர்களின் ஓட்டை பிரித்துவிட்டது. ஆம் ஆத்மிக்கு கிடைத்த 12 விழுக்காட்டு ஓட்டும் பாஜகவின் மீதான எதிர்ப்புணர்வும் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லாப் போக்கையுமே எடுத்துக்காட்டுகிறது.

நான்காவதாக, தேர்தல் பிரச்சார தேதி அறிவிப்பு முதல் தேர்தல் விதிமுறை மீறல்கள் வரை பாஜகவின் ஊது குழலாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. தேர்தல் ஆணையம் மீதான நீதிமன்றக் குட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தியது.

ஐந்தாவது மற்றும் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பாஜகவின் தேர்தல் நிதி நன்கொடை வசூலையும்  செலவீனத்தையும் கருத்தில் கொள்வதாகும்.இந்தியாவின் முக்கிய கார்ப்பரேட் நிதி கும்பல் முதலாக நாடு கடந்த இந்தியர்கள் வரை பெரும் மூலதன வலைப்பின்னலை பாஜக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. குறிப்பாக தேர்தல் நன்கொடை பெறுவதற்கு நிதிச் சட்டம் 2017 ஐ திருத்திய பாஜக, தேர்தல் நன்கொடை பெறுவதில் கருப்பு பணத்தை ஒழித்து வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய  தேர்தல் நிதிப் பத்திர சட்டத் திருத்தம்  அவசியம் என வாதிட்டது. 2021-22 ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேர்தல் நன்கொடை பெற்ற பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பாஜக 614.52  கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் 95 கோடி பெற்றுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பிப்பவை. சட்டத்திற்கு வெளியே எவ்வளவு மூலதனம் புழங்குகிறது என யாருக்குமே தெரியாது. இந்தியாவின் கார்பரேட் பார்ப்பன பனியா சக்திகளின் மூலதன கூட்டு இல்லாமல் பாஜக தனது பிரம்மாண்ட பிரச்சார இயந்திரங்களை முடிக்கிவிடுவதற்கு சாத்தியமில்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய அதானி ஒரு குஜராத்தி என்பதும் பாஜகவுடனான அதானியின் நட்புறவும் யாவரும் அறிந்த செய்திதான்.

மொத்தத்தில் பிரம்மாண்ட மூலதன முதலீடு, மோடி பிம்பத்தை மக்களிடம் தக்க வைப்பதற்கு மேற்கொள்ளப்படுற நிறுவனமயப்படுத்தப்பட பிரச்சார உக்திகள் குறிப்பாக சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படுகிற பொய் பிரசார உக்திகள், எதிர்கட்சிகளின் நிதிவரவுகளை முடக்குவது, எதிர்க்கட்சிகளின் தலைமை பலவீனம்  ஆகியவை அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை தீர்மானிப்பதில் திரையை உருவாக்கிவிடுகின்றன. இறுதியின் இறுதியாக மக்களின் உணர்வு மட்டத்தை மட்டுப் படுத்தி விடுகின்றன.கூடவே கார்ப்பரேட் மூலதன நலனுடன் இணைந்த  சாதி அடிப்படைவாத. மத அடிப்படைவாக கூட்டு பாஜகவின் பிரம்மாண்ட வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது.

நரகம் காலியாக உள்ளது ஏனெனில் அனைத்து பேய்களும் நம்முடன் இங்கே உலாவுகிறது என்ற ஷேக்ஸ்பியர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

ஆதாரம்:

https://indianexpress.com/article/political-pulse/over-half-of-bjps-declared-contributions-came-from-one-electoral-trust-8297453/

https://www.thehindu.com/opinion/lead/modis-popularity-pushes-the-bjp-to-its-biggest-win-in-gujarat/article66240351.ece

https://theprint.in/judiciary/eliminates-black-money-from-political-funding-modi-govt-defends-electoral-bond-scheme-in-sc/1167572/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW