அரும்பாக்கம் – கூவம் கரையோர வீடுகள் அகற்றம்! சிங்கார சென்னை 2.0 – சமூக நீதி, ’அனைவரையும்’ உள்ளடக்கிய வளர்ச்சி எங்கே ?

30 Jul 2021
  1. சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் கூவம் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைக்கு மேல் வசித்து வருகின்றனர். தெருவின் வலதுபக்கம் கல்வீடுகளும், கால்வாய் ஓரம் குடிசை வீடுகளும் இருந்தன.
  1. 2015 மழை வெள்ளத்திற்கு பிறகு கால்வாய் ஓரம் ஒரு பகுதி குடிசைவீடுகள் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது மாநகராட்சி மூலம் நோட்டீஸ் கொடுக்கப்படாமல் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது 93 வீடுகள் இடிக்கப்பட்டு புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய  குடியிருப்பில் வீடுகள் கொடுத்துள்ளனர். மேலும் 10 – 15 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. சொந்த வீட்டில் குடியிருப்போர் – வாடகைக்கு வசிப்போர் என்று இருவருக்கும் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  1. இடிக்கப்பட்ட வீடுகளில் பாதி குடிசைகள், இன்னொரு பாதி கல் வீடுகள் என மழை வெள்ளத்திற்கு பிறகு கல் வீடுகள் சீரமைக்கப்பட்டு மீள் கட்டமைத்துள்ளனர். பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பிள்ளைகள் படிப்பு பாதிப்புக்கு உள்ளாகிய சூழலில் சென்னை நகரத்திற்கு வெளியே பெரும்பாக்கம் செல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக தற்போது சென்னைக்கு உள்ளேயே புளியந்தோப்பு குடியிருப்பில் வீடுகள் கொடுத்துள்ளனர்.
  1. இவை தவிர மேலும் 150 வீடுகளை அகற்றப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதம் உள்ள நூற்றுக்கணக்கான கல் வீடுகள் கால்வாயில் இருந்து சற்று தொலைவில் உள்ள நிலையில் இக்குடும்பங்கள் அங்கு நிரந்திரமாக வாழ்ந்திட தமிழக அரசு பட்டா வழங்குமா? என்ற கேள்வி எழுகிறது.
  1. கால்வாய்க்கு இன்னொரு பக்கம் பல இரண்டு மாடி கல்வீடுகள் கட்டப்பட்டுள்ளது, இதில் சிலவற்றிக்கு பட்டா உள்ளது என மக்கள் தெரிவித்தனர். இவைகளும் அகற்றப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.
  1. சிங்கார சென்னை 1 – ‘கூவம் சுத்திகரிப்பு, ‘பறக்கும் சாலை’ என 2008 முதல் கால்வாய் ஓரம் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டு சென்னைக்கு வெளியே பெரும்பாக்கத்தில் குடியமர்த்தியது தமிழக அரசு. 2015 மழை வெள்ளத்தில் வீட்டையும் – பிற உடமைகளையும் இழந்த மக்கள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டனர். கூவம் கரையோரம் மீதம் இருந்த இரண்டு பெரிய பகுதிகளான கிரீம்ஸ் ரோடு, திடீர் நகர் மற்றும் அன்னை சத்யவாணி முத்து நகர் இரண்டும் 2017 முதல் பல கட்டங்களாக மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறையின் அடக்குமுறை மூலமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
  1. சிங்கார சென்னை 2.0 – தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பறக்கும் சாலைகள் போன்ற கட்டுமானங்களைத் தவிர மீண்டும் ‘கால்வாய் சுத்திகரிப்பு’ திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கூவம் ஆறு, அடையாறு கரையோரம் உள்ள பெரும்பாலும் குடியிருப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. மீதம் உள்ளது ‘பக்கிங்காம் கால்வாய்’ – வடசென்னை தொடங்கி திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறு வரை வாழும் ஏழை எளிய உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
  2. கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் – ஐ.டி நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த குடியிருப்புகளுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட ‘கூலி தொழிலாளர் முகாமாகத் தான் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உருவாக்கப்பட்டு அங்கு சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 15 மாதங்களாக OMR ஐ.டி சாலை கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கியுள்ளது. ஐ.டி நிறுவனங்கள் திறக்காத சூழலில் இங்கு வாழும் மக்களின் நிலை வேறெந்த இடத்தைக் காட்டிலும் அதிகமாக வாழ்வாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுவரை தமிழக அரசு இம்மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
  3. சமூக நீதி – அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி– என்ற கொள்கையை முன்மொழியும் தற்போதைய திமுக அரசு சிங்கார சென்னை 2.0 திட்டத்தை கடந்த காலம் போலவே அமல்படுத்தினால் இக்கொள்கைக்கு நேரெதிரானதாகவே அமையும். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மீனவர்கள்,இஸ்லாமியர் என சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் இத்திட்டம், ‘சமூக நீதி’யை குழிதோண்டி புதைக்கும் செயலாகவே அமையும். மேலும் கொரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்தியுள்ள பொருளாதார – வாழ்வாதார நெருக்கடியைக் கணக்கில் கொள்ளாமல் ஏழை எளிய மக்களை வெளியேற்றி பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவது எந்த வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
  1. எனவே ‘சிங்கார சென்னை 2.0’வை உடனடியாக அமல்படுத்துவதை தமிழக அரசு நிறுத்திடவேண்டும்!  கால்வாயோரம் குடிசைகள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன ? கால்வாயை ஆக்கிரமித்துள்ள பெரிய கட்டிடங்கள் எவை ? சென்னை நகரத்திற்கு உள்ளே இருக்கும் TNSCB/TNHB காலி நிலங்கள் எவை ? சென்னைக்கு உள்ளே குடியமர்த்த என்ன வாய்ப்புகள் உள்ளன ? கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்களின் வாழ்வதாராத்தை மீட்டிட என்ன வழி ? போன்ற பல கேள்விகள் உள்ளன.

இதனை பரிசீலித்து சமூக செயற்பாட்டாளர்கள், வல்லுநர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தை வெளிப்படையாக விவாதித்து பிறகு முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதாரப் பேரிடரும் – முதற்கட்ட கள ஆய்வறிக்கை

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW