தமிழக அரசே, அரசாணை 152 ஐ உடனடியாக ரத்து செய்! சனவரி 23 இல் தமிழக அளவில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் போராட்ட அறிவிப்பு! – தோழர் சதீஷ்

08 Dec 2022

08/12/2022

சென்னையில் இன்று தூய்மைப் பணியாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத அரசாணை 152 குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் கோவை வழக்கறிஞர் தோழர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சோசலிச தொழிலாளர் மையத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் சதிஸ் அவர்களும் பொருளாளர் தோழர் சிறிராம் அவர்களும் பங்கேற்றனர்.

 

அக்கூட்டத்தில், மாநகராட்சிப் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பு – நிரந்தரப் பணியிடங்கள் குறைப்பு – காலிப் பணியிடங்கள் நிரப்பத் தடை – அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் – நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மக்கள் நலனுக்கும், தொழிலாளர் நலனுக்கும் எதிரான GO 152 அரசாணைகளை ரத்து செய்யக் கோரி ஜனவரி 23 சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

 

 

 

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைகள் மூலம் தமிழ்நாட்டில்  உள்ள 20 மாநகராட்சிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்வதாகவும், ஒரே சீரான பணியிடங்களை தோற்றுவிப்பதாகவும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்துவதாகவும் கூறி, மாநகராட்சிகளில் தற்போது உள்ள 35,000 க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்களை 3417 ஆக குறைத்தும்,  மாநகராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய சேவைப் பணிகளை குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், தெரு விளக்குப் பராமரித்தல் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை வெளி முகமை மூலம் (Out Sourcing) மேற்கொள்ளவும், அதாவது தனியாரிடம் ஒப்படைக்கவும், தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல்திறன் மற்றும் செயல் திறனற்ற பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் உள்ளிட்ட  20 வகைப் பணிகளை நீக்கியும், அப்பணிகளில் ஏற்படும் காலியிடங்களை  நிரப்பத் தடைவித்தும், எதிர்காலத்தில் இப்பணிகளை வெளிமுகமை மூலம் (Out Sourcing) மேற்கொள்ளவும் மாநகராட்சிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

 

  • அரசாணை (நிலை) எண்:152 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (20-10-2022).
  • அரசாணை (நிலை) எண்:116 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (:24-08-2022 ).
  • அரசாணை (நிலை) எண்கள்: 111,113,113. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (17-08-2022)
  • நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்: 21787/2021/EA2  ( 02-10-2021 )

 

 

 

இது மக்கள் நலனுக்கும், தொழிலாளர் நலனுக்கும் எதிரானதாகும்.

மாநகராட்சிகளில் மிக முக்கிய அடிப்படை சேவைப் பணியான திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் வழங்குதல் மற்றும் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுவரும் தூய்மைப் பணியாளர்களில்  பெரும்பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இயற்கைச் சீற்றங்கள், கொடிய நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருபவர்கள். நீண்ட காலம் போராடித்தான் இவர்கள் பணிநிரந்தரமும், அரசின் கடைநிலை ஊழியர்கள் அந்தஸ்தும் பெற்றனர். தற்போது தூய்மைப் பணியாளர்களை நிரந்தரத் தொழிலாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது சமூக நீதி கொள்கைக்கே எதிரானதாகும்.

 

ஆகவே, மேற்படி தொழிலாளர் நலனுக்கு எதிரான அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ஒப்பந்தம் மற்றும் சுய உதவிக்குழு போன்ற பெயர்களில் பல்லாண்டு காலமாக  பணிபுரிந்துவரும் நிரந்தரமற்ற தினக்கூலி பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, “சமவேலைக்கு சமஊதியம்” என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

 

1948 – ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ்  மாவட்ட ஆட்சியர்  நிர்ணயம் செய்து அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தை (உ-ம்: தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.721/-வீதம்) முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

 

 

அத்துடன், கொரோனா நோய்த்தொற்று பரவல் காலமான 2021 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா கால சிறப்பு ஊக்கத்தொகை ரூ.15,000/-த்தை அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இவற்றை வலியுறுத்தி 2023 ஆம் ஆண்டு சனவரி 23 அன்று சென்னையில் மாபெரும்  பேரணி நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

 

தூய்மை இந்தியா திட்டம், ஜல் ஜீவன் திட்டம் ஆகிய பெயர்களில் மாநகராட்சி முதல் கிராமப் பஞ்சாயத்து வரை அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை மீறும் வகையில் தூய்மை பணி, குடிநீர் வழங்கல் பணி உள்ளிட்ட பணிகளை தொண்டு நிறுவனங்களை வழியாக செய்து கொண்டிருக்கிறார்கள். தொண்டு நிறுவனங்களின் வழியாக இப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுவதும் விரைவில் நிரந்தர அரசு பணி வழங்கப்படும் என்று உள்ளூர் அரசியல்வாதிகள் வழியாக பொய்யான வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதும் நடந்து வருகிறது. படிப்படியாக தொண்டு நிறுவனங்களிடம்  இருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ( சென்னையில் ஸ்பானிய நிறுவனமான உர்பசேர் இருப்பது போல்) கைகளுக்கு இப்பணிகளை மாற்றப்போகிறது ஒன்றிய அரசு.  மாநில சுயாட்சி முழக்கத்தை முன்வைக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசின் இத்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டாமல் இருக்கிறது. ஒன்றிய அரசின் இத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது.

தோழர் சதீஷ்

பொதுசெயலாளர்

சோசலிச தொழிலாளர் மையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW