மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

06 Dec 2022

“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக  அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என  நான்கு அடுக்குகளில் வரி வசூலிக்கும் முறையும், அமலுக்கு வந்து ஆண்டுமுதலாக நூற்றுக்கும் மேற்பட்ட புதுப்புது திருத்தங்களும் GST’ யின் அவசரகதி  திட்டமின்மையும் தவறுகளும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

தற்போது ஒவ்வொரு GST  கவுன்சில் கூட்டத்தின் போதும் எந்தப் பொருள் புதிதாக வரி விதிப்பில் வரப்போகிறதோ ? எப்பொருளுக்கு வரி உயரப் போகிறதோ ?  என சிறு குறு வணிகர்களும் மக்களும் அச்சம் கொள்கிற அளவிற்கு வரிக் கொள்ளையையே வரிக் கொள்கையாக கொண்டுள்ளது ஒன்றிய அரசு.

சரக்கு மற்றும் சேவை வரி முறையின் கேடுகள் அதன் போதாமைகள் மாநில அரசுகளுக்கு இழைக்கப்படுகிற துரோகங்கள் குறித்து வட இந்திய ஊடகங்களில் தமிழக நிதி அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முன்வைக்கிற  வாதங்கள் பாஜக அரசையும் அவர்களின் கூட்டாளிகளையும் கடும் எரிச்சலடைய வைத்துவருகிறது. ஜி எஸ் டி வரி முறையானது ஏழை எளிய மக்களை சுரண்டி அம்பானி அதானி போன்ற பணக்காரர்கள் வாழ வைப்பதாகவும் நிதி அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் அதானி மூன்றாம் இடத்திற்கு முன்னேறுவதும் பசிப்பிணியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விட பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் முன்னேரியிருப்பதையும் “புதிய இந்தியாவின்” உண்மை முகத்தை காட்டுகிற எதார்த்த உதாரணம்.

GST வரி முறையானது, வரி வசூலிக்கும் உரிமையை மாநிலங்கடமிருந்து அகற்றி மாநிலங்களின் பொருளாதார இறையாண்மையை பறித்து வெறும் நகராட்சி மட்டத்திற்கு சுறுக்கிவிட்டது. இங்கு நாம் ஒன்றிய அரசின் கூட்டாட்சி தத்துவ விரோத நடவடிக்கை குறித்து பேசப் போவதில்லை. மாறாக மறைமுக வரி (குறிப்பாக GST) என்ற பெயரில் மக்களின் பணத்தை பகல் கொள்ளையடிக்கிற ஒன்றிய அரசின்  சட்டபூர்வ கொள்ளையை குறித்து சுருக்கமாக பார்க்கப் போகிறோம்.

ஆளும்வர்க்கமும் வரியும்

மன்னர் காலகட்டத்தைய  மக்கள் கிளர்ச்சி யாவுமே மன்னர்களின் கொடுமையான வரிமுறைகளுக்கு எதிரான போராட்டமே என்பார் கார்ல் மார்க்ஸ். உப்புக்கு அதிக வரி விதித்ததை எதிர்த்து உப்பு சத்யாகிரகத்தை  தொடங்கிய காந்தியாரின் போராட்டம் காலனிய ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கு உந்து சக்தியாகியதை  கண்டோம். போலவே கிழகிந்தியக் கம்பெனிக்கு எதிரான தமிழக பாளையக்காரர்களின் முதல் சுதந்திரப் போருக்கு கம்பெனியின் கெடுபிடியான வரி முறையே முக்கிய காரணமாக இருந்ததை வரலாற்றில் இருந்து அறிகிறோம்.

மன்னர் காலம் ஒழிந்து, காலனிய காலம் ஒழிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுளுமன்ற ஜனநாயக குடியரசின் ஆட்சியாளர்களின் காலத்திலும் நாம் ஆளும் வர்க்க அரசின் மோசமான வரி முறைகளால் சுரண்டப்பட்டு வருகிறோம். முந்தைய காலத்தில் நேரடியாக சுரண்டப்பட்ட வரி கொள்ளையானது தற்போது மறைமுகமாக மக்களிடம் அபகரிப்பது என்ற ஒன்றே மாறியுள்ளது. பாதை ஒன்றுதான்,வழிமுறைதான் மாறியுள்ளது!

மக்களின் அடிப்படை தேவையான சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு தேவைகளை மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் அவசியம் என்பதை நாம் இங்கே மறுப்பதற்கில்லை. மாறாக மக்களின் தொண்டையை கவ்விப் பிடிக்கிற மறைமுக வரி முறையைத் தான் நாம் இங்கே விமர்சிக்க வருகிறோம்.

நேரடி வரியும் மறைமுக வரியும்:

நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகளில் அரசு குடிமக்களிடம் வரி வருவாய்களை ஈட்டுகிறது. தனி நபர் கட்டுகிற சொத்து வரி, குடிநீர் வரி, தனி நபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரிகள் ஆகியவை நேரடி வரி என்றழைக்கப்படுகிறது.

நாம் சந்தையில் வாங்குகிற  பிஸ்கட் முதல் கார் வரையில் மதிப்புக் கூட்டப்பட்ட மறைமுக வரியில் வருகிறது. மேலும் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் சேவை மீதான வரிகள் யாவுமே மறைமுக வரிகளின் வருகிறது. இந்தியாவில் இந்த மறைமுக வரி அனைத்தும் பெரும்பாலும் ஜி எஸ் டி என்ற ஒரே வரியில் கொண்டுவரப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மது உள்ளிட்ட சில பொருட்கள் ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் மறைமுக வரியில் சேர்க்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. (ஒன்றிய அரசின் கடந்த இருபது ஆண்டு கால வரி (நேரடி மற்றும் மறைமுக வரி) வசூல் புள்ளி விவரங்களை விரிவாக பார்க்க  https://www.rbi.org.in/scripts/PublicationsView.aspx?id=20509)

 

இந்த மறைமுக வரிகளே சாமானிய மக்களின் தோள்களில் இறுதியில் வரிச்சுமையை ஏற்றி வைத்து,  செலவீனத்தை அதிகரிக்க வைக்கிறது. உதாரணமாக அண்மையில் தயிர், அரசி மற்றும் மருத்துவமனை படுக்கைகள் மீதான வரி விதிப்பானது அதன் விற்பனை விலையை ஏற்றி விட்டது, மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியது. மேலும் ஜி எஸ் டி வரம்புற்குள் வராத பெட்ரோல் டீசலுக்கு நாம் செலுத்துகிற தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வரிக்குத்தான் செலுத்துகிறோம் என்பதே பொதுமக்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் அந்த நலனை மக்களுக்கு வழங்காமல் மறைமுக வரியை  120 விழுக்காட்டிற்கு உயர்த்தி விற்றது மோடி அரசு என்பது குறிப்பிடத்தகது.

வரி வருவாயில் மறைமுக வரியின் விகிதம்:

நேரடி வரி மற்றும் மறைமுக வரி முறைகள் எந்த அளவுகளில் இருக்க வேண்டுமென OECD (Organisation for Economic Co-operation and Development) பரிந்துரைக்கிறது. அதில் நேரடி வரி முறை 60விழுக்காடாகவும் மறைமுக வரி 40 விழுக்காடாகவும் இருக்க வேண்டும் என்கிறது. அதாவது நேரடி வரி முறையை விட மறைமுக வரி குறைவாக இருக்க வேண்டும் என்பதே அதன் மையப் பரிந்துரை. தற்போதைய பாஜக ஆட்சியில் இந்த விகிதாசாரம் தலைகீழாக உள்ளது. அதாவது தற்போதைய ஒன்றிய ஆட்சியில், மறைமுக வரி 60 விழுக்காடாகவும்  நேரடி வரி 40 விழுக்காடாகவும் உள்ளது. இதுவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நேரடி வரி 53 விழுக்காடாகவும் மறைமுக வரி 47 விழுக்காடகவும் இருந்தது. இந்த விகிதாசாரமானது கிட்டத்தட்ட OECD யின் பரிந்துரைக்கு மிக நெருக்கமானதாக உள்ளதை கவனிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட பரிந்துரையனது, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களால்  முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தகது. மக்கள் மீதான அதிகமான மறைமுக வரிச்சுமையானது, மக்களின் வருவாய்க்கும் செலவுக்குமான உறவு அதனது சந்தைத் தாக்கம் ஆகியவற்றை முன்வைத்து வரையறுக்குப்பட்டது எனலாம்.

சோஷலிச நாட்டில் மறைமுக வரி அறவே இருக்கக் கூடாது என்ற லெனினது வாதத்தை கவனத்தில் கொண்டால், மறைமுக வரி என்பது மக்களின் மீதான முதலாளித்துவ ஆட்சியாளர்களின் சட்டபூர்வ கொள்ளை என்றே கூற வேண்டும்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

நடு இரவில் கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் நள்ளிரவில் சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது என்கிறார் வள்ளுவர்.

 

-அருண் நெடுஞ்செழியன்

 

ஆதாரம்:

https://www.marxists.org/archive/lenin/works/1913/jun/07b.htm

https://thewire.in/economy/gst-india-indirected-taxes-inequality

https://www.ndtv.com/opinion/gst-historical-tax-reform-at-5-years-has-lost-its-way-3135416

https://www.vikatan.com/business/finance/gst-6th-year-launch-happy-for-the-government-sad-for-the-people

https://factly.in/data-more-than-20-of-the-centres-indirect-tax-revenue-is-through-excise-duty-on-petrol-diesel/

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW