இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக.

11 Sep 2021

இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் ஏதிலிகள் முகாம்களுக்கு வெளியேயும் உள்ளேயும் வாழ்ந்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு மட்டுமல்ல; அது தமிழின அழிப்பை நோக்கமாக கொண்ட சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிரான தமிழர்களின் வலிமைமிக்க போராட்டத்தையும் அழித்துவிட்டது. உண்மையில் இதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழினத்தை துடைத்தழிப்பதற்கு எதிராக இருந்த தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டுவிட்டன. இலங்கையில் உள்ள அனைத்துவகை ( தென்னிலங்கை வாழ் தமிழர், மலையகத் தமிழர், வடக்குகிழக்கு தமிழர் மற்றும் கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம்கள்) தமிழர்களுக்கு எதிராகவும் இன வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளது என்ற பொருள்பட மனித உரிமைகளுக்க்கான ஐ.நா.வின் உயராணையர் மிசேல் பசலே கடந்த மார்ச் மாதம் கவலை தெரிவித்துள்ளார். சிங்கள பெளத்த பேரினவாதம் முற்றி இராணுவப் பரிமாணம் எடுத்திருக்கும் நிலையில் மீண்டும் அத்தீவிலிருந்து தமிழ் மக்கள் ஏதிலிகளாய் வெளியேற்றப்படும் நிலை ஏற்படக்கூடும் என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம்.

இந்தப் பின்னணியில், ’இலங்கைக்கு இனி திரும்பவியலாது’ என்றெண்ணிய ஏதிலிகள் பலரும் இந்தியாவிலேயே குடியுரிமைப் பெறுவது பற்றி 2009க்குப் பின் பேசத் தொடங்கினர். 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டமும் இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு குடியுரிமை கோரும் விவாதத்திற்கான களம் அமைத்துத் தந்தது. இன்றைய நிலையில் பெரும்பாலான முகாம்வாழ் ஏதிலிகள் இந்தியாவில் குடியுரிமைப் பெற்று இங்கேயே வாழ்வதிலேயே ஈடுபாடு கொண்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இதன் தொடர்பில் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் அமைப்புகளைச் சார்ந்திராமல் மறுவாழ்வுத் துறை நேரடியாக களம் இறங்கி ஏதிலிகளின் விருப்பத்தை ஆய்வு செய்தறிய வேண்டும்.

அப்படி ஆய்வு செய்தபின், ஒருவேளை இலங்கைக்கு யாரேனும் உடனடியாகப் போக விரும்பினால் அவர்களை விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தின் மூலம் இலங்கை திரும்ப வழிவகை செய்யப்பட வேண்டும். இலங்கைக்கு உடனடியாக போக விரும்பாலும் அதேநேரத்தில் அமைதி திரும்பி, அரசியல் தீர்வு காணப்படும் பட்சத்தில் இலங்கைக்குப் போக விரும்புவோருக்கு அதுவரை ஏதிலிகளுக்கான அதிகபட்சமான உரிமையுடன் வாழ்வதற்கு உரிய சட்ட மற்றும் வாழ்வாதார ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.  இந்தியாவில் குடியுரிமைப் பெற விரும்புவோர் எனக் கண்டறியப்படுவோருக்கு அது குறித்து ஆவன செய்யப்பட்ட வேண்டும். இவையாவும் ஏதிலிகள் தொடர்பில் உள்ள உயிராதாரமான கோரிக்கைகள் ஆகும்.

இந்திய ஒன்றிய அரசோ தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் ஏதிலிகளை ’சட்டவிரோத குடியேறிகள்’ என்று சொல்கிறது. இவர்கள் பயண ஆவனங்கள் இல்லாமல் கடல் வழியாக படகில் வந்ததை இதற்கு காரணமாக சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் ஏதிலிகளுக்கான தனிச்சட்டம் இல்லை என்பது ஏதிலிகள் தொடர்பிலான ஓர் அடிப்படை  பிரச்சனையாகும். அதேநேரத்தில், இலங்கையைப் பொருத்தவரை இலங்கையில் சிங்களப் பெளத்த பேரினவாதத்தால் சிறுபான்மையினர் வஞ்சிக்கப்படுவதும்(Persecuted Minorities)  இனப் பூசலும் ( Ethnic Conflict)  இது பற்றிய இந்திய அரசின் தலையீடுகளும் இருநாட்டு உடன்படிக்கைகளும் உலகறிந்த செய்திகளாகும். அதுபோலவே, கடல் வழியாக உயிருக்கு தஞ்சம் கேட்டுப் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஏதிலிகள் தமிழ்நாடு வந்ததும் இரகசியமான ஒன்றல்ல. இந்திய அரசின் வருவாய் துறையின் கீழ் வரும் மறுவாழ்வு துறை, மாவட்ட ஆட்சியர், சட்டத் துறையின்கீழ் வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறை, ஏதிலிகளை மண்டபம் முகாமுக்கு அரசு சார்பில் அழைத்துச் சென்ற போக்குவரத்து துறை, ஏதிலிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளும் கடற்கரைகளில் நின்று ஏதிலிகளை ஏற்றுக்கொண்டன. அவர்களை மண்டபம் முகாமில் ஏதிலிகளாகப் பதிவு செய்தன. அவர்களுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்தி தந்து இந்நாள்வரை அடைக்கலம் தந்து பணக்கொடை தரப்படுகிறது. எனவே, இவர்கள் தமிழ்மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணம் முதல் இந்நாள்வரை ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இவர்களோடு உறவாடிவரும் நிலையில் இவர்களை ’இரகசியமாக’ நாட்டுக்குள் நுழைந்த ’சட்டவிரோத குடியேறிகள்’ என்பது நடந்தவற்றிற்கு நேரெதிரானது; இப்படி சொல்வது பன்னாட்டு சட்டங்களுக்கு ஏற்புடையது அல்ல; அத்துடன் தமிழ்நாட்டுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நிலவும் வரலாற்று உறவுக்கும்  முரணானது. தமிழ்நாட்டு அரசு ஒன்றிய அரசின் இந்நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். மேலும், சட்டத்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கான வரையறை வரும்இடத்தில் இலங்கையில் இருந்து தஞ்சம் கேட்டு வரும் தமிழர்களுக்கு விலக்களிக்கும் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற தகுநிலையை மாற்ற முடியும். மேலும், இதன்மூலம் இயல்பாக குடியுரிமை பெறத்தக்கவர்களாக(Naturalisation) இவர்கள் அனைவரும் ஆகிவிடுவர்.

இன்னொருபுறம், தமிழ்நாட்டின் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ் ஏதிலிகளில்  இலங்கையின் வடக்குகிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்கள் மட்டும் இல்லை. அதில் சரி பாதிக்கும் மேல் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினத் தமிழர்கள் இருக்கின்றனர். அதாவது, தமிழ்நாடு அரசின் ஜூன் 1, 2021 கணக்கெடுப்பின்படி 106 முகாம்களில்  58,822   பேரும் முகாமுக்கு வெளியே காவல் பதிவில் 34,122  பேரும் வாழ்ந்துவருகின்றனர். முகாம்களில் இருப்போரில் சுமார் 30,000 பேர் இந்திய வம்சாவழித் தமிழர்கள். இவர்களுக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கைப்படி குடியுரிமைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது. அதற்கான அடிப்படைகளை இங்கே தொகுத்துள்ளோம்.

  • 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் மலைப்பகுதிகளுக்கு கூலித் தொழிலாளர்களாக பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து தமிழர்கள் பிரிட்டிசாரால் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை மலைப்பகுதிகளில் தமிழர்களின் நிரந்தர குடியமர்வுகள் நடைப்பெற்றன. 1817 முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்த இடப்பெயர்வுகள் நடந்தன. இவர்கள் இந்திய வம்சா வழித் தமிழர்கள்/ மலையகத் தமிழர்கள் என அறியப்படுகின்றனர்.
  • 1928 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட டொனமூர் அரசமைப்புச் சட்டம் இலட்சக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வாக்குரிமை தந்தது.  ஆனால், சிங்களப் பெளத்த பேரினவாத அரசியல் தலைவர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.
  • பிரிட்டிசாரிடம் இருந்து விடுதலைப் பெற்றவுடன், 1948 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் மலையகத் தமிழர்கள் 10 இலட்சம் பேரின் குடியுரிமைப் பறிக்கப்பட்டது.  
  • 1964 ஆம் ஆண்டு அக்‍டோபர் 30 ஆம்‍ நாள் இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கிடையில் மலையகத் தமிழர் குடியுரிமை பற்றிய உடன்படிக்கை ஏற்பட்டது. ருநாடுகளும் செய்துகொண்ட உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களை கேட்பதற்கும் அல்லது ஆலோசனைப்  பெறவும் இடமளிக்கவில்லை. இவர்கள் பண்டங்களாக மட்டுமே பார்க்கப்பட்டார்கள். இந்த உடன்படிக்கையின்படி 9,75,000 பேர்கள் நாடற்றவர்களாக இனங்காணப்பட்டனர். இதில் 5,25,000 பேர்களை இந்திய அரசு ஏற்றுக்கொள்வது என்றும் 3 இலட்ம் பேரை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • 1974 ஆம் ஆண்டு நடந்த இந்திராகாந்தி – சிறிமாவோ பண்டாரநாயக்க உடன்படிக்கையின் மூலமாக  விடுபட்டுப்போன 1,50,000 லட்சம் மக்களை இருநாடுகளும் சரி பாதியாக(75,000) பிரித்து ஏற்றுக்கொள்வதென்று முடிவானது.
  • மேற்படி இரண்டு உடன்படிக்கையின்படியும் இந்தியா வந்துசேர வேண்டிய 6,00,000 பேர்களில் 3,33,482 பேர்கள் மட்டுமே தாயகம்(இந்தியா) திரும்பியுள்ளனர். இலங்கையில் வெடித்த இன வன்முறை அதற்கெதிர்வினையாக உருப்பெற்ற ஆயுதவழி விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக மேற்சொன்ன உடன்படிக்கைகளின்படி இந்திய வம்சாவழியினர் தாயகம் திரும்புவதில் தடையேற்பட்டது. மற்றவர்கள் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
  • 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் மலையகத் தமிழர்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதல்கள் இலங்கை அரச ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதை தொடர்ந்து ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்குகிழக்கு பகுதியில் மலையகத் தமிழர்கள் பலரும் தஞ்சம் புகுந்தனர். விடுதலைப் போராட்டம் வடக்கிலும் தீவிரம் பெற்ற நிலையில் தங்களிடம் இருந்த சான்று ஆவணங்களைப் பலரும் இழக்க நேரிட்டது. மலையகத்திலும் வன்னியிலும் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானோர் உயிருக்கு அஞ்சி தமிழ்நாட்டை  வந்தடைந்தனர். இவர்களும் ஏதிலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் பலர், சிறிமா  – சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்‍நாட்டுக்கு வந்து சேரவிருந்த நிலையில் தங்களது பயண ஆவணங்களை வன்முறையின்போது இழந்துவிட்‍டதாகவும் கூறுகின்றனர்.
  • இதேவேளை, பாதிக்கப்பட்ட மலையகப் பகுதிகளிலிருந்து பயண ஆவணத்துடன் கப்பல், (1984 வரையும்) மற்றும் விமானங்களில் வந்த பலரும் பல மாவட்டங்களில் தங்கினர். 1990 களின் தொடக்கத்தில் இருந்து  முகாமிற்கு வெளியில் உள்ள ஏதிலிகள், தங்களது இருப்பைத் தொடர்வதற்கு  மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் தங்களது பெயர்களைப் பதிவுசெய்யும்படி அரசு உத்தரவிட்டது .
  • 1987 ஆம் ஆண்டு இராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா உடன்படிக்கையிலும் இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்கள் தாயகம் திரும்புவதை  இந்திய அரசு தொடர்ந்து விரைவுபடுத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்த செயல்முறை நடைபெறவில்லை.
  • இலங்கையில் 1986 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 5 ஆம் இலக்கச் சட்டம், 1988 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 39 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 35 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றின் மூலம் சிறிமா  – சாஸ்திரி உடன்படிக்கைபடி இந்தியக் குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பிய 3,33,482 பேர் போக, அதே ஒப்பந்தத்தின்படி இந்திய குடியுரிமைப் பெற்றிருக்க வேண்டிய  இந்திய வம்வாவழியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இலங்கை அரசு இலங்கை குடியுரிமை கொடுத்தது.
  • இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவழியினர் தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கை அரசு அமைத்த ஆணையம் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு கூறுகிறது.“2008 பிப்ரவரி 14 அன்று உள்ளவாறு தமிழ்நாட்டிலுள்ள 117 முகாம்களில் 95,219 இலங்கை அகதிகள் வசித்து வருவதாகவும் அவர்களுள் 28,489 பேர்கள் நாடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கை தூதர், குழு முன்னிலையில் தெரிவித்தார்” (நாடாளுமன்ற இலங்)தொடர் இல.06 ப.8). தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் உள்ள 28,489 பேர்கள் நாடற்றவர்கள் என்பதை இலங்கை நாடாளுமன்றத்தால்‌ அமைக்கப்பட்ட பிரதிநிதி குழுவால் இனம் காணப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
  • இலங்கை பிரதிநிதி குழுவால் ‘நாடற்றவர்கள் என்றே அடையாளப்படுத்தப் பட்டிருப்பதால், இதில் சிறிமா- சாஸ்திரி உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களும், உட்படுத்தவேண்டி உள்ளவர்களும், இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள ஏதிலி முகாமில் உள்ளனர் என்பதை இந்த அறிக்கை உறுதிபடுத்தி உள்ளதென்று கூறமுடியும்.
  • ஆகவே, நாடற்றோராக தமிழகத்தில் தவிக்கும் சுமார் 30,000 இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைபடி குடியுரிமைக் கொடுக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது.
  • இலங்கைக் குடிமக்களாகிய ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்கும் விசயத்தில், சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியக் குடிமக்களாகியிருக்க வேண்டிய மலையகத் தமிழர்களுக்கு இலங்கை அரசு 2003 இல் இலங்கைக் குடியுரிமை கொடுத்திருப்பதை இந்திய அரசு கருத்திலெடுக்க வேண்டும்.

கோரிக்கைகள்:

  1. தமிழ்நாட்டில் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ் ஏதிலிகள் ’சட்டவிரோத குடியேறிகள்’ அல்லர். அவர்களை சட்டப்பூர்வமானவர்களாக ஏற்பதற்கு தடையாக இருக்கும் சட்டப்பிரிவுகளில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.
  2. ஏதிலிகளில் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சா வழியினர் அதில் நாடற்றவர்கள், இலங்கையில் இருந்த போதே இலங்கை அல்லது இந்தியக் குடியுரிமைப் பெற்றவர்கள் மற்றும் வடக்குகிழக்கைப் பூர்வீகமாக கொண்ட இலங்கையின் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள் குறித்த விவரங்களை மறுவாழ்வுத் துறையின் வாயிலாக நேரடியாக திரட்ட வேண்டும். இதில் இலங்கைக்கு திரும்ப விரும்புவோர், இந்தியாவிலேயே இருக்க விரும்புவோர் மற்றும் அவர்களில் குடியுரிமை கோருவோர் கண்டறியப்பட வேண்டும். 
  3. குடியுரிமை கோருவோரில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுமார் 30,000 தமிழர்களுக்கு, சிறிமாவோ  – சாஸ்திரி(1964), சிறிமாவோ – இந்திரா(1974) உடன்படிக்கைகளின்படி  மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுத்திருக்க வேண்டிய கடப்பாட்டை ஏற்று அதன் அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும்.
  4. இந்திய ஒன்றிய அரசு மாந்தநேய அடிப்படையிலும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு மதிப்பளித்தும் வடக்குகிழக்கைப் பூர்வீகமாக கொண்ட இலங்கை குடிமக்களாகிய ஈழத் தமிழ் ஏதிலிகளில் குடியுரிமை கோருவோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
  5. தமிழ்நாட்டில் உள்ள முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வாழும் இலங்கை தமிழ் ஏதிலிகள் ‘சட்டவிரோத குடியேறிகள்’ அல்லர் என்றும் அதில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்ளுக்கும் குடியுரிமை வழங்குமாறும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இப்படிக்கு,

மு.சி. கந்தையா,

                      ஒருங்கிணைப்பாளர், மலையக – தாயகம் திரும்பியோருக்கான இயக்கம்

ஹென்றி டிபேன்,  நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

                            பேராசிரியர் அ.மார்க்ஸ், தேசிய தலைவர், NCHRO

                             பேராசிரியர் குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகம்

                             பேராசிரியர் இளம்பரிதி, சென்னைப் பல்கலைக்கழகம்

                             செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்   மற்றும் 

                              மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்   

                              தொடர்புக்கு: 97511 55636 , 99419 31499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW