நவம்பர் 1 – மொழிவழித் தேசிய உரிமைப் போராட்ட நாளை திமுக இருட்டடிப்பது சரியா?

31 Oct 2021

நேற்று ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பு தமிழ்நாடு அரசிடம் இருந்து வந்துள்ளது. நவம்பர் 1  – தமிழ்நாடு நாள் என அழைப்பதற்கு பொருத்தமற்றதாம். ’தமிழ்நாடு’ என சென்னை மாகாணத்திற்கு பெயர் மாற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜுலை 18 ஆம் நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’ என அறிவித்துள்ளது திமுக அரசு. நவம்பர் 1 எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் நாள்  தானாம்! இதுவே பல தரப்பினரின் கோரிக்கையாம்!

தமிழ்நாடு பெயர் மாற்ற நாள் கொண்டாட்டத்திற்கு உரியது கிடையாது என்பதல்ல நம் நிலைப்பாடு. ஆனால், நவம்பர் 1 – மொழிவழி மாநில நாளின் முக்கியத்துவம் அதனினும் அதிகமானது. ’தமிழ்நாடு நாள்’ என்று சுட்டுவதற்கு மிகவும் பொருத்தமுடைய நாள் அதுவே.  தமிழர் தாயகம், இறைமை, தன்னாட்சி, மொழிவழித் தேசிய உரிமைகள் ஆகியவற்றைப் பேசுவதற்கான நாள்.

நவம்பர் 1 – எல்லைப் போராட்டத்தைக் குறிக்கும் நாள் மட்டும் தானா? இல்லை. மொழிவழித் தேசியத்திற்கான சட்டவகை ஏற்பு  கருக் கொண்டிருக்கும் நாள்.  ’ஏக இந்தியா’ என்பதை எதிர்த்து முறியடித்த நாள்.   இந்த நாளுக்கென்று ஒரு சிறப்பான வரலாறு உண்டு.

நாடு ஆங்கிலேய  காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த போது இந்திய – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இதை சாக்காக்கிக் கொண்டு நேரு( அதாவது இந்திய ஆளும்வகுப்பு) மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்தார்.

10-10-1947: காந்தியார் காகாகலேருக்கு எழுதிய மடலில் “மொழிவழி மாநிலங்களின் மறுசீரமைப்பு விரைவுபடுத்தப்பட வேண்டும். தற்போது வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு பண்பாடு இருப்பது போன்ற தோற்றம் இருக்கலாம். மொழிவழி மாநிலங்களை அமைத்தால் இது மாறக்கூடும். …. மொழிவழி மாநிலங்கள் அமைவது தவறு என்று சிலர் குறிப்பிடுவதை நான் அறியாதவன் அல்ல. அப்பிரிவினர் மொழிவழி மாநிலங்கள் அமைவதற்குத் தடைகளை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதுதான் என் கருத்து” என்றார்.

17-6-1948: மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை ஆய்வு செய்ய எஸ்.கே.தார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

10-12-1948: நாட்டின் ஒற்றுமைக்காகவும் நீண்டகால வளர்ச்சிக்காகவும் புதிய மாநிலங்கள் உருவாகத் தேவையில்லை என்று தார் குழு நேரு விரும்பியபடியே ஒரு பரிந்துரையைத் தந்தது.

பல மாநிலங்களில் இதற்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஜே.வி.பி கமிட்டி:

கொந்தளிப்பை சமாளிக்க காங்கிரசு கட்சிக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தாராமையா(JVP)  ஆகியோர் பங்குபெற்றனர். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கலாம் என்று இக்குழு தனது பரிந்துரையைக் காங்கிரசு கட்சியிடம் 1949 ஆ ஆண்டு ஒப்படைத்தது.

19-10-1952: ஆந்திராவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி ஈகி பொட்டி சிறிராமலு பட்டினிப் போராட்டம் தொடங்கினார்.

15-12-1952: 58 நாளுக்கு பிறகு உண்ணாநிலைப் பந்தலிலேயே உயிர் விட்டார்.

19-12-1952: ஆந்திராவின் போராட்டத்திற்கு அடிபணிந்து,  தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஒரு தனி மாநிலம் உருவாக்கும் முடிவை நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1953: பசல் அலி, கே.எம். பனிக்கர், எச்.என்.குன்சுரு ஆகியோரைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு கமிட்டி( State Reorganization Committee – SOR) அமைக்கப்பட்டது.

1955: இக்குழு அறிக்கையைக் கொடுத்தது

1955: மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த அம்பேத்கர் பின்னர் அதற்கு தனது ஆதரவினை தெரிவித்தபோது பின் வருமாறு கூறினார்- “ இவ்வகையான கருத்து மாற்றத்தை கண்டு என் மீது சிலர் கடுமையான விமர்சனங்கள் வைப்பார்கள். நான் அவர்களுக்கு கூறுகிற நேரடியான பதில் என்னவென்றால், அறிஞர் எமர்சன் குறிப்பிட்டது போல ஒரே கருத்தில் பிடிவாதமாக இருப்பது ஒரு கழுதையினுடைய குணமாகும். எனவே நான் அவ்விதமாக் இருக்க விரும்பவில்லை. ஒரு காலத்தில் வலியுறுத்தப்பட்டது என்பதற்காக எந்த சிந்திக்கின்ற மனிதனும் ஒரே கருத்தில் நிரந்தரமாக கட்டுண்டு, பிடிவாதமாக இருக்கக் கூடாது”

1-11-1956:  மொழிவழி மாநிலங்களுக்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது

1960: போராடித்தான் மராட்டியம் தனி மாநிலம் ஆக முடிந்தது.

மக்கள் போராட்டத்திற்கு நேரு அடிபணிந்தார். அம்பேத்கர் தன் கருத்தை மாற்றிக்கொண்டு மொழிவழி மாநிலத்தை ஆதரித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மொழிவழி மாநிலத்தை ஏற்காகவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான். இந்துமகாசபை மொழிவழி மாநிலம் அமைப்பதைக் கடுமையாக எதிர்த்தது. இந்தியாவை 200 ஜன்பத்களாகப் பிரித்து ஆள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

காங்கிரசு கட்சி மாநிலப் பிரிவினையை ஆதரித்து தீர்மானம் இயற்றிய போது, “ இதனால், மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்துவிட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும்.

ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகிவிடும். அதனால் இந்த பழமை வாய்ந்த பாரத பூமி( பாரத் வர்ஷா) சிறிது சிறிதாக பிளவுபட்டு விடும். அதன்பின் இந்தியா உலகத்தின் மிகப் பெரிய சக்தியாக ஐரோப்பாவுக்கு எதிராக வளர முடியாது” (Truth which is nuity பக் 241)

1954 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து, “இதனால் நாடே சிதறிப் போய்விடும் என்றார் கோல்வாக்கர். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல் அதற்குப் பதிலாக, ஒரே அரசாங்கமே இருக்க வேண்டும். அதுவே இப்போது அவசியம் என்றார் அவர்.(A Unitary Govt prime need of the hour)

“ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்திக் கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்” – 1957 தேர்தல் அறிக்கையில் ஜன சங்கம் சொன்னது. ஆர்.எஸ்.எஸ். இன் ‘The cult’ என்ற நூலிலும் தனித் தனி மாநிலங்கள் கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல்லைப் போராட்டத்தின் ஈகங்களையும் இந்திய அரசின் இரண்டகங்களையும் நினைவு கூர்வது மட்டுமின்றி சமகால அரசியலோடு ஆழமான தொடர்புடையது மொழிவழி மாநில நாள். இந்துராஷ்டிரம் என்ற கொடுங்கனவை மறுக்கும் நாளாக மொழிவழி மாநில நாளைப் பாவிக்க முடியும். இதை மாற்றியமைப்பதே ஆர்.எஸ்.எஸ். இன் இலக்காக இன்றைக்கும் இருந்துவருகிறது.

தனக்கென சொல்லிக் கொள்ளும் படியான கடந்த கால வரலாறு இல்லாத நிலையில், ஆட்சியில் இருக்கும் பாசக தன் விருப்பம் போல் வரலாற்றை திருத்தியும் திரித்தும் எழுத முயல்கிறது. எடுத்துக்காட்டாக, சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்காததால் ஆகஸ்டு 15 பாசகவுக்கு ஆர்வமுடைய நாளாக இருக்கவில்லை. ஆகஸ்டு – 14 ஐ பிரிவினைக் கொடூரங்கள் நினைவு நாளாக கடைபிடிக்குமாறு கடந்த ஆகஸ்டில் மோடி அறைகூவல் விட்டார். அவர்கள் அமைக்க நினைக்கும் இந்துராஷ்டிரத்திற்கு ஆகஸ்டு 14 ஐ இவ்வண்ணம் நினைவுகூர்வது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. அதுபோல், திமுக தமிழ்நாட்டின் வரலாற்றை தமது கட்சியின் வரலாறாக சுருக்க நினைக்கிறது. வரலாற்றை தன் விருப்பம் போல் திருத்துவது, திரிப்பது என்பதெல்லாம் பாசக மீது சனநாயக ஆற்றல்கள் வைக்கும் விமர்சனம் ஆகும். தன்னை மையப்படுத்தி தமிழ்நாட்டின் வரலாற்றை எழுத முயலும் திமுகவின் சின்னப்புத்தி இதில்தான் போய் சேரும்.

தமிழர்களின் பொதுவானப் பிரச்சனைகளிலும்கூட திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் ஒன்றுபடாது. திமுக கட்டிய சட்டப்பேரவையை மருத்துவமனையாக்கும் அதிமுக. அதிகுக தொடங்கிய திட்டத்தை திமுக கைவிடும்  அல்லது பெயர் மாற்றி வைத்து தொடரும். இந்த அற்பத்தனம்தான் தமிழ்நாட்டின் அரைநூற்றாண்டு அரசியல் பண்பாடாக இருந்து வருகிறது. அத்தகைய ஒரு வேலைதான், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ’தமிழ்நாடு நாள்’ அறிவிப்பை திமுக ஆட்சியில் மாற்றியமைப்பதாகும். ஆனால், அதிமுகவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு லாவணி அரசியல் செய்யும் நேரமா இது? இந்திய அரசியலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக பார்ப்பதில்லையா?

ஓரிரவில் காசுமீர் துண்டாடப்பட்டு , மாநிலம் காணாமல் போய் ஜம்மு- காசுமீர், லடாக் என ஒன்றிய ஆட்சிப்புலங்கள் ஆக்கப்பட்டன. தமிழ்நாட்டை மூன்றாக உடைக்க வேண்டும், கொங்கு நாடு அமைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். உளமார விரும்புகிறது. மாநிலங்களை உடை; அவற்றை ஒன்றிய ஆட்சிப்புலங்கள் ஆக்கு, தில்லி, புதுவைப் போன்ற சட்டமன்றம் கொண்ட ஒன்றிய ஆட்சிப் புலங்களில் ஆளுநரை ஆளச் செய்திடு! சட்டமன்றம் இல்லாத இலட்சதீவு போன்ற ஒன்றிய ஆட்சிப் புலங்களை துணைநிலை ஆளுநரைக் கொண்டு சின்னாபின்னமாக்கு என தெளிவான நிகழ்ச்சி நிரலோடு பாசக ஆட்சி செய்கிறது. இவ்வேளையில் மொழிவழி மாநில நாளை எல்லைக் காப்பு நாளாக சுருக்குவது யாருக்கு உதவும்? மொழிவழி ஏற்பாட்டை மறைப்பதும் மறக்கடிக்க நினைப்பதும் யாருக்கு தேவை?

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை என இந்துராஷ்டிரக் கனவோடு கொடுங்கோலாட்சி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். க்கு பல மொழி பேசும் மாநிலங்கள் என்பதுதான் கடுப்பு. இந்துராஷ்டிரம் என்றால் பார்ப்பன மேலாதிக்கம் மட்டும்தான் என்று திமுக புரிந்து வைத்திருப்பதால் ஏற்படும் சறுக்கலா இது? இந்துராஷ்டிரம் என்பது இஸ்லாமியர்கள் இல்லாத அல்லது இஸ்லாமியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழும் இந்தியா. இந்துராஷ்டிரம் என்றால் மொழிவழி மாநிலங்கள் இல்லாதொழிக்கப்பட்ட இந்தியா என்று பொருள். எனவே, இந்துராஷ்டிர எதிர்ப்பின் குறியீடாக, இறைமை மீட்கப் பட வேண்டும் என்பதன் குறியீடாக நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாள் என அனுசரிப்பது இந்துத்துவ எதிர்ப்பு அரசியலின் பகுதியாகும்.

வடிவத்தைவிட உள்ளடக்கமே முக்கியமாகும். ’தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தது நவம்பர் 1 மொழிவழி மாநில உருவாக்க நாள்.  அதுவே தமிழ்நாடு நாளென அழைக்கப் பொருத்தமுடையது. அந்நாளை மொழிவழித் தேசிய உரிமைப் போராட்டத்திற்கான நாளாக உயர்த்திப்பிடிப்போம்.

-செந்தில்

நூல் குறிப்புகள்:

  1. இந்தியாவில் கூட்டாட்சியியல், பேராசிரியர் மு.நாகநாதன்
  2. ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம். விடுதலை இராசேந்திரன்.

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW