அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை – காவிப் பாசிச பயங்கரவாதிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை

01 Oct 2021

செப்டம்பர்  23 அன்று அசாமில் காவல் படையினரால்  இஸ்லாமியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உயிர் பிரியும் தருவாயில் இருந்த உடல்  மீது ஓர் ஊடக புகைப்படக்காரர் ஏறிக் குதிப்பதும் சனநாயக ஆற்றல்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அசாம் மாநிலத்தில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் சிபாஜர் கிராமத்தில் அசாம் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் – சேக் பரீத்(12), மவுனில் ஹக்(28).  பலர் படுகாயமடைந்துள்ளனர்.  பல பத்தாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்துவருபவர்கள் கொர்க்தி வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதே பகுதியில் ஏற்கெனவே சுமார் 800 குடும்பங்கள் அப்புறப்படுத்தப் பட்டுவிட்டன. இதை தொடர்ந்து எஞ்சியிருக்கும் வீடுகளையும் அப்புறப்படுத்த முற்பட்ட போது அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ‘வளர்ச்சி’ திட்டம் ஒரு விவசாய திட்டம், சுமார் 25,455 ஏக்கர்   நிலத்தைக் கைப்பற்றி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கப் போகும் திட்டம் இது. இப்போது பிரச்சனை எழுந்த பகுதியில் வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரையிடுவதோடு கூடவே ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று மாநில பாசக அரசு முத்திரையிடுகிறது. அவர்கள் வங்க தேசத்தில் இருந்து அசாமிற்குள் குடியேறிய வங்க முஸ்லிம்கள் என்று பாசக சொல்கிறது. ஆனால் அவர்கள் 1971 க்கு முன்பு இந்தியாவுக்குள் வந்ததாகவும் அவர்கள் ‘சட்டவிரோத குடியேறிகள்’ இல்லை என்பதற்கான சான்றுகள் வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் வரும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

அசாமை ஆளும் பாசகவின் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் நேரடி கண்காணிப்பிலேயே இந்த திட்டமும் குடியிருப்பு அகற்றமும் நடந்து வருகின்றது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக இந்த இடத்திற்கு வந்த முதல்வர், அப்பகுதியைப் பார்வையிட்டுவிட்டு, அந்த இடத்தில் நின்றபடியே வீடுகளை அகற்றுவதற்கு ஆனையிட்டுச் சென்றுள்ளார்.  தேர்தல் பரப்புரையின் போது வங்க இஸ்லாமியர்களை ‘கரையான்கள்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார். அசாமியர்களின் எதிரிகளாக வங்க இஸ்லாமியர்கள் என்ற முரண்பாட்டை பாசகவினர் கூர்மைப்படுத்தி வருகின்றனர். அசாமைச் சேர்ந்த பூர்வகுடி இஸ்லாமியர்கள் இந்த அப்புறப்படுத்தலுக்கு ஆதரவாக இருப்பதாக அப்புறப்படுத்தும் திட்டத்தை நேரடியாக அமலாக்கும் அமைச்சர் ஹசாரா  சொல்கிறார்.

மக்கள் வெளியேற்றத்தையும் இடிந்த மசூதிகளையும் காவல்துறை தாக்குவதையும் மீண்டும்மீண்டும் ஒளிபரப்பி இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுக்கு தீனிப் போட்டு வருகிறது அசாம் அரசு. ஏற்கெனவே, ’லவ் ஜிகாத்’ என்று இஸ்லாமியர்கள் மீது சித்திரிக்கப்பட்டுள்ள பரப்புரையின் பெயரால் காதல் திருமணங்களுக்கு எதிரான சட்டத்தை அசாம் அரசு இயற்றியுள்ளது. இப்போது, ’இஸ்லாமியர்கள் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள்’ என்றும் அதற்கு ‘லேண்ட் ஜிகாத்’ என்ற புதிய நச்சுப் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

அண்மை காலம் வரை இந்திய அரசுக்கு எதிராக  தேசிய விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக நடத்தி வந்துள்ளது அசாம். பல்வேறு காலகட்டங்களில் அசாமிற்குள் குடியேறியவர்கள் தொடர்பில் ’அயலார் ஆக்கிரமிப்பு’ என்ற அச்சமும் அதை ஒட்டி தாயக காப்பு என்ற நோக்கில் அசாமில் போராட்டங்கள் நடந்துள்ளன. அசாமிய தேசிய விடுதலை இயக்கத்தைப் பொருத்தவரை அசாமிற்குள் குடியேறிய பீகாரியானாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரானாலும் வங்க தேசத்தவரானாலும் அவர்கள் அயலார்களே. அவர்கள் இந்துவானாலும் கிறித்தவரானாலும் இஸ்லாமியரானாலும் அவர்கள் அயலாரே.  இந்த முரண்பாடுதான் 2016 வரை பிரதானமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ’இந்திய நாய்களே வெளியேறுங்கள்’ என்ற முழக்கத்துடன் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் கொல்லப்பட்ட நிகழ்வுகள் கூட நடந்தது. அசாம் விடுதலைப் போராட்டம் பிரதானமாக, இந்திய அரசுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் எதிரானப் போராட்டமாகவே இருந்து வந்தது. 2016 க்குப் பின்னர் இந்த முரண்பாட்டை  பூர்வகுடி அசாமியர்களுக்கும் வங்க இஸ்லாமிய குடியேறிகளுக்கும் இடையிலான முரண்பாடாக  மடைமாற்றுவதில் பாசக வெற்றி கண்டுள்ளது. இந்திய தேசியத்திற்கு எதிரான அசாமிய தேசிய இன முரண்பாடு,  பூர்வகுடி – வந்தேறி என்ற பெயரால் இந்துத்துவ  – இஸ்லாமிய எதிர்ப்பு முரண்பாடாக மடைமாற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மூலமாக வங்க தேசத்தில் இருந்து அசாமிற்குள் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை உண்டு என்றும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது என்று அறிவித்ததன் உண்மையான தாக்கம் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில்தான் தீவிரமாக வெளிப்பட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் அசாம் மற்றும் அசாம் அல்லாதவர்கள் என்று வகைபிரித்து வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பலரும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் எழுந்த போராட்டம் ஏனைய பகுதிகளில் எழுந்தப் போராட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனைய பகுதிகளில் மத வேறுபாடு காட்டி (இஸ்லாமியர்களுக்கு) குடியுரிமை மறுப்பது எதிர்க்கப்பட்டது. அசாமிலோ அயலாருக்கு மத வேறுபாட்டின் அடிப்படையில் (வங்கத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு) குடியுரிமை கொடுப்பது கடுமையாக எதிர்க்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்வழி குடியுரிமை மறுப்புக்கும் பறிப்புக்கும் வழிவகுத்த பின்னர், தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து இனச் சுத்திகரிப்பு செய்த பின்னர், எஞ்சியுள்ள இஸ்லாமியர்களையும் (1971 க்கு முன்பு குடியேறிய இவர்கள் அரசு ஆவணப்படி கூட சட்டவிரோதக் குடியேறிகள் அல்லர்)  வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நிலப்பறிப்பைத் தொடங்கியுள்ளது பாசக. இதற்கு சாக்காக ’வளர்ச்சி திட்டம்’ என்பதை பாசக சொல்கின்றது. மாவலி வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை நடத்தி வருவதை இத்துடன் ஒப்பு நோக்க முடியும்.

குடியுரிமை பறிப்பு, தடுப்பு முகாம்கள், நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தல் என இஸ்லாமியர்களை இனச் சுத்திகரிப்பு செய்வதற்கான சங்கிலித் தொடர் போல் அடுத்த அடுத்த நகர்வுகள் இருந்து வருகின்றன. இதன் தொடர்ச்சி என்பது மாபெரும் படுகொலைகள், மக்கள் வெளியேற்றம் என்பதை வரலாறு நெடுகிலும் கண்டுள்ளோம். ஈழத்தில் இப்படித்தான் நடந்து வருகின்றது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் உள்ள மியான்மரில் இருந்து ரோஹிங்கியாக்கள் படுகொலை செய்யப்பட்டதும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதும் அசாமுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். பாசிச மோடி – அமித் ஷா  கும்பல் இஸ்லாமிய இனப்படுகொலைக்கான ஒத்திகையை அசாமில் நடத்தி வருகின்றது.

அசாமை ஒட்டி இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் அரசப் படைகள் வேடிக்கைப் பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது காவிப் பாசிசப் படையினர் சில நாட்களுக்கு முன்பு  நடத்திய தாக்குதலும் அசாமில் நடந்துள்ள படுகொலைகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற நிகழ்வுகள் அல்ல. காவிப் பாசிச கும்பல் தனது வன்முறையின்மூலம் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு முரண்பாடுகளைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

பாசக  2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களைப் படுகொலை செய்வதற்கான ஒரு ’குஜராத் மாதிரியை’ உருவாக்கிக் காட்டியது. 2020 இல் இந்தியாவின் தலைநகரமான தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை அரசப் படைகளின் ஆதரவுடன் நிகழ்த்திக் காட்டியது. இப்போது அசாமில் நடந்திருக்கும் இந்த வெளியேற்றம், துப்பாக்கிச் சூடு என்பது அரசப் படைகளும் சமூகமும் பாசிசமயம் ஆகும்போது வெடிக்கும் பெரும் படுகொலைகளுக்கான முன்னோட்டமாக அசாமின் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் உத்தரபிரதேசத்திலோ காசுமீரிலோ அல்லது வடகிழக்கு மாநிலங்களிலோ இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும் படுகொலைகளாக வெளிப்படும் அறிகுறிகள் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆகவே,சனநாயக ஆற்றல்கள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நடந்த துப்பாக்கி சூடு என்பதாக அசாம் படுகொலையைப்  புரிந்து கொள்ளாமல் பாசிச படுகொலைகளுக்கான முன்னோட்டம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  பாசிச மோடி – ஷா சிறுகும்பல் சர்வாதிகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும் என்பதை சனநாயக ஆற்றல்கள் உணர வேண்டும். இந்த பேரழிவுக் கூட்டத்தை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். அந்த நோக்கில் காவி-காரப்பரேட் பாசிசத்திற்கு எதிராக பரந்த அளவில் சனநாயக இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாடுபட வேண்டும்.

-பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW