பெட்ரோல் டீசல் விலை உயர்வு- பகற் கொள்ளை அடிக்கும் மோடி அரசு, நிதி பற்றாக்குறையில் தமிழகம்

04 Aug 2021

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் முறையே 102 ரூபாய் மற்றும் 94 ரூபாய் ஆகும் , கோவிட்-19 பெரும் தொற்று முதல் முழு முடக்கம் 2020 மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பு, மார்ச்சு 1 அன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 74 ரூபாய் மற்றும் 68 ரூபாய் ஆகும். 2020 மார்ச் மாதத்திற்கும் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட 15 மாதத்தில், நாம் வாங்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதும் தலா 28 ரூபாய் மற்றும் 26 ரூபாய் கூடுதலாக சில்லறை விற்பனை விலை ஏற்றப்பட்டுள்ளது. ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு கூடுதல் விலை அதிகரிக்கப்பட்டு, நமது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத நெருக்கடியை மக்கள் சந்தித்திருக்கிற சூழலில், மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும், தங்களின் வரியை, லாபத்தை ஏற்றி மக்களும் மாநில அரசுகளும் எவ்வளவு சுமையை வேண்டுமானாலும் தாங்கலாம், தங்கள் வருவாயில் எவ்வித குறைவும் வந்துவிடக்கூடாது என சட்டபூர்வமான பகற்கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக , பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை விலை அதிகரித்துள்ளது என, மோடி அரசின் அநியாய வரிவிதிப்பை பகல் கொள்ளையை மூடி மறைப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மூடி மறைக்க பார்க்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2014இல் மார்ச் மாதம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 105 அமெரிக்க டாலராக இருந்தது, அப்பொழுது சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலை முறையே 73 ரூபாய் மற்றும் 55 ரூபாய் மட்டுமே, இப்பொழுது 2021 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 72 அமெரிக்க டாலர் மட்டுமே, ஆனால் இப்பொழுது சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலை முறையே 102 ரூபாய் மற்றும் 94 ரூபாய் ஆகும், உண்மையில் 2014 க்கும் 2021 க்கும் இடையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை தலைகீழாக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது, நேரெதிராக வரிவிதிப்பு தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.

2014இல் ஒரு பேரல் 105 அமெரிக்க டாலராக உச்சமடைந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றம், பிறகு படிப்படியாக விலை குறைந்து 2016 ஜனவரி மாதம் 28 அமெரிக்க டாலராக விலை வீழ்ச்சி அடைந்து இருக்கிறது, அதன்பிறகு இப்பொழுதுதான் மீண்டும் விலை ஏற்றம் அடைந்து அதிகபட்சம் 72 டாலராக மாறி இருக்கிறது ,விலை வீழ்ச்சி அடைந்த கடந்த ஏழு ஆண்டுகளில், மோடி அரசு தொடர்ந்து வரி விதிப்பை அதிகரித்து, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக 3.5 லட்சம் கோடி வரியாக ஈட்டியுள்ளது, 2014இல் ஒன்றிய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி முறையே 9.  ரூபாய் மற்றும் 3 ரூபாய் ஆகும், இப்பொழுது2021-இல் முறையே 32 ரூபாய் மற்றும் 31 ரூபாய் ஆகும், இந்த பாரதூரமான வேறுபாடுதான், தற்போதைய விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஒன்றிய அரசின் ஆண்டு நிதி வருவாயில், நேரடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விதிப்பு குறைக்கப்பட்டு, அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான, மறைமுக வரி மற்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டு, வருவாய் ஈட்டும் மோடி அரசின், மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கையே ,இவ்வித அதீத வரி விதிப்பு முறைக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசா, ஒன்றிய அரசா, வரியை யார் குறைக்க வேண்டும்?

மோடி அரசு பெட்ரோல் டீசல் மீதான அதீத வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு மாறாக, பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும், மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு முறையை ,ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு மாற்றுவதற்கு மாநிலங்கள் தடையாக இருக்கிறார்கள், என மோசடியான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஒரு பேரல் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 72 அமெரிக்க டாலர் என்ற மதிப்பின் அடிப்படையில், இந்திய ரூபாய்க்கு மதிப்பை மாற்றினால் ஒரு லிட்டர் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 35 ரூபாய் ஆகும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடங்கி ,சில்லரை விற்பனை பெட்ரோல் பங்க் வரை, நிறுவனங்களில் செலவு மற்றும் லாபம் உள்ளிட்டு சராசரியாக 9 ரூபாய் கூடுதல் செலவு ஆகிறது, அவ்வாறாக வரிக்கு முந்தைய  ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க உற்பத்தி விலை 44 ரூபாய் மட்டுமே, பிறகு ஒன்றிய அரசின் வரி 34 ரூபாய், தமிழக அரசின் வரி 24 ரூபாய், ஆக மொத்தம் நமக்கு 58 ரூபாய் வரியை சேர்த்து சில்லறை விற்பனையில் 102 ரூபாய்க்கு கிடைக்கிறது. மாநில அரசுகள் தனது மாநில எல்லைக்கு உட்பட்ட ,விற்பனைக்கு தான் மட்டும்தான், வரி விதிக்க முடியும், ஒன்றிய அரசோ 30 மாநிலங்களிலும், தனக்கான வரி அதிகாரத்தின் மூலம் கொள்ளை இலாபம் ஈட்ட முடியும், இதுமட்டுமன்றி ஒன்றிய அரசு வருவாயில் இருந்து, மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய பங்கை குறைப்பதற்காக பெட்ரோல் டீசல் மீதான எக்ஸைஸ் வரி இனத்தை குறைத்து, செஸ் வரி விதிப்பை கூடுதல் ஆக்கியுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் பொருட்களை கொண்டு சொல்வதற்கு தங்களுக்கு ஆர்வம் இருப்பது போல் கபட நாடகம் ஆடுகிறார்கள், இவர்கள் கூற்றுப்படியே தங்கள் வரி வருவாய் குறைந்து போகும் என்பதற்காக, மாநில அரசுகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், மத்திய அரசு தன்னுடைய வரி விதிப்பை, இப்பொழுது இருக்கிற வரிமுறை அடிப்படையிலேயே 18 % கீழ் குறைத்துக் கொள்வதற்கு, மாநில அரசுகள் தடை எதுவும் தடை சொல்லப் போவதில்லை, தன்னுடைய பகல் கொள்ளையை, வருவாயை குறைத்துகொள்ள தயார் இல்லாமல் ,மாநில அரசுகள்தான்  தடையாக இருக்கிறார்கள் என, பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள கூடிய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை விளையாடி மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள்.

லாபத்தை ஈட்டும் ஏகபோக சக்திகள் யார்?

சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக்)மற்றும் சர்வதேச எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தங்களுக்குள் ஒரு ஏகபோக (cartel) கூட்டை உருவாக்கிக் கொண்டு, கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருப்பதற்காக, தேவைக்கேற்ப உற்பத்தியை கூட்டுவதும் குறைப்பதும் ஆக ,விலை நிர்ணயம் செய்து கொழுத்த லாபத்தை தொடர்ந்து ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக எண்ணெய்யை இறக்குமதி செய்து, பிறகு சுத்திகரிப்பு செய்கிற,  இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களான, ரிலையன்ஸ் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஏகபோக விற்பனையை கொண்டிருப்பதால்,

அவர்களுக்கும்  ஓரிடத்தில் லாபத்தை குவித்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். இதற்கடுத்து ஒன்றிய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரிவிதிப்பு அதிகாரத்தை கொண்டிருப்பதால், அனைத்து வழிகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோல் பொருட்களின் அடக்க விலைக்கு நிகராக, வரியை திணித்து, லாப வருவாயில் பெரும் ஏகபோகத்தை கொண்டிருக்கிறது.

இதற்கு மாறாக மாநில அரசுகளும், சில்லறை விற்பனையாளர்களும், தங்கள் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, சில்லறை வர்த்தகத்தில், வரிவிதிப்பையும் லாபத்தையும் ஈட்டி கொள்ள முடியும், அந்த வகையில்  மேற்கண்ட ஐந்து தரப்பினரில், முதல் மூன்று ஏகபோக சக்திகள்தான், விலை நிர்ணயத்தை தீர்மானிக்கக் கூடிய, லாபத்தை குறைத்து கொள்ளக்கூடிய, வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்த உண்மை ஆகும்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை,

முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த ,தமிழ்நாட்டின் 2020 -21 இடைக்கால நிதிநிலை அறிக்கையின் படி ,இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் ஒட்டு மொத்த வரவு செலவு மூன்று லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதில்  வருவாய் பற்றாக்குறை 66 ஆயிரம் கோடி, ஒட்டு மொத்த நிதி பற்றாக்குறை 97 ஆயிரம் கோடி ஆகும்.

ஒட்டுமொத்தமாக தமிழக அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது, 2014 வரை உபரி பட்ஜெட் போடும் அளவிற்கு இருந்த தமிழகத்தின் நிதி நிலைமை ,மோடி அரசின் மோசமான நிதி பொருளாதார கொள்கையால், பொருளியல் மந்தத்தால், கடந்த ஏழு ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சி அடைந்து, அடிமை அதிமுக அரசு காலத்தில் கடனில் மூழ்கிப் போய் உள்ளது.

மோடி அரசின் ஜிஎஸ்டி வரிக் கொள்கை மாற்றத்திற்கு பிறகு, தமிழகத்தின் வரி வருவாய் இனங்கள் குறைந்து போய், பெட்ரோல்,  சாராயம், பத்திரப்பதிவு, வாகன விற்பனை என சில பொருட்கள் மீது மட்டும், கூடுதலாக வரி வருவாய்க்கு சார்ந்திருக்கிற, நிலைமைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

அதிமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், எதிர்பார்க்கப்பட்ட 2 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாயில், தமிழக அரசின் நேரடி வரி வருவாயான 1 லட்சத்து பத்தாயிரம் கோடியில், பெட்ரோல் மற்றும் சாராயத்தின் வரி வருவாய் பங்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும், இந்த நேரடி வருவாயையும் தமிழகத்திடம் இருந்து பறித்துக் கொள்வதற்குத்தான், ஜிஎஸ்டி வரிமுறைக்குள், பெட்ரோல் டீசல் பொருட்களை கொண்டுவர வேண்டும் என ,பாஜகவின் மத்திய அமைச்சர்களும் ,ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூப்பாடு போடுகிறார்கள்.

மோடி அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய, ஜிஎஸ்டி வரி வருவாயில் பங்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை, மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு, பேரிடர் கால நிவாரண நிதி ஆகியவற்றில் முறையாக நடந்து கொள்ளாமல், சில ஆயிரம் கோடி நிதியை குறைப்பது,  காலதாமதம் செய்வது, இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ள சொல்வது, என பல்வேறு வழிமுறையில், தமிழகத்தின் நிதியை அபகரித்து, தமிழகத்தின் நிதி நிலைமை படுமோசமாக வீழ்ச்சியடைந்து இருக்கிற சூழலில், மோடி அரசின் பகல் கொள்ளைக்கு எதிராக குரல் எழுப்பாமல், மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான தங்கள் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என, கும்பல் கொள்ளையர்களை போல ஊளை இடுகிறார்கள்.

உண்மையில், தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு, ஒரு ரூபாய் வருவாயாக கொடுக்கிறது என்று சொன்னால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குவது 35 பைசா மட்டுமே, தமிழ்நாடு ஒருபோதும் ஒன்றிய அரசுக்கு சுமையாக இல்லை, ஒன்றிய அரசுதான் தமிழ்நாட்டிற்கு சுமையாக, வளர்ச்சிக்கு தடையாக, காலனிய அரசாக தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை, வளத்தை சூறையாடுகிறது.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டுக்கான நிதி அதிகாரமும்.

கடந்த அதிமுக ஆட்சியில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டு நிதியை சுரண்டுகிறது என, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மீது, சட்டசபையில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வமும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், இப்பொழுது திமுக தனது தேர்தல் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ,பெட்ரோல் டீசல் மீது தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என போராடுகிறார்கள்.

தமிழக நிதி நிலையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல், தேர்தலுக்காக வாக்குறுதி அளித்த திமுக விலையை குறைப்பதற்கு நாள் குறிக்கவில்லை, நேரம் வரும் பொழுது குறைப்போம், தமிழக அரசின் நிதிநிலை, இவ்வளவு மோசமாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை, நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை கொடுப்போம் என சறுக்கலுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இரு தரப்பின் லாவணி அரசியல் தமிழ் நாட்டு நலனை பறி கொடுப்பதாக தான் முடியும்.

பாஜக ஒரு ஓநாயை போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, மாநில அரசின் வரி வருவாயைப் பறித்து விட முடியுமா, ஜிஎஸ்டி வரம்புக்குள் அனைத்தையும் கொண்டுவந்து, மாநில அரசுகளை ஒரு மாநகராட்சி போல கையேந்த வைக்க முடியுமா, என திட்டம் தீட்டி கொண்டிருக்கிற சூழலில், மோடி அரசின் கொள்ளைக்கார தனத்தை வெளிப்படையாகப் பேசி ,ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி முறையை ரத்து செய்ய வேண்டும் ,பெட்ரோல் டீசல் மீதான அநியாய வரியை குறைக்க வேண்டும், மாநில அரசுகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது, வரி விதிக்கவும் அவற்றை நேரடியாக கொள்முதல் செய்யவும் அதிகாரம் வேண்டும், என குரலெழுப்பி, தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை, நிதி அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டிய நேரத்தில், மோடி அரசுக்கு ஊது குழலாகவோ, சமரசமாகவோ, லாவணி அரசியல் செய்வது, தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமானதாகும்.

இறுதியாக, திமுக அரசு அதன் நிதியமைச்சர், பழனிவேல் தியாகராஜன், தனது முதல் நிதிநிலை அறிக்கையை, இந்த மாதத்தில் சமர்ப்பிப்பதாக செய்திகள் வருகின்றன, அத்தோடு சேர்த்து தமிழ்நாடு அரசு தனது நிதிச்சுமையை, கடன் சுமையைக் குறைத்துக் கொள்வதற்காக, எடப்பாடி பழனிச்சாமி கிளப்பிவிட்ட, லாட்டரி மீண்டும் விற்பனைக்கு வருகிறது, என்ற வதந்தி உள்ளிட்டு, பெட்ரோல் டீசல் டீலர் கமிஷன் மீது புதிய வரி, பத்திரப்பதிவு, வாகன விற்பனை மீது வரியை உயர்த்துவது, சாராயத்தை நான்கு வகையாக பிரித்து அதன் மீது கூடுதல் வரி விதிப்பது, அரசின் பல்வேறு சேவைகள் மீதான கட்டணங்களை உயர்த்துவது, தமிழக அரசின் நிறுவனங்களில் பங்கு விலக்கம், அல்லது தனியார்மயத்தை அமுல்படுத்துவது போன்ற ஆலோசனைகள், புதிய நிதிநிலை அறிக்கை தயாரிப்பில், பொருளாதார ஆலோசகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன, என்ற வதந்திகளும் உலா வருகின்றன, தமிழக அரசு இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திமுக அரசும், நிதி அமைச்சரும் தேர்தலுக்கு முன்பு குறிப்பிட்டதுபோல, தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, மக்கள்  மீண்டும் புதிய சுமையை சுமக்காத வகையில், வரிவதிப்பு கொள்கையை கடைபிடித்து, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து,

தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரத்தை பெருக்குவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

மேலும் டெல்லிக்கு பணிந்து கிடந்த, கடந்த அதிமுக அடிமை ஆட்சி போல் இல்லாமல், தமிழ்நாடு என்பது உலகப் பொருளாதார வரைபடத்தில், ஒரு தனிநாடு என்ற அலகாக கருதினால், உலகத் தரவரிசையில், வியட்நாமிற்கு அடுத்தபடியாக 21 இலட்சம் கோடி ரூபாய்(300 பில்லியன் அமெரிக்க டாலர்) உள்நாட்டு உற்பத்தி மதிப்புள்ள(gdp) 45வது பெரிய சந்தை பொருளாதார பலம் கொண்ட நாடு என்ற அந்தஸ்தில் வைத்து தமிழ்நாட்டை பார்க்க முடியும். எனவே கடந்தகால அரசுகளின் அடிமை மனோபாவத்தை விட்டு, நமது பலத்தை உணர்ந்து, அதற்கான விசாலமான ஒரு தொலைதூர பார்வையோடு, ஒரு அரசியல் தலைமை, நிதியையும், பொருளாதாரத்தையும், தொழில் நுட்பத்தையும் கட்டி எழுப்ப வேண்டிய ,வரலாற்றுத் தருணத்தில், தமிழ்நாடு இருக்கிறது என்பதையும் ,புதிய திமுக அரசும், அதன் தலைமையும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW