பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு

08 Oct 2022

அக்டோபர் 8 – பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு – செய்திக் குறிப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று அக்டோபர் 8 அன்று போராட்டம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அக்டோபர் 6 ஆம் நாள் அன்று ஆணையர் அலுவலகத்தில் இருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அக்டோபர் 7 ஆம் நாள் காலை 11 மணிக்கு நாம் பதில் கடிதம் கொடுத்த நிலையில் அதேநாள் இரவு 11 மணிக்கு ஆணையர் அலுவலகம் மறுப்பு கடிதம் கொடுத்தது. பின்னர் மறுப்பு கடிதத்திற்கு பதில் கொடுக்க முற்பட்ட போது ஆணையர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் கடிதத்தை வாங்க மறுத்துவிட்டார். எனவே, அக்கடிதத்தை மின்னஞ்சல் வழியாக ஆணையருக்கு அனுப்பிவிட்டோம்.
நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தொடங்கி நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் வரை ஆர்ப்பாட்டத் திடலில் கூடும்பொழுது கைது செய்யப் போவதாக சொன்னார்கள். ”குறைந்தபட்சம் ஆர்ப்பாட்டத் திடலில் எல்லோரும் கூடிய பின் கைது செய்வோம்” என்று உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் கூறியதற்கு மாறாக ஆர்ப்பாட்டத் திடலுக்கு நாலாப்புறமும் உள்ள பேருந்து நிறுத்தங்கள், சாலை முனைகள் யாவற்றிலும் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். ”போராட்டத்திற்கு தடை, யாரும் வரப்போவதில்லை” என்று ஊடகங்களுக்கு காவல் நுண்ணறிவுப் பிரிவினர் பொய்த் தகவல் கொடுத்து இருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத் தலைமை தோழர் அரங்க குணசேகரன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத் திடலில் இருந்து சிறு தொலைவில் கூடி, ஆர்ப்பாட்டத் திடல் நோக்கி பதாகைகளோடு முழக்கமிட்ட செல்லுமாறு போராட்டக்காரர்களுக்கு சொல்லப்பட்டது. அதன்படி பகுதி பகுதியாக ஆர்ப்பாட்ட திடலை நோக்கிச் செல்ல முற்பட்ட போது ஊடகங்கள் இருக்கும் ஆர்ப்பாட்டத் திடலை அடையவிடாதபடி இடையிலேயே தடுத்து காவல் வாகனங்களில் ஏற்றும் அடாவடித் தனத்தை காவல் துறை செய்தது. அந்த தடுப்புகளை மீறியும் பல இளம் தோழர்கள் ஆர்ப்பாட்டத் திடலை அடைந்து அங்கே கைதாகினர். மூத்த தோழர்கள் என்றும் பாராமல் வல்லந்தமாக காவல் வாகனங்களில் ஏற்றப்பட்டனர். கைது செய்யப்ப்பட்டோர் அனைவரும் ஆயிரம் விளக்குப் பகுதியில் மூர்சு சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர். மொத்தம் 37 பேர் அவ்வண்ணம் அடைக்கப்பட்டிருந்தனர். தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சிபிஐ(எம்-எல்) செந்தாரகை, தமிழ்த்தேச இறையாண்மை, தமிழ்த்தேச குடியரசு இயக்கம், தமிழர் விடுதலைக் கழகம், சமூக சமத்துவக் கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் 8:30 மணி அளவில் தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்கக் கோருவதையே குற்றமாக சித்திரித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி முன்னெடுத்த இந்தப் போராட்டத்தை நடத்தவிடாமல் செய்வதோடு ஊடகங்கள் வழியாக இந்த செய்தி எக்காரணம் கொண்டும் மக்களிடம் போய்விடக் கூடாது என்று திமுக அரசு இந்த அத்துமீறலை செயல்படுத்தியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் இருக்கும் உரிமை மீதான பாசிச மோடி அரசின் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதை தடுப்பது என்பது பாசிச ஒடுக்குமுறையோடு சமரசம் செய்துகொள்வதாகும்.
எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சாமல் பாசிச பாசக அரசின் அடக்குமுறைக்கு எதிராக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி உறுதியோடு போராடும் என்று சொல்லிக் கொள்கிறோம். உறுதிமிக்க மக்கள் திரள் போராட்டங்கள் இன்றி இந்த பாசிச சூழலை எதிர்கொள்ள முடியாது என்பதால் சனநாயக ஆற்றல்கள் போராட்ட அரசியலுக்கும் ஈகங்களுக்கும் அணியமாக வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறைகூவல் விடுக்கிறது.
– பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
9-10-2022
தொடர்புக்கு: 99419 31499/ 94431 06455 / 90031 64280 / 9025870613
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW